அனிதா ராஜ்குமார்

 


#எழுத்தாளர்அறிமுகப்படலம்

ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப் படுத்தப்போகும் நபர் அனிதா ராஜ்குமார்....

அவரைப் பற்றிய விபரங்கள் :

ஹாய் நட்பூஸ்,

வணக்கம், வந்தனம்,நமோஸ்கர்.
‘நான் உங்கள் வீட்டு பிள்ளை.....
இது ஊர் அறிந்த உண்மை….’  என்று சொல்லிக் கொண்டு, மனமார்ந்த வணக்கங்களை உங்களுக்கு அர்ப்பணிக்கும் நான், உங்கள் அனிதா ராஜ்குமார்.

முதலில்  தோழியும்,சக எழுத்தாளருமான  ஆனந்த ஜோதியின், இந்தத் தன்னலமற்ற முயற்சிக்கு மிகப் பெரிய ஹாட்ஸ் ஆப்.
தன் எழுத்துப் பணி, குடும்ப பொறுப்புக்கு நடுவே, இத்தனை  எழுத்தாளர்களை அணுகி பேட்டி எடுப்பது என்பது சுலபம் இல்லை. அதன் பின்  உள்ள தோழியின் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, சிலரின்   அணுகுமுறைபற்றி அறிந்ததால், இது அத்தனை சுலபமான பணி அல்ல.
இருந்தாலும்    தொடர்ந்து எழுத்தாளர்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் அவரின் சேவை என்றே சொல்லலாம் அதற்கு நன்றிகள். வாழ்த்துக்கள். 

என் கதைகளைப் படிச்சு நீங்க நொந்து நூடுல்ஸ் ஆவது போதாது என்று என்னைப் பத்தியும் சொல்லச் சொல்லி,தோழி  ஆனந்த ஜோதியின் அன்பு. 

ரிஸ்க்ன்னு சொன்னா கேக்கலை. 

பெயர் :     அனிதா  ராஜ்குமார்.( இதில் ராஜ் என்பது என் தந்தை எத்திராஜன். குமார் என்பது என் கணவர் அருண்குமார்.
(நீங்க வச்ச பெயர் இம்ஸை அரசி, ட்விஸ்ட் ராணி, லொள்ளு களஞ்சியம்.)       

சொந்த ஊர் :     பிறந்தது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம்.
வாக்கப்பட்டு போனது செய்யார்.
கணவரின் வேலை காரணமாய் தற்பொழுது வசிப்பது சென்னை.(அதிக  ட்ரான்ஸ்பெர் வரும் மத்திய சர்க்கார் வேலை… ) 

படிப்பு :      M .Sc Microbilogy

பணி :     ex ஆசிரியர்.  

தளம் :     sm தமிழ் நாவல் தளம்.

அமேசான் பெயர்:

anitha rajkumar
https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5?ref=sr_ntt_srch_lnk_1&qid=1617076795&sr=8-1
முகநூல் தொடர்புக்கு:--
https://www.facebook.com/anitha.rajan1984

உங்களைப் பற்றிச் சில வரிகளில் சொல்ல முடியுமா :

அப்பா விவசாயி. அம்மா மல்லிகா, மாநில உத்தியோகத்திலிருந்து ரிட்டையர் ஆனவங்க. இவர்களின் ஒரே மகள் என்பதால், வீட்டில் வெகுசெல்லம்.   மிகப் பெரிய கூட்டு குடும்பத்தில் காஞ்சிபுரத்தில் வளர்ந்தேன். அறுந்த வாலு.

கணவர் அருண்குமார். மத்திய சர்க்கார் இன்டெல்லிஜென்ஸ் பிரிவில் வேலை.  செம்ம அமைதி.(எனக்கு எதிர் பதம்)
என் கனவுகளுக்குத் துணை நிற்கும் ரியல் லைப் ஹீரோ,ஹீரோயின் என் குடும்பத்தினர்.
ஒரு மகள்.பத்து வயது ஆகிறது.
புத்தக புழு. இளையராஜா இசை, மழை  என்றால் பைத்தியம். வெஜ் ஐட்டம் எதுவாக இருந்தாலும் விரும்பிச் சாப்பிடுவேன்.  இயற்கை, டூர் செல்ல, கணவரோடு லாங் ட்ரைவ் செல்ல ரொம்ப பிடிக்கும்.

ஆன்மீகத்தில்  ரொம்ப ஈடுபாடு உண்டு.
university of madras ஆரம்பித்த நூறாம் ஆண்டு celebration  போட்டியில், உலக அளவில் பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டதில், என்  M .Sc ஆய்வுக்கு முதல் பரிசு கிடைத்தது. பள்ளி கல்லூரி பேச்சுப் போட்டிகள் என்றால் முதலில் நின்று பரிசு வாங்கியதெல்லாம், ‘ நியாபகம் வருதே ...நியாபகம் வருதே!...’ தான்.
நட்பு ரொம்ப பிடிக்கும். உண்மையான ஆத்மார்த்தமான, வெளிப்படையான நட்புக்கு எப்பொழுதும் வந்தனம்.  வெளிபடையாய் பேசி விடுவேன்.

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

அந்த லிஸ்ட் நீளமோ நீளம்பா. லைப்ரரி மூடும் வரை வெளியே வருவதே இல்லை. இப்பொது இருக்கும் எல்லா தளத்திலும் எப்பவுமே இருப்பேன்.
சசிகுமார் ஒரு படத்தில், வடை கொடுக்கும் காகிதத்தில் என்ன இருக்குன்னு படிப்பார் பாருங்க. அந்த வகை நான்.
எனக்குப் புத்தகம் வாங்கி கொடுத்தே என் கணவர், வீட்டினர்,உறவுகள் ,நண்பர்கள் பர்ஸ் எல்லாம் இளைத்த கதை உண்டு.     
இதில் உயிர்  என்றால்  இந்திரா சௌந்தர்ராஜன்,   ராபின் குக், ஜேம்ஸ் பேட்டர்சன், கண்ணதாசன், சோ ராமசாமி,  பாலகுமாரன், சுஜாதா  சிவசங்கரி மேடம், ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன்    
ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க: அதை வரையறுக்க முடியாது.  மத்தவங்க எப்படி இருக்கணும்  என்பதை,  எப்பொழுதுமே யாராலும் வரையறை செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

அர்ப்பணிப்புடன் எழுதும் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒற்றுமை என்று சிலதை சொல்லலாம்.
devotion and openness நிச்சயம் இருக்கும் . . பார்வையாளர்களாக  தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.கதைக்கான கரு எங்கிருந்து வேண்டும் என்றாலும் கிடைக்கலாம்.

பணி எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து தங்கள் வேலையை மறு மதிப்பீடு செய்யும் அர்ப்பணிப்பு இருக்கும்.

Voracious readers often make great writers/ஆவலுள்ள வாசகர்கள் பெரும்பாலும் சிறந்த எழுத்தாளகளாக  உருவாகுகிறார்கள். தங்களை அப்டேட் செய்யும் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள் .

இல்லையென்றால் தேங்கும் குட்டை நீர் யாருக்கும் பயன்படாமல் இருப்பது போலாகி விடும்.
எழுத்தாளர்கள் நதி போன்றவர்கள்.  எத்தனை தடை வந்தாலும், நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும், விமர்சனமே வரவில்லை என்றாலும், கற்கள், பாறைகளை மோதித் தகர்த்து, வாசகர்களின்  மன  தாகத்தை தீர்ப்பவர்களாய்    இருப்பார்கள்.

*************

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

என்ன தவம் செய்தேன். மனித கடத்தல் பற்றியது.1600 பக்கம். ஒரு வருடத்திற்கு மேலாக sm,sms இரு தளங்களில் வெளிவந்தது.  

***********
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க::

என்ன தவம் செய்தேன்.எழுதிய கைக்குத் தங்க வளையல், ‘ட்விஸ்ட் ராணி, என் பயணத்தில் உங்கள் எழுத்தே துணை, பெற்றோர், டீச்சர் மீட்டிங்கில் பெண்கள் தங்களை காத்து கொள்வது எப்படி என்ற பேஸ் தகவல் உங்களுடையது பயன்படுத்தப் போகிறேன்..’   போன்ற விமசர்னங்களை பெற்று தந்து, என்னாலும் எழுத முடியும் என்ற   தன்னம்பிக்கையை கொடுத்த நாவல்.

...

வாவ் அருமை சிஸ்

************

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

ஐந்து.

***********

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

ஐந்து. இந்த ஆகஸ்ட் வந்தால் ஆறு.

*************

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்
தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

உயிரோடு விளையாடு என் ஐந்தாம் நாவலின்  ரெண்டாவது பாகம், 'உயிரோடு சதிராடு', சங்கமம், மாயமாய் வந்தவள், நெஞ்சத்தைக் கிள்ளாதே...   

***********

உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :

1.என்ன தவம் செய்தேன் -மனித கடத்தல் பற்றியது/human trafficking, sexual  exploitation பற்றியது.  

2. காஞ்சி தலைவன் –idolsmuggling/சிலை கடத்தல் மாபியா, கலாச்சாரம்,பண்பாடு பற்றியது.  

3.ஊரு விட்டு ஊரு வந்து-போதை மருந்து மாபியா,             தீ விரவாதம், terror financing  பற்றியது.   

4.சமர்ப்பணம்-acid attack, stalking பற்றியது.

5.உயிரோடு விளையாடு- நிழல் உலக  மாபியா, அதன் பன்முக தன்மை,  defence departsments  of india,women awareness  பற்றியது.  

***********
நீங்கள் எழுதத் தேர்ந்தெடுக்கும் நாவலின் கதையோட்டத்தை முழுவதும் டைரியில் எழுதி வைத்து இத்தனை அத்தியாயம் வரை கொடுக்க வேண்டும் என்று கொடுப்பீர்களா அல்லது மனதில் தோன்றுவதை வார்த்தைகளாக்கி எழுத்துக்களில் அது போகும் வரை கோர்ப்பீர்களா :

மனதில் தோன்றுவதை வார்த்தைகளாக்கி எழுத்துக்களில் அது போகும் வரை கோர்ப்பது தான். கல்லூரி காலங்களில் எழுதி வைத்து இருப்பதை எல்லாம் tinkering வேலை பார்த்து இப்போ தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.

*************

ஒரு வாசகனுக்கு நாவலைக் கையில் எடுத்த போதும் சரி முடிக்கும் போதும் சரி என்ன மாதிரி உணர்வு வர வேண்டும் என்று நினைக்கிறீங்க:

நிறைவு இருக்கணும்.
படித்த கேரக்டர், ‘நாம்’ என்ற எண்ணம் தோன்ற வைக்கணும். அந்தக் கதையுடன் வாழ்ந்து, அவர்களுடன் பயணித்த உணர்வு வர வைக்கணும். அந்தக் கேரக்டர் சந்தித்த சூழ்நிலை நமக்கோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ வந்தால், எப்படி அதை எதிர்கொள்வது என்பதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
எழுத்து என்பது நெருப்பு மாதிரி. அதை வைத்து மற்றவர்கள் வாழ்வில் ஒளியும் ஏற்றலாம். வீட்டையும் எரிக்கலாம்.
அதனால் தான், ‘The pen is mightier than the sword/பேனாமுனை கத்தியைவிட வலிமையானது’என்று சொல்கிறார்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் எழுத்தாளர், வாசகர் இருவரையும் பதம் பார்த்து விடும். 
முக்கியமாய் படிக்கும் வாசகரின் மனதில்  ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும்.
...

சூப்பர் சிஸ் அருமை

*************

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களைக் கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?...

எல்லா கதைகளுமே ஒரு தவமாய் எழுதுவது தான்.
அதிகம் நிறைவை கொடுத்தது என்றால் அது ஆசிட் அட்டாக் பற்றி எழுதிய, என் நான்காவது நாவல்  ‘சமர்ப்பணம்’. ஒரே வாரத்தில், தூக்கம் , பசி ,குடும்பம் என்பதையெல்லாம் மறந்து, அமேசான் போட்டிக்காக எழுதிய நாவல்.
‘லட்சுமி அகர்வால்’ வாழ்க்கை படித்து, பல நாள் மனதை போட்டுப் பிசைந்து கொண்டே இருந்தது. இதற்காக சென்ற rehab சென்டர்கள், சந்தித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், படித்த ரிசர்ச்  பேப்பர் அதிகம்.   '

கவர்ந்த கதாபாத்திரம் என்றால் :

என் கதைகளில் வரும் எல்லா positive பெண்   கதாபாத்திரங்களையும் சொல்வேன்.
இவர்கள் நம் வாழ்வில் நிஜத்தில் கடந்து வரும் நம் அம்மா, அக்கா, சகோதரி,தோழி, காதலி, மனைவி,மகளின் பிரதிபலிப்பே. இவர்கள் ஏதாவது ஒரு வகையில் நம் மனதை அசைத்து விடுவார்கள்.     

*************
உங்களது கதை  அனைத்தும் அழுத்தமான அதே நேரம் கடத்தல், மாபியா, சிலை கடத்தல், ஆசிட் வீச்சு , மன்னராட்சி என்று அடித்துக் கலக்கியிருக்கிறீர்களே இது எப்படி சாத்தியம்:

முதலில் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்வது மாதிரி கலக்கி இருக்கிறேனா என்பதெல்லாம் தெரியாது.ஏதோ தோன்றுவதை எழுதுகிறேன்.
ஒருவேளை ஒவ்வொரு கதைக்கும் சிவசங்கரி மேடம் நேராகக் களத்திற்கே சென்று தகவல் திரட்டுவார் அதன் பாதிப்பாக இருக்கலாம்.

எல்லோரும் ரொமான்ஸ், சமூக கருத்து, என்று போகும் போது, ஆன்மீக கதைகள் கொடுத்த  இந்திரா சௌந்தர்ராஜன் சார், பாலகுமாரன் சார் இவர்களின்  தாக்கத்தால் இருக்கலாம். தன் எழுத்துக்கு, தனக்கு உண்மையாய் இருந்த, ‘சோ’  சார் அவர்களின் அந்தக் கட்ஸ் காரணமாய் இருக்கலாம்.
சாதாரண ரொமான்ஸ் கதைகள் எழுதுவதில் இப்போதைக்கு ஆர்வம் இல்லாததால் இருக்கலாம். இல்லத்தில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், உறவுகள் என்பதை தாண்டிச் சமூகத்தின், ஒரு நாட்டின்  அங்கமான  குடும்பம், சமூகத்தால் எப்படி பாதிக்கப்படுகிறது, ஒரு குடும்பத்தால் சமூகத்தில்,நாட்டில்  என்ன விதமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற சிறு முயற்சியே.
அழுத்தமான கதை கருவையும் எல்லாம் கலந்த கலவையாகக் கொடுக்கும் சிறு முயற்சி .

...

👏👏👏👏 சபாஷ் உங்களது  எண்ணங்கள் நிறைவேறிட வாழ்த்துக்கள்

************

உங்களது நாவல் காஞ்சித் தலைவன் உருவான விதம் பற்றிச் சொல்ல முடியுமா:.

காஞ்சி தலைவன் - sm தளத்தில் நடந்த தேன் மழை போட்டிக்காக எழுதியது. ஒரே சீன் கொடுத்து, இருபது எழுத்தாளர்கள் எப்படி கதையைக் கொண்டு போகிறார்கள் என்ற போட்டி.
ஆதித்ய கரிகாலன் இன்ட்ரோ தான் ஸீன்.மொஸ்டலி எல்லா எழுத்தாளர்களும் ரொமான்ஸ் மையப்படுத்தி எழுதினாங்க. 
பொன்னியின் செல்வனில், ஆதித்ய கரிகாலனை  யார் கொன்றார்கள் என்பதை சொல்லாமல் அப்படியே விட்டு இருப்பார் கல்கி அய்யா.

ஆதித்ய கரிகாலனின் சரித்திர அரசியல் படுகொலை/most intriguing, historical political assassination இதனாலும் நடந்து இருக்கலாம் என்ற இன்னொரு விடை சொல்லும் முயன்று இருக்கிறேன்.
சிலை கடத்தல் ,காஞ்சிபுரத்தில் நிறுவப்பட்ட தங்க அரண்மனை என்ன ஆனது என்ற கேள்வி, மறுபிறவி, ஆன்மீக, திரில்லர் வகை என்று ரொமான்ஸ் தாண்டி அதையும் சமூக,ஆன்மீக திரில்லர் வகையாக எழுதினேன்.

சென்ற வருடம் சென்னை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது.சென்ற வாரம் அமேசானில் பல மாற்றங்களுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு,ebook வெளியிடப் பட்டு உள்ளது.  
இதற்காக ஓலை சுவடிகள் தேடி அலைந்தது, வரலாறு புத்தகங்களை,ரிசர்ச் கட்டுரைகள், யூனிவர்சிட்டி ஆப் பிலடெல்பியா,மியூசிக் அகாடெமி தகவல்கள் எல்லாம் படித்தது செம்ம த்ரில்.கலைக்கே பிறப்பிடம் என்று சொல்லும் அளவுக்கு எத்தனை, எத்தனை புதையலை அறியாமல் இருக்கிறோம் என்ற வியப்பே எழ வைத்தது.   

..
மிகவும் அருமை சிஸ்🙂🙂🙂

***********

உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது :

என்ன தவம் செய்தேன், ஊரு விட்டு ஊரு வந்து, சமர்ப்பணம்   அப்படின்னு நினைக்கிறன்.
இதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.
என்னுடைய எந்தக் கதையும் வெறும் ரொமான்ஸ் மட்டும் பேஸ் செய்து இருக்காது. சோ இது மாதிரிக் கதைகள் ரீச் இருக்கா இல்லையான்னு வாசகர்களைத் தான் கேக்கணும். 
newbie எழுத்தாளர் என்னும்போது நான் எடுப்பது ரிஸ்க் தான். அதையும் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி செய்துட்டு இருக்கேன்.

*************
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

அந்த லிஸ்டும் நீளம். இங்கே எனக்குத் தோழமைகளாக இருக்கும் எழுத்தாளர்கள் தான் அதிகம். அந்த வகையில் ஈகோ இல்லாமல் பழகும் ஆத்மார்த்தமான தோழமைகள் உண்டு நட்பாய், டவுன் டு எர்த் என்று சொல்லும் எழுத்தாள  தோழமைகள் கிடைத்தது வரம். ஒருத்தரை சொல்லி ஒருத்தரை விட முடியாது என்பதால், எல்லோரும் ‘நண்பேன்டா!....'  என்று சொல்லி மீ எஸ்கேப்.
...

🤣🤣🤣🤣😂😂

*************

உங்கள் கதைகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?

முதலில் மனமார்ந்த நன்றி… நன்றி... நன்றி. ‘எனக்காக’ என்று எழுத ஆரம்பித்தது இன்று, என்னில், ‘நீங்கள்’ என்பதும் சேர்ந்த எழுத்து பயணம் தொடர்கிறது. உங்களின் அன்பும், ஆதரவும் இல்லையென்றால் இந்த உழைப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு எழுத்தாளரைச் செதுக்கவும், சிதைக்கவும் கூடிய சக்தி உங்களிடம் தான் உள்ளது.  உங்களுடைய கருத்துக்கள், ரெவியூ, ரேட்டிங் தான் மிகப் பெரிய விருது, பூஸ்ட், ஊக்கம் எல்லாம்.     தொடர்ந்து உங்கள் அன்பு, ஆதரவு, சப்போர்ட் அள்ளி அள்ளி கொடுங்க.  
நிஜ தோழமைகளுக்கு என்றுமே வரவேற்ப்பு உண்டு.இவங்களுக்கு ரெவியூ, கமெண்ட்  செய்தா ஏதாவது சொல்லிடுவாங்களோ என்ற தயக்கமே என்னிடம் வேண்டாம் மக்கா. உங்க தோழி, உங்க வீட்டு பெண்ணிடம் பேசுவது போல் நினைச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க.  

நம்ம தோஸ்த்தா இருந்துட்டு, சைலன்ட் ரீடர் என்ற வேலிக்குள் இருந்து, அப்படியே இப்படிக்கா எகிறி குதிச்சுடுங்க. கைகள் கோர்த்து ஒன்றாய் பயணிப்போம்  

********** 
உங்களுடைய  எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

எழுத்து அனுபவம் என்பதை விட,எழுத வந்தது பல அனுபவங்களை கொடுத்து இருக்கு. 
ஒவ்வொரு கதைக்கும் அதற்கான பேசிக் அறிவு இல்லாமல்  தொடுவது இல்லை. ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள, நூறு சௌர்ஸ் தேடி செல்வது,பல மனிதர்களை,அவர் தம் உணர்வுகளை அறிந்து கொள்வது என்று நிறைய அனுபவம் உண்டு.

கற்ற வாழ்க்கை பாடங்கள் இங்கே அதிகம் என்று நினைக்கிறன். நாளை என்பதே நிலை இல்லாத இந்த வாழ்க்கையில் எத்தனை நிறங்களில்,எத்தனை மனிதர்கள்,எத்தனை சூழ்நிலைகள். 
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம்? நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
ஆன்லைன் முக நூல் குரூப் ஒன்றில் என் நான்காவது நாவல் சமர்ப்பணம், அதில் வரும் சமூக கருத்துக்களை  பற்றி மட்டும் பதிவு இட்டேன்.
அதற்கு, ‘ best impactful writer with social messege’ என்ற அடை மொழியுடன், ‘துருவ நட்சத்திரம்’ என்ற விருது கொடுத்தார்கள்.  

அதை போல் வாசகர்கள் கொடுக்கும் ஒவ்வொரு கமெண்ட்,ரெவியூ தான் மிக பெரிய விருது, சன்மானம்,சம்பளம்  எல்லாம். முதல் நாவலில் ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது என்றால் மிகையல்ல.  எல்லாம். ஐஸ் எல்லாம் இல்லை மக்கா. நிஜம் அது தான்.   

👌👌💐💐வாழ்த்துகள் சிஸ்

**********

உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

அது பள்ளி காலத்திலியே  தொடங்கியது. ‘நோட் புக்,பேப்பர் காலியாக்குகிறேன்’ என்று வீட்டில் திட்டு எல்லாம் வாங்கி இருக்கிறேன்.

‘இதெல்லாம் சோறு  போடாது. ஒழுங்காய் படி’ என்ற அறிவுரை நிறைய உண்டு.
ஆனால், ‘எழுதாதே!...’  என்று வீட்டில் சொன்னதில்லை. அதுவும் ஒரு காரணம்.
இன்னொன்று ஒரு கதை படிக்கும் போது இதை நாம் எப்படி இன்னும் மாற்றி கொடுக்கலாம் என்று யோசித்ததன் விளைவாக இருக்கலாம்.
அப்படி மிக பிரபலமான சரித்திர நாவல் ஒன்றை, இளவரசன் தான் ஹீரோ,அதை முழுவதுமாய்,  ஹீரோயின்  based மாற்றி எழுதிய பைத்தியக்காரத்தனம் எல்லாம் செய்து இருக்கிறேன். கிட்டத்தட்ட பல volume நாவல் அது. எந்த நாவல் என்று கேக்காதீங்க.   

தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

தூண்டுகோல் என்றெல்லாம் யாரும் இல்லை.  என்னை சுற்றி இருக்கும் மக்கள்,வீட்டில்,சமூகத்தில்,நாட்டில் நடப்பது தான் எழுத தூண்டும் காரணி என்று நினைக்கிறன்.
அன்றைய எழுத்தாளர்களின் எழுத்திற்கும் இப்போது உள்ளதிற்கும் உள்ள வித்தியாசமாக என்ன தொடங்கியது நினைக்கிறீங்க..
இப்போ ரொம்ப ஓபன்.  இலை மறையாக இருந்தது எல்லாம் இப்போ வெட்ட வெளிச்சமாக இருக்கு. அப்போ அதுக்குன்னு வந்த புக் எல்லாம் வீட்ல வாங்க கூட  யோசிப்பாங்க. இப்போ எல்லோரும், எல்லாத்தையும் எழுதறாங்க.
நிறைய ஸ்பெஸ்/space,option கிடைத்திருக்கு.புக் போட்டா தான் பிரபலம் என்ற நிலை மாறி, தங்களை தாங்களே செதுக்கி கொள்ளும் சுயம்புகள் உருவாகி கலக்கிட்டு  இருக்காங்க.

***********

pdf திருட்டு பற்றிய கருத்து:

அந்த கொடுமைக்கு அளவே இல்லை. என்னிடமே என் கதைகளின் pdf கேட்டவங்க உண்டு. என் கதைகளை எனக்கே அனுப்பி,’படிச்சி   பாருங்க.நல்லா இருக்குன்னு…’  சொல்லி   ஹார்ட் அட்டாக் வந்த நிலை உண்டு...

‘அந்த கதையை எழுதினதே நான் தான்யா.... நானும் கதா நானும்  கதான்னு…’ புலம்ப  வச்சிட்டாங்க.
குற்றம் என்று தெரிந்தே செய்பவர்கள், தாங்கள் குற்றவாளிகளாக இருப்பது போதாது என்று பலரையும் குற்றவாளி ஆக்குவது.

அது போன்ற வாட்ஸாப் குரூப், முகநூல் குரூப்,   டெலிக்ராம் தயவு குரூப்பில் இருந்தால் தயவு செய்து வெளியே வந்து விடுங்க. அதனால் பாதிக்கப்படும் எத்தனையோ எழுத்தாளர்களுக்கு மன உளைச்சல் தான் வருகிறது. எனக்கு தெரிந்தே ரெண்டு எழுத்தாள  தோழமைகள் எழுதறதையே நிறுத்த போறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நம் வீட்டில் இருந்து ஒரு பொருள் திருடு போனால்  மனம் எத்தனை வலிக்கும். அதே போன்றது தான் எழுத்து என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் குழந்தை போன்றது. அந்த வலி,உழைப்புக்கு உரிய சப்போர்ட் கொடுங்கள். அறிவு திருட்டும் குற்றமே. குற்றத்திற்கு துணை நிற்காதீர்கள் என்பது பணிவான வேண்டுகோள்.       

**********

நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு பிடித்த நாவல் எது? அந்த கதாபாத்திரத்தை பற்றி சற்று விளக்க முடியுமா:

பிடித்த நாவல், ‘சமர்ப்பணம்.
பிடித்த கதாபாத்திரம் என்றால், ‘என்ன தவம் செய்தேன் மதுராக்ஷி’ தான்.  சாதாரண குடும்ப பெண். அறுந்த வாலு, எந்த சூழ்நிலை வந்தாலும் அசராமல் அடிப்பதில் கில்லி. கோபமாய் ஸீன் போய்ட்டு இருக்கும். இவ பேசும் டயலாக்  சட்டுன்னு சிரிக்க வச்சிடும். தனக்காகவும், மற்றவர்களுக்காகவும் போராடும்  தன்னம்பிக்கை மிகுந்த பெண். கடைசி வரை எல்லாரையும் வச்சி செய்வா. சோ ஸ்பெஷல்.  

***********

உங்களது ஒரு நாவலை தான் ஆண்லைனில் முதன் முறையாக  படித்தேன் ரொம்ப பெரியது. செம சஸ்பென்ஷ் டுவிஸ்ட் எதிர்பார்ப்பு என்று கலக்கியிருந்திங்க. இப்படி பட்ட கதையம்சம் எழுதுவது என்பது எத்தனை கஷ்டமான விடயம் என்று தெரியும் பட் உங்களால் எப்படி சாத்தியமானது.:

என்னால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தில் நீங்களும் உறுப்பினர் என்பதில் மிக மகிழ்ச்சி.  ஜோக்ஸ் அபார்ட். மனமார்ந்த நன்றிகள்.

எதையும் பிளான் செய்து எழுதுவதில்லை.
கஷ்டம் என்றால், உதாரணத்திற்கு ஆசிட் அட்டாக் என்றால் அதன் அடிப்படை தகவலில் ஆரம்பித்து, மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கும் அளவுக்குக் கிடைக்கும் தகவல்களைச் சேகரிக்க, அதைச் சார்ட் அவுட் செய்ய, தேவையானதை எடுக்க, அதைக் கதையோடு கோர்க்க என்று கிட்டத்தட்ட ஒரு சாப்டர் மேல் கொடுக்கும் பத்து வரி கூடுதல் தகவலுக்கு ரெண்டு, மூன்று நாள் தேவைப்படும். ஒருநாளைக்கு குறைந்தது எட்டு, பத்து மணி நேரம் இதற்காகவே நேரம் ஆகும்.  இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் அதிகம். 

அப்படி கொடுக்கப்படும் தகவல்களை எல்லா வாசகர்களுக்கும் படிக்கிறார்களா இல்லை கடந்து விடுகிறார்களா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அப்படி கொடுக்கும்  தகவல் எங்காவது, யாருக்காவது ஒருத்தருக்கு பயன்பட்டாலும் அதுவே போதும். 
ஒரு தகவலைச் சொல்கிறேன் என்றால் அதற்காக நேரம், காலம், பசி , தூக்கம் பார்ப்பதில்லை.அதற்காகவே வீட்டில் அவரிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். எழுத்து என்பது எனக்குப் பொழுதுப் போக்கு அல்ல. அதை ஒரு தவமாய் தான் செய்கிறேன். அதற்கான வரம் கொடுக்கும் தேவதைகள்  என்று சொல்லலாமா அது வாசக பெருமக்கள் தான்.    

...

😂😂😂😂

************

உங்களது அழுத்தமான படைப்புகளில் காதல் நகைச்சுவை காட்சிகளுக்கு இடம் உண்டா? :

நிச்சயம்
இருக்கும். Life is more colourful when you are in love. I am in  love with my life, family,my writing. So அழுத்தமான கதையையும் காதல்,ரொமான்ஸ்,நகைச்சுவை என்று எல்லாம் கலந்து தான் கொடுக்கிறேன்.இல்லையென்றால் ஆய்வு கட்டுரை ஆகி  விடுமே.   
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா..

நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன்.  மறைமுகமாய் வாசகர்கள் ரெவியூ எல்லாம் படித்துச் சந்தோஷப்படுவார்கள். நேரிடையாகப் பாராட்டினால் எனக்குக் கொம்பு முளைத்து விடும் என்று நேரா ஓவர்ரா அடக்கி வாசித்து கொண்டிருக்கிறார்கள்.

இது எனக்கென்று நான் உருவாக்கி கொண்டு சிறகு விரித்து பறக்கும் வானம். என் சிறகுகளை முறிக்காத குடும்ப உறுப்பினர்களை,தோழமைகளை பெற்று இருப்பதில் மகிழ்ச்சி.
என் குடும்ப உறுப்பினர்  எத்தனை பேர் என் கதையை படிக்கிறாங்க என்று கேட்டால் எனக்கே தெரியாது.
பலருக்கு நான் எழுதுவது காஞ்சி தலைவன் புத்தகமாய் ரிலீஸ் ஆகும் வரை தெரியாது. மூணு வருஷமாய் நான் எழுதறேன் என்பதையே மறைத்து வைத்து இருந்தேன்.
என் கதை படிக்கும் ரிஸ்க் இதுவரை கணவர் எடுத்தது இல்லை. உஷார் பார்ட்டி.

‘என் ஒரு கதையாவது படிச்சி இருக்கீங்களா?....’ என்றால், ‘நீ ஒரு பக்க கதை எழுது படிக்கிறேன்…’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டு இருக்கார்.
அவராவது பிழைச்சி போகட்டும் என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. 
ஆனால், என்  உயிர் தோழனாய், மை ரியல் லைப் ஹீரோவாக என்னுடன் துணை நிற்பது  என்னுடைய பெட்டெர் ஹாப். உற்ற துணையாய் தோள் கொடுத்து என் எல்லா   பைத்தியக்காரத்தனத்துக்கும் துணை நிற்கும் என் சரிபாதி.   

வெற்றி என்பது பணத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. செய்யும் வேலையில் ஆத்ம நிறைவு இருக்கணும். ஆத்மார்த்தமான   நட்பு கிடைக்கணும். இரவு தூங்கும்போது எதையோ  உருப்படியாய் செய்து இருக்கிறோம் என்ற நிறைவு இருக்கணும். அது எனக்கு எழுதுவதில், அதன் மூலமாய் கிடைக்கும் நல்ல நட்பில் கிடைக்கிறது.
உங்களது தொடர்கதைகளில் கவிதை எழுதிய அனுபவம் உண்டுமா : இருக்குமா. சமர்ப்பணத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கிறேன்.  

**********
கதை எழுதும் ஆசிரியர்கள் காதல் காட்சிகளையும் தாம்பத்ய உறவுகளையும் எப்படி கையாள வேண்டும் என நினைக்கிறீங்க :

அது ஒவ்வொரு எழுத்தாளரை பொறுத்தது. அவங்க குழந்தைகளை இப்படி வளர்க்கணும் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை என்று நினைக்கிறேன். 
என் கதைகளில் எல்லைகள் தாண்டியது இல்லை. அப்படி நினைத்து தான் எழுதறேன். வாசகர்கள் தான் சொல்ல வேண்டும். 

**************
காதல் கலந்த குடும்ப நாவலிற்கும் ஆன்டி ஹீரோ நாவலிற்கும் உள்ள வித்யாசம்-

எதுவும் அளவோடு இருந்தால் அது காதல் கலந்த குடும்ப நாவல் . எல்லா வரைமுறைகளையும் கடந்து,’கண்டதே காட்சி,கொண்டதே கோலம்..’ என்று வாழ்ந்து, மற்றவர்களின் வாழ்வை சிதைத்து,செய்த தவறுகளை உணர்ந்து   திருந்தினால், அது ஆன்டி ஹீரோ, திருந்தாமல் உயிர் விட்டால் வில்லன்.

இங்கே யாரும் அக்மார்க் நல்லவர்களும் இல்லை. அக்மார்க் கெட்டவர்களும் இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை,ஆசை  சிலரை குற்றவாளி ஆக்குகிறது என்றால், சிலர் தான் என்ற அகந்தையால், ‘ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்…’ என்று இருப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

எல்லா காதல் கலந்த குடும்ப கதைகளும் உண்மையில்லை. எல்லா ஆன்டி ஹீரோ கதைகளும் பொய்யும் இல்லை.  
இங்கே தோழி ஆனந்த ஜோதி கேட்ட கேள்விகளைத் தாண்டி வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்றால்  தயங்காமல் கேளுங்க.

நம்ம கதைக்கான விமர்சனங்களைப் படிச்சுட்டு தவறமா கொடுங்க. என் முகநூல், தள பக்கம், இன்போக்ஸ் உங்களுக்காக எப்பவும் திறந்திருக்கும். நம்ம கிட்டே சைலன்ட் ரீடர் என்ற வரைமுறை வேண்டவே வேண்டாம்.
இங்கே கழுவி ஊற்றுதல், மீம்ஸ் போட்டுக் கலாய்த்தல், ரெவியூ என்று கட்டை எடுத்து அடித்தல் எல்லாம் வரவேற்க படுகிறது.  

நிறைய பேர் உங்களின் எத்தனை கதைகள், புத்தகமாய் வந்து இருக்கிறது, எங்கே கிடைக்கும்  என்று கேட்டு இருக்கீங்க.காஞ்சி தலைவனைத் தவிர மற்றவை எல்லாம் அமேசானில் மட்டுமே ebook வடிவத்தில் கிடைக்கும்.

படிக்கும் உங்களுக்கே தெரியும், என் கதைகளில் சூழ்நிலைகள், காட்சிகள் தான் கதையின் போக்கை  நிர்ணயிப்பததால், பக்கங்கள் மிக அதிகம். publication செட் செய்யும் 300 பக்கம் என்ற வரைமுறைக்குள் எல்லாம் என் கதைகள் அடங்காது என்பதால், வேறு எதுவும் புத்தகமாய் வர வாய்ப்பில்லை.

அமேசான் இருக்கவே இருக்கு.
நீங்களும், உங்கள் குடும்பமும் எல்லா வளமும், நலமும் பெற மனதார இறைவனை பிராத்திக்கிறேன்.
மறுபடியும் எழுத்தாளர் ஆனந்த ஜோதி அவர்களின் இந்தத் தன்னலமற்ற சேவைக்கு ஹாட்ஸ் ஆப்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ட் நன்றிகள்.
...

மிக்க நன்றி சிஸ் உங்களுடன் இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி

********

ஹாய் பிரண்ட்ஸ்,

சற்று வித்தியாசமான பெரிய கதைக்களத்தை (காதல்+ அதிரடி+ நிஜம்+ டுவிஸ்ட்+ விருவிருப்பு) படிக்க விருப்பப் படுபவர்கள் இந்த எழுத்தாளரின் கதைகளை படித்துப் பாருங்கள் அருமையாக இருக்கும்.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐

இன்றைய எழுத்தாளரின் கதைகளை படித்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள். ஏதாவது கேள்விகள் முன் வைக்க வேண்டும் என்றால் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

நன்றி🙏🙏🙏

Comments