மணிமான் மைந்தன் விமர்சனம்

#ஜோதிரிவ்யூ
படைப்பு : மணிமான் மைந்தன் (கண்ணனும் வஞ்சித்த கர்ணன்)
எழுத்தாளர் : பாரதிப்பிரியன்
வெளியீடு : விதைகள் பதிப்பகம்

கொடை வள்ளல் கர்ணனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமான இதிகாச புனைவு நாவல் இது.

கர்ணன் என்ற பெயரை சொன்னாலே அவரைப் பற்றி தெரியாதவர் இந்த உலத்தில் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாமனிதனின் வீரதீர சாகசங்களையும், சரித்திரத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்களையும், நாம் அறிந்தும் அறிந்திராத பல புதிய தகவல்களையும், அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

நமது சிறு வயதிலேயே தொலைக்காட்சியில் நாடகங்கள் வழியாகவும், பள்ளிப் பாடத்திலும், திரைப்படத்திலும் கர்ணனை பற்றி அறிந்திருந்தாலும், இந்த புத்தக வாசிப்பில் கிடைத்தற்கரிய சில அரிய செய்திகளை அறிந்து வியப்புக்கு உள்ளாகினேன்.

கர்ணனின் பிறப்பு, இளமை காலம், அவரது போராட்டமான வாழ்வு, வில்வித்தையை கற்க எடுத்த கடுமையான முயற்சிகள், குருக்களின் பேச்சால் வருந்தி கவலைப்படுகின்ற இடங்கள், சூரியனின் மீதான பாசம், அவரது உதவிகள், ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று தன்னை நீருபிக்க போராடும் இடங்கள், துரியோதனின் நட்பு, அங்க தேசத்து அரசனாக பிரகடப்படுத்த பட்ட பிறகு நடக்கும் சம்பவங்கள், திருமணம் மற்றும் இரு மனைவியருடனான வாழ்க்கை, கெளரவ , பாண்டவ படைகளுக்கு இடையே ஏற்படுகின்ற மோதல்கள், நட்புக்கு உதாரணமாக துரியோதனுக்கு உதவும் பாங்கும் பிரமாதம்👌👌👌

இதில், விருஷாலி சுப்ரியா என்ற இரு மனைவியரின் பாசமும், அவர் மீதான நேசமும் அருமையாக உள்ளது. ஏனோ, சுப்ரியாவை பிடித்து இருந்தாலும் விருஷாலியின் மீதுதான் எனக்கு அதிகப்படியான பாசம் ஏற்பட்டது. கணவனை விரும்பி அவனுடனான திருமணம் நடக்காமல் போய் விடுமோ என்று பயப்படுவதும், அவன் தேரோட்டியின் மகனாக இருந்து அங்க அரசனாக மாறிய பிறகு ஏற்பட்ட பதற்றமும், நிம்மதியற்ற மனநிலையும், கண்ணனுக்கு விரதம் இருந்து அவனுக்காக வேண்டுவதும், விரும்பிய வாழ்க்கை அமைந்தும் நிம்மதியற்று வாழ்வதும் வாசிக்கும் போது பாவமாக இருந்தது. கணவனின் மீதான அவளது அன்பும், அக்கறையும் மிகவும் அழகாக இருக்கிறது.

சுப்ரியாவின் வருகையும், இருவரது அறிமுகமும் திருமணத்தன்று முதல் மனைவியிடம் அவள் பேசிய வார்த்தைகளும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதுபோல, அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற சூதாட்டத்து அன்று பெண்கள் இருவரும் கணவனிடம் பேசிய காட்சிகள், அழகுற வடிவமைக்கப்பட்டு இருந்தன.

துரியோதனன் கர்ணனுக்காக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்யும் இடங்கள் பிரமாதம். அஸ்வத்தாமன் இந்த கதையில் கர்ணனுக்கு அடுத்ததாக பிடித்த நபர். அத்தனை கச்சிதமான படைப்பு.

திரௌபதியின் அறிமுகமும், அவரது காதலும், ஏக்கமும் இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள். மெய்யாலுமே ஆச்சர்யமாக போய் விட்டது எனக்கு. கர்ணன் அவரது காதலன் மட்டுமே, பெண்கள் இருவருக்கும் தான் அவர் கணவர்!!

பீஷ்மர் கர்ணன் மீது காட்டிய பாசம், அக்கறை ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. அவர்கள் இருவரது சந்திப்புகள் நிகழும் இடம் அத்தனையும் அருமையாக உள்ளன.

துரியோதனனின் மனைவி பானுமதி, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நீருபித்து காட்டி, தவறானவருக்கு தண்டனை கொடுப்பதில் வெகுவாக மனதைக் கவருகிறார்.

கண்ணனின் மாயஜாலம் மாறி மாறி நிகழும் இடமும், பரசுராமரிடம் விசேஷ வித்தைகளை கற்க சென்ற இடமும், இந்திரனின் வருகையும், போரில் நடந்த மாயஜாலமும் 👏👏👏

கர்ணனின் புகழ் இன்னும் பல நூறாண்டு காலம் இப்பூலகில் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்ட மனிதனின் வாழ்வில் நடந்த சூதும், வஞ்சகமும், தம்பியின் மீதான பாசமும், நண்பனுக்காக உடன் பிறந்தவர்களுடன் சேராமல் இருக்கும் இடமும், சூதாட்ட காட்சியில் இருந்த கம்பீரமும், பேச்சும், மனைவி இருவர் மீது காட்டிய பாசமும், மகனது இறப்பு அன்று அமர்ந்திருக்கும் தோற்றமும், குந்தியின் வருகையும், போரில் பேசிய வசன உச்சரிப்பும் வார்த்தையால் சொல்ல முடியாதவை.

எழுத்தும், எழுத்து நடையும், கதையோட்டமும், அதைக் கொண்டு சென்ற விதமும், விறுவிறுப்பான காட்சி நகர்வுகளும் அத்தனை பாந்தமாக இருந்தது.

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐


Comments