#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளராக வரப் போவது துளசி ராஜ்...
அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :
பெயர் : துளசி ராஜ்
என்னுடைய உண்மையான பெயர் புனிதா. கதை எழுதுவதற்காக என் மற்றும் என் கணவருடைய ஜாதக பெயரை இணைத்து ‘துளசி ராஜ்’ என்று வைத்துக் கொண்டேன்.
சொந்த ஊர் : அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம்.
படிப்பு : எம்.ஏ.
பணி : இப்போதைக்கு வி.ஐ.பி. (அதாங்க வெட்டி ஆபீஸர்)
தளம் : Srikalatamilnovels.com
அமேசான் பெயர்: துளசி ராஜ்
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
சொல்லலாமே… நான் ரொம்ப நல்ல பொண்ணுங்க. என்ன… வாய் மட்டும் கொஞ்சம் அதிகம். திருமணத்திற்கு பிறகு நான் என் வாயினால் வாங்கிக் கட்டிக்கிட்டதும் அதிகம் தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச்சை குறைச்சிக்கிட்டேன். என்னுடைய நேரம் பெரும்பான்மை தனிமையில் தான் கழியும். அப்போதிலிருந்து தான் நாவல்களை படிக்க தொடங்கினேன். அதன் பிறகு இப்போது வரை தொடர்கிறது. (நான் நாவல்களை எழுதுவேன் என்று ஆயா சத்தியமா கனவுல கூட நினைச்சி பார்க்கலங்க)
*******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
அது இருக்கும்ங்க ஒரு பெரிய லிஸ்ட்… ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன், உமா பாலக்குமார், எல்சி திவாகர், எஸ். உஷாராணி, ஸ்ரீகலா, இன்பா அலோசியஸ், மல்லிகா மணிவண்ணன், ஹன்சிகா சுகா, நிவேதா ஜெயாநந்தன், பிரேமா, ஜேபி, ஜனனி நவீன், ஆத்விகா பொம்மு
*******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
நான் இன்னுமே ஆரம்ப நிலையில் தான் நிற்கிறேன். என்னிடம் என்ன அனுபவம் இருக்க போகிறது சிஸ்… ஆரம்ப காலத்திற்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
*******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
காதல் மழையே (நவீன்-மஹதி)
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
இப்போதைக்கு என் பையனோட ஒன்னாங்கிளாஸ் ஸ்கூல் புக்ஸ் தான். அவனுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கலன்னா என்னை பாடாப்படுத்தி எடுத்து விடுவான்.
ஜோக்ஸ் அபார்ட்… திருக்குறள் படிப்பேன்ங்க.
...
பையனோட சேர்ந்து நமக்கும் பள்ளி அனுபவம் கிடைக்கும். தொடரட்டும்.. எனக்கும் எனது இரண்டு மகன்களால் கிடைத்தது.
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
அந்த திறமையை தான் நானும் தேடிட்டு இருக்கேன்… கண்டுபிடிச்சதும் இந்த உலகிற்கு (முக்கியமா என்ற வூட்டுக்காரருக்கு தான்) உரக்க சொல்லணும்
....
🤣🤣🤣🤣
*******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
8 நாவல்கள், 1 குறுநாவல்
*****
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
2 வருடம் ஆக போகுது
******
சிறுகதை எழுதியிருக்கீங்களா
இல்லை
******
வரலாறு, பேன்டஸி, திகில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா?
இதுவரை வரலாறு, பேன்டஸி, திகில் கதைக்கருக்களை வைத்து கதை எழுதியது இல்லை. ஆனா எழுதணும்ன்னு ஆசை இருக்கு. அடுத்த வருடம் பார்க்கலாம்.
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
இணைந்திட வா எனதுயிரே (ஆன்கோயிங் நாவல்… இன்னும் 3 அல்லது 4 அத்தியாயங்களில் முடிந்து விடும்)
*****
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :
1. காதல் மழையே
2. உயிர் நேசமே சுவாசமாய்
3. மழைச்சாரலாய் என்னை தீண்டிய காதலே
4. நெஞ்சினில் நிறைந்தவள் நீயே
5. மனம் மயங்குவதேனோ
6. உயிரே உனையே நினைத்து (குறுநாவல்)
7. மனதிலே புது நேசம் மலருதே
8. என் உயிரோடு உறவாட வந்தாயே
9. நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே (நெஞ்சினில் நிறைந்தவள் நீயே பார்ட் 2)
....
அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
கதம்ப மலர்ச்சரம் போல் எல்லாம் கலந்து இருக்கும்.
******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:
இப்போதெல்லாம் வாசிப்பதற்கு நேரமே இல்லை.
******
உங்களது தனிப்பட்ட விருப்பம் ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா :
என் அம்மா படிக்காதவங்க. கல்யாணம் ஆன 3 வருஷத்துலயே என் அப்பா ஒரு விபத்துல இறந்துவிட்டார். அதன் பிறகு அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு தாத்தாவோட உதவியால தான் என்னையும் என் தம்பியையும் வளர்த்தாங்க. சோ நான் என் அம்மாவை போல் இருக்காமல் நிறைய படிக்கணும், சொந்த கால்ல நிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். இப்போது முதுகலை படித்து இருக்கிறேன். கொஞ்ச நாள் வேலைக்கு போனேன். பின்பு கொரோனா காரணமா வேலையை விட்டுவிட்டு வீட்டுல இருந்து குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நிலைமை சீரானதும் மீண்டும் வேலைக்கு செல்வேன்.
...
மேன்மை நிலையடைய வாழ்த்துகள்.
******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
எல்லா கதையும் பிடித்து தான் எழுதுகிறேன். என் கதையில் வரும் அனைத்து ஹீரோ-ஹீரோயின்களும் என்னை கவர்ந்த கதாபாத்திரங்கள் தான்.
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
நெஞ்சினில் நிறைந்தவள் நீயே… இந்த கதை தான் வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் விஷ்ணுவர்தன் மற்றும் மித்ராவின் கதாபாத்திர தன்மை.
*******
எழுத்தாளனின் மைக்கு உள்ள வலிமையை அவர்கள் சரியாக பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா :
இதற்கு நான் பதில் சொன்னால் தெய்வ குத்தமாகிடும்ங்க. (எதுவுமே காலம் தான் பதில் சொல்லும்)
******
எத்தனையோ விதமான படைப்புகள் இருக்க ஒரே மாதிரி படைக்கப் படுகின்ற கதையம்சம் வாசிக்க சலிப்பை ஏற்படுத்துமா அல்லது அந்த எழுத்தாளரின் மீது கோபத்தை ஏற்படுத்துமா :
ஒரே மாதிரி கதையம்சம் கொண்ட கதைகளாக இருந்தாலும் எழுத்தாளர் அந்த கதையைக் கொண்டு செல்லும் விதம் சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் வாசகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தாது.
******
உங்கள் கதைகளை வாசிக்கும் போது அதில் சமூக சிந்தனைகள், நிஜ சம்பவத்தின் தாக்கம் ஏதாவது இருக்குமா :
நிஜ சம்பவத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.
*****
நிஜ வாழ்வின் நடக்கின்ற சம்பவங்களை நாவலாக வடித்த அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :
என்னுடைய எல்லா நாவல்களிலும் ஏதோ ஒரு நிஜ சம்பவங்களை எவ்வித பூசல்களும் இன்றி அப்படியே எழுதி இருப்பேன்.
******
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
கதைகளை படிக்க பிடிக்கும். கதை வாசிப்பு அதிகமான பின்பு ஒருநாள் நாமளும் ஒரு கதையை எழுதி பார்ப்போமே என்று தோன்ற, முயற்சி செய்தேன். அப்படியே என் எழுத்துப் பயணம் தொடர்கிறது.
******
நாளிதழ்களில் கதை எழுதிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க :
இல்லை
******
இன்றைய எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ளக் கூடியவை என்று ஏதாவது உண்டுமா :
நானே கத்துக்குட்டிங்க. என் கிட்ட போய் இதை கேட்கலாமா? நான் ஃபாலோ பண்ற சிலவற்றை இங்கு கூறுகிறேன்.
ஒன்றே செய்... நன்றே செய்… அதையும் இன்றே செய்… என்று நினைவில் கொள்ளுங்கள். முடிந்த வரை பிழை இல்லாமல் எழுதுங்கள். கதையோட்டம் தெளிந்த நீரோடை போல கொண்டு செல்லுங்கள். தெரியாததை தெரிந்து கொள்ள முயச்சி செய்யுங்கள்.
...
அருமையான தகவல்.
*****
ராணிமுத்து, கண்மணி, மாலைமதி நாவல்களில் எல்லாம் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவரும்போது அவர்களது புகைப்படமும் இணைக்கப்படும். அதைப் பார்த்தவுடன் அத்தனை மகிழ்ச்சியாக காணப்படும் ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள நினைப்பதில்லை. அது ஏன்னு சொல்ல முடியுமா :
அது அவரவர்களது விருப்பம்ங்க.
******
நீங்கள் நாவல் எழுத எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்: :
ஒரு நாவல் எழுதி முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆகும்.
******
ஒரு நாவல் எழுதும் போது அதன் அத்தியாயங்கள் இத்தனை வர வேண்டும். வார்த்தைகள் இத்தனைக்குள் முடிய வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள் :
ஆம்… எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டு தான் எழுத ஆரம்பிப்பேன். 25 to 30 அத்தியாயங்கள், 40,000 to 50,000 வார்த்தைகளுக்குள் ஒரு நாவலை முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
******
நிஜ சம்பவத்தையும், கற்பனை காட்சிகளையும் இணைந்து எழுதப்படும் நாவலில் எது வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் :
கற்பனை தான் வாசகர்களின் விருப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
******
ஒரு நாவல் எழுதும் முன்பு அதற்கான வருணனை, கற்பனைக்காட்சி, நிஜ சம்பவம், நகைச்சுவை, காதல் , சமூகம், குடும்பம் ... இன்னும் நிறைய இருக்கு இதில் நீங்கள் உங்களுடைய நாவலுக்கு எதெல்லாம் தேர்ந்தெடுக்கிறீங்க :
கதைக்கரு மற்றும் அதற்கான கற்பனைக் காட்சிகள்
******
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :
என் அம்மா நான் எது செய்தாலும் அதற்கு உறுதுணையாக தான் இருப்பாங்க.
*****
நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை, கவிதை, கற்பனை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா?
எனக்கு நானே பேசிப்பேன். ஆனால் கவிதை, வருணனை எல்லாம் கதையின் போக்கில் தான் எழுதுவேன்.
*****
கவிதை எழுதிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க பார்க்கலாம் :
நான் மேனிலை வகுப்பில் படிக்கும் போது தமிழ் பாடத்தில் ஒரு பத்து மதிப்பெண் கேள்வி வரும். அதில் ஒரு வார்த்தையை கொடுத்துட்டு அந்த வார்த்தையை வைத்து இரண்டு பக்கத்திற்கு குறையாமல் கவிதை (அ) கதை எழுத சொல்லுவாங்க. நான் கவிதை என்ற பெயரில் என் இஷ்டத்திற்கு கிறுக்கி வைத்து விடுவேன். இது தான்ங்க என் அனுபவம்…
...
🤣🤣🤣 அழகான அனுபவம்
*******
நீங்கள் எழுதிய நாவல்களில் ஏதாவது ஒன்று பற்றி விவரிக்க முடியுமா:
மனதிலே புது நேசம் மலருதே… எஸ்எம்எஸ் அழகிய சங்கமம் 2 போட்டிக்காக நான் எழுதிய கதை. இது பெண்களின் மறுமணம் பற்றிய கதை. அதில் தாமரை, ரத்னா என்ற இரண்டு பெண்களின் மறுமண வாழ்வு எப்படி அமைகிறது, சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவென்று கூறி இருப்பேன்.
*****
தனிக் குடித்தனம் மற்றும் கூட்டு குடும்பம் கதையில் உள்ள சிறப்பம்சம் என்ன :
இரண்டுக்குமே ப்ளஸ் ஆர் மைனஸ் இருக்கு.
******
நிஜ சம்பவத்தை அடிப்படையாக கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
என் கதைகளில் ஆங்காங்கே நிஜ சம்பவங்கள் இடம் பெறும். அதை படித்து விட்டு ‘இப்படியெல்லாம் கூட செய்வார்களா’ என்று வாசகர்கள் கேட்பார்கள்.
******
நீங்கள் கதை தேர்ந்தெடுக்கும் முறை : இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்ல முடியுமா ?
நான் எனக்கு தோன்றுவதை எழுதுவேன். ஒரே நேரத்தில் 2, 3 கதைக்கரு தோன்றும். அதில் எது என் கற்பனையை இழுத்து செல்கிறதோ அந்த கதையை எழுத தொடங்குவேன். மற்றொன்றை சிறு குறிப்பாக எழுதி வைத்து விட்டு பிறகு எழுதுவேன்.
....
நானும் கூட
*****
கிராமிய மணம் கமழ் பாஷை இடம் பெறும் நாவலிற்கும் பட்டண ஆங்கில உச்சரிப்பு மிடுக்கான நடையுடன் கூடிய நாவலிற்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா
எதுவாக இருந்தாலும் அது வாசகர்களுக்கு புரியும் விதத்தில் இருந்தால் போதும்.
*****
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
இல்லை
*****
அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
அன்றும் இன்றும் காதல் ஓர் அழகிய உணர்வாகவே இருக்கிறது. காதலர்கள் தான் மாறுகிறார்களே தவிர காதல் மாறுவதில்லை.
*****
ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க
‘உண்மை என்றுமே கசக்கும்’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப சில கதைகள் சமுதாயத்தின் அவலங்களை அப்படியே பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட கதையின் காட்சிகளை படிக்கும் போது பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரம் நம் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அதை கடக்க இரண்டு நாட்கள் ஆகலாம், அல்லது ஒரு வாரம் கூட ஆகலாம்.
******
தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்: ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள்:
ஆரம்ப அத்தியாயங்கள் வாசகர்களை கவர செய்ய வேண்டும். அடுத்தடுத்து என்னவென்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் வாசகர்கள் தொடர்ந்து படிப்பார்கள். இல்லையென்றால் கடந்து சென்றுவிடுவார்கள்.
கதைகளின் நடுநடுவே பாடல்வரிகள், கவிதைகள் இடம் பெறுவது சிலருக்கு சலிப்பாக இருக்கலாம். அல்லது காட்சிகளும் வசனங்களும் இழுவையாக இருந்தாலும் சலிப்பாக இருக்கும்.
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :
என்னையும் ஒரு எழுத்தாளரா நினைத்து நேர்காணல் கேள்விகளை அனுப்பியதற்கு நன்றிங்க (இங்கு பற்கள் தெரிய ஈஈஈஈ என்று இளிக்கும் ஸ்மைலியை போட்டுக் கொள்ளவும்)
....
😁😁🤣🤣 போட்டுட்டேன் நன்றி🙏
******
உங்களது நாவலை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது:
நான் எப்போதும் கூறுவது தான்… மிக்க நன்றிங்க. உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னுடைய கதையை தொடர்ந்து படிப்பதற்கு. லேட் நைட் ஆனாலும் காத்திருந்து நான் அத்தியாயம் பதிந்ததும் ஓடி சென்று படித்து விட்டு வந்து கருத்துகளை பகிர்ந்து கொள்வீர்கள். நான் பொறுமையாக எல்லா கருத்துக்களையும் படித்து விட்டு பதிலளிப்பேன்.
அண்ட்… சாரி நட்பூஸ்… அதிக வேலை பளு இருந்தால் மட்டுமே சில சமயம் உங்களுக்கு பதிலளிக்காமல் விட்டு விடுவேன். என்னடா பதில் வரலையே என்று என் மேல் கோபம் கொள்ளாமல் நீங்கள் தொடர்ந்து கமெண்ட்ஸ் செய்து கொண்டு தான் இருக்குறீர்கள். இனி முடிந்தளவு உடனுக்குடன் பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.
******
மிக்க நன்றி சகோதரி🙏🙏
உங்களது பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்.
நன்றி
Comments
Post a Comment