தோள் சீலைப் போராட்டம்

#ஜோதிரிவ்யூ

#வாசிப்புஅறைகூவல்

நூலின் பெயர் : தோள்சீலைப் போராட்டம்

ஆசிரியர் : கொல்லால் எச். ஜோஸ்

நூலின் அளவு :


ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழர்களாகிய நமது பழமொழி. ஆடை தான் மனிதனை தரத்திலும் தகுதியிலும் உயர்த்திக் காட்டுகிறது. 

ஆதிகாலத்திலிருந்து நம் மானம் மறைக்க உபயோகப்படுத்தப்பட்ட ஆடை, ஆதிக்க சக்தியின் ஆணவத்தால், அகங்காரத்தால் கீழ் சாதி என்று முத்திரை குத்தப்பட்ட மக்களுக்கு, பொதுமாக பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. உழைக்கும் சாதியை சேர்ந்த ஆண்களுக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. ஆனால் பெண்களுக்கு அவர்களது மார்பை மறைப்பது உரிமை. அதை தடுத்து அம் மக்களின் உரிமைகளை பறித்து, உணர்ச்சிகளை நசுக்கி, சாதியை காரணம் காட்டி அவர்களின் மார்புகளை மறைக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த ஒரு காலம், நம் தமிழகத்தின் தென் கோடிப் பகுதியில் இருந்தது. 

சமுதாயத்தின் விளிம்பு நிலையிலிருந்த மக்களால், அவர்களுக்கு எதிராக அவ்வளவு எளிதில் போராட முடியவில்லை. சுயமரியாதையை இழந்து தன் வீட்டுப் பெண்களுக்கு நடந்த துயரங்களை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் இருந்தது. ஆனாலும், தங்களை யார் ஒடுக்கி ஆள்கிறார்களோ அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையில் தான் அவர்கள் பொருளாதார வாழ்வும் இருந்தது.

உயிருடன் வாழ்வதற்கு காசு சம்பாதிக்க உழைக்கவே அவர்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை. அதனால், அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. அதிலும் ஆணுக்கு தலைக்கும் பெண்ணுக்கு மார்புக்கும் வரி விதிக்கப்பட்டது. இன்னும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாக்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக போராட்டம் நிலவியது. தன் வீட்டுப் பெண்களுக்கு ஆடை அணியும் உரிமையை பெற்றுக் கொள்வதையே இலட்சியமாக கொண்டு சென்று வெற்றியும் பெற்றதற்கான பெயரே "தோள்சீலைப் போராட்டம்"

இப்போராட்டத்தை துவக்கி, முன்னின்று நடத்தியவர் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடார்கள். போராட்டம் துவங்கி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நேரம் இந்து மதத்தை சார்ந்த நாடார்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். 

கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் தேவாலயங்களுக்கு வரும் பெண்கள் மார்பில் ஆடை அணியாமல் வந்ததால், அதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர். அத்துடன் மதம் மாறி வருபவர்களுக்கும் கச்சை அணிய உதவினர். கச்சை அணிந்தவர் அதன் மீது மாராப்பை போட்டு நடமாடுவதை கண்ட நாயர் இன மக்கள் அதை பெரிதும் எதிர்த்தனர்.

அதைக் கண்டு கொள்ளாமல் பள்ளி வாசலுக்கு வருபவர்கள், கச்சை அணிந்து நடமாடும் நாடார் இனப் பெண்களின் மார்பை மறைக்கும் மேலாடையை அவிழ்த்தும், அடித்தும், கோவில்கள், பாடசாலைகளை உடைத்தும், வன்முறையில் ஈடுபட்டும், பொய் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியும் கஷ்டங்களை கொடுத்து உள்ளனர். 

இவர்களின் கொடுமைகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. நாடார் இனத்தவரை தாக்கியது போல அவர்களும் நாயர் இனத்தை சார்ந்தவர்களை திரும்பி தாக்கினர்.

இதில், கிறிஸ்தவ மதத்திற்கு சென்ற இந்து நாடர்கள் மேலாடை அணிவதற்கு அதிக ஆர்வம் காட்டியதுடன், படிப்பு, ஆலய வழிபாடு என பலவற்றிலும் அவர்களுடன் கலந்து கொண்டனர். பின்னாளில் வந்த ஐயா வைகுண்டர், இந்து மதத்து போதனைகளை விட்டு கிறிஸ்தவ மதத்தில் இணைவதை விரும்பாமல், "போராட்டத்தில் இணைவதற்காக யாரும் மதம் மாறும் அவசியமில்லை. அவரவர் மதத்தில் இருந்து போராட்டத்தை தொடரலாம். நாடார் குல மக்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. நீங்கள் ஏழு கன்னிமார் பெற்ற ரிஷி பிள்ளைகள். மண் சுமக்க மறுத்து சோழ மன்னனையே எதிர்த்த வீரப்பரம்பரை. பத்ரகாளியால் வளர்க்கப்பட்ட தெய்வ குழந்தைகள் என்பன போன்ற புராணங்கள், பழம் பெரும் கதைகள் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

இப்படி பலவிதமாக நடைபெற்ற போராட்டங்கள் எப்போது, எப்படி, யாரால் முடிவுக்கு வந்தது? நாடார் இனப் பெண்களுக்கு விடிவு காலம் பிறந்ததா? மற்ற இனப் பெண்களின் நிலை என்ன? போன்ற கேள்விக்கான பதில்களை ஆசிரியர் ரொம்ப நன்றாக கொடுத்திருக்காங்க.

குமரி மண்ணில் உதித்த வைகுண்டர் உட்பட பலர் இதற்காக போராடினாலும் இதற்காய் போராடி மக்கள் மனதில் விழிப்புணர்வு ஊட்டி, போராட்ட குணத்தை வளர்த்தாலும், ஆங்கிலேய மிஷனரிகளின் அதிகாரமும் செல்வாக்கும் இந்த ஏழை எளியவர்களுக்கு பெருமளவில் உதவியுள்ளது.

புத்தகம் வாசிக்க அருமையாக இருக்கிறது. மேலும் இது பற்றி தெரிய விரும்புவர்கள், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை உபயோகித்து வாசித்து மகிழுங்கள்.

எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐

*****

Comments