வல்லமை தந்து விடு விமர்சனம்


ரமணிசந்திரன் மேம் எழுதிய "வல்லமை தந்துவிடு" நாவலை, வைகை தளத்தில் இருந்து புத்தக பரிசாக பெற்ற நாள் முதல் வாசிக்க ஆரம்பித்து நேற்று தான் நிறைவு செய்தேன்.

ஒரு புத்தக வாசிப்பு அதன் அளவை பொறுத்து கூடவும், குறையவும் செய்யும். பட் இவ்வளவு நாட்கள் ஆகியது இல்லை. நேற்று எப்படியும் முடிச்சிடணும்னு வாசிப்பில் ஈடுபட்டேன்.

இனி கதைப் பற்றி ...

நாயகன் வித்யாதரன் முதலில் காதலித்த பெண்ணின் நடவடிக்கையாலும், அண்ணன் மனைவியின் செயல்பாடுகளாலும் வெறுப்புற்று திருமணம் செய்யாமல் இருக்கிறான். ஒரு நாள் நாயகியை எதிர்பாராத விதமாக சந்தித்து, அவளது குணத்தால் ஈர்க்கப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறான்.

ஆரம்பத்தில் அவனது அண்ணியாரின் தொல்லை அதிகமாக இருந்தாலும், கணவனின் மீதான பாசத்திலும், மாமியாரின் அக்கறையான பேச்சிலும் அவள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறாள். இந்நிலையில் அவர்களுக்கு இடையில் நாயகனின் நண்பனாக வருபவனின் குறுக்கீடு அளவுக்கு அதிகமாகவே நிகழவும், களம் மாறி பயணிக்கிறது.

இதில், மாலியின் மீதான மனக்கசப்பில், பெண்களை தாக்கிப் பேசும் வித்யாதரனுக்கு, தனது நண்பனின் தவறை தான் கண்டுபிடிக்க முடியவில்லை.

அத்துடன், "நண்பன் அப்படி சொன்னான், இப்படி சொன்னான் " என்று படுக்கையறை விசயம் வரை அவன் கூறியதாக மனைவியிடம் பேசுமிடத்திலும், "உன் குணத்தால் ஈர்க்கப்பட்டு எது நடந்தாலும் பொறுத்துப் போவாய் என்று தான் உன்னை மணந்தேன். உன் அழகை கண்டு அல்ல" என்பதாய் பேசும் இடத்திலும், "நீ இப்படி நடந்து கொள்வதால் உன்னை விட்டுருவேன்னு நினைக்காதே. நீ எப்பவும் இதே வீட்டுல இருக்கலாம்" என்று சொல்லும் போதும்,

நண்பன்.. நண்பன் என்று ஓடி, அவனது அத்தனை செயல்களுக்கும் அர்த்தம் இருப்பதாக காண்பிப்பதும், அவனுக்காக மனைவியிடம் காட்டிய கடுமையும், குழைவையும் பார்க்கும் போது, நமக்கும் கூட கடுப்பை ஏற்படுத்துகிறது.

நாயகியின் பொறுமையும், நிதானமும், கோபமும், கொதிப்பும், பாசமும், நண்பனிடம் இருந்து கணவனை மீட்க எடுக்கும் முயற்சியும், கணவனிடம் நேரடியாக சொல்ல முடியாமல் தவிக்கும் இடங்களும் அருமையாக உள்ளன.

நாயகனின் அண்ணன் பாத்திரம் அமைதி என்றால் அவனது மனைவி அடாவடித்தனம் நிரம்பியவள்.

அத்தை பாத்திரம் பிரமாதம். நண்பன் நட்புக்கு களங்கம்!!

மேமின் எழுத்திற்கு நிறைய வாசகிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக நானும்! மேலும் நிறைய எழுத வாழ்த்துகள் மேம்💐💐

Comments