ராணி மங்கம்மாள்



#வாசிப்புஅறைகூவல்


#ஜோதிரிவ்யூ

நூலின் பெயர் : ராணி மங்கம்மாள்

ஆசிரியர் : நா. பார்த்தசாரதி

நூலின் அளவு : 30 அத்தியாயங்கள்

இன்றைய வாசிப்பு : நூல் முழுவதும்

முகநூல் பதிவு

இந்த மாத வாசிப்பு அறை கூவல்போட்டி இன்றுடன் நிறைவு பெறுவதால், அதற்கு முன்பு எனக்கு மிகவும் பிடித்த நா. பார்த்தசாரதி ஆசிரியர் அவர்களின் ஒரு நூலாவது வாசிக்க வேண்டும் என்ற ஆவலின் பேரில் "ராணி மங்கம்மா" நாவலை வாசித்து முடித்து விட்டேன். என்னே ஓர் எழுத்து நடை! கதை நகர்வு, கதாபாத்திரங்கள்.. அப்படியே வாசிக்கும் நம்மை கதையுடன் கட்டிப் போடுவதுடன் மனதை அழுத்தவும் செய்து விட்டது.

இனி கதை பற்றி...

கணவரை இழந்து மகன் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பனுடன் வாழ்ந்து வருகின்ற ராணி மங்கம்மா, மதுரை கள்ளழகர் திருவிழாவில் பங்கேற்று விட்டு தமுக்கத்தில் அமைந்துள்ள அரண்மனைக்கு வருகிறார். அப்போது டில்லி பாதுஷா ஒளரங்கசீப், தனக்கு கப்பம் கட்டி வருகின்ற அரசர், சிற்றரசர்களிடம் கப்பம் வசூலிக்க செல்கின்ற படைவீரனிடம் செருப்பு ஊர்வலத்தை நடத்துவதாக செய்தி வருகிறது.

அதாவது, வருடா வருடம் தென்னாட்டு அரசர்களிடமும், சிற்றரசர்களிடமும் கப்பமும், வரியும் வாங்குவதற்காக பாதுஷாவின் படை வீரர்கள் வருவதுண்டு. இந்த வருஷம்,  ஒரு புது ஏற்பாடாக ஒளரங்க சீப்பின் செருப்பு ஒன்றை யானை மேல் அலங்கார அம்பாரியில் ஜோடித்து வைத்து அனுப்பி இருக்கிறார்கள். கப்பம் கட்டுகிற நாட்டு அரசர்களும், மக்களும் அந்தச் செருப்பை வணங்கி வழிபட வேண்டுமாம்!

இதை அறிந்த ராணி மங்கம்மா அதற்கு தன்னுடைய எதிர்ப்பை சாதூர்யமாக தெரிவிக்கிறார். இளவரசன் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன் சித்ரா பௌர்ணமி தரிசனத்துக்கு வந்த இடத்தில், நோய்வாய்ப்பட்டு மறுபடியும் திரிசிரபுரத்துக்கே திரும்பி விட்டதாக, அவர்களது படைவீரர்களிடம்  கூற சொல்லி விட்டு, திரிசிரபுரத்தில் அமைந்திருக்கும் இல்லத்திற்கு மகனுடன் சென்றுவிடுகிறார்.

அங்கு மகனுக்கு முடிசூட்டி அவன் ஆசைப்பட்ட பெண் முத்தம்மவை திருமணம் செய்து வைக்கிறார். மதுரையில் பார்க்க முடியாததால், திரிசிரபுரத்திற்கு வருகின்ற படைவீரனுக்கு சரியான பதிலடி கொடுக்கிறான் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன். ஆட்சியையும் திறம்பட நடத்தி, நோயில் பாதிப்புற்று மரணத்தையும் தழுவுகிறான்.

கணவன், மகன், மருமகள் என மூவரையும் இழந்த ராணி மங்கம்மா எப்படி எதிரிகளிடமிருந்து நாயக்கர் பரம்பரையை காப்பாற்றுகிறார்? பேரன் விஜயரங்கனை வளர்த்து ஆளாக்குகிறார்? என்பதை விறுவிறுப்பு கலந்து ரொம்ப ரொம்ப நன்றாக சொல்லியிருக்காங்க.

மங்கம்மா பாத்திரம் மனதை வெகுவாக கவர்கிறது. அவரது மகனின் உரையாடல் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிக்கும் விதமாக இருக்கிறது. அவரது காதல் மொழிகளும், ஒளரங்கசீப்பின் படை வீரரிடம் உரையாடுகின்ற இடமும், கிழவன் இரகுநாத சேதுபதியிடம் போர் புரிய சென்று ஏமாந்து வருகின்ற இடமும்  வாசிக்கும் போது அருமையாக இருக்கிறது.

மகனை இழந்த மங்கம்மா, பேரனை வளர்த்து ஆளாக்கி, தனியொருவராக நின்று எதிரிகளை கையாள்வதும், விவேகமாக நடந்து கொண்டு எதிரியுடன் நட்பு பாராட்டுவதும் பிரமாதமாக இருக்கின்றன.

காதல் கணவன் இறந்து விட்ட அதிர்ச்சியில் முத்தம்மா எடுத்த முடிவு பாவமாக இருக்கிறது. அவளது மகன் இப்படியா வளர வேண்டும் என்ற அதிர்ச்சி, மனதை கனக்க செய்து விட்டது.

* இந்த கதையில் தென்னகத்து மீது படையெடுத்து வந்து, எதிர்பாராத வகையில் போரிட முடியாமல் திரும்பி சென்ற கோபத்தில், மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தென்னக மக்களுக்கு பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க கூடாது என்று அணை கட்டி விடுகிறான். காவிரி வறண்டு விடுகிறது. விவசாயம் செய்ய முடியாமல் திண்டாடுகிறார்கள் விவசாயிகள். அதனால், தஞ்சைவீரர்களும், மதுரை வீரர்களும் எதிர்த்து செல்கின்றனர். இந்த இடத்தை வாசிக்கும் போது இப்போது நடக்கும் இன்னல்கள் அப்போதே முளை விட்டிருக்கின்றன என்று எண்ணச் செய்தன.

அதுபோல திருவாங்கூர் நோக்கிய படையெடுப்பும், மன்னரின் ஏமாற்றும், பதிலடியும் நன்றாக இருக்கிறது. தஞ்சை மன்னரும் அதேதான்!

இந்து, முஸ்லீம், கிருஸ்தவர்களுக்கு உதவி புரியும் இடங்கள் 👌👌👌

கிழவன் இரகுநாத சேதுபதி சரியான நபர்🤣🤣 பேச்சிலும் நடத்தையிலும் அவரை யாராலும் மிஞ்ச முடியவில்லை. மறவர் குல மக்களின் ஒற்றுமை அருமையாக கூறப்பட்டு உள்ளது.

* தன் மீதான பாட்டியின் அன்பு, அக்கறை, ஆட்சி செய்யும் முறை, அவரது வயது என்று எதுவும் புரியாமல், தெரிந்து கொள்ளவும் விரும்பாமல், பிறரின் தவறான தூண்டுகோலால் அவரிடம் நடந்து கொண்ட முறையும், வரைமுறையற்ற பேச்சும் மனதை கனக்க வைத்தது.

தாத்தா, பாட்டி, அப்பா இவர்களின் வீரமும், விவேகமும் அவனிடம் இல்லாமல் போனது ஆச்சரியப்படதக்க வகையில் உள்ளது. பாட்டியின் கனவும், அச்சமும் அப்படியே மாறி நடந்து விட்டது.

அத்தனை பெரிய ஆளுமையுடன் நடந்த மங்கம்மாவின் இறுதி காலம் இப்படி சோகம் பொருந்தியதாக இருந்திருக்க கூடாது. மனம் கலங்கி விட்டது வாசிக்கும் போது!

நாவல் அட்டகாசமாக இருக்கிறது. எழுத்தாளருக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்💐💐

Comments