குளோரியா நாவல்ஸ்

 #எழுத்தாளர் அறிமுகப்படுத்தப் படலம்


#சீசன் இரண்டு - 12


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளராக நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துவது குளோரியா…


அவர்களைப் பற்றிய நேர்காணல்:



பெயர் :  குளோரியா கட்சிவேந்தர் 


சொந்த ஊர் :  பாண்டிச்சேரி 


படிப்பு : B.A. DFP (food production) 


பணி : இல்லத்தரசி


தளம் : https://glorianovels.wordpress.com/


ஆரம்பத்தில் 'பெண்மை' யில் எழுதிக் கொண்டிருந்தேன் .


அமேசான் பெயர்: gloria catchivendar 


******


உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


கணவர்,  பதின்ம பருவத்திலுள்ள இரு குழந்தைகளோடு ஃபிரான்ஸில் வசிக்கிறேன். முதலாவது பெண் பிள்ளை, அடுத்தது ஆண் பிள்ளை. நிறைவான வாழ்வு. 


தனிப்பட்ட குணம் என்றால்.. கொஞ்சம் இல்லை.. இல்லை நிறைய ஆர்வக்கோளாறு!


*****


உங்களது கனவு லட்சியம் என்ன:


நல்ல அம்மாவாக இருப்பது 


******


எதற்காக நீங்கள் எழுத்துலகை  தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:


எழுத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை.. எழுத்து தான் என்னை தேர்ந்தெடுத்தது!! 


நான் கதை எழுத வந்ததே ஒரு விபத்து. எனக்கு எழுத வரும் என்பது இப்போதும் எனக்கு ஒரு ஆச்சரியமே! ஆனால் கதை படிப்பதில் மிகுந்த ஆர்வம். அதுவே எழுத ஆர்வத்தை உண்டாக்கியதோ ? 


******


எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன.


எழுதுலகம் என்பது பெரிய கடல்.. அதில் இப்போது தான் நான் கரையில் இருக்கும் சிறு ஆமைக் குஞ்சு. இன்னமும் நீந்தவே ஆரம்பிக்கவில்லை. கரையில் இருந்து கடலை நோக்கி எனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறேன்!


******


உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது செய்தி இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா :


பொதுவாக, குடும்பக் கதைகளைப் படிப்பவர்கள் இல்லத்தரசிகளே. அவர்கள், நேரத்தைப் போக்க கதை படிக்கிறார்கள். அதனால் பொழுது போக்காகவும் இருக்கவேண்டும்,  சுவாரசியமும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில், நல்லக் கருத்துக்களை, படிப்பவர்கள் எரிச்சல் கொள்ளாதவாறு சுவாரசியத்தோடு கலந்து கொடுக்கணும்..ஸோ, அழுத்தமான கதைக் கருவைக்  கையாண்டாலும், அதை  எப்படி எளிமையாக, நல்லக் கருத்துக்களோடு கொடுப்பது என யோசித்து, கதையை உருவாக்குவேன் .



உண்மைதான்… நல்லது


*******


நாவல் என்பது என்ன :


என்னைப் பொருத்தவரை நாவல் என்பது பொழுதுபோக்கைத் தாண்டியும் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணக்  கூடியது. இப்போதும் “பொன்னியின் செல்வன்” கதையைப் படித்தவர்கள்,  படித்து முடித்த கொஞ்ச நாளுக்கு, காதில் ‘டக் டக்’ என்று குதிரை ஓடும் சத்தம் கேட்கும் என்று சொன்னவர்களைப் பார்த்து இருக்கிறேன். எனவே, பார்க்கும் ஒன்றை விட படிக்கும் ஒன்று மனதில் ஆழப் பதியும்! நம்மையும் ஆறியாமல் தாக்கத்தை உண்டு பண்ணும். ஆகையால்,  நம்மால் கதையில் நல்லதைக்  கொடுக்க முடியாவிட்டாலும், தவறைச் சொல்லிவிடக் கூடாது 


******


நாவல் எழுதுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி சொல்ல முடியுமா:


நன்மை  என்றால், கதை சம்பந்தமாக நிறைய தேடித் தெரிந்து கொள்கிறேன். கூடவே நிறைய நல்ல நட்புகளை, வாசகர்களைப் பெற்று இருக்கிறேன்.


தீமை என்றால்.. அழுத்தமான கதைக் களத்தை எடுக்கும்போது, அதன் பாதிப்பு நிஜ வாழ்விலும் பிரதிபலிக்கும்.  பொதுவாகப் பிள்ளைகளிடம் கடுமையாகப் பேச  மாட்டேன்; ஆனால் ‘விடையில்லா வினா’ கதையை எழுதுகையில், என்னை மீறி கடுமையாகப் பேசி இருக்கிறேன்.


******


ஒரு நாவல் என்பது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக மட்டும் இருக்க வேண்டுமா அல்லது எழுத்தாளனின் கற்பனையில் மிளிர்ந்த படைப்பாக இருக்க வேண்டுமா :


கதை என்பதே கற்பனை தானே.. என்னத்தான்  நாம் நிஜ சம்பவங்களை  தேர்ந்தெடுத்துக் கதை எழுதினாலும், அதை கற்பனையைக் கொண்டு தானே அலங்கரிக்க வேண்டி இருக்கிறது! 


******


காதல் என்ற எழுத்தை வாசித்த உடன் உங்களுக்கு தோன்றுவது என்ன :


அழகான ரசிக்கக் கூடிய  பொய்யான மாளிகை !   ‘காதல்’ என்பது எப்போதும், கதைகளில் வருது போல மூச்சுக்கு முன்னூறு தடவை  ‘ஐ லவ் யூ’ சொல்லாது.. உள்ளங்கையில் வைத்துத் தாங்காது.. கண்ணே மணியே என்று கொஞ்சாது.. அது வலிகள் நிறைந்த முள் பாதையாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  


தொடக்கம் அழகாகத் தெரியும், காதலைத்  தக்க வைத்துக்கொள்ள வாழ்நாள் முழுவதும் போராட வேண்டும்.  ‘கை பிடிச்சுட்டேன், வேற வழி இல்லாமல் வாழுறேன்’ என்று சொல்லாமல்.. ‘பிடிச்சு தான் கை பிடிச்சேன், என்ன ஆனாலும் பிடிச்சு வாழ்வேன்’ என்று சொல்வது தான் ‘காதல்’! 


….


சபாஷ், அருமையான பதில்


******


திருமணத்திற்கு முன் வரும் காதல் பின் வரும் காதல் என இரண்டு மாடலில் கதைகள் எழுதப் படுகிறது. எது மிகவும் விரும்ப தகுந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீங்க:


நிஜமும் நேர்மையும் இருந்தால்.. அந்தக் காதல், திருமணத்துக்கு முன் வந்தாலும் அல்லது திருமணத்துக்குப் பின் தன் துணையின்  மேல் வந்தாலும், அது விரும்பத் தகுந்ததே !


*****


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


எப்போதும்,  ரமணிச்சந்திரன்.. லஷ்மி.. அனுராதா ரமணன். 


தற்போதைய எழுத்தாளர்களில் நிறைய பேர் தங்கள் எழுத்துக்களால் என் மனத்தைக் கவர்கிறார்கள் . 


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


நான் எழுத வந்ததே  ஒரு விபத்து! அதில் சிக்கிக் கொண்டு என்னிடம் அவதிப் படுவது ஜெயந்தி வேணுகோபாலன் அக்கா தான்! இந்தக் கேள்விக்கு அவங்க தான் என்னை விட நல்லா பதில் சொல்லுவாங்க!  சீரியஸா பதில் சொல்லணும் என்றால், எழுத வந்து நிறையக்  கத்துக்கிட்டேன். அக்காவும் நிறைய சொல்லிக்  கொடுத்தாங்க..எப்படி எழுதினா நல்லா இருக்கும்.. எதெது இலக்கணப்  பிழைகள்.. என்று நிறைய கத்துக் கொடுத்து இருக்காங்க. தினம் தினம் புது அனுபவம் தான். 



உங்களை எனக்கு அறிமுகப் படுத்தியவரும் அவங்க தான். நிஜமாகவே சிஸ்டருக்கு ரொம்ப நல்ல மனசு. நானும் கடமைப்பட்டிருக்கிறேன் அவர்களுக்கு


******


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


தொடாமலே சுடும் தணல் 


*******


உங்களது நாவல்களின் பெயர் :


தொடாமலே சுடும் தணல் 


நான் எழுத்தானால் நீ வார்த்தையாவாய் 


நிறம் மாறும் நிலவே 


மௌனமாய் நான் பேசினால் 


அன்றும் இன்றும் என்றும் 


மதன மோக ரூப சுந்தரா 


விடையில்லா வினா இவளோ (இரண்டு பாகங்கள்)


தீராது என் காதல் 


பேசிப் பேசிக் கொல்லாதே 



அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு


******


எழுத வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் எதையாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா :


இல்லை.. ஆரம்பப் புள்ளியில் தானே இருக்கிறேன்..


******

நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி தோன்றியது :


எனக்கு எழுத வரும் என்றே  தெரியாது. கதை படிப்பதில் மிகுந்த ஆர்வம். முதலில், நட்புக்களோடு கதைகளைப்  பற்றிப் பேசி விவாதிப்பதில் ஆரம்பித்து..  அந்த ஆர்வம் விமர்சனங்களை எழுதத் தூண்டியது. அப்போது ஒரு பிரச்னையில், ஒரு எழுத்தாளர் “விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? விமர்சிப்பது ரொம்ப சுலபம். விமர்சிக்கும் உங்களால் ஒரு கதை எழுத முடியுமா? எழுதிப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்” என்று சொன்னாங்க. அவர்கள் சொன்னதில் இருந்த ஒரு நியாயம் மனசை உறுத்தியது..  ‘ஆமாம் தானே? கதை எழுதிப் பார்க்காமலே கதை எழுதுபவர்களைக் குறை சொல்லும் உரிமையை யார் கொடுத்தாங்க?’ என்ற கேள்வியின் வெளிப்பாடே என்னுடைய முதல் கதை!! 


ஆனால் அதன் பிறகு, எல்லோரும் ‘உனக்கு நல்லா கதை எழுத வருது, அதை அப்படியே தொடரு’ன்னு இந்தப் பக்கம் தள்ளிட்டாங்க!!  



🤣🤣🤣🤣


******


நாவல் எழுதி முடித்த பின் நீங்கள் உணருவது என்ன:


ஒரு திருப்தியின்மை! ஏதோ மிஸ் பண்ணுறேன்னு ஒரு ஃபீல் இருக்கும்.. அது ஒரு நிறைவு பெறா தேடல்!  ஜெயந்தி அக்கா கிட்ட எடிட்டிங்குக்கு போயிட்டு வந்த பிறகு  ‘ஓகே’ன்னு தோணும். வாசகர் கையில்  கதை போன பிறகு, அதைப் பத்தி யோசிக்க மாட்டேன்.. நிறையோ குறையோ எதைச் சொன்னாலும்.. அதில் என்ன கருத்து சொல்லி இருக்காங்கன்னு பார்த்துட்டு, அடுத்த கதையில் கவனமா இருக்கணும்னு நினைப்பேன்.


*******


ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை :


ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை! ரொம்ப பொறுமையா தான் எழுதுவேன். 


…..


அவ்வளவு நாட்களா…?


*******


ஒரு அத்தியாயம் எழுத எத்தனை மணி நேரம் தேவைப்படும். அப்படி எழுதப்படும் அத்தியாயம் திருப்தியை கொடுக்கும் விதமாக அமையுமா:


நான் கதையை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே.. இதுதான் கதை;  ஒவ்வொரு அத்தியாயமும் இங்கே ஆரம்பித்து  இங்கே முடிக்கணும் என்று யோசித்து வைத்துக்கொண்டு தான் எழுதவே ஆரம்பிப்பேன். ஆனால், நேரம் கிடைப்பதை பொறுத்து தான்  எழுதுவது. சில நேரங்களில், ஒரே நாளில் ஒரு அத்தியாயம் முழுக்க எழுதி இருக்கிறேன். அதே சமயம்,  ஒரு அத்தியாயம் எழுத மூணு மாசமும் எடுத்து இருக்கிறேன். மனதிலே டயலாக் முதற் கொண்டு யோசித்து வைத்துக்கொண்டு, இந்த அத்தியாயம் இப்படி தான் இருக்கணும் என்று முடிவு பண்ணிவிட்டு எழுதுவதால், ஓரளவுக்கு நினைத்ததை எழுத்தாகக்  கொண்டு வந்துவிட்டேன் என்று  தோன்றும்.  




எழுத்து உலகில் உங்களுக்கு கிடைத்த நட்புகளை பற்றி சொல்ல முடியுமா:


இங்கே கிடைச்ச நெருங்கிய நட்புக்கள் என்றால் ஜெயந்தி அக்கா.. தேனுராஜ் .. பிரியாகெளதம்.. உமா.. நிதா(நிதனி பிரபு) ! அப்புறம் இப்போ இருக்கிற எழுத்தாளர்கள்,  வாசகர்கள் எல்லோரும் நண்பர்களே ! 


*******


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நூல்கள் :


ரமணிஅம்மாவின் கதைகள்.. 


ரா. கி.. ரங்கராஜன் அவர்கள் நூல்கள் அனைத்தும்.. 


******


நிஜ சம்பவத்தை கதையாக புனைந்த அனுபவம் இருக்கிறதா :


என்னுடைய  எல்லா கதைகளிலும் ஏதாவது ஒரு விஷயம் நிஜ நிகழ்வாக இருக்கும்படி  பார்த்துக்  கொள்வேன். அதைச் சுற்றி எனது கற்பனை அலங்காரத்தை வைத்து ஜோடித்துவிடுவேன்.. காமெடி கதைகளைத் தவிர்த்து.. 


******


புதிது புதிதாக எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர். அவர்களுடைய எழுத்துகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கறீங்க:


முகம் சுளிக்க வைக்காமல் இருக்கணும்! இது எனது நீண்ட நாள் வருத்தம்.. இப்போ இருக்கிற எல்லா கதைகளிலும் நான் பார்க்கும் பொதுவான விஷயம்.. ஹீரோ உமனைஸராக இருப்பது! ஒரு அருவருப்பன விஷயத்தை ரசிக்கும்படி ஆக்குகிறார்களே என்ற வருத்தம். ஆன்ட்டி ஹீரோ என்பது பெருமைக்குரியதா? 


ஆங்கிலக் கதைகளில் இது போன்ற  கதைகள் ஃபேன்ட்டஸிக்கு கீழே வரும். ஏன்னா, அவர்களுக்கு அது வியப்பான விஷயம்.. ஒரு பெண் எப்படி ஆணுக்கு அடங்கி, இவ்வளவு அடாவடி பண்ணுறவன் கூட இருந்து, திருத்தி.. என்று வியந்து படிப்பாங்க! அப்படியே கடந்தும் போயிடுவாங்க!



 நம் நாட்டில் இன்னும் நிறைய பெண்கள், வீட்டில் கட்டுப்பாட்டுக்குள் தான் வாழுறாங்க. இவர்கள் என்ன, இது போன்ற கதைகள் மூலம், ஆண் என்றால் குடிப்பான், பொண்ணுங்க கிட்ட போவான்.. பெண் தான் பணிஞ்சு போகணும்னு சொல்லி தருகிறார்களா? அப்படியே ‘நான் துணிவான பெண்’ என்பவர்கள்   


...


கட்டாயம் இல்லை தான்.  ஆனால்  ரசனை என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. நிசயமற்ற போலிகளை வியந்து நோக்குவது


*******


இன்றைய கால காட்டத்தில் அடிக்கும் கணவனுக்கு  அடிமையாகத் தான் வாழுறாங்களா? 


முன்பு ரமணி சந்திரன், லஷ்மி கதைகளிலும் அப்படியான கதாப்பாத்திரங்கள் உண்டு! ஆனால் அந்தக் கதைகளில் வரும் நாயகிகளிடம் ஒரு தன்மான உணர்வு இருக்கும்! கதையின் பின் பகுதிகளில்.. 'அட போ அவனை மன்னிச்சிடு' என்று நம்மை சொல்ல வைக்கும்!  அந்த  அளவுக்கு  அவள் நடத்தை இருக்கும்!  அந்தப் பெண்களிடம் தன்னம்பிக்கை,  தெளிவு எல்லாம் இருக்கும்.  ‘விருப்பம் இல்லாமல் நீ என்னை அடைந்தாலும் என் உடல் களங்கப்பட்டாலும், என் மனம் களங்கப்படவில்லை’ என்று தலை நிமிர்ந்து சொல்லும் பெண்கள் இருப்பார்கள். ஆனா இப்போதுள்ள  கதைளில்.. ஒரு நாள் ஹீரோ தொடலை என்றாலும் அந்தப்  பெண் அவனுக்காக ஏங்குவது போல எழுதுவது.. சரின்னு தோணலை! வாசகர்களுக்கு ரொமான்ஸ் தான் பிடிக்கும்னு சொல்லி.. ஊறுகாயா வைக்க வேண்டியதை உணவா வைக்க வேண்டாம்! அதைத் தான் கதையா படிப்போம் என்று நினைப்பவங்களுக்கு அதற்கான கதைகள் இருக்கு. அங்கே போய் படிச்சுப்பாங்க. குடும்பக் கதைகளில்  விரசத்தை  குறைக்கலாமே! 



👍👍👍 கட்டாயம்


******


ஆன்மீகம் சம்பந்தமான நாவல் எழுத என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்:


கடவுள் என்ற வார்த்தைக்கு அர்த்தம்  தெரிந்து இருந்தால் போதும்! தனக்கு மேலே ஒரு சக்தி இருக்கு.. அது கடவுள்! அதற்கு ஜாதி மதம் எல்லாம் சொல்லி பிரித்து எழுதக் கூடாது. யாரோட நம்பிக்கையையும் நம் எழுத்து புண்படுத்தக்  கூடாது. 




காவல், காதல் இரண்டிற்கும் உள்ள தொடர்பு மற்றும் வித்தியாசமாக என்ன சொல்ல நினைக்கறீங்க:


காவல், காதல் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. காதல் வந்தால் காவல், அரவணைப்பு, இலவச இணைப்பு போல பின் தொடரும். பிரிச்சுப் பார்க்க முடியாது.  கூடாது 


******


அன்றைய எழுத்தாளர்களின் எழுத்து அளவிற்கு இப்போதுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் இருப்பதாக நினைக்கறீங்களா :


இல்லை.. கனமான கதைக் களம், அழுத்தமான எழுத்து, தெளிவான சிந்தனைகள் இப்போதைய கதைகளில் மிஸ்ஸிங். 


******


2014 - வருடத்திலிருந்து நாவல் எழுதுவதாக சொல்லி இருக்கீங்க இத்தனை வருட எழுத்து அனுபவம், படைப்புகள், எதிர்ப்பு பற்றி சொல்ல முடியுமா :


முதல் கதை எழுதும்போது ரொம்ப ஜாக்கிரதையா அடியெடுத்து வைக்க நினைச்சேன். கொஞ்சம் பிசகினாலும் தர்ம அடி விழும் என்ற பயம் இருந்துச்சு. இன்னைய வரை அது இருக்கு! அதே போல, புதிதா ஒரு கதைக்கருவை யோசிச்சு.. இந்தக் கதையைத் தான் எழுதப் போறேன்னு சொல்லும்போதே.. என்  நட்புக்களிடமிருந்து  ‘ஏன் இப்படி சிக்கலா யோசிக்கிற? எதையும் நேரடியா  யோசிச்சு எழுதமாட்டியா’னு தான் கேள்வி வரும். நிறைய விவாதிப்போம். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கோணத்தில் கதை போகும். ‘மௌனமாய் நான் பேசினால்’ கதையை எடுத்துக்கிட்டா.. ‘ஒரு அம்மா, இரண்டு திருமணம் பண்ணினா அவங்க பிள்ளைங்க மனநிலை எப்படி இருக்கும்’னு கதை போகும். அதே போல, ‘அன்றும் இன்றும் என்றும்’ ல.. ‘காதலில் எப்போதும் பெண் தான் விட்டுக் கொடுக்கணுமா.. முடியாது!’ என்று ஒரு பெண் யோசித்தால் என்னென்ன விளைவுகள் வரும்’ னு கதை போகும். ஸோ .. கொஞ்சம்  சிக்கலான கதைக் கரு,  எங்களுக்குள் விவாதத்தை கொண்டு  வரும்!



வெளியில் இருந்து வந்த எதிர்ப்பு என்றால்.. ‘நான் எழுத்தானால்’ கதைக்கு. 


அப்போது இருந்த எழுத்தாளர்கள் நிறைய பேரின் எதிர்ப்பை சம்பாத்தித்து கொடுத்தது இந்தக் கதை! விளையாட்டாக ஆரம்பித்து.. நிறைய எதிர்ப்புகளை  எதிர்கொள்ள நேர்ந்தது!  அடுத்து எழுதிய கதைக்கு நிறைய பேர்  கமெண்ட் போட்டு, பின்னர்  டெலிட் செய்து.. ‘இனி உங்க கதை திரெட்டுக்கே  வர மாட்டோம்’  என்று சொல்லி எதிர்ப்பை காண்பித்து  இருக்காங்க!!



ஓ! இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன?


*******


உங்களது எழுத்துக்காக கிடைத்த மரியாதையாக எதை நினைக்கறீங்க :


நிறைய நல்ல வாசகர்களை எனக்கு கொடுத்து இருக்கு! நிறையோ குறையோ.. வெளிப்படையாக என் கிட்ட சொல்லுவாங்க. அது ஒரு வகையில், நான் அவங்களுக்கு கொடுத்து இருக்கிற நம்பிக்கை தானே!  அதே போல, நல்ல கருத்துக்களை, பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் விதமாக சொல்லுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்… அதை எனது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக நினைக்கிறேன்!!


*******


உங்களது படைப்புகளில் ஏதாவது ஒன்று பற்றி விவரிக்க முடியுமா:


‘விடையில்லா வினா இவளோ’.. எனக்கு எழுத நீண்ட காலம் எடுத்த கதை! இதை எழுத முடியாமல் மனவழுத்தத்தில்  இரண்டு முறை கைவிட்டு.. வேறு  இரண்டு கதைகள் எழுதி.. பிறகு ஒரு வழியாக  முடித்த கதை! எனக்குப் பிடித்த கதையும் கூட!! 


ஒரு தாய், தந்தை, தங்கள் சுயநலத்துக்கு  ஒன்று செய்யப் போய்.. அது பிள்ளைகள் வாழ்வை எந்த அளவுக்கு சூறையாடுகிறது என்பது பற்றிய கதை.


******


நீங்கள் எழுதிய நாவல்களில் வாசகர்களால் கொண்டாடப் பட்ட நாவலாக எதை நினைக்கறீங்க :


எல்லா கதைகளும் நல்ல வரவேற்பை பெற்றவை தான். அதில் அதிகம் கொண்டாடப்பட்டது “மௌனமாய் நான் பேசினால்” தான்.. 


******


உங்களது தொடர்கதையை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு நீங்கள் கூறுவது:


இன்று கொடுக்கும் இந்த ஆதரவை என்றும்  தொடர்ந்து கொடுங்கள்!!



இனி வாசகர்களுக்கான கேள்வி பதில்கள்:



நீங்கள் எழுதிய நாவல்களை வாசித்த வாசகர்களின் கமெண்ட் விமர்சனம் ஏதாவது உங்களை ரொம்ப மகிழ்ச்சி /யோசனை அடையும் படி இருந்ததா:


நிறைய வாசகர்களின் கேள்வி அப்படி அமையும். அதிலும் சிவகாமி! இவங்களைப் பத்தி சொல்லியே ஆகணும் . கதை எழுதும்போதே இவங்க தான் மனசில் வருவாங்க! ஆஹா! இந்த இடத்தில இப்படி எழுதினா.. அவங்க இப்படி ட்விஸ்டை கண்டு பிடிச்சிடுவாங்க. இந்த இடத்தில இவங்க என்ன கேள்வி கேட்பாங்கன்னு நிறைய யோசிக்க வைப்பாங்க!


*******


டெம்ப்ளேட் கதைகள் என்றால் என்ன:


ஹீரோ பணக்காரனா இருப்பார்! அவரோட அழகு, வசதி, அவர் போடுற சென்ட், செருப்பு, அவர் வீடுன்னு எதையும் விட்டுடாம எல்லாத்தையும் ஒரு நாலு பக்கத்துக்கு வர்ணிக்கணும்! அப்புறம், அவர் அதிக உயரமா இருக்கணும்.. இப்போ ஆறரை ஆடி.. (இதுக்கு மேல போன அது வியாதி லிஸ்ட்ல வந்துடும்.). ஹீரோயின்.. அழகி.. இல்லை பேரழகியா இருக்கணும்! ரொம்ப அமைதியான, பொறுமைசாலியான பெண்ணா இருப்பாங்க. இல்லைனா அரை வேக்காடா இருப்பாங்க! ஹீரோ கண்டிப்பா உமனைஸரா தான் இருப்பார்! ஹீரோயினை கல்யாணம் பண்ணியோ பண்ணமலேயோ டார்ச்சர் கொடுப்பார். அப்யுஸிவ் லேங்க்வேஜ்ல தான் திட்டுவார்.  மொக்கை காரணம் சொல்லி கொடுமை பண்ணுவார். 


எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்சா மாதிரி ஹீரோயின் பொறுமையா இருக்கணும். கூடவே அவர் டார்ச்சரை பொறுத்துக்கிட்டு, அவரை ரசிக்கணும், அவருக்காக ஏங்கணும். முக்கியமா.. ஹீரோ  கெட்டவரா இருந்தாலும்,  உமனைஸரா இருந்தாலும், ஹீரோயினை பார்த்ததுக்கு அப்புறம் வேற எந்த பெண்ணையும் நகத்தால் கூட தீண்டி இருக்க மாட்டார்! அவர் உணர்வுகளைத் தட்டி எழுப்பக் கூடிய பெண் ஹீரோயின் மட்டும் தான் என்பதை புரிஞ்சுக்குவார் (ஆனா உமனைசரா இருக்கும்போது யார் தட்டி எழுப்பினா என்று கேள்வி கேட்க கூடாது) அப்புறம் ஹீரோ இன்னொரு  ஒரு மொக்கை காரணம் வச்சு திருந்துவார். திருந்தின அப்புறம் ஹீரோயினை தாங்கு தாங்குன்னு தாங்குவார். கதை முடியும்போது கண்டிப்பா நாலு குழந்தையாவது இருக்கும். 



🤣🤣🤣🤣


******


ஒரு நாவலின் கதையோட்டத்தை அதன் பெயர் நிர்ணயிப்பது எப்படி:



கதையின் கருத்தை,  ஒரு வரியில் அதன் தலைப்பே சொல்லிவிட வேண்டும்!! அதனால் கதை முடிஞ்சதும் தான் தலைப்பை தேர்ந்தெடுப்போம். தலைப்பு ரசிக்கக் கூடியதா என்பதைவிட கதைக்குப் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அதனால கதைக்கு எப்போதும் தலைப்பு தேர்ந்தெடுப்பது ஜெயந்தி அக்கா தான். நான் சில தலைப்புகளை அனுப்பி விடுவேன்.. கதையைப் படிச்சிட்டு இது தான் பொருத்தம்னு சொல்லிடுவாங்க. 


*******


ஏன் திரைப்பட பாடல் வரிகளை நாவலுக்கு கொடுக்கிறார்கள்:


பாடல்களை ரசிக்காத மனிதர்களே இல்லையே! ஏதோ ஒரு வகையில் அது நம்மோடு கலந்த விஷயம். அதில் இருந்து வார்த்தைகளை எடுத்து தலைப்பாக மாற்றும்போது அது சுலபமாக வாசகர்களைச் சென்று அடையும். ஏற்கனவே மனதில் பதிந்த அந்தப் பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கும் போதெல்லாம் இந்தக் கதை நினைவுக்கு வரலாம் .


********


உங்கள் படைப்புகளில் வரும் நாயகர்களுக்காக நீங்கள் உருவாக்கும் திரைப்பட நாயகன் யார்:


எனக்கு இதில் உடன்பாடு இல்லை!  கதை என்பதே கற்பனை!! ஆக,  இதையெல்லாம் படிக்கிறவங்க கற்பனைக்கு விட்டுடணும்! ஒருத்தருக்கு விஜய் பிடிக்கும், ஒருத்தருக்கு அஜித் பிடிக்கும்.. இன்னும் சிலருக்கு வேறொருவரைப் பிடிக்கலாம். அதனால், படிக்கும்போது அவங்கவங்க கற்பனைக்கு யாரைப் பிடிக்குதோ அவங்களை வச்சுக்கட்டும்.


 *******


காஃபி ரைட்ஸ் பற்றிய உங்கள் கருத்து:


நான் இது வரை அதைப் பற்றி யோசித்து இல்லை. என் கதை.. அதை ஆன்லைன்ல படிச்சாலோ, இல்லை pdf ல படிச்சாலோ , புத்தகமா படிச்சாலோ, எப்படி படிச்சாலும் எனக்கு ஓகே தான்! கதையைப் படிக்கணும் என்று தானே எழுதுறோம்.. அப்புறம், இப்படி படிக்காதே அப்படி படிக்காதேன்னு ஏன் தடுக்கணும்? இது என் கதை.. என் காப்பி ரைட்னு ரூல்ஸ் சொல்லணும்? இது என்னுடைய எண்ணம்! அதனால அதை பெருசா யோசிப்பது இல்லை. என் பொழுதுபோக்குக்கு எழுதுறேன்.. உங்க பொழுதுபோக்குக்கு படிங்க.. அவ்வளவே!


அதே சமயம், என் கதையைத் திருடி வேறொருவர் தன் பெயரை அக்கதையின் கதாசிரியர் என்று  போட்டுக் கொண்டால், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது . இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் . 


 

…… 


மிக்க நன்றி சிஸ்டர்,


உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்


நன்றி

 


 


 


 






Comments

  1. Super sis!!! Your answers are all practical speech, loved it,From fb only I came to know about u, first I started with your theerathu en kaathal, then andrum endrum inrum, both stories steal my heart ❤💕💕💖!!!! Avlo love!!!!
    Thangapulla, thenpulla, it's not a word it's an emotional word, I can't come out of this word!!! Then now
    Naan ezhuththaanaal nee vaarthaiyaavaai, Thodaamalay sudum thanal........ Every story different zonal, different emotions, different template!!!! Love u sis!!!! Best wishes to all of your success!!! Keep rocking, keep on going!!!!!!!!! 😘🥰😍

    ReplyDelete
    Replies
    1. நன்றி பீனா .என்னைப் பற்றியும் என் கதைகளைப் பற்றியும் உங்களது அருமையான வார்த்தைகளைக் காண மிக்க சந்தோஷம் . உங்கள் வாழ்த்துக்களுக்கும் , உங்களது தொடர் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .

      Delete
  2. சூப்பர் குளோரியா, பெண்மையில் பார்த்ததற்கு பிறகு ரொம்ப நாள் கழித்து இப்போது உங்கள் பேட்டியை படிக்கிறேன்.
    👌👌👌👌.வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யாரென்று தெரியவில்லை தோழி . பெண்மைத் தோழிகளுள் ஒருவர் எனத் தெரிகிறது . மிக்க சந்தோஷம் . உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல

      Delete
    2. நான் கோதை சுரேஷ்@kvsuresh

      Delete
    3. அக்கா ..கோதை அக்கா , உங்களை இங்கே பார்க்கறதுல அவ்வளோ சந்தோஷம் கா . உங்களைப் போல பெரியவங்க ஆசீர்வாதத்துலயும் , வாசகர்களின் அன்பினாலும் தான் இந்தளவு எனக்குப் பேர் கிடைச்சிருக்கு . ரொம்ப நன்றி அக்கா .

      Delete
  3. மனம் திறந்து வாழ்த்துகிறேன். உண்மையான பதில்கள். எதையும் எதிர்பார்க்காத நல்ல மனம். நிறையோ, குறையோ நான் இப்படித்தான் என மனதில் பட்டதை சொல்லும் தைர்யம் தமிழ்நாட்டில் வாழ்ந்தால் என்ன பிரான்ஸ்ஸில் வாழ்ந்தால் என்ன கதை எழுதவரும் என்ற தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ். அது போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாது படிக்கத்தானே எழுதுகிறேன் அது எந்த வடிவில் படித்தால் என்ன எனும் நம்பிக்கை போற்றற்குரியது. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் நிறைய வலம் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தரணி... கதை எழுத எனக்கு தன்னபிக்கை கொடுத்து என் நட்புக்கள் தான்.. அப்புறம் ஜெயந்தி அக்கா.. விடாம என்னை எழுத வைக்கிறாங்க.. கதை படிப்பதை பற்றி சொன்னது உண்மை தான்.. கதை எழுத வரும்முன்.. இல்லை இப்போ கூட pdf ல சில கதை படிக்கிறேன்.. அப்படி இருக்க எந்த முகத்தை வைத்து கொண்டு மத்தவங்களை படிக்க கூடாதுன்னு சொல்ல முடியும்.. நான் செய்யும் போது தப்பா தெரியாத விஷயம் மத்தவங்க செய்யும்போது தப்புன்னு சொல்ல கூடாது... அதிலும் இப்போ நிறைய எழுத்தளர்கள் இருக்கிறார்கள்.. எல்லோர் கதைகளையும் வாங்கி படிக்கணும் என்றால் அது கொஞ்சம் கஷ்டம் தானே.. படிக்கிறவங்களுக்கு எப்படி வசதியோ அப்படி படிக்கட்டும்.. அதை தான் அங்கே சொன்னேன்.. மா புரிதலுக்கும்.. உங்க பாராட்டுக்கும் நன்றி...

      Delete

Post a Comment