தூரிகா சரவணன்

 



#எழுத்தாளர்அறிமுகப்படலம்

#இதுநம்மஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் தூரிகா சரவணன்....

அவர்களைப் பற்றிய தகவல்கள் :

பெயர் : தூரிகா சரவணன் 

சொந்த ஊர் : பிறந்த ஊர் மதுரை...வசிப்பது சென்னையில்

படிப்பு : பட்டதாரி

பணி : இல்லத்தரசி

தளம் : ஸ்ரீகலா தமிழ் நாவல்கள்

அமேசான் பெயர்: தூரிகா சரவணன்

******

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா: 

நான் ஒரு இல்லத்தரசி... வேலைக்குச் செல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் முதலில் குடும்பம், கணவரின் அலுவல், குழந்தைகள் நலன் என்று யோசிப்பதால் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகி விட்டது.

இவர்கள் ஒரு நிலைக்கு வந்த பின் என் துறை ரீதியாக ஏதாவது செய்ய எண்ணியிருக்கிறேன். இடையில் மனதுக்குப் பிடித்திருப்பதாலும் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடியதாய் இருப்பதாலும் இந்த எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

******

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காதே!

******

உங்களது எழுத்து அனுபவம் பற்றிச் சொல்ல முடியுமா: 

நிறைய படிப்பேன்...ஒரு கட்டத்தில் எழுதும் ஆசை வந்தது...தகுந்தாற்போல் மனதில் ஒரு கதைக்கரு உருவானது...எழுத ஆரம்பித்து விட்டேன். இன்று வரை 3 நாவல்கள் வெளிவந்து விட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய நல்ல அனுபவங்கள்...நல்ல வாசகர்கள் என மனதுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

...

🙂🙂🙂

*****

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

இப்போது ஆன்லைன் தொடராக வந்து கொண்டிருக்கும் “கைவிடுவேனோ கண்மணியே!”

*****

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

நிறைய பேர் இருக்கிறார்கள்... அடிக்கடி பேசிக் கொள்பவர்கள் என்றால் ஸ்ரீகலா மேம்,(நான் எழுதும் தளத்தின் உரிமையாளர்...மிகப் ப்ரபலமான எழுத்தாளர் என்பதையும் தாண்டி எந்த யோசனையாக...சந்தேகமாக இருந்தாலும் இவரிடம் கேட்க முடியும்...அணுகுவதற்கு எளியவர்) நிஷா செல்வகுமார் (ஸ்ரீநிதா தமிழ் நாவல்ஸ்), தாமரை, கவிசந்திரா, ஹாசினி, ரம்யாரூபன், திஷி, கிருனிசா, ஆனந்த ஜோதி, ஆலோன் மகரி, இன்னும் முக நூலில் கதைகள் படித்துத் தொடர்பில் இருக்கும் எழுத்தாளர்கள் உண்டு.

இன்னும் குறிப்பிட வேண்டிய ஒருவர் காஞ்சனா ஜெயதிலகர் மேம்... கல்லூரி காலங்களில் இவர் கதைகளைப் போட்டி போட்டுக் கொண்டு வாசித்ததுண்டு. ஆனால் அந்த கர்வமோ, தான் பெரிய எழுத்தாளர் என்ற எண்ணமோ துளியும் இல்லாது என்னை நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் என் கதைகளையும் படித்துப் பாராட்டி வரும் அருமையான பெண்மணி( என் கல்லூரி தோழிகளிடம் எல்லாம் இப்போதும் நான் பெருமையடித்துக் கொள்ளும் நட்பு இவருடையது என்றால் அது மிகையில்லை).

...

கட்டாயம். நானும் எங்க அம்மாகிட்ட சொல்வதுண்டு R. மணிமாலா மேம், சுமதி மேம், காஞ்சனா மேம் எல்லோர் கிட்டயும் பேசியிருக்கேன். பழகுவதற்கு மிகவும் அன்பானவர்கள் என்று....

*****

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

பல வருடங்களாகப் பலவகை நூல்களும் படித்திருந்தாலும் இப்போதைய தேர்வு காதல் கலந்த குடும்பக் கதைகள்தான்.

*****

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

அதிகமாகப் பெயர் வாங்கிக் கொடுத்தது “வாராதிருப்பானோ” கதைதான்

....

நிஜம் தான் ஆதி & வது மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்

*****

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

3

*****

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

மே 2019 இல் முதல் நாவலைக் கிண்டிலில் பதிவிட்டேன்...அப்படியானால் 2 வருடங்கள் முடிந்து விட்டன.

*****

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

நான்காவது நாவல் “அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்” நேரடிப் புத்தகமாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

ஐந்தாவதாக “ஒருவர் மனதிலே ஒருவரடி” என்ற காதல் கதை இப்போதுதான் 5 அத்தியாயங்கள் எழுதி முடித்திருக்கிறேன்.

*******

உங்கள் நாவல்களின் பெயர் :

கைவிடுவேனோ கண்மணியே ( கிண்டிலில் மட்டும்)

மனமே நினைவை மறந்து விடு( புத்தகம் மற்றும் கிண்டிலில் உள்ளது)

வாராதிருப்பானோ (புத்தகம் மற்றும் கிண்டிலில் உள்ளது)

தூரிகைத் தீற்றல்கள்( சிறுகதைத் தொகுப்பு...கிண்டிலில் உள்ளது)

குறுங்கதை :

நல்லறமாமே நிலவே

*******

உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா: 

கண்டிப்பாக காதல் கலந்த குடும்பக் கதைகளாக இருக்கும்...அவற்றில் சமூக அக்கறைக் கருத்துக்களை என்னால் இயன்ற அளவில் பதிவு செய்வேன். நகைச்சுவை எல்லாம் இதுவரை முயற்சி செய்தது இல்லை...ஃப்ளோவில் ஏதாவது வந்தால் உண்டு...

...

ஆமாம். 🤣🤣🤣 வாராதிருப்பானோவில் நினைவு இருக்கிறது. நான் கூட காமெடி செய்தனே மறக்க முடியாத அனுபவம்

இந்த எபிய படிச்சு ஒரே சீப்பா சீப்பா போச்சு,

ஆதி : ஏய்!! இன்னாமா, சரக்கடிச்சிக்கியா?

வது: தோடா, என்னப் பாத்தா அப்படியாக்கீது? உன் மூஞ்சியில என் சோத்தாங்கைய வைக்க 🤣🤣🤣🤣🤣

*****

நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:

காதல் கலந்த குடும்பக் கதைகளே

******

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது:

நிஜமாகவே எல்லாமே பிடிக்கும் சிஸ்...என் கதைகளை நானே ரசித்துப் படிக்கும் பழக்கம் உண்டு எனக்கு...பிடிக்காமல் ரசிக்க முடியாதே

...

நிஜம்தான்

*****

உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:

இப்போது ஆன்லைனில் வரும் கைவிடுவேனோ கண்மணியே முன்னுரையில் கூட எழுதி இருந்தேன்...அந்தக் கதையின் நாயகன் விமல்தான் என் ஆதர்ச நாயகன் என்று...

******

உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :

“வாராதிருப்பானோ” தான் நிறைய பேசப்பட்டது...காரணம் என்று எதைச் சொல்வது...எல்லா கதையையும் வாசகர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில்தானே எழுதுகிறோம்...எனவே இந்தக் கேள்விக்கு பதிலை நான் சொல்வதை விட வாசகர்கள் சொல்வதுதான் முறை

...

அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணப்பட்ட விறுவிறுப்பு, அழகான காதலர்கள், அவர்களுக்கு இடையிலான சிறு ஊடல், டுவிஸ்ட், நாயகன் நாயகனின் ரகசிய சிரிப்புகளும், பேச்சுகளும், இறுதி முடிவு👌👌முக்கியமா நாகினி கதாபாத்திரங்களின் கவர் பிக்...

******

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

தொடர்ந்து படியுங்கள்...நிறை குறைகளை முன்வையுங்கள்... சரியாக இருந்தால் விளக்கமளிக்கவும் தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளவும் எனக்கு வாய்ப்பளியுங்கள்.

*****

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:

எஸ்எம்எஸ் அழகிய சங்கமம் 1 இல் கலந்து கொண்டேன்...ஆறுதல் பரிசு பெற்றேன்

*******

நாளிதழ்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

இல்லை.

*******

ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க:

தன் எழுத்தால் சமூகத்தில் குறைந்த பட்சம் சிலரிலாவது நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் போது...

*****

ஒரு நாவலைப் பார்த்தவுடன் மனதில் என்ன தோன்ற வேண்டும் :

படித்து முடித்ததும் மனதில் இதமான உணர்வு தோன்ற வேண்டும்...அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்காவது அந்தக் கதை மாந்தர்கள் நம் மனதில் உலா வர வேண்டும்...இதுதான் என் எதிர்பார்ப்பு

...

நிச்சயமாக

*****

உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்குவிக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :

நேர மேலாண்மையில் என் திறமை மிகக் குறைவு...ஒன்றை எடுத்தால் அதிலேயே உட்கார்ந்து விடுவேன்...என் இந்த இயல்பால்... எழுத்துப் பணியால் சில நேரங்கள் வீட்டில் வேலைகள் பாதிக்கப்படும் போது அதைப் பொறுத்துக் கொள்வதே எனக்குப் பெரிய ஊக்குவிப்பாகக் கருதுகிறேன்.

****

நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை, கவிதை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா:

வார்த்தைகள் குறித்து யோசித்தது இல்லை...மனமே நினைவை மறந்து விடு கதை 44000 வார்த்தைகள் என்றால் வாராதிருப்பானோ 70000 ஐத் தொட்டது. கதைக்குத் தேவைப்படும் வரை...கதை முழுமையான வடிவம் பெறும் வரை அலுப்புத் தட்டாமல் எழுத வேண்டும் என்று நினைப்பேன்...அவ்வளவுதான்.

தமிழில் சந்தேகங்கள் ஏற்பட்டால் என் தந்தையிடமோ...இன்னும் சில நண்பர்களிடமோ கலந்தாலோசிப்பது உண்டு.

*****

ஆன்டி ஹீரோ கதை எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க:

ஒரு கதையின் அல்லது திரைப்படத்தின் லீட் ரோல் செய்பவன்தான் ஹீரோ. அவனே கெட்ட இயல்புகள் உடையவனாக வரும் போது ஆன்டி ஹீரோவாகிப் போகிறான். அதைப் போன்ற ஒரு ஹீரோவை நல்லவனாக மாற்றுவதும் கடைசி வரை கெட்டவனாகவே கொண்டு சென்று முடிப்பதும் கதாசிரியரின் விருப்பம்...

(சிவப்பு ரோஜாக்கள் கமல் போல், ப்ரியமுடன் விஜய் போல்) ஆனால் இங்கு வரும் கதைகளில் பெரும்பாலும் நாயகன் திருந்தி விடுகிறான். எனவே ஆன்டி ஹீரோ என்பவன் என்னைப் பொருத்த வரை ஆரம்பத்தில் கெட்டவனாக இருந்தாலும் தன் தவறுகளை உணர்ந்து மனம் மாறித் திருந்துபவன்.அப்படித் திருந்துவதால் வாசகர்களால் நாயகனாக ஏற்றுக் கொள்ளப்படுபவன்.

....

அருமையான தகவல்

***

ஆன்டி ஹீரோ  கதை படித்த அனுபவம் இருந்தால் அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :

நிறைய கதைகள் படித்திருக்கிறேனே...மீண்டும் மீண்டும் படித்ததென்றால் ரமணிம்மாவின் மயங்குகிறாள் ஒரு மாதுதான்...நூறு தடவைக்கு மேல் படித்திருப்பேன்...அந்தக் கதையை முடிக்கும் போது ஆரம்பத்தில் சுதாகர் மேலுள்ள கோபமெல்லாம் நமக்குக் காணாமல் போயிருக்கும்...நடந்து விட்டதை மாற்ற முடியாதுதான்...ஆனால் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவும் முடியாதல்லவா... எல்லா ஆன்டி ஹீரோ கதைக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும்.

...

ஆமாம் அதன் கதையோட்டம் ரொம்ப அருமை தான். ஏனோ ஆரம்பத்தில் இருந்தே வெறுக்க தோன்றவில்லை. நாயகியின் (மாயா) நிமிர்வும், நாயகன் (சுதாகரின்) அடாவடியும் ரசனையாக தான் இருந்தன.

****

நாவல் or தொடர்கதை எழுதுவதில் எது மிகவும் சுலபமாக நினைக்கிறீங்க:

நாவல் எழுதுவதே சுலபம்...தொடர்கதை எனும் போது சஸ்பென்ஸ் சரியாக வைத்துக் கொண்டு போக வேண்டும்...பின்னால் ஏதாவது லாஜிக் இடிக்கிறது என்று தெரிந்தாலும் முடிந்து விட்ட பகுதிகளில் மாற்றம் செய்ய முடியாது.

****

நீங்கள் கதை தேர்ந்தெடுக்கும் முறை :

படிக்க, எழுத என இரண்டுமே காதல் கலந்த குடும்பக் கதைகள்தான்

******

குடும்ப நாவல் பிரிவில் வரும்
இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்ல முடியுமா :

நிறைய எழுதுகிறார்கள்... வரவேற்கத் தகுந்தது... பிழைகள் இல்லாமல் எழுத முயல்வது நலம்.

*******

வாராதிருப்பானோ வது & ஆதி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :

ஆதி...விஜயாதித்தவர்மன்  கதாபாத்திரம் உருவானது நான் சிறுவயதில் கண்ணால் கண்ட ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துத்தான்...ஆதியின் தந்தையாக வரும் பரமேஸ்வரனின்( என் உறவினர்) கோபம் பார்த்து பயந்து மாடிப்படிகளின் அடியில் சென்று  நான் மறைந்து கொண்ட சம்பவங்களும்  நடந்ததுண்டு...பெற்றவர்கள் தங்கள் நடவடிக்கைகளில் கட்டுப்பாடில்லாமல் நடக்கும் போது அது பிள்ளைகளின் வாழ்வில் கண்டிப்பாகப் ப்ரதிபலிக்கும் என்பதன் உதாரணம்தான் ஆதி...

வது...ப்ரியம்வதா...இவளின் கதாபாத்திரம் கொஞ்சம் முரண்பாடான குணாதிசயங்கள் கொண்டது...தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியமான இயல்புடையவள் உயரத்தைக் கண்டும் பேயைக் கண்டும் பயம் கொள்பவளாக இருப்பாள். சுயமரியாதை, தன்மானம் போன்றவற்றை உயிராக மதித்தாலும் கணவனின் காதல் என்று வரும் போது அவைகளைக் கூட  விட்டுக் கொடுக்கச் சித்தமாயிருப்பாள். கொஞ்சம் வித்யாசமான கதாபாத்திரம்தான் இவள்.

ஆரம்பத்தில் ஆதி திட்டு வாங்கினான் என்றால் கதையின் இறுதியில் வது நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள். ஆனால் இருவரையுமே வாசகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்...இவர்களுக்கு இணையாக ஸ்கோர் செய்த இன்னொரு கதாபாத்திரம் வருண்

....

நிஜம்தான்

******

கைவிடுவேனோ கண்மணியே தொடர்கதை ரீரண் பண்ணுறீங்களே அந்த கதையில் வரும் பாத்திரங்கள் பாரதி & விமல் மற்றும் டுவிஸ்ட் எல்லாமே அருமையாக இருந்தன.
அந்த கதை ஏதாவது நிஜ சம்பவத்தின் தாக்கமா அல்லது ....

உண்மையில் இது ரீ ரன் கதை கிடையாது...முதல் கதையை நேரடியாக கிண்டிலில் போட்டு விட்டேன். ஆன்லைனில் இப்போதுதான் முதல் முறையாக போடுகிறேன்.

இல்லை... முழுக்க முழுக்கக் கற்பனையே...ஆனால் இந்தக் கதையின் இன்ஸ்பிரேஷன் எனக்கு ரமணிம்மாவின் ஒரு கதையில் இருந்துதான் கிடைத்தது. அந்தக் கதையின் பெயர் ‘நேசம் மறக்கவில்லை நெஞ்சம்’. எந்தக் காட்சி என்று சொன்னால் என் கதையின் சஸ்பென்ஸ் உடைந்து விடும்...அதனால் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இரண்டு கதைகளையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வருடம் என் சமையலறையில்... என் எண்ணங்களில் உருவாகி...முழுவதும் அலைபேசியிலேயே டைப் செய்து முடித்த கதை...நன்றாக அமைந்து விட்டது கடவுளின் அருள்.

******

ஒரு நாவல் அல்லது தொடர் கதை எழுதும் முன்பு செய்வது என்ன :

மனதில் தோன்றும்  one line  ஐ கதையாக மனதில் முதலில் உருவாக்குவேன்...பின் தேவைப்படும் விவரங்களை எழுதும் போது அவ்வப்பொழுது சேகரித்துக் கொண்டு எழுதுவேன்.

******

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தாராளமாக சொல்லலாம் :

கடந்த ஒரு வருடம் (மார்ச் 2020 – மே 2021) சில சொந்த அலுவல்களில் ஈடுபட்டிருந்ததால் எழுத்துலகில் நான் இல்லை...ஆனால் மீண்டும் கதை தொடங்கப் போகிறேன்... அதுவும் புதுக்கதையும் அல்ல கிண்டிலில் ஏற்கனவே போட்ட கதை என்று சொன்ன போது வாசகர்களின் வரவேற்பு எனக்கு மிகுந்த ஆறுதல் அளித்தது...இன்னும் மக்கள் என்னை, என் எழுத்துக்களை மறந்து விடவில்லை என நினைத்த போது நெஞ்சம் நெகிழ்ந்தது. நன்றி நண்பர்களே!

.....

மிக்க மகிழ்ச்சி சகோ, உங்களது கருத்துகள் மிகவும் அருமையாக இருந்தன.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளர்  கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

மிக்க நன்றி
🙏🙏🙏🙏

Comments

  1. மிக்க நன்றி ஜோதி...மென்மேலும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
    நட்புடன்
    தூரிகா

    ReplyDelete
  2. Vaarathirupano novel Online link koduka mudiyuma Mam... Kindle link vendam...vaarathirupano novel read panna virupam... first time unga novel read panna poren...pls link...

    ReplyDelete

Post a Comment