சிவானி செல்வம்




#எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு - 8


இன்றைய அறிமுக எழுத்தாளராக நான் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவது அனைவராலும் அறியப் பெற்ற ஆன்லைன் எழுத்தாளர் சிவானி செல்வம் சகோதரி தான்..


2019 வருடம் ஆன்லைன் மூலம் தொடர்கதை வாசிக்க ஆரம்பித்த போது "நிஜமது நேசம் கொண்டேன்" எனும் நாவல் முதன் முதலாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.


ஒவ்வொரு அத்தியாயங்களும் அத்தனை விறுவிறுப்பு. நாயகன், நாயகியின் குடும்ப வாழ்க்கை, நாச்சியாரின் மிரட்டல், நாயகியின் பதிலடி, முன்கதை சுருக்கம், அட்டகாசமான எதிர்பாரா முடிவு என்று அருமையாக இருந்தது.


அதற்கு அடுத்து "காதலா காதலா" அதில் வந்த அக்னியின் கதாபாத்திரம் மனதை விட்டு அகலா பாத்திரம். அவனது கோபம், மிரட்டல், காதல் எல்லாமே அட்டகாசம். அதிலும் சரண், சரண்யா குட்டீஸ் ரொம்ப அருமை.


அதன்பிறகு " நின் உச்சிதனை  நகர்ந்தால் " முதல் இரண்டையும் அடித்து நொறுக்கி முதல் இடத்திற்கு வந்த நாவல். அதில் வரும் ரகுராம் என் மனதை விட்டு அகலா கதாபாத்திரம். என்னை அழ வைத்து ஏங்கச் செய்த பாத்திரம். காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறுமா என்ன ??


அதற்கு பிறகான மற்ற நாவல்களையும் வாசித்து அனைத்திற்கும் விமர்சனம் அளித்துவிட்டேன்.


இனி அவருடைய நேர் காணல்…


*பெயர் : 


எனது பாட்டியின் நினைவாக எங்க அப்பா எனக்கு வைத்தப்பெயர் சிவகாமி.


எழுத்துலகில் நுழையும் போது எனக்கு நானே வைத்துக்கொண்ட புனைப்பெயர் ஷிவானி. 


*சொந்த ஊர் : 


பிறந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது படித்தது எல்லாமே மதுரையில் தான்.


*படிப்பு : 


M.Sc (Physics), B.Ed


*பணி : 


வேலை தேடுவதையே தற்போது ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறேன்.


*தளம் : 


எங்கு எனக்கு வசதி என்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் எழுதுவேன். தற்போது சகாப்தம் தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.


*அமேசான் பெயர்: 


ஷிவானி செல்வம்


******


*உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணு. என் அண்ணனுக்கு ஒரே தங்கச்சி. எங்கள் குடும்பத்தின் முதல் பெண் பட்டதாரி நான். இசையும் இலக்கியமும் எனதிரு கண்கள். காஸ் விதியை மொட்டை மனப்பாடம் செய்யும் ஒரு மாணவனையாவது புரிந்து படிக்க வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 


….


உங்கள் குறிக்கோள் நிறைவேற வாழ்த்துகள்


******


*உங்களது வாசிப்பனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


முதலில் ரமணிச்சந்திரன், சுஜாதா என்று ஆரம்பித்த எனது வாசிப்புப்பயணம், பிறகு தள எழுத்தாளர்கள், வைரமுத்து, பிகேபி, எண்டமூரி வீரேந்திரநாத் என்று தொடர்ந்து தற்போது நவீன இலக்கியத்தில் வந்து நிற்கிறது.


******


*உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


எனக்குள் தோன்றிய ஒரு வெறுமையும் தனிமையும் தான் என்னை முதலில் எழுதத் தூண்டியது. 


வாசகராக இருக்கும் போது வெறும் கதைக்கரு மட்டும் தான் என் கண்ணிற்கு தெரியும். தற்போது எழுதத் துவங்கிய பின், கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, எழுத்துநடை, உவமை, விறுவிறுப்பு, சொல்லாடல், இலக்கணம் என்று அனைத்தையும் உற்றுநோக்குகிறேன். இங்கு எனக்கென்று எழுத்து சொல்லித்தர ஆளில்லை. நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதிலும் நியாயமில்லை. தொடர்ந்து நான் வாசிக்கும் புத்தகங்களே எனக்கு எழுத சொல்லிக் கொடுக்கின்றன. புத்தகங்களை வாசிக்க வாசிக்க எனக்குள்ளான சிந்திப்புத்திறனும் எழுத்துத்திறனும் மேம்படுவதாக உணர்கிறேன். 



அழகான அனுபவம்


******


*நீங்கள் எழுதிய முதல் நாவல்: 


நிஜமது நேசம் கொண்டேன்.


******


*உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க: 


நான் தப்பும் தவறுமாக எழுதிய எனது முதல் நாவலை தான் நினைக்கிறேன்.


******


*நீங்கள் எழுதிய மொத்த நாவல் : 


ஆறு


******


*எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:


இரண்டு வருடங்கள்


******


*தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா :


தொடராக நாவல் எழுதுவது எனக்கு எளிமையாக உள்ளது.

  

*****


*நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:


பழி வாங்கவா? உனை வாங்கவா?


*****


*உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :


1.நிஜமது நேசம் கொண்டேன்


2.காதலா! காதலா!


3.நின் உச்சிதனை முகர்ந்தால்


4.காதலாற்றுப்படை


5.அச்சுப்பதுமையே! ஆரணங்கே!


6.நரகமாகும் காதல் கணங்கள்


7.பழி வாங்கவா? உனை வாங்கவா?


********


*போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :


ஓ இருக்கிறதே. 


1.அன்னாஸ்வீட்டி தளத்தில் அசோகம் சிறுகதைபோட்டி


2.பிரதிலிபியில் டிக் டிக் டிக் அறிவியல் புனைவு போட்டி (அபூர்வமாய் இதில் 1000 ரூபாய் பரிசு பெற்றேன்)


3.சகாப்தம் தளத்தில் வண்ணங்கள் போட்டி


4.பிரதிலிபியில் பிரதிலிபி அவார்ட்ஸ் போட்டி


******


 *நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?


நான் எழுதிய எல்லா நாவல்களுமே எனக்கு நான் பிடித்து எழுதியது தான். கதாபாத்திரங்கள் என்று சொல்லும்போது வாசகர்கள் சொன்னதை வைத்து சொல்கிறேன்.


1.நிஜமது நேசம் கொண்டேன் - நாச்சியம்மை


2.காதலா! காதலா! - அக்னிமித்திரன்


3.நின் உச்சிதனை முகர்ந்தால் - ரகுராம்


4.காதலாற்றுப்படை - ஜோனோ


5.அச்சுப்பதுமையே! ஆரணங்கே! - அநேகன்


6.நரகமாகும் காதல் கணங்கள் - சிவனேஸ்வரன்

….


சிவாவை பிடித்திருப்பதாக சொன்னார்களா? ஆச்சர்யம் கதையின் நகர்வுக்கு காரணமும், அத்தனை குழப்பத்தை உண்டு பண்ணுபவனும் அவன் தானே??!!


******


*உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது? 


நிஜமது நேசம் கொண்டேன், நின் உச்சிதனை முகர்ந்தால் மற்றும் நரகமாகும் காதல் கணங்கள் ஆகிய மூன்று நாவல்களுமே பிரபலமாக பேசப்பட்டது என்பதைத் தாண்டி அதிக வாசகர்களை சென்றடைந்தது எனலாம்.


(நா வரிசை தலைப்பு எனக்கு கைகொடுக்கிறது என்று நினைக்கிறேன்😂)



ஆமாம்


*******


*நீங்கள் எழுதும் நாவல்கள் ஒவ்வொன்றும் சஸ்பென்ஸ் ட்விஸ்ட்டை உள்ளடக்கி யூகிக்க முடியா திருப்பங்களுடன் கொடுக்கிறீர்களே அதன் ரகசியம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா:


நான் எழுதிய முதல் கதையே இறுதி அத்தியாயத்தில் பெரிய திருப்பத்துடன் நிறைவடைந்தது நானே எதிர்பாராதது. பொதுவாக என் அடிமனம் அதைத்தான் விரும்புகிறது என்று நினைக்கிறேன். அது தான் என் எழுத்தின் வழியேயும் பிரதிபலிக்கிறது.


….


அதுதான் நன்றாகவும் இருக்கிறது


*******


*உங்கள் நாவல் புத்தகமாக வந்த போது உங்களது மனநிலை எப்படி இருந்தது :


எனது நாவலை நான் புத்தகம் போட வேண்டும் என்று விரும்பிய சமயம், சுற்றி பதிப்பகங்கள் குறித்தும், பதிப்பித்தல் குறித்தும் விசாரித்துத் தெரிந்துகொண்டேன். 


எனது முதல் நாவலை புத்தகமாக்க உதவி புரிந்தது சகாப்தம் பதிப்பகம் தான். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


புத்தகம் எனது கைக்கு வந்து சேர்ந்தபோது அது ஒரு தனி உணர்வாகத்தான் இருந்தது. 


******


*காதல் குடும்பம் அறிவியல் சமூகம் என்று அனைத்து விதத்திலும் கலந்து கொடுக்கும் நீங்கள் வரலாற்று நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா :


இப்போதைக்கு இல்லை. வரலாற்று நாவல்களை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு ரொம்பப் பிரமிப்பாக இருக்கும். பொதுவாகவே நூல்களை அனுபவித்து, ரசித்து வாசிக்கும் பழக்கமுடையவள் நான். வரலாற்று நாவல் என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதக்கூடியதல்ல. மண் பானை எளிதாக செய்துவிடலாம். அதனுடன் ஒப்பிடும் போது சிலை செதுக்குவதென்பது கடிசு தானே!


எனது எழுத்தும் சிந்தனையும் முதிர்ச்சி பெறும்போது கடவுள் அனுக்கிரகம் இருந்தால் நிச்சயம் வரலாற்று நாவல் எழுதுவேன்.


******


*பாஸிடிவ் விமர்சனம் வந்தால் ஏற்றுக் கொள்ளும் எழுத்தாளர்கள் நெகடிவ் வந்தால் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார்களே.. அது உண்மையா:


இங்கு நிறைய பேர் விமர்சகர் என்ற போர்வையில் கதை சுருக்கிகளாகவே இருக்கிறார்கள். எழுத்தாளர்களிலும் பெரும்பாலானோர் அது தான் விமர்சனம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது திடிரென யாரோ ஒருவர் எதிர்மறை விமர்சனம் தெரிவிக்கும் போது அது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 


பொதுவெளியில் விமர்சிப்பவருக்கும் எப்படி எழுத்திலுள்ள தவறை நாசுக்காக சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரியவில்லை. ஒருகதை குப்பைக்கதையாகவே இருக்கட்டுமே. அதிலுள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்துவிட்டல்லவா இறுதியில் இது ஒரு குப்பைக்கதை என்று முத்திரை குத்தவேண்டும். 


எழுத்தாளர்கள் சிலரும் உங்களின் இந்தக்கதை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கெல்லாம் ஆட்களை சேர்த்துக்கொண்டு பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்குமே காந்தியைப் பிடிக்கவேண்டும் என்று சட்டமா என்ன!


இன்னொரு பக்கம் விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் நடக்கிறது. படைப்பை விமர்சிக்க தான் வாசகனுக்கு உரிமை உள்ளதே தவிர, படைப்பாளனை தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை.



நிச்சயமாக, இப்படி பட்டவர்களால் பல திறமையான விமர்சகர்களை தற்சமயம் காண முடியவில்லை என்பது வேதனையான விஷயம்.


*****


*போட்டி கதைகள் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம்:


பெரும்பாலும் தளங்களில் சைட் ப்ரொமோசனுக்காகவே போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிலசமயம் போட்டிகளில் வெற்றிபெறுவோர் அந்தந்த சைட்டில் எழுதுவோராகவே இருக்கும்போது மற்றவருக்கு அதில் கலந்து கொள்ளும் ஆர்வம் போய்விடுகிறது. 


போட்டியில் பரிசு பெறுவதற்கான விதிமுறைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்பே போட்டியின் முடிவு எதுவாகயிருந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று போட்டியாளர்களிடம் எழுதி கையெழுத்து வாங்குவது என்பது சுத்த அபத்தமான செயல். ரசவாதி நூலில் பாவ்லோ கொயிலோ அழகாக சொல்லியிருப்பார். 'கிடைப்பதற்கு முன்கூட்டியே ஒரு பொருளை கொடுப்பதாக உறுதியளிக்க ஆரம்பித்தாயானால் அதை அடைவதற்கான வேலையை செய்வதில் ஆர்வம் போய்விடும்' என்று. போட்டியின் முடிவை மறுக்கவோ, விமர்சிக்கவோ முடியாத சூழ்நிலை தான் பெரும்பாலும் இங்கு நிலவி வருகிறது.


தளங்கள் மட்டுமின்றி சுற்றி எங்குப் பார்த்தாலுமே பழைய பாடாதி எழுத்துக்களும் கதைகளும் தான் வெற்றி பெறுகின்றன. 


இங்கு பிரச்சினை என்னவெனில் போட்டியில் பங்குபெறும் நூறு கதைகளில் தொண்ணூறு கதைகளை நிராகரிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு வழங்கப்படுவது தான். நியாயமாக ஐம்பது சதவீத வாய்ப்பு தான் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.


எழுத்து நடையிலும் கதைச்சொல்லலிலும் புதுமை நிகழ்த்தியிருப்பவர்களுக்கே பரிசு வழங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. 



நியாயமான கருத்துதான். அழுத்தத்தையும் சமூக கருத்தையும் தேடுபவர்கள், கொஞ்சம் கதையோட்டத்தையும் அலசி ஆராயலாம். காதல், குடும்பம், நகைச்சுவை, சமூகம் என்று பல விதமான தகவல்களை கடினப்பட்டு திரட்டி எழுதினாலும் குப்பையாக நினைத்து வீசி எறிந்து விடுவது, பலரின் விரக்திக்கு வழிவகை செய்கிறது என்பதை புரிந்து கொண்டால் சரிதான்..


ஆனால் வெற்றி பெற்ற கதை சரியில்லாததாக இருந்தாலும் அதற்கு மட்டும் அக்மார்க் முத்திரை இடப்படுவதும், அவர்களது கதைகளை மட்டும் ஆர்வத்துடன் வாசிப்பதும், கருத்துக்களை தெரிவிப்பதும் கண்டிக்க தக்கது.


ஒரு கதை வெற்றி பெறாமல் போக ஆயிரம் காரணம் இருக்கலாம். அதற்கான உண்மையான காரணத்தை வெளியே கூற முடியாமல் கூட அவர்கள் ஏங்கலாம்.. அதனால் போட்டியின் வெற்றி அறிவிப்பை மட்டுமே காரணமாக வைத்து கதை வாசிக்ககூடாது. அவர்களது திறமையை தவறாக எடை போடக்கூடாது. என்னுடைய அனுபத்தில் சொல்கிறேன்...


அது போல இப்படி கண்டிசன் போடுபவர்களின் போட்டியில் பங்குபெறுவது தவறு என்றும் முடிவு செய்து, அது எவராக இருந்தாலும் விலகி விடுதல் நல்லது என்றே நினைக்கிறேன் நான்...


******


*ஒரு கதை எழுதும் முன்பு நீங்கள் செய்வது என்ன:


கதைக்கருவை யோசித்து விட்டு முதல் ஐந்து அத்தியாயங்கள் வரை தான் திட்டமிடுவேன். அதற்கு பின், கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வைத்து கதையை வளர்ப்பேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் தட்டச்சு செய்துவிட்டு, முடிந்த அளவு சொன்ன வார்த்தையே திரும்ப வராமல் பார்த்துக்கொள்வேன்.


உதாரணத்திற்கு அதிர்ந்துப் போனாள் என்பதை,

*விக்கித்துப் போனாள்

*விதிர்த்துப் போனாள்

*திடுக்கிட்டுப் போனாள்

*திகைத்துப் போனாள்

*ஸ்தம்பித்துப்போனாள்

*ஊகாமுள்ளை மிதித்தது போல்

*மின்சாரத்தினால் தாக்குண்டது போல்

*சுவிட்ச் போட்டார் போல்

*இடி விழுந்தார் போல்


என்று விதவிதமாக சொல்லலாம். ஆனால், இவைகளுமே ரொம்பப் பழமையான சொல்லாடல்கள் தான். இதேபோல் வர்ணிப்பு என்று வந்துவிட்டால் வில் புருவம், அலைபோல் கேசம் என்பதெல்லாம் சோழர்காலத்து வர்ணனைகள். இதில் ஒரு புதுமை இருக்கவேண்டும் என்று விரும்புவேன் நான்.


தற்போது நான் எழுதி முடித்த நரகமாகும் காதல் கணங்கள் நாவலில் நாயகி ஒரு அழுமூஞ்சி கேரக்டர். அவள் அழுதாள் என்பதை முடிந்த அளவு வேறுவேறு வார்த்தைகளில் சொல்ல முயன்றிருப்பேன். 


….


அருமை சகோ


*******


*நீங்கள் வாசிக்க விரும்பும் எழுத்தாளர்:


லசாரா

சுந்தர ராமசாமி

ராஜம் கிருஷ்ணன்

கி.ராஜ நாராயணன்

அசோகமித்திரன்

ஜெயமோகன்

வாஸந்தி

மனுஷ்ய புத்திரன்

வண்ண நிலவன்

லக்ஷ்மி சரவணக்குமார்

எஸ் ராமக்கிருஷ்ணன்

சாரு நிவேதிதா

தஞ்சை பிரகாஷ்


இவர்களின் நூல்களையெல்லாம் இப்போது தேடித்தேடி வாசித்து வருகிறேன்.


********


*உங்களுடைய நட்பில் உள்ள எழுத்தாளர்கள்:


நான் எளிதில் யாருடனும் நெருங்கிப் பழகிவிட மாட்டேன். ஒத்துவராது என்று தெரிந்தால் முதல் ஆளாக நட்பை முறிக்கவும் தயங்கமாட்டேன். ஆகவே, எனது நட்பு வட்டம் மிகச்சிறியது தான். 


எனது நட்பு வட்டத்தில் ஆனந்தஜோதி அக்கா, திக்ஷிதா லெட்சுமி அக்கா, பர்வீன்.மை அக்கா, ஷாலினி தங்கப்பாண்டியன் என்று இன்னும் சிலபேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே முகநூல் எனக்களித்த பொக்கிஷங்கள்.


….


உங்கள் நட்பில் முதல் இடத்தை கொடுத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சகோதரி,

என்னுடைய வெற்றி படிக்கட்டுகளை ஒவ்வொரு முறையும் கடந்து செல்ல உதவியவர்கள் தாங்கள் என்பதை நான் மறவேன்.. அன்பும், கோபமும், அக்கறையும் நிறைந்து நான் ஏங்கி விழுந்த நாளில் என்னை தூக்கி நிறுத்த கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட உடன் பிறவா சகோதரி. உங்களது நட்பு ஜென்மம் தாண்டி தொடர வேண்டும்...


******


*அச்சுப்பதுமையே! ஆரணங்கே! நாவல் நிஜ சம்பவங்களின் தாக்கமா அல்லது எழுத்தாளரின் கற்பனையில் மிளிர்ந்த படைப்பா :


உண்மையும் கற்பனையும் இரண்டறக் கலந்த படைப்பு அது. ஒரு போலிச்சாமியாரை உருவாக்கி எனக்கு நியாயமாக பட்ட வகையில் அவனைத் தண்டித்திருப்பேன்.


******


*உங்களது முதல் நாவல் நிஜமது நேசம் கொண்டேன் கதையில் வரும் நாயகியின் அமைதியும் அதற்கு பிறகான அதிரடியும் சபாஷ் போடும் விதமாகவே அமைந்திருந்தது. அந்த கதை எழுத வேண்டும் என்று எப்படி தோன்றியது :


முதலில் கூறியது போல் எனக்குள் தோன்றிய ஒரு வெறுமையும் தனிமையும் தான் என்னை எழுதத் தூண்டியது. எனக்குள்ளான ஹிந்தி சீரியல்களின் தாக்கம் தான் அந்த நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்களை என்னை எழுத ஊக்கியது. பிறகு மற்ற கதைகளின் மீதான எனது எதிர்பார்ப்பை உள்ளே கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக கதையை வளர்த்து சுபம் போட்டுவிட்டேன்.


******


*எந்த ஒரு நாவலை வாசித்தாலும் அதில் கதாநாயகன் நாயகி பாத்திரம் மட்டுமே மனதில் பதியும். ஒரு சில கதைகளில் தான் நண்பன், சகோதர சகோதரி, பாத்திரம் மனதை கவரும் விதமாக படைக்கப்படும். நீங்கள் எழுதிய "நின் உச்சிதனை முகர்ந்தால்" நாவலில் காணப்பட்ட நாயகியின் அப்பா கதாபாத்திரம் வாசித்து முடித்து இத்தனை நாட்கள் ஆகியும் எங்கள் மனதில் அழுந்தப் பதிந்திருப்பதற்கான காரணமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்:


அந்த கதாபாத்திரம் தவறே செய்திருந்தாலும் அதன் உள்நோக்கமாய் காதல் இருந்ததே நீங்கள் அவர் மீது இரக்கமும் அனுதாபமும் கொள்வதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.


….


நிச்சயமாக, ரகுராமின் காதல், வார்த்தையாடல், புன்னகை மறக்க முடியா ஓர் காவிய காதலாய் என்னுள்ளே என்றென்றும் தொடரும்…


*******


*உங்கள் படைப்புகளில் கவிதை, வருணனை எழுதிய அனுபவம் இருக்கிறதா :


இருக்கிறதே. ஆனால் நான் எழுதியவைகளை ஒரு வருடம் கழித்து எடுத்துப் பார்க்கும்போது எனக்கே 'ச்சைக்' என்று தான் தோன்றியிருக்கிறது.



🤣🤣🤣🤣🤣


*****


*முதன் முறையாக ஆன்டி ஹீரோ கதை எழுதி இருக்கும் நீங்கள் அது பற்றி சொல்வதென்ன? 


ஆன்டிஹீரோ கதை என்பதும் ஒரு வகை பொழுதுபோக்கு அம்சம் தான். அது ஒருவருக்கு பிடித்திருக்கிறது என்றால் அது அவருடைய மனநிலை சம்பந்தப்பட்டது. 


ஆனால், அது மாதிரியான கதை எழுதுபவர்கள் தான் பெரிய எழுத்தாளர்கள் என்றும், நூறு லைக்ஸிற்கு மேல் வாங்காதவர்கள் எழுத்தாளர்களே அல்ல என்றும் முத்திரை குத்துவதை நான் அறியாமையென்றே நினைக்கிறேன். 


இது மாதிரியான மனப்பான்மை ஆரோக்கியமான எழுத்துலகிற்கு நல்லதல்ல.


பொதுவாக இந்த ஆன்லைன் எழுத்துலகில் ஆன்டிஹீரோ கதை என்றால் 'நாயகியை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தும் நாயகனை கொண்ட கதை' என்று அர்த்தம். இன்னொரு பக்கம் நாயகன் பட கமலஹாசனும், அயன் பட சூர்யாவுமே ஆன்டிஹீரோ தான் என்றொரு வாதம் இருக்கிறது.


ஆனால், நான் சொன்ன முதல் வகைக்கு தான் இங்கு மவுசு அதிகம்.


சமீபத்தில் நான் எழுதிய ஆன்டிஹீரோ நாவலான நரகமாகும் காதல் கணங்கள் நாவலில் கீழ்க்கண்ட விஷயங்களையெல்லாம் கடைபிடிக்க நினைத்தேன்.


1. நாயகி நாயகனை திருத்துவது போல் இருக்கக்கூடாது. (திருத்த அனைத்து ஆண்மகன்களும் தேர்வுத்தாளும் கிடையாது, பெண்கள் அனைவரும் சங்கரி பாலாக்களும் கிடையாது.)


2. நாயகி எந்த தப்புமே செய்யாதவள் என்று அவள் மேல் ஒரு அனுதாபத்தை உண்டு பண்ணக்கூடாது.


3. உடலுறவோ, குழந்தையோ அவர்களை சேர்த்து வைக்கும் காரணிகளாக இருக்கக்கூடாது.


4. கொஞ்சம் பைத்தியக்காரத்தனமுடைய நாயகி, ஆணவமாக இருக்கும் நாயகன் என்று இருவரும் தங்கள் இயல்பை கடைசி அத்தியாயம் வரை மாற்றிக்கொள்ள கூடாது.


….


👌👌👏👏👏


********


*18+ கதைகளைப் பற்றி உங்கள் கருத்து:


அதுவும் ஒரு வகை கதை தான். எழுதுபவர்கள் யாரிடம் வாசிக்கக் கொடுக்கிறார்களோ அவர்களிடம் அது என்ன மாதிரியான கதை என்று சொல்லிவிட்டு கொடுத்தல் நலம். அதுபோல் யாருக்காக எழுதப்பட்டது என்றும் எழுத்தாளர் முன்பே குறிப்பிடுதல் நலம்.


******


*தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர்களின் பங்கு பற்றி கூறமுடியுமா?


சில நாட்களுக்கு முன் எனது முகநூல் பதிவொன்றில் ஏன் நவீன இலக்கியம் எழுத பாரா, எஸ்ரா, ஜெமோ, சாரு மாதிரியான அவர்கள் வயது பெண் எழுத்தாளர்கள் இங்கு இல்லையென்று கேட்டிருந்தேன். ஆனால், அது எவ்வளவு அபத்தமான கேள்வியென்று பின்பு தான் உணர்ந்தேன்.


'புத்தகங்கள்' என்ற ஒரு முகநூல் குழுவில் 'தினம் ஒரு பெண் எழுத்தாளர்' என்ற தலைப்பில், நாவல், சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு என்று எழுதி இலக்கிய விருது பெற்ற பெண் எழுத்தாளர்களைப் பற்றி சிறுகுறிப்பு மாதிரி பதிவிடுகிறார்கள். 


இதுவரை ஐம்பது பேருக்கும் மேல் நான் கேள்விப்பட்டிராத பெயர்கள். அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இங்கு இலக்கியம் எழுதிய மற்றும் எழுதிக்கொண்டிருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்து அந்த தளத்தில் இயங்குவது தான் இல்லை. அது தான் அவர்களைப் பற்றி பெரிதாக வெளியே பேச வைக்கவில்லை.


யாரேனும் சட்டென்று நவீன இலக்கியம் எழுதும் பத்து பெண் எழுத்தாளர்களின் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டால் பேந்த பேந்த முழிக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். 


இங்கு எழுத்துலகம் இலக்கியமென்று கட்டமைத்து வைத்திருப்பதை யாரோ ஓரிரு பெண் எழுத்தாளர்கள் தான் தொடுகிறார்கள். அவர்களும் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை. நீங்களே சொல்லுங்களேன்! ராஜம் கிருஷ்ணன் அம்மாவிற்கோ இல்லை வாஸந்தி, சிவசங்கரி அம்மாவிற்கோ இங்கு முகநூலில் வாசகர் வட்டம்  இருக்கிறதாயென்று. இவர்கள் யாரென்று கேட்காமல் இருந்தால் சரி.


….


அருமையான கருத்து


******


*உங்களது தொடர்கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


என்றும் உங்கள் விமர்சனங்கள் தான் என் எழுத்துகளை திருத்தவும் தீட்டவும் உதவுகின்றன பட்டூஸ். தொடர்ந்து என் நாவல்களை வாசியுங்க. விமர்சியுங்க. நன்றி.


******


*எழுத்தாளர் அறிமுகப்படலம் பற்றிய உங்களது கருத்து:


இது ஒரு நல்ல முயற்சி. அமேசானில் பணம் சம்பாதிப்பது தவிர்த்து, ஆன்லைன் எழுத்தாளருக்கென்று தனி ஒரு அடையாளம், அங்கீகாரம் கிடையாது. அதிலும் தகுதியற்ற சிலரை கொண்டாடுகிறேன் என்று தகுதியான பலரை இந்த சமூகவெளி மூடி மறைத்திருக்கிறது. அவர்களையெல்லாம் குறைந்தபட்சம் ஒரு நூறு பேருக்காவது அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகவே இதனைப் பார்க்கிறேன். இதை சிரத்தையெடுத்து செய்யும் உங்களுக்கு என் பாராட்டுகள்.


*******


*தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தாராளமாக சொல்லலாம் :


சிலநேரம் எனது நாவல்களை வாசிப்பவர்கள் குறைந்தபட்சம் உங்கள் நாவலை நான் வாசித்தேன் ஷிவானி என்று கூட சொல்லாதது எனக்கு மிகுந்த மனஉளைச்சலைக் கொடுக்கும். இருப்பினும் இந்த சிறு பிள்ளைத்தனங்களை எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு புத்தகம் வாசிக்கத் துவங்கினால் அதற்குள் மூழ்கிவிடுவேன். 


முன்பு நானும் சைலெண்ட் ரீடராக இருந்து பெரும் பிழை செய்தவள் தான். என்னைப்போல் நீங்களும் இருக்காமல் தயவுசெய்து நீங்கள் வாசிக்கும் நூல்கள் குறித்து பொதுவெளியில் உரையாடுங்கள் நட்புகளே. இந்தப் புத்தகம் வாசித்தேன் என்று பகிர்வது ஒன்றும் அவ்வளவு பெரிய கொலைகுற்றம் கிடையாது.


….


மிக்க நன்றி சகோதரி🙏🙏


உங்கள் கேள்விக்கான பதில்கள் அனைத்தும் உங்களுடைய நாவலில் வரும் பாத்திரம் போலவே அதிரடி சரவெடியாகவே இருக்கிறது.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளரிடம் கேள்விகளை கேட்க நினைப்பவர்கள் தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்


நன்றி

Comments