#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் பெத்தன சுதா அருஞ்சுனைக்குமார் அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:
பெயர் : பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
சொந்த ஊர் : குமணன்தொழு கிராமம், தேனி மாவட்டம்
படிப்பு : M.Sc(CS & IT)
பணி : இல்லத்தையும் கடையையும் எழுத்தையையும் பார்த்துக் கொள்வது
தளம் : பிரதிலிபி, அமேசான்
அமேசான் லிங்: https://www.amazon.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/e/B08S7RBY2Q/ref=dp_byline_cont_pop_ebooks_1
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் or முடிவுற்ற லிங்
சூப்பர் ரைட்டர்ஸ் போட்டிக்கான தொடர்கதை...
"கழ(ணி)னியில் விளைந்த காதல்", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/series/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-vj11oqgvd8hu?utm_source=android&utm_campaign=content_series_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
புத்தம் போட்டிருக்கும் நிலையத்தின் பெயர், புத்தகத்தின் பெயர் :
பிரியா நிலையம் - காதலாகி கரைந்துவிட்டால்.
Notion press - காருவா இரவு கேட்கும் காவு இரண்டுமே முடியும் தருவாயில் இருக்கிறது...
காதலாகி கரைந்துவிட்டால் நாவல் நவம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து கிடைக்கும்... காருவா இரவு கேட்கும் காவு நாவல் எப்போது கிடைக்கும் என்பதை இன்னும் சில நாட்கள் கழித்து தான் சொல்ல முடியும்.
....
நல்லது
******
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
கணினி படித்து
கல்யாணம் முடித்து
கரும்பலகையில் என்னைக்
கரைத்துக் கொண்டிருந்த வேளையில்
காற்றாய் தழுவி மீண்டும் என்னைத்
தன்னகத்தே அடக்கிக் கொண்டாள்
எம் அன்னை...
அவள் கைப்பிடித்து அவளை எண்ணத்தில் நிறைத்து எழுத தொடங்கியதும் எண்ணம் யாவும் வண்ணங்களாய் உருப்பெற்று வாழ்வே அழகான வானவில்லாய் மாறிப்போனது.
கணினியில் ஆயிரம் மொழிகள் படித்தாலும் ஆதி மொழியாம் எம் தமிழே என்னைக் கர்வம் கொள்ள வைக்கிறது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் அந்த இறுமாப்பை நானும் கொஞ்சம் களவாடி எழுதுகோலை விட்டுவிடாது எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை வேறு திக்கை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் உடன் வருவது என் தமிழன்னை என்ற உவகையில் பயணிக்கிறேன்.
அற்புதங்கள் அள்ளித் தரும் இப்பயணத்தில் தமிழன்னை மட்டும் அல்லாது தமிழ் சொல்லிக் கொடுத்த என் அன்னை தந்தை உயிராய் வந்த உடன்பிறந்தோர், உறவாய் வந்த காதலன் அவன் நகலாய் உதித்த மகவு என சுற்றத்தோடு நகர்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாய் இருப்பது அவர்கள் தானே. அந்த நம்பிக்கையால் தான் மூன்று ஆண்டு கால எழுத்துப் பயணம் சாத்தியமானது.
....
மிகவும் அருமை சகோதரி, உங்கள் தமிழ் உச்சரிப்பில் மெய் சிலிர்த்து விட்டது. தொடர்ந்து எழுத்துலகில் சாதித்திட என்னுடைய வாழ்த்துகள்.
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
கல்கி, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன், சாண்டில்யன், பா.விஜய் ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன், ஶ்ரீ கலா, இன்பா அலோசியஸ், என். சீதாலட்சுமி... இன்னும் நிறைய
****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
கல்லூரியில் கட்டுரைப் போட்டி நடக்கும் போது நான் போய் கலந்துக்கிட்டேன். முதல் பரிசும் வாங்கிட்டேன். அப்போத்தான் தமிழ் துறையோட தலைவி தேவகி மேடம் என்னைக் கூப்பிட்டு விட்டாங்க. நீ நல்லா எழுதியிருக்கன்னு சொன்னாங்க. சொன்னவங்க அதோட நிக்காம எனக்கு ஒரு கவிதை எழுதி குடுன்னு சொல்லிட்டாங்க. மேம் என்னால முடியாது கட்டுரை நோட்ஸ் எடுத்து எழுதுவேன் ஆனா கவிதை வாய்ப்பே இல்லைன்னு சொன்னேன். ஆனா அவங்க கேட்கவே இல்லை. இதை எழுதுன நீ அதையும் எழுதுவ போ போய் எழுதிட்டு வான்னு சாதாரணமா சொல்லிட்டாங்க. அப்பறம் முட்டி மோதி நைட்டு எல்லாம் உக்காந்து ரூம் மேட்ஸை குழப்பி எப்படியோ கவிதைங்கிற பேர்ல ஒன்னு எழுதிட்டு போனேன். நல்லா இருக்கு. இன்னும் நல்லா நீ எழுதுவன்னு சொன்னாங்க. அவங்க சொன்ன அந்த வார்த்தைதான் எனக்கு கவிதை எழுத கத்துக் குடுத்தது... இன்னும் இன்னும் என்னை கத்துக்க வச்சது. (பின்னாடி சூர்யவம்சம் பிஜிஎம் கேட்டா நான் பொறுப்பல்ல)...இப்போ கதை எழுதறேன்னா அதுக்கான ஆரம்ப புள்ளி அவங்க வச்சது. தேவகி மேம் உங்களுக்கு எனது நன்றி.
....
😂😂😂 அருமை
*******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
அது நாவல் அப்படிங்கிற வரையறைக்குள்ள வராது... குறு நாவல் அப்படின்னு சொல்லாம். உண்மை காதல் யாரென்றால் இதுதான் நான் முதன்முதலில் எழுதியது... அதுவும் என் காதல் கதையையே கொஞ்சம் மாத்திப் போட்டு எழுதுனேன்... அதனால இது எனக்கு ரொம்பவும் ஸ்பெசல்
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
புதிதா(ரா)ன காதலிது, கழ(ணி)னியில் விளைந்த காதல் இரண்டுமே போட்டிக் கதைகள் தான்.
******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க...
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
கல்லூரி காலத்தில் சரித்திர நாவல்கள்... இப்போது காதல் நாவல்கள்
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
எல்லா நாவலும் ஒவ்வொரு வகையில் என்னை அறிமுகப்படுத்தத்தான் செய்தது. ஆனாலும் காருவா இரவு கேட்கும் காவு நாவல் மூலமே ஒரு திருப்பம் கிடைத்தது
******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் : 16
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன:
மூன்று வருடங்கள்
*******
உங்கள் நாவல்களின் பெயர் :
குறுநாவல்கள்:
1. உண்மை காதல் யாரென்றால்
2. உயிரோடு உறைந்தவளே
3. விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
4. சீற்றத்தால் சிதறிய காதல்
சிறுகதை:
1. தீரா வெறி வாங்கும் பலி
2. ரௌத்திரம் பழகு பெண்ணே
3. பேயைத் தேடி
நாவல்:
1.நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்கிறதே
2.காருவா இரவு கேட்கும் காவு
3.ஆசை ஆசையாய் இருக்கிறதே
4.என் கவிதையே எனை காதல் செய்வாய்
5.காத்திருக்கின்றேன் காலனாய்
6.தங்கச் சூரியனே
7.வானவில் வச(சொ)ந்தங்கள்
8.முதன்முறை காதல் அழைத்ததோ
9.காதலாகி கரைந்துவிட்டால்
10.நெருப்பிலே வாழும் வெண்கதிரோன் இவன்
11. அகலில் அமிழ்ந்த ஆன்மா
12. நானே வருவேன்
13. தேடாதே தெரியமாட்டேன்
14. மறைந்திருக்கும் மர்மம் என்ன?
15. தேடும் போதே தொலைந்தாய்
16. நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
ஆன்கோயிங்
1. புதிதா(ரா)ன காதலிது
2. கழ(ணி)னியில் விளைந்த காதல்
3. நானே வருவேன் 2.0
...
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
காதல் நகைச்சுவை குடும்பம் இதைப் பொறுத்துதான் பெரும்பாலும் இருக்கும். கூடவே சின்னதாய் சமூக கருத்தும் அதில் அடங்கியிருக்கும்.
*******
ஒரு எழுத்தாளர் கதை எழுத அமரும் போதும் முடிக்கும் போதும் எப்படி உணர வேண்டும்னு நினைக்கிறீங்க:
பிரம்மன் போல் உணர வேண்டும்
...
வித்தியாசமான பதில்
*******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
ஒரு அம்மாகிட்ட போய் உங்களுக்கு எந்த குழந்தை பிடிக்கும்னு கேட்டா என்ன சொல்லுவாங்களோ அதுதான் எனது பதிலும்... எல்லா கதையும் எனக்குப் பிடிக்கும். ஆனா எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்
விக்னேசுவரன் - பேய்க்கு எல்லாம் ரொம்ப பிடிச்சவன்
ராவணேசுவரன் - அழுத்தமான கேரக்டர். ஆதித்த கரிகாலன் - இவனை மாதிரி காதலிக்க யாராலும் முடியாது அப்படின்னு தோண வைப்பான்.
அனந்த பத்மநாபன் இவரோட வீரத்துக்கும் கம்பீரத்துக்கும் அந்த வானம் கூட எல்லையில்லைன்னு நம்மளையே பீல் பண்ண வைப்பார்.
அருண்மொழி வர்மன் சிக்கன் பிரியாணின்னு சொன்னா போதும் காதலியை கூட விட்டுட்டு சாப்பிட போய்டுவான்.
அருண் சூர்யா...ஒரு பெர்பெக்ட் போலீஸ் அதிகாரி... நான் எழுதுனதுலயே இவன் கொஞ்சம் வித்தியாசமானவன் தான்..
சஞ்சலா.. ஆவியாய் சுத்திட்டு இருந்தாலும் குடும்பத்துக்காக போராடுவா.. இன்னும் நிறைய நிறைய இருக்கு... ஆனாலும் போதும் இதோட முடிச்சுக்கிறேன்.
....
அருமையான கதைக்கருக்களை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது. மகிழ்ச்சி
*******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
காருவா இரவு கேட்கும் காவு நாவல் தான்... இதுதான் எனக்கான திருப்பம். இந்த கதை ஒரு பேய்க்கதை தான். ஆனா பயம் வந்தாலும் சிரிப்பும் கூடவே வந்துடும் அதுக்கு காரணம் விக்கி... அவனோட கேரக்டரே எவ்வளவு பயம் இருந்தாலும் அதை முகத்துல காட்டாம நகைச்சுவையோடு கடந்து போயிடுறதுதான். அவனை பேய்க்கே அவ்வளவு பிடிக்கும்... அவனுக்காகவே எனக்கு நிறைய வாசகர்கள் கிடைச்சாங்க. இப்போ விக்கிக்கு தனியா ஒரு ஆர்மியே இருக்குன்னா பாத்துக்கோங்களேன். அவங்க குடுத்த ஆதரவால தான் விக்கியை வச்சே அடுத்து இரண்டு பேய் நாவல் எழுதிட்டேன். இன்னும் ஒன்னு ஆன்கோயிங்ல இருக்கு.
....
நான் பிரதிலிபியில் ஒரு சில பேய் கதைகள் வாசித்த அனுபவம் இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களின் பெயரை குறித்து வைக்கவில்லை. அப்படிப் பட்ட கதைகளை வாசிக்கும் போது, யாராவது பின்னே இருந்து தோளில் கை வைத்துவிட்டால் அம்மாடியோவ் பேய் தானோ என்று அரண்டு விடுவோம். அந்த மொமன்ட் இருக்கே 🤣🤣🤣🤣
******
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
அவங்க இல்லைன்னா நான் இல்லை. அவங்களோட அன்புதான் என்னை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது. சில நேரங்களில் என்னால் எழுத முடியாத சூழ்நிலை வரும் போதெல்லாம் அவங்கதான் உள்பெட்டியை தட்டி தட்டி என்னை குட்டி குட்டி அன்பை கொட்டி கொட்டி என்னை மீண்டும் எழ வைத்து எழுதவும் வைத்திருக்கிறார்கள். அத்தகைய அன்பிற்கு நன்றி என்ற வார்த்தை கூட பத்தாது. ஆனாலும் சொல்லுவேன். அனைத்து வாசக சொந்தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
******
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டா... நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
கதை சங்கமம் போட்டியில் முதன்முறை காதல் அழைத்ததோ நாவல் ஆறுதல் பரிசு பெற்றது. அழகிய சங்கமம் போட்டியில் எனது நாவல் காதலாகி கரைந்துவிட்டால் கதையும் தேர்வாகி இப்போது புத்தகமாக வெளிவரவிருக்கிறது. ரௌத்திரம் பழகு பெண்ணே என்ற சிறுகதை செப்டம்பர் மாதத்தின் சிறந்த எழுத்தாளர் என்ற விருதினை பெற்றுத் தந்திருக்கிறது. நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் இந்த கதையை நிவேதா ஜெயாநந்தன் மேம் படிச்சுட்டு நல்லாருக்குன்னு சொன்னாங்க. அதுவும் எனக்கு பரிசு வாங்குன சந்தோசத்தைத் தந்தது.
....
அருமை சிஸ்டர்
*******
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
தனியார் பள்ளியில் ஒரு மூன்று வருடம் கணினி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வேலை பார்த்த நிவேதா என்ற சகோதரிதான் நீங்க நிறைய ஸ்டோரி படிக்குறீங்களே நீங்களே ஒரு ஸ்டோரி எழுதுனா என்ன என்று சொன்னாள். அவளின் அந்த வார்த்தைகள் தான் எனது எழுத்தாளர் அவதாரத்திற்கு காரணம். நன்றி நிவேதா பேபி
******
நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு பிடித்த நாவல் எது? அந்த கதாபாத்திரத்தை பற்றி சற்று விளக்க முடியுமா?
நெருப்பிலே வாழும் வெண்கதிரோன் இவன்... இந்த நாவல் என் அப்பாவுக்காக நான் எழுதியது. அப்பாவோட வாழ்க்கையில நடந்ததை அப்படியே கதையாய் எழுதினேன். எழுதும் போது நிறைய இடங்கள் என்னை அழ வைத்தது. அப்பாவைப் பத்தி அவர் பட்ட கஷ்டத்தைப் பத்தி எனக்கு தெரியும். அதை எழுத்தாக எழுதும் போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாகவும் அதே சமயம் நெருக்கமாகவும் இருந்தது.
*******
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :
சில நேரங்களில் ஒரு வேலையும் செய்யாம இருக்கயே என்று சொல்லித் திட்டினாலும்... பல நேரங்களில் அவர்கள் தான் எனக்கான உற்சாக பானம். என் ஹஸ்பெண்ட் இதுவரைக்கும் எதுவுமே சொன்னது இல்லை. கதையை படிச்சதும் இல்லை. அந்த வகையில் அவர் தப்பிச்சுட்டாரு...
அதே மாதிரி என் தம்பி விக்கி என் தங்கச்சி சுபா... இவங்க இரண்டு பேரும் ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. சில சமயம் என்ன எழுதுறதுன்னே எனக்குத் தெரியாது. அப்போ அவங்க கூட தான் நான் பேசுவேன்.கண்டிப்பா எனக்கான ஐடியாவை அவங்க பேச்சில இருந்தே கேதர் பண்ணிடுவேன்... உண்மையிலே எனது வளர்ச்சி அவர்களுக்கு மிகுந்த சந்தோசம்...
...
மகிழ்ச்சி
******
ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம்:
அது எழுதுவதைப் பொறுத்துதான். ஒவ்வொரு நாவல் நான் வேகமாகவே முடிச்சுடுவேன். ஒவ்வொரு நாவலுக்கு ரொம்பவும் டைம் எடுக்கும்.
....
கதையோட்டத்தின் தேர்வு அருமையாக இருந்தால் வார்த்தைகள் அருவியாக கொட்டும்.
******
திகில் கதை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கிங்க. இப்படிப்பட்ட கதையம்சத்தை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும் :
பயப்படவும் பயமுறுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்
....
🤣🤣🤣
*****
பேய் கதை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க.. அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
பேய்க்கதை எதுக்காக எழுதுனேன்னு எனக்கேத் தெரியலை... பர்ஸ்ட் நான் எழுதுன மூணு ஸ்டோரியும் காதல் கதைதான். அடுத்து சும்மாதான் ஒரு பேய்க்கதை எழுதுவோம்னு எழுதுனேன்.. அடுத்து அந்த பேயை நானும் விடலை. அதுவும் என்னை விடலை. ஆனா அந்த பேய்க்கதை எழுதுன பிறகுதான் என்னோட வாசகர் வட்டம் அதிகரிச்சுட்டே போனது. கதை எழுதும் போது நிறைய டைம் உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சுடும். அதுவும் பெரும்பாலும் நான் இரவு நேரத்துலதான் எழுதுவேன். எனக்குப் போட்டியா தூரத்துல நாய் எல்லாம் குரைக்கும். சில நேரம் யாரோ கூடவே இருக்குற மாதிரி எல்லாம் தோணும். அப்போ எல்லாம் அப்பா ஐயனாரப்பா உன் புள்ளைய காப்பாத்து ப்பான்னு வடிவேல் பாணியில சொல்லி வேண்டிக்கிட்டு கம்முன்னு படுத்துடுவேன்.
...
🤣🤣🤣 அருமை சிஸ்டர்
******
உங்கள் நாவலில் வரும் காதல் காட்சிகளை நீங்கள் எப்படி கையாளுறீங்க :
எங்களோட காதலை மையமா வச்சு எழுதுவேன். இல்லை என்றால் எனது சுற்றத்தில் நடக்கும் விடயங்கள் அதைக் குறித்தும் எழுதுவேன்.
******
நிஜ சம்பவத்தின் அடிப்படை, நம் அன்றாட வாழ்வில் ஆங்காங்கு நடக்கும் சம்பவங்கள், நமது பிடித்தங்கள் இவைகளை நாவலில் புகுத்தும் போது அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது :
உண்மை சம்பவத்தை புகுத்தும் போது அந்த இடத்துக்குள்ள நானே மறுபடியும் நிக்குற உணர்வு தான் வரும். குடும்பத்துக்குள்ள நடக்குறதை எழுதும் போது அன்று நடந்த காட்சி தான் என் கண்ணுக்குள் விரியும். அதை அப்படியே எழுதும் போது.. வாசகர்களும் கண்முன்னே நடக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லுவாங்க.
*****
ஒரு நாவல் எழுத நீங்கள் பயன்படுத்துவது என்ன என்ன:
முதல்ல கதைக்கான கரு என்னென்னு யோசிப்பேன். அது எந்த பிரிவுல எழுதணும்னு முடிவு பண்ணுவேன். அவ்வளவுதான். அடுத்து அந்த கதையே என்னை கூட்டிட்டு போய்டும்...அதுவும் பேய்க்கதைன்னா சொல்லவே வேண்டாம். அந்த ஆவியே நம்மளை அலைய வச்சு சிறப்பான சம்பவத்தை நடத்தி முடிச்சுடும். அப்பறம் நான் ஒரு சோம்பேறி. நோட்டுல எழுதி அதை டைப் பண்ண பயங்கரமா கஷ்டப்படுவேன். அதனால அப்படியே மண்டையில தோணுறதை மொபைல்லயே டைப் பண்ணிடுவேன். சில நேரம் ரொம்பவும் கண் வலிச்சா மட்டும் நோட்டுல எழுதிட்டு அப்பறமா டைப் பண்ணுவேன்.
....
நோட்டில் சும்மா சும்மா எழுதி நேரத்தை செலவிடுவானேன். குறிப்பிட்ட அத்தியாயத்தின் காட்சிகளை மனத்திரையில் ஓட விட்டு, அப்படியே வார்த்தைகளாக மாற்றி விட வேண்டியது தான்.
******
வரலாற்று நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இருக்கிறது. என்னோட ஆசை ஆசையாய் இருக்கிறதே... நாவல் தளபதி அனந்த பத்மநாபன் ஆசான் அவர்களின் வரலாற்றை சொல்லும் நாவல்தான். முதன்முறையாய் நான் நிறைய தகவல்கள் திரட்டி எழுதிய நாவலும் அதுதான். அதை எழுதும் போது அந்த எழுத்தின் வாயிலாக அவர் வாழ்ந்த பள்ளிமேடை வீட்டுக்கே போய் வந்த அனுபவம் கிடைத்தது.
******
நாவல்களில் திணிக்கப்படும் எல்லை மீறிய காட்சி என்பது என்ன :
படிக்கும் போதே எந்தவகையிலும் நம் மனதை சமாதானப்படுத்த முடியாத வகையில் இருக்கும் காதல்(காமம்).... வேறு மாதிரியான உணர்வுகள்... சமூகத்திற்கு தேவையில்லாத கருத்துகளை விலாவரியாக சொல்லுவது போன்றவை எல்லை மீறியதாக எனக்குப் படுகிறது.
....
நிச்சயமாக
******
போட்டி கதையில் பங்கேற்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
அது ரொம்ப சுவாரசியமானதாக இருந்தது. பேர் வெளியிடாம எழுதுன அந்த போட்டியில ஒவ்வொரு விமர்சனமும் வரும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். போட்டி முடியும் வரை ஒரு மாதிரி பரபரப்பான மனநிலையே இருக்கும்.
*******
நீங்கள் வாங்கி இருக்கும் பரிசு விபரங்களை வெளியிட முடியுமா :
நிறைய மின் சான்றிதழ்கள்... கதை சங்கமம் போட்டியில் ஆறுதல் பரிசுக்கான பணமும் கூடவே ஒரு புத்தகமும் அனுப்பி வைத்தார்கள்.
*******
பிரதிலிபி பற்றி சொல்லுங்க :
என் எழுத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு என்னை எழுத்தாளராக மாற்றித் தந்த தளம்.
....
என்னையும் கூட
*******
உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது :
நன்றி நன்றி நன்றி... இதே ஆதரவும் அன்பும் தொடர்ந்து உங்களிடம் இருந்து என்றும் வேண்டும்.
*******
எழுத்துலகம் பற்றிய உங்களது கருத்து :
என்னை பொறுத்த வரை அது எனக்கான உலகம். என்னதான் அருஞ்சுனைக்குமார்க்கு மனைவியாய் அக்ஷிதாவிற்கு அம்மாவா இருந்தாலும் இங்க எனக்குன்னு ஒரு தனியான இடம் இருக்குறது ஒரு மாதிரியான பரவசத்தை தினம் தினம் அளிக்கிறது.
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம்:
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை இருந்தால்
நீங்கள் வெற்றியாளராக இருக்க முடியாது...
உங்களுக்கு விதியின் மீது
நம்பிக்கை இருந்தால்
நீங்கள் சாதனையாளராக இருக்க முடியாது.
உங்களுக்கு உங்களின் மீது
நம்பிக்கை இருந்தால்
உங்கள் கிரீடங்களை யாராலும்
பறிக்க முடியாது....
எனக்கு ரொம்ப பிடிச்ச பா. விஜய் அவர்களின் வரிகள். நான் சோர்வுறும் போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் வரிகள் இவை.
எழுத வந்த கொஞ்ச நாள்லயே என்னைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் நீ எதுக்கு இதை எழுதுற. வேண்டாம்... பேசாம வேலையை மட்டும் பாரு என்று பேச தொடங்கினார்கள். கூடவே எதிர்மறை விமர்சனங்களையும் அவ்வப்போது எதிர் கொள்ள நேரிடும். அப்போதுதான் ஒன்று புரிந்தது வேண்டாம் என்று சொல்லுபவர்கள் எந்தவித முயற்சியும் இல்லாமல் சொல்லிவிட்டு அதற்கான தாக்கம் என்று எதுவும் இல்லாமல் கடந்து விட.... நாம் மட்டும் ஏன் அதை தடையாய் நினைத்து தயங்கி நிற்க வேண்டும்.
இது வேண்டும் என்று நான் முடிவு செய்தது. அதை வேறு எவர்க்காகவும் நான் முடித்துக் கொள்ள மாட்டேன். என் முடிவை மாற்றி எழுத வேண்டும் என்றால் அதையும் நான் மட்டும் தான் மாற்றியெழுத வேண்டும். வேறு எவர்க்கும் அதற்கான அதிகாரம் இல்லை.
அதனால எதிர்மறை விமர்சனம் வந்துடுச்சுன்னு அந்த இடத்திலே தேங்கிடாம நாம நம்மளோட வழியில போய்ட்டே இருக்கணும். ஒருநாள் நமது ஆர்ப்பரிப்பைக் கண்டு அவர்களே நமக்கான வழியை விட்டு ஒதுங்கி சென்றுவிடுவார்கள்... ( சில சமயங்களில் முகநூலில் பொங்கல் போஸ்ட் பார்க்கும் போது தோன்றிக் கொண்டே இருந்தது.. கூடவே நானும் அந்த பொங்கல் வாங்கிய எழுத்தாளர் என்ற முறையில் இதை சொல்லுகிறேன்)
Dream it
Aim it
Get it
அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஆனந்த ஜோதி சகி உங்களுக்கும் எனது வாழ்த்துகள். இவ்வளவு தூரம் இதை நீங்க சாத்தியமாக்கியதற்கு... உங்களது எழுத்துக்களுக்கும் எனது வாழ்த்துகள். இது ஒரு சிறந்த அனுபவமாக எனக்கு எப்போதும் இருக்கும். என்னை நானே மீண்டும் பார்த்து ரசித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்த நேர்காணல் அமைந்தது... மிக்க மகிழ்ச்சி... தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைத்து எழுத்தாளர் சொந்தங்களுக்கும் வாசக சொந்தங்களுக்கும் குடும்பத்திற்கும், என்னுடனே இருக்கும் ஐயனுக்கும் எனது நன்றிகள்.
******
மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும், பாரட்டுகளும் சகோதரி
எத்தனையோ நேர்காணலை நிகழ்த்தியிருக்கிறேன் பலர் குறும்புத்தனமாக பதிலளித்தபர், சிலர் அதிரடியாக சொல்வார்கள், சிலர் அருமையாக சொல்வர். சிலர் கடமைக்கு சொல்வது போல தோன்றும்.. சிலரது பதிவு வியப்பாக இருக்கும், சிலரது ஆச்சர்யமாக இருக்கும், என்றுமே என்னுள் சிலிர்ப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் இன்றைய நேர்காணலின் ஆரம்பமும், முடிவும் என்னுள்ளே சிலிர்ப்பையும், ஏதோ போன்ற உணர்வையும் ஏற்படுத்தி விட்டது.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், எழுத்துலகில் சாதனைகள் பல படைத்திடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
நன்றி நட்புக்களே
ஒரு எழுத்தாளர் கதை எழுத அமரும் போதும் முடிக்கும் போதும் எப்படி உணர வேண்டும்னு நினைக்கிறீங்க:
ReplyDeleteபிரம்மன் போல் உணர வேண்டும்
சபாஷ் 👏🏾👏🏾👏🏾👏🏾
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
காதல் நகைச்சுவை குடும்பம் இதைப் பொறுத்துதான் பெரும்பாலும் இருக்கும். கூடவே சின்னதாய் சமூக கருத்தும் அதில் அடங்கியிருக்கும்.
அந்த சமூக கருத்து என்னனு தெரியல😆😆😆🤭🤭🤭
பின்னாடி சூர்யவம்சம் பிஜிஎம் கேட்டா நான் பொறுப்பல்ல)...
இது அல்ட்டிமேட் 😆😆😆
கணினி படித்து
கல்யாணம் முடித்து
கரும்பலகையில் என்னைக்
கரைத்துக் கொண்டிருந்த வேளையில்
காற்றாய் தழுவி மீண்டும் என்னைத்
தன்னகத்தே அடக்கிக் கொண்டாள்
எம் அன்னை...
வேற லெவல்