கிரேக்க மணிமகுடம் பாகம் 2 மற்றும் 3

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : பாரதிப்பிரியன்

படைப்பு : கிரேக்க மணிமகுடம்

வெளியீடு : விதைகள் பதிப்பகம்

பெரிய வரலாற்று நாவல். அதிகப்படியான கதாபாத்திரங்கள், அட்டகாசமான வருணனைகள், அழகான எழுத்து நடை, அதனூடு நம் தமிழ்நாட்டை அந்நியர்களின் பிடியில் இருந்து மீட்கப் போராடிய கதை மாந்தர்கள், தமிழகத்தை அபகரிக்க துடிக்கும் எதிரிகள், அவர்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம், போர் யுக்தி, பொறிகளை உருவாக்குதல் மற்றும் தகர்த்தல், சிறையில் நடக்கும் கொடுமை என கதைக்களம் பரபரவென நகர்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு, கதையில் நிறைய நாயகர்கள் வலம் வர கதையின் நாயகன் யாராக இருக்கும் என்ற ஊகிப்பு!

இப்படியொரு அட்டகாசமான வரலாற்று நாவலை வடிவமைத்த எழுத்தாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏

இனி கதைப் பற்றி

சோழப் பேரரசர் கரிகால சோழருக்குப் பிறகு, சோழ அரியணையைக் கைப்பற்றுவதில் ஏற்படும் வாரிசு சண்டையும், அவர்களுக்குள் ஏற்படும் பகையைப் பயன்படுத்தி அயல்தேசத்திலிருந்து வரும் பகைவர்கள் எவ்வாறு தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறார்கள், அவர்களுக்கு உதவி புரிபவர்கள் யார்? அவர்கள் எங்ஙனம் விரட்டியடிக்கப்படுகிறார்கள்? சிங்கள, கிரேக்க படையை இரண்டாக பிரிந்த சோழப்படை எப்படி எதிர்கொள்கிறது? சோழ அரியணையில் அமரப் போவது யார் என்பதை விறுவிறுப்பும் அதிரடியும் கலந்து சொல்லியிருக்காங்க.

பார்ட் 1 ல் - கிரேக்கம், சிங்களம், சேரமன்னன் என்று மும்முனை தாக்குதலில் மாட்டிக் கொண்ட இளமாறன், வஞ்சகத்தால் முறைப்பெண் கையாலே கத்தியில் குத்தப்பட்டு கடலில் சாடி, ஆலிமா எனும் கடற்கொள்ளையருடன் சேர்ந்து மூழ்குவதுடன் நிறைவு பெற்றிருந்தது.

பார்ட் 2 & 3 ல் புதிய அறிமுகமும், சூழ்ச்சி வலையும், சோழத்து மீதான ஆசையும், ரினீவா, முத்து தீவு, ஏதென்ஸ் என்று கதையில் புதிய இடங்களுடன் நிறைய தகவல்களும், கேள்விகளும் நமக்கு எழுகிறது.

இதில் சந்திரிகா யார்? இன்பலீலாவதியிடம் மறைக்கப்பட்ட ரகசியம் என்ன? பாண்டிய தேசத்தை தன் வசப்படுத்தும் அகோட்டஸ், ஜெயசிம்மன், சேரன் ஆகியோரின் திட்டங்கள் ஈடேறுகிறதா? ஏதென்னாவுக்கு தமிழகத்தின் மீதென்ன கோபம்? சிங்கள, கிரேக்க படைகள் எங்ஙனம் யாரால் சிதறடிக்கப்படுகிறார்கள்? கரிகாலனின் ஆசைப்படி பட்டத்து இளவரசாக அரசாள போவது யார்? என்ற கேள்விகள் வாசிக்கும் நமக்கு அதிகப்படியாகவே ஏற்படுகிறது.

கடலில் குதித்த இளமாறன் இறந்து விட்டதாக அனைவரும் பேசுவதைக் கேட்டதும் சோகமாக இருந்தது. அவன் இறக்காமல் வந்து விட வேண்டும். அவனை அப்படியொரு நிலைக்கு ஆளாக்கியவர்களை சும்மா விடக் கூடாது என்று கோபமாக வந்தது.

சேர மன்னன், இன்பலீலாவதி, முத்தழகி ஆகியோரை சிறை செய்ய முயன்று சேர, சோழ, பாண்டிய அரசுகளை தனக்கு கீழே கொண்டு வர துடித்த ஜெயசிம்மனும், நெடுங்கிள்ளியும், அகோட்டஸும் சதிகளுக்கு எல்லாம் சதிகாரர்களாகத் திகழ்ந்தவர்கள்.

ஏதென்னா, பாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே முரட்டுத்தனமும், உடன்பிறந்தவன், பெற்றவரை அவமதிக்கும் விதமாக நடந்து, தமிழகத்தை தனக்கு கீழே கொண்டு வரும் விதமாகவே இருந்தது.

பல அத்தியாயங்கள் பறந்து சென்று விட்டது. பார்ட் 2 & 3 விறுவிறுப்பும், பரபரவென நகர்ந்த விதமும் அட்டகாசம்.

புத்தகம் தற்சமயம் விற்பனைக்கு வந்திருப்பதால் கதைப்பற்றி எதையும் கூற விருப்பப்படவில்லை.

"சோழம் வெல்லும்! சோழம் வெல்லும்! " எனும் இடம் மெய் சிலிர்க்க வைத்தது.

அது போல, "தமிழகத்தை பகைவரிடம் கொடுத்து அடிமையாக வாழ்வதை விட, தங்களுக்கு இடையில் இருக்கும் பகையை மறந்து, அந்நியர்களை அடித்து துரத்தி அவர்களை இங்கு அரியணை ஏற விடாமல் செய்வோம்" எனும் இடம் ரொம்ப நன்றாக இருந்தது👌👌👌

ஆலிமாவின் 'அசுர தேவதை' என்னும் கப்பல் பாலித் தீவை சுற்றி வளைத்து பிடித்திருக்கும் எதிரிகளை வெல்லும் காட்சியும், முசிறி துறைமுகத்தில் நடத்தும் கடல் போரும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடலில் ஆலிமாவின் வீரம் இரட்டிப்பாக மாறுவதாகவே உணர்கிறேன்.

டையோனிஸ், இளமாறன், நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, நன்மாறன் பாத்திரங்கள் அழகாக மனதில் பதிகிறார்கள்.

அது போல, வேல்விழி, மணிமேகலை, முத்தழகி, ஆலிமா, சவ்ஜித்தா ஏதென்னா, சந்திரிகா, பூவிழி, பனிமலர், இன்பலீலாவதி என்று ... ஒவ்வொருவரும் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அப்படியே மிரட்டியிருக்கிறார்கள்.

சேரமன்னன் இளஞ்சேரலாதன், அகோட்டஸ், ஜெயசிம்மர், தோமர், போரிட்டஸ், பாஹ்லாஸ் இன்னும் பல பாத்திரங்கள் வில்லத்தனமும், துணை கதாபாத்திரங்களாகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இறுதி காட்சி மாறுபட்டு ஜொலிக்கிறது. கிரேக்க மணிமகுடம் வாசிப்பவர் மனதிலும் அழகான மகுடத்தை சூட்டும் என்று நம்புகிறேன். கதை நன்றாக இருக்கிறது. புத்தகத்தை வாங்கி வாசித்து மகிழுங்கள். பச்சைக் கண்ணழகியும் நீலக்கண்ணழகியும் நிச்சயம் உங்களை கவருவார்கள்.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெறவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐💐

Comments