#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுகப்படல எழுத்தாளராக உங்களுக்கு நான் அறிமுகம் செய்யப் போவது மித்ரா…
அவர்களைப் பற்றிய தகவல்கள்:
பெயர் : மித்ரா (புனைப்பெயர்)
சொந்த ஊர் : சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.
படிப்பு : Bsc (physics),
பணி : தற்சமயம் அப்பாவிற்கு இளவரசி, அவ்வப்போது எழுத்தாளர்
தளம் : mallikamanivannan.com
அமேசான் பெயர்: Mithra மித்ரா
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
சுற்றிலும் முற்றிலும் முரண்களோடு முட்டிக்கொண்டிருப்பவள். பெரும்பாலும் அந்த முரண் என் ஆச்சியாகத் தானிருக்கும். அவர்களோடு ஒத்துப்போவதே இல்லை, ஆகையாலே இடையில் அல்லல் படுவது என் தந்தையாக இருப்பார். மூத்தப் பெண் ஆகையாலே அழுத்தம், அமைதி, பிடிவாதம். யாரிடமும் பேசினால் நன்றாக பேசும் ரகம், ஆனால் ஆரம்பிப்பதில் பெரிதும் தயக்கம் தான்.
தம்பி தட்டில் கூடுதால ஒன்று வைக்கும் போதே அங்கேயே பெண்ணியமும், புரட்சியும் பேச ஆரம்பித்து விடுவேன். அவ்வவ்போது சமையல் எனச் சொதப்புவது உண்டு. எதையும் முழுமையாக கற்றுக்கொள்வதோ செய்வதோ இல்லை, எதிலும் என் ஆர்வமும் பிடித்தமும் இருக்கும் வரை மட்டுமே செய்வேன்!
…
அருமை சிஸ்டர்
*******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
பட்டியலிட பக்கம் பத்தாது, ஏராளமான எழுத்தாளர்கள் உண்டு. கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், சு.வெங்கடேஷன், கி.ரா, பா.ரா, எஸ்.ரா, என்.சொக்கன், குகன், பெருமாள்முருகன், லக்ஷ்மி, ஜெயசக்தி, காஞ்சனா ஜெயதிலகர் மேம். மேலும் முகநூல் நட்புகள் அநேகம்.
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
நான் கதை எழுதத் துவங்கியதே ஒரு கதை தான்.
வாசிப்புப்பழக்கம் உண்டு. நூலகத்தில் அத்தனை நாவல்களையும் வாசித்துவிட்டு, பிற நூல்கள் பக்கம் சென்றே விட்டேன், என்ன இருந்தாலும் அவ்வப்போது நாவல்கள் வாசிக்காமல் இருக்க இயலாது. அப்போது தான் பிரதலிபி அறிமுகம். பிற தளங்கள் எனக்குத் தெரியாது, பிரதலிபியின் ஆரம்ப காலம் அது, அதிகம் நாவல்கள் கிடையாது. சிறுகதைகள், நடப்பு நிகழ்வுகள், கட்டுரைகள் மேலும் சில நாவல்கள் தான் இருந்தது. அதில் எழுதும் வாய்ப்பும் இருந்தது எனக்காக ஒரு கதையை நானே யோசித்து கற்பனையாக எழுதினேன். அவ்வப்போது நானே படித்துக்கொள்வேன். ஐந்தாவது அத்தியாயம் பாதியில் இருந்தது. அதுவரை ட்ராப்டில் எனக்காக நான் வைத்திருந்த கதை தவறுதலா பப்ளிஷ் ஆகிவிட்டது.
மறுநாள் நோட்டிபிகேஷன் காண்கையில் தான் ஐந்து கமெண்ட்ஸ் வந்திருப்பது தெரிந்தது. உடனே அழித்துவிடத் தான் நினைத்தேன். கதை நன்றாக உள்ளது ஏன் பாதியிலே நிறுத்து விட்டீர்கள் எழுதுங்கள், மீதி கதை எங்கே? எப்போது எழுதுவீர்கள்? என்ற கருத்துகள் தான் என்னை ஒரு நொடி நிதானிக்க வைத்தது.
இப்போது நினைத்தாலும் நல்ல அனுபவம், கருத்திட்டவர்கள் யாரென நினைவில் இல்லை, ஆனாலும் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அதன் பின் அந்த கதையை முழுவதுமாக எழுதி முடித்தேன். முதல் கதை எழுதும் போதே பதிப்பக வாய்ப்பும் வந்தது ஆனால் உரிய நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியவில்லை.
நானே எதிர்பாராத விபத்தான நிகழ்வொன்றில் தான் எழுத்தாளர் ஆனேன், ஆனால் அதன் பின்பு தொடர்ந்து எழுதியது எல்லாம் வாசகர்கள் கொடுத்த ஊக்கம் தான்! முதலில் தடுமாற்றம் தான் அதன் பின் ஒவ்வொன்றையும் அனுபவப்பட்டு தான் கற்றுக் கொண்டேன், சில கதைகள் சொதப்பியதும் உண்டு. எளிதாக இல்லை, இருந்தும் எனக்காக என்றே எழுதினேன். என் கதைக்கு நானே முதல் வாசகி!
….
சூப்பர் சிஸ்டர். அருமையான அனுபவம்
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
என் சுவாசமே
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
இந்த கேள்விக்கு வாசகர்கள் பதில் சொல்லணும், சொல்லுங்க.
என்னை கேட்டால் இனி தான் எழுதுவேன் என்றே சொல்வேன், எதிலும் முழுத் திருப்தி ஏற்படவில்லை. திருப்தி ஏற்பட்டே விட்டால் பெரிதாக விருந்துண்ட மயக்கத்திற்கு பின் வரும் உறக்கம் போலே எழுத்து ஆர்வம் குறைத்தே விடும். அந்தநிலை இன்னும் வரவில்லை, என் திறமையை, என் ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.
….
🙂🙂🙂🙂
******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
9 நாவல்கள் அதில் நான்கு புத்தகமாக வெளிவந்துள்ளது, மற்றும் 2 குறுநாவல்கள், சில சிறுகதைகள்
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது :
நான்கு ஆண்டுகள்
******
தொடர்கதையாக எழுதுவது ஈஸியா நாவல் வடிவில் எழுதுவது ஈஸியா :
இரண்டும் கடினம் தான். என் மந்தநிலையே காரணமின்றி வேறொன்றுமில்லை. தொடர்கதை என எழுதும் போது வாசகர்கள் உற்சாகத்தில் கண்டிப்பாக ஒரு நாள் கதையை நிறைவு செய்திடுவேன். நாவல்களென நான் துவங்குவது சில நேரம் திருப்தி இல்லாது பாதியில் நின்றுவிடும் அபாயம் உண்டு. எதுவாக இருந்தாலும் நான் எண்ணியதை திட்டமிட்டதை தான் எழுதுவேன், பாதை மாறுவதில்லை. எழுதிய பின் மாற்றுவதுமில்லை.
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
இன்னும் பெயரிடவில்லை, இப்போது தான் பிள்ளையார் சுழி இட்டுள்ளேன். எழுதி முடித்தால் தான் உறுதி!
*******
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :
1. என் சுவாசமே
2. விழியின் மொழி
3. நெஞ்சிலாடும் நேசப்பூவே
4. மெய்தீண்டாயோ மெயக்காதலே!
5. நெடுநீர் பொய்கை (குறுநாவல்)
6. பேரன்பின் தேடலே
7. மறவாதே இன்பக்கனவே
8. நறுங்கவிதை அவளோ?
9. பைங்கிளி பார்வையில்
10. எனையிசைக்கும் இன்னிசையே!
11. நெஞ்சில் நிறைந்தாளச் சொல்லடி! (குறுநாவல்)
….
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
******
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
ஒருமுறை அன்னாஸ்வீட்டி தளத்தில் நடத்திய நாவல் போட்டியிலும் ஆரம்பத்தில் பிரதலிபி நடந்திய சிறுகதை போட்டிகளில் சிலவற்றிலும் கலந்து கொண்டுள்ளேன்.
*******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்? :
அத்தனை கதாப்பாத்திரங்களும் இங்கே நான் தானே! ஆகையால் அனைத்துமே எனக்குப் பிடிக்கும், அனைத்தும் நான் விரும்பிப் படைத்தது தான். சிறுவயதில் மணல் லாரி விபத்தொன்றில் இழந்த உறவுக்காரச் சிறுவனும், அப்போதைய மணல் கொள்ளையால் இப்போது நல்ல தண்ணீருக்கு தவிக்கும் கிராமத்தையும் கண்டு கொண்ட என் வேதனை தான் ஸ்வேதா என்ற கதாப்பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தினேன்.
நறுங்கவிதை அவளோவில் சுபத்ராவின் கதாப்பாத்திரம் உடன்பிறப்பிற்கும் கணவர் வீட்டிற்கும் இடையில் பரிதவிக்கும் பெண்ணின் நிலையை சொல்லும். பொரும்பாலும் திருமணமான பெண்கள் அனைவரும் இச்சுழலை சந்தித்தவர்கள் தான். மறவாதே இன்பக்கனவேவில் எழிலரசி முரட்டுப் பிடிவாதம் கொண்டவள்.
பெரும்பாலும் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் என்னைச் சுற்றியிருக்கும் பெண்களில் என்னை கவர்ந்தவர்களின் பாதிப் பிரதிபலிப்பாக தான் இருக்கும்.
….
அருமையான படைப்புகளை கொடுப்பவர் போல தான் தெரிகிறது. உங்களது கதைச்சுருக்கத்தை வாசிக்கும் போது வாழ்த்துகள் சிஸ்
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :
விழியின் மொழியா இருக்கலாம், இது பெரும்பாலும் வாசகர்களால் தேடப்பட்ட கதை. மறுவாசிப்பிற்கு அநேகம் பேர் தேடினர் ஆனால் அப்போது தளத்தில் இல்லை. தவிர, பிற கதைகளும் பேசப்பட்டவையே! பெரும்பாலும் நாயகி சார்ப்பாகவும் அந்தந்த கதாபாத்திரம் சார்ந்தும் வாசகர்கள் பேசுவதுண்டு.
*******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
பெரும்பாலான எழுத்தாளர்கள் அநேகம் முகநூல் நட்பில் உண்டு.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
உலக அரசியல் வரலாறு, இஸ்லாம், இந்திய கோவில்கள் கட்டமைப்பு, உளவியல், வாழ்கை வரலாறு, நாடுகளின் வரலாறு, அறிவியல் புனைவு கதைகள், குடும்பநாவல்கள், சஸ்பென்ஸ் திரில்லர் கதைகள், அறியப்படாத கலாச்சாரங்கள் பற்றிய நூல்களை விருப்பி வாசிப்பதுண்டு. ஆனால் சமீபமாக என் வாசிப்பு குறைந்தே விட்டதை இப்போது தான் உணர்கிறேன்.
******
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா? :
பெரும் நன்றிகள் தான்! அவர்கள் தான் எனக்கான பொறுப்பை கொடுத்திருக்கின்றனர். அவர்கள் கருத்துகள் தான் ஊக்கம், அவர்களால் தான் எழுதவே செய்கிறான், எனக்கான பொறுப்புணர்வை அதிகப்படித்தி இருக்காங்க. அதிலும் என் ஆரம்பகால பிரதலிபி, வாட்பேட் வாசகர்களுக்கு சிறப்பு நன்றிகள் தெரிவிக்கிறேன்!
******
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
பிரதலிபி நடத்திய சிறுகதை போட்டியில் ஒரு முறை பரிசுபெற்றேன்.
*******
நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதாவது உண்டுமா :
உண்மையில் எழுத்திற்கு கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ கிடையாது, எந்த வரையறைக்குள்ளும் அடங்காதது. ஆனால் எழுத்தாளர்களுக்கு கட்டாயம் ஒரு அறம், பொறுப்புணர்வு இருக்க வேண்டும். தவறுகளை தவறு என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, சரியென்று ஒரு போதும் நியாப்படுத்தக் கூடாது. குறைகளை சரி செய்து கொள்ளலாம், தவறுகளை சகித்துக் கொள்ளத் தான் இயலாது.
தமிழ் தித்திக்கும் ஒரு ருசியான மொழி! அதை அழகாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் வித்தை! எழுத்துப்பிழை இல்லாத உரைநடை, சுருங்கச் சொல்லுதல், தெளிவுறச் சொல்லுதல், சுவாரசியமான காட்சியமைத்தல் என்பதெல்லாம் எழுத்தாளரின் திறமைகள்!
…
👌👌👌👏👏👏👏
******
ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :
ஆரம்பத்தில் கணக்கில்லாமல் எழுதியதுண்டு. இப்போது எல்லாம் இத்தனை அத்தியாயங்கள் இத்தனை வார்த்தைகளுக்குள் முடித்துவிட வேண்டுமென்ற கணக்கீடோடு தான் துவங்குவேன். ஓரளவிற்கு சரியாக முடித்துவிடவும் இயலும்.
******
உங்கள் கதைகளில் கவிதை, வருணனை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
கவிதை தெரியாது எனக்கு! உண்மை தான் கவிதைகளில் ரசனை குறைவு, கவிதை வாசிப்பும் குறைவு தான். வருணனைகள் தேவையான இடத்தில் ஒன்றிரண்டு வரிகளில் எழுதிடுவேன்.
*******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :
புது எழுத்தாளர்கள்!
நட்புவட்டத்திலும் நம்மைச் சுற்றிலுமே வெகு திறமையான ஏராளமான புது எழுத்தாளர்கள் உள்ளனர், ஒவ்வொருவரின் ஒரு கதையாவது வாசித்துவிட ஆசை தான் ஆனால் நேரம் தான் கிடைக்கப் பெறவில்லையே! அவ்வப்போது வாசிக்கிறேன்.
******
தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :
கனவே கை சேருமா – நேற்று இரவு தான் மறுவாசிப்பு செய்தேன். ஜெயகாந்தனின் சிறுகதைகள், சுகமதி அக்காவின்
வீழ்ந்திடாத விண்மீன்கள். வாநிஷா அக்காவின் என் ஜீவன் நீயம்மா தொடர் பதிவாக வரும் போதே வாசித்தது.
….
சிஸ்டர் ஒரு நிமிடம் ஷாக் ஆகிடுச்சு. என்னடா கனவு கை சேருமான்னு நம்ம கதையோட பெயர சொல்லிட்டாங்களேன்னு🤣🤣🤣🤣
*******
ஒரு சமூக கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கணும், என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:
நல்லதோ இல்லை அநீதியோ சமூக கதை, அப்படியே ஒரு சமூகத்தை ஆவணப்படுத்த வேண்டும். முழுக்க முழுக்க கற்பனையாக, மோலோட்டமாக எழுதிடக் கூடாது. சமூக நல்லது கெட்டதை பகுந்தறிந்து சொல்லணும். அந்த கள நிலவரம், கால நிகழ்வுகள் கண்டிப்பாக தெரிந்து கொண்டு தான் எழுதணும். பெரும்பாலும் சமூக கதைகள் தான் பின்வருபவர்களுக்கு முந்தைய காலகட்டத்தை காட்சிப்படுத்தும், ஆக அதற்கான பொறுப்போடு எழுத வேண்டும். இங்கே நாயகன், நாயகி என்றெல்லாம் இல்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் முக்கியமே! ஆக ஆசிரியர் எந்த கதாப்பாத்திரத்தையும் சராமல், நியாயப்படுத்தாமல், நடுநிலையில எழுதணும்.
ஒரு சமூக நிகழ்வுகள்ல நல்லதை சொல்லும் போது வாசகர்கள் அப்படியே ஏத்துக்கணும், அவலத்தை சொல்லும் போது ஒருநொடி வாசகர்கள் சிந்திக்க வேண்டும். அந்த மாதிரியான எழுத்தை கொடுக்கணும் எழுத்தாளர்கள்கிறது என் எதிர்பார்ப்பு!
….
நிஜம் தான். மிகச் சரியான கருத்து
******
உங்கள் படைப்புகள் பொதுவாக காதல் ,குடும்பம் , சமூகம் ,வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:
குடும்பம், காதல், கிராம வாழ்வியல், சமூகம், நட்பு, உறவு என கலந்தே தானிருக்கும்.
******
நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
நெஞ்சிலாடும் நேசப்பூவே இக்கதை மனதை பாதித்த ஒரு உண்மை சம்பவத்திலிருந்து எழுதியது. காதல் அத்தனை எளிதல்ல, அனைவருக்கும் அது கைக்கூடி விடுவதுமில்லை. ஆணவக்கொலை தவறு என்று அழுத்தச் சொல்லியது தான் கதை. கதை என்பதால் இனிய முடிவை கொடுத்துவிட என்னால் முடிந்தது. பிருத்வி போலீஸ் என்பதால் அவன் காதலை கை கொள்ளவும் இலக்கியாவை காப்பாற்றிக் கொள்ளவும் முடிந்தது. ஆனால் எதார்த்தத்தில் நிகழ, இயலாதது, அத்தனை எளிதுமில்லை என்கையில் இம்மாதிரியான சமூகத்தில் தானா வாழ்கிறோம்? என வருந்த வைக்கிறது.
*****
உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்கள் வீட்டார், நீங்கள் என்ன மாதிரி உணர்ந்தீர்கள்:
எனக்கு முதல் புத்தகம் வந்தது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒரு கனவு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், விரக்தி, இரண்டு வருட காத்திருப்பு அப்பறம் தான் புக் வந்தது. உதவியது என்னோட தோழி பிரியா மோகன். அப்போது என்னோட உணர்வுனா சின்னதா ரொம்ப சின்ன ஒரு நிமிட மகிழ்ச்சி அவ்வளவு தான். ரொம்ப பரபரப்போ, பரவசமோ இல்லை. இது நடக்கும்னு எனக்கு தெரியும், நம்பிக்கை இருந்தது அதனால கூட இருக்கலாம். இல்லை, என் மனம் வெகு சாதாரண நிகழ்வாக எடுத்திட்டு இருந்திருக்கலாம்.
‘படிச்சி கவெர்மென்ட் வேலைக்கு போவான்னுல நினைச்சோம், என்ன இப்படியாகிப் போச்சேன்னு’ வீட்டுல ஏமாற்றம் தான். படிக்கிறாத இருந்தாலும் பாடப்புத்தங்களுக்கும் போட்டித்தேர்வு புத்தகங்களுக்கு தான் அனுமதி. ஆனாலும் அப்பா தான் அவ விருப்பம் போலே இருக்கட்டும்னு என் போக்குல விட்டுட்டாங்க. புக் வந்த போது தான் இவ விளையாடலை ஏதோ உருப்படியா எழுதுறான்னு அவளுக்கும் கொஞ்சம் நம்பிக்கை. ஸ்கூல் டீச்சர்ஸ், லைப்பேரி அக்கா எல்லாரும் உங்க பொண்ணு எழுதினதா! கதை படிச்சேன் நல்லா இருக்குன்னு சொல்லும் போது எங்க வீட்டாளுங்க ஹேப்பி தான்!
…
🙂🙂🙂🙂
******
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
Mithra Novels, தற்போது தான் தொடங்கியிருக்கிறேன். ஆடியோ கதைகளை கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒருமுறை கேட்டுப்பார்க்க வேண்டுகிறேன். இதை படிப்பவர்கள் அனைவரும் Subcscribe செய்துவிட்டுச் செல்லவும்.
https://www.youtube.com/channel/UC1Gp-m_2EWWAykBqd35P12Q
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா :
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்களைக் கொண்டாடுங்க தப்பில்லை, அது போலே நல்ல கதைகளை அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பும் உங்களது தான். நல்ல கதைகளை கொண்டாடுங்க, நல்லதை நல்லதுன்னு சொல்லுற மாதிரி தப்பை தப்புன்னு சொல்லுங்க, தப்பில்லை. நல்ல கதைகளையும் எழுத்தாளர்களையும் நீங்கள் தான் அடையாளப்படுத்த வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நைஸ், சூப்பர்னு சொல்லுற ஒரு வார்த்தை கூட, எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தான். ஒவ்வொரு கமெண்ட்ஸ், ரிவ்யூஸ் படிக்கும் போதும் சின்னதா ஒரு சிரிப்பும், உற்சாகமும் வரும். அது தான் நீங்க எங்களுக்குத் தர பரிசு. அந்த சின்ன வெகுமதி கூட கிடைக்காம எத்தனையோ எழுத்தாளர்கள் முடங்கிப் போயிடுறாங்க. அப்படி விட்டுடக்கூடாது, இது உங்கள் கடமை தான். தயவு செய்து வாசகர்கள் மௌனமா கடந்து போய்டாதீங்க, நிறையோ குறையோ சொல்லிடுங்க.
அடுத்ததாக ஆனந்த ஜோதி அக்காவிற்கு நன்றிகள். எத்தனையோ எழுத்தாளர்களை, அறியப்படாத புதியவர்களை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துறீங்க. இது சிறந்த பணி, இதற்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இதை விடாது மேலும் எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.
…
மிக்க நன்றிமா. கட்டாயம் என்னால் முடிந்த வரையில் செய்து முடிக்கிறேன்.
******
நட்பு என்ற தலைப்பை உங்களுக்கு கேள்வியாக தருகிறேன் அதைப் பற்றி சில வரிகள் சொல்ல முடியுமா:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
வள்ளுவர் கூறியது தான், அது தான் நட்பு, அவ்வளவு தான் நட்பு. நம் இலக்கியங்கள் அறம், புறம் என தமிழர் மரபில் உயரிய நிலையில் வைத்து நட்பை போற்றியுள்ளோமே! நட்பு எதிர்பார்ப்பில்லாத அன்பு! நாம கஷ்டத்துல ஆதரவாக இருக்கிறதும், நாம வெற்றிகளை மகிழ்ந்து அவங்களால கொண்டாட முடியும்னா அது தான் சிறந்த உறவு! கடவுளின் பரிசு! முகநூலில் கூட முகமறியா நல்ல நட்புகள் உண்டு. எனக்கும் இவ்வாறான நட்புகள் உண்டு என்பதில் மகிழ்ச்சியே!
…
வாவ்!! ரொம்ப அருமையா சொல்லிட்டாங்க. சூப்பர்👌👌👌
******
ஒரு நாவல் or தொடர்கதை எழுதி முடித்த பிறகு நீங்கள் உணருவது என்ன :
இரண்டு கிலே எடை குறைந்துவிட்ட உணர்வு! வாயைக்கட்டி டயட் இருந்த போதும் குறையாத எடை, குறைந்துவிட்ட உணர்வு. சொல்ல எண்ணியதை சரியாக சொல்லிவிட்டால் ஒரு திருப்தி, நிம்மதி. ஸ்கூல் லீவ் கிடைச்ச மாதிரி உற்சாகம், எனக்கு நானே கொடுத்துகிற லீவ், இனி கொஞ்ச நாளைக்கு வாசிப்பு பக்கம் போகலாம்கிற கிளுகிளுப்பு!
….
🤣🤣🤣🤣🤣
******
உங்கள் கதை முடிந்த உடன் சூடாக விவாதம் செய்யும் அளவில் ரசனை உணர்வுடன் கூடிய வாசகர் மற்றும் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா :
வாசக நண்பர்கள் உண்டு. பெரும்பாலும் நான் எழுதி முடித்த பின் எதையும் மாற்றுவது கிடையாது. அதைப்பற்றி பேசுவதோ, விவாதிப்பதோ கூட கிடையாது. என் கல்லூரித் தோழிகள் படிப்பார்கள் ஆனால் அவர்களுக்குள் அவர்கள் பேசிக் கொள்வதும் விவாதிப்பதும் சில சமயம் என்னிடம் தெரிவிப்பதும் உண்டு. நன்றிகள்!
….
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
உங்களுடைய அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதில்கள் அனைத்தும் அட்டகாசமாக இருந்தது.
மேலும் பல பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அதை பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்.
நன்றி
அருமை. வாழ்த்துகள் 💐💐💐💐💐
ReplyDeleteSuper sis!!! Now ongoing story, enai isaikkum innisaiyee super sis, I loved this very much, congrats to your all future projects!!!
ReplyDeleteநான் மித்ரா வின் கதைகளை படித்திருக்கிறேன
ReplyDeleteமிகச்சிறந்த கதையம்சம் கொண்டவைகளாக இருக்கும், அவரது கதைகளில் நாயகிகள் துணிச்சல் மிக்கவராகவும் அழகுணர்வோடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்,
கதைகளிலே சம்பவ தொகுப்பிற்கு ஹைக்கூ சொல்பவர் இவராகவே இருக்கக்கூடும்
மெய் தீண்டாயோ மெய் காதலே நாவலில் உத்ரா என்ற பாத்திரம் அடிக்கடி கோபம் கொள்ளும் தன் மனைவியை அவர் எதிர் கொள்ளும் விதத்தை அநேக ஹைக்கூ வாகவே கையாண்டிருப்பார்,
அவரின் இன்னுமொரு படைப்பான எனை இசைக்கும் இன்னிசையே நாவலும் அருண் பப்ளிகேஷன் மூலம் வெளியிடப்பட்டது,
அதில் உடலில் வெண் தழும்பு குறை பாடு கொண்ட நாயகி இசைவாணி சந்திக்கும் உடல் சார்ந்த, சமூகம் அதனை விமர்சிக்கும் வேதனை, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை தரும் அவமானம் எல்லாத்தையும் தாண்டி அந்த இசை இன்னிசையாக உயர்ந்து நிற்கும் போது கதையின் போக்கும், பாத்திர படைப்பும் நம்மை வியக்க வைக்கும்.
அன்பு தோழிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்,
நீவிர் நிறைந்து வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
நீங்க லாம் ரொம்ப காலத்துக்கு நல்லாருக்கனும்ங்க ❤
🙏