#எழுத்தாளர் அறிமுகப்படலம் சீசன் இரண்டு
பெயர் : ரம்யா
சொந்த ஊர் : தோகைமலை, தற்போது வசிப்பது கரூர் பக்கம் பாளையம்.
படிப்பு : பி.ஏ ஹிஸ்ட்ரி டிஸ்கன்டினியூ ..
பணி : முழு நேர இல்லத்தரசி,
பகுதி நேர எழுத்துப் பணி, பகுதிக்கும் குறைவான நேர டெய்லர்..
தளம் : பிரதிலிபி, ஈரீட்
அமேசான் பெயர்: ரம்யா சந்திரன்.
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
நான் ரம்யா. கணவர் சிவசந்திரன். ஒரு பையன் ஸ்ரீதரன்.. என் பெயரையும், கணவரோட பெயரில் பாதியையும் சேர்த்து ரம்யா சந்திரன் என்கிற பெயரில் தோன்றுவதை கிறுக்கி வைக்கிறேன். மூன்றும் பெண் குழந்தை என்ற காரணத்தால் கல்லூரி சென்று படிக்க தடை. பாதியிலே நிறுத்தி மேரேஜ் என்ற விபத்தை ஏற்படுத்திட்டாங்க. அதுக்கப்புறம் எதுக்குமே சுதந்திரம் கிடையாது. கோவத்தைக் கூட எழுத்து வடிவுல நோட்ல எழுதி வைக்கிற ரகம்.. குறை இருந்ததால சொந்தங்களோட சகஜமான பேச்சு வார்த்தை கூட கிடையாது. அதனாலையோ என்னவோ என்னோட குறையை மறந்து பிரதிலிபில எழுத ஆரம்பிச்சேன்.
இங்க எனக்கு ஏகப்பட்ட வாசக சொந்தங்கள், எழுத்தாளர் சொந்தங்கள் கெடைச்சாங்க. தேங்க்ஸ் பிரதிலிபி. லவ் யூ ஆல்.
...
கண்டிப்பாமா கவலைப்படாதே, கட்டாயம் ஒரு நாள் புகழ் பெறுவாய்
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
எனக்கு எல்லாரோட எழுத்தும் ரொம்ப பிடிக்கும். பொதுவா எல்லாரோட கதைகளும் படிப்பேன்.
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
நிச்சயமாக. எட்டாம் வகுப்பில் இருந்தே கவிதைகள் எழுதுவேன். என்னவருக்காக எழுதிய கவிதைகள் தான் அதிகம். நாள் முழுவதும் கூட கவிதைகளை நோட்டில் எழுதிக் கொண்டிருந்த அனுபவமும் உண்டு. நெறைய படிக்க பிடிக்கும், அதனாலையே எழுதவும் பிடிக்கும்.
எண்ணங்களே
எழுத்துக்களாய்.. அவ்வெழுத்துக்களே
எந்தன் உணர்வின் பிம்பங்களாய்..!
கவிதை எழுத ஆரம்பித்தேன், இப்போது சில நாவல்களையே எழுதியாயிற்று..
...
அருமையான வரிகள்
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
உறவாய் உயிரினில் கலந்தாய், இது தான் என்னோட முதல் நாவல்.
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
என்னோட நட்பு வட்டத்துல இருக்க முக்கால்வாசி பேர் எழுத்தாளர்கள் தான்கா..
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
நானெல்லாம் சுவர் போஸ்டரைக்கூட படிக்கிற ரகம்கா. எல்லாத்தையும் படிப்பேன், இதுல ஓர வஞ்சனை எல்லாம் இல்லைக்கா.
...
🙂🙂🙂🙂🙂
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
என்னோட இரண்டாவது நாவல் வரமாய் வந்த வான்முகிலே தான்கா.
*****
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
25 நாவல்கள்
*****
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
இரண்டு வருடம் ஏழு மாதம் ஆகுது.
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
உறவான உயிரைத் தேடி ( சகாப்தம் தளத்தில் நடைபெறும் போட்டி கதை)
சுவாசமாய் நின்றவள்(ன்) நீயடி(டா) - பிரதிலிபி.
எனை கொ(வெ)ல்லும் மௌனமே - பிரதிலிபி.
இன்னும் ஒரு எபில முடியப் போகுது.
******
உங்கள் நாவல்களின் பெயர் :
1.பூவானத்தின் துரோகம். ( சிறுகதை)
2.பயணம் (சிறுகதை)
3.என்னுள் இழைந்தக் காதல்
4.உறவாய் உயிரினில் கலந்தாய்
5.வரமாய் வந்த வான்முகிலே
6.தீக்கனலாய் தகிக்கும் பூந்தென்றலே
7. நெஞ்சில் நிறைந்த மதியழகே
8. கானல் நீராய் மறைந்திடும் தாரகையே
9.தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமவள்(ன்)
10.எரிகின்ற குளிர்நிலவே
11. உள்ளம் கொள்ளை போன தருணம்
12. ரகசியமாய் சுவாசித்திடவா என்னுயிரே
( உறவாய் உயிரினில் கலந்தாய் -பாகம் இரண்டு)
13. சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே
14. என்னுள் நிறைந்தக் கள்வனே
15. ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே
16. இதம் தரும் இனியநிலா.
17. புதைக்குழியில் சிறைப்பட்ட உயிர்கள்
18. சுழலில் சிக்கிய பூந்தளிரே
19. இழப்பேனென்று நினையாதே நிழலுறவே
( இரண்டு பாகம்)
20. யாக்கைக் கவவும் அழனம் அது
21. தேவதையவள் எந்தன் அருகினிலே
22. உணர்வற்ற உயிரா அவள்?
23. எனை கொ(வெ)ல்லும் மௌனமே..!
(நெஞ்சில் நிறைந்த மதியழகே இரண்டாம் பாகம்)
24. ஆர்கலி ஈன்ற அற்புதமே
25. உயிரான உறவைக் தேடி (ஆன்கோயிங்)
26. காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும்
மின்னலவள்(ஆன்கோயிங்)
27. சுரமதில் சுரந்த சுனையமுதமே (ஆன்கோயிங்)
28. என்னுள் அடங்கிய அசுரனே ( ஆன்கோயிங்)
29. அஞ்சலை.. ( சிறுகதை)
.....
அருமையான பெயர்கள். இன்னும் நிறைய எழுத என்னுடைய வாழ்த்துகள்
******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
: எல்லாம் கலந்த கலவை தான்.
******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:
பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற சரித்திர நாவல்கள்.
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
எனது இரண்டாவது நாவல்.
வரமாய் வந்த வான்முகிலே தான்கா. ஏன்னா அது ஒரு பெண்ணின் மறுமணம் தொடர்பான கதை.
*****
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?
இப்போது தரும் ஆதரவு போல், ஆயுள் முழுமைக்கும் உங்களது அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் வாசக உறவுகளே.. உங்களது ஊக்கம் தான் எங்கள் எழுத்திற்கான தூண்டுகோல்..
******
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:
இருக்கிறது. பிரதிலி கதைத்திருவிழாவில் கலந்து கொண்டுள்ளேன். 100 கதைகளுக்குள் எனது இரு கதைகளும் தேர்வாகியிருந்தது.
சுதாரவி மேம் தளத்தில் எழுதியுள்ளேன்.
தற்போது சகாப்தம் தளத்தில் நடைபெறும் போட்டிங்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
*****
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
நிச்சயமாக. எழுத்தாளர் ஷாலினி தங்கபாண்டியன் தான் என் எழுத்துக்கான தூண்டுகோல். நான் எழுத முடியாமல் துவண்ட போது எனக்கு ஊக்கமளித்த முதல் நபர் அவர் தான். என் மனமார்ந்த நன்றி சகி.
******
நீங்கள் எழுத்தாளராக மாறியதன் நோக்கம் :
எண்ணங்களின் வடிகால்.
கற்பனைகளில் உதித்தவற்றை சேமித்திட அவற்றை எழுத்தாய் உருமாற்ற முனைகிறேன்.
******
காவல், ஆன்மீகம், வரலாற்று சம்பந்தமான நாவல்கள் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
காவல் சம்மந்தமாக எழுதியிருக்கிறேன். வரலாற்று சம்மந்தமாக இரு கதைகள் எழுதியிருக்கேன். ( அது வரலாற்று சம்மந்தமானதான்னு வாசகர்கள் தான் சொல்லணும்.)
....
🙂🙂🙂🙂
******
உங்களது நாவல்கள் அனைத்தும் புத்தகமாக வந்து விட்டதா :
இரண்டு கதைகள் அஜூ தெய்வானை பதிப்பகத்தின் வாயிலாக புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.
* உள்ளம் கொள்ளை போன தருணம்.
* கானல் நீராய் மறைந்திடும் தாரகையே .
******
முதல் புத்தகம் கையில் வந்த போது உங்களது மனநிலை எப்படி இருந்தது :
அந்த உணர்வுகளை வார்த்தையால சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ரொம்ப உணர்ச்சி பூர்வமான நிமிடங்கள் அது. நான் நெஜமா புத்தகத்தை கையில வாங்கையில அழுதுட்டேன். எதையோ சாதிச்ச உணர்வு, இப்பவும் கூட அந்த தருணத்தை நெனச்சா கண் கலக்குதுகா.
...
மகிழ்ச்சி சகோதரி
******
காதல் காட்சிகளில் கவிதை வரிகளால் கோர்க்கும் போது வாசிப்பரின் மனதும் அதை எழுதுபவரின் நிலையும் எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க:
காதல் காட்சிகளை கவிதையாக மாற்றும் போது, அதை எழுதுபவர் ஓவியனாக மாறி கவிதையை வார்த்தால், அதை வாசிக்கும் வாசகன், ரசிகனாய் மாறணும்.
அவ்வோவியத்தின் நேர்த்தியை அவன் ரசிகனாய் மாறி ரசிப்பது போல், கவிதை வரிகளை ஆத்மார்த்தமாய் உணர்ந்து வாசிக்க வேண்டும். அப்போது தான் இருவரது கோணமும் ஒரே திசையில் பயணித்திடும், அக்கவிதையின் பொருளும் முழுமையாக புரிந்திடும்..
....
சபாஷ் மா அருமையான பதில்
******
உங்களது படைப்புகளில் எதை பற்றிய கருத்து மேலோங்கி இருக்கும். காதல்/ குடும்பம்/ சமூகம் :
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதம், ஆனாலும் மூன்றும் இணைந்தே இருக்கும். ஒன்றை மட்டுமே குறிப்பிட்டு எழுதினால் இங்கு வாசிப்பு குறைந்து விடும்.
*******
ஒரு நாவல் எழுதும் முன்பு நீங்கள் செய்வது என்ன :
1. மையக் கருத்து
2. முக்கியமான கதாபாத்திரங்கள்.
3. கதை மாந்தர்களின் பெயர்கள்
4. கருவுக்கேற்ற தலைப்பு.
5. கதை நகரும் இடம், அதற்கான தேடல்கள்.
6. கதையின் முடிவு.
மற்றவை எல்லாம் கதையின் போக்கில் எழுதுவேன்..
*****
உங்கள் கதைகளில் வருணனை காட்சிகளின் பங்குகளை பற்றி சொல்ல முடியுமா :
முதல் இரு கதைகளின் அளவுக்கு தற்போது நாயகன், நாயகி பற்றிய வருணனைகளை பெரும்பாலும் நான் எழுவதை குறைத்துக் கொண்டேன். ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ள பழகியிருக்கிறேன்.
*****
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன் உங்களை கவர்ந்த கதாபாத்திரம் எது?
எனக்கு என்னோட கதைகள்ல ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம் வரமாய் வந்த வான்முகிலே- நாவலில் வர்ற முகில வேல் தான்.
ஏன்னா ஒரு பொண்ணை, ஒரு பையன் நெஜத்துல இந்தளவுக்கு விரும்ப முடியுமான்னு தெரியல. அப்படி ஒரு கேரக்டர். நெஜத்துல அப்படி ஒரு கேரக்டர் இருக்க வாய்ப்பு இருக்கான்னு தெரியல, ஆனா என்னோட கதையிலையாவது இருக்கானேங்குற ஒரு ஹேப்பி ஃபீல்..
நான் எழுதுனதுலையே ரொம்ப பிடிச்ச கதை
என்னுள் நிறைந்த கள்வனே. என் வாழ்வின் பக்கங்கள் அவை.
******
ஒரு வாசகனுக்கு நாவலை கையில் எடுத்த போதும் சரி முடிக்கும் போதும் சரி என்ன மாதிரி உணர்வு வர வேண்டும் என்று நினைக்கிறீங்க?
நான் ஒரு வாசனா இருந்தா அந்த கதையோட வாழ்ந்த மாதிரி ஃபீல் பண்ணனும்னு நெனைப்பேன். அந்த கதையோட தாக்கத்துல இருந்து வெளிவர கொஞ்ச நேரமாவது எடுக்கணும்னு நினைப்பேன்.
******
ஆண்டி ஹீரோ கதை பற்றி உங்கள் கருத்து?
இதுவரைக்கும் ஆண்டி ஹீரோ கதை எழுதுனது இல்லைக்கா, ஆனா படிச்சுருக்கேன்.
*****
உங்களது வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
இதுநாள் வரைக்கும் என்னோட பயணித்த, பயணிக்கும், பயணிக்கப் போகின்ற எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாசகர்களான நீங்க இல்லைன்னா, நாங்க இல்லை.
எங்களோட எழுத்துப்பயணம் இல்லை.
எங்கள் எண்ணத்தின் கற்பனைகளின் வடிவமே கதைகளாக உருவாக்கம் பெறுகின்றன. நேரம் ஒதுக்கி எங்கள் கதைகளை ரசிச்சு படித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்ற, ஊக்கப்படுத்துக்கின்ற உங்களது பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனம் கனிந்த நன்றி, சிரம் தாழ்ந்த பணிவுகள்..
முதலில் இத்தகைய முயற்சியை மேற்கொள்வதற்கு ஜோதி அக்காவுக்கு மிகப்பெரிய நன்றி.
பிரதிலிபி தாண்டி என்னை இங்க யாருக்கும் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. ஆனா உங்களது இந்த முயற்சி என் போலான ஆரம்பக்கட்ட எழுத்தாளர்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும். ரொம்ப நன்றி அக்கா. எழுதுகிறேனே தவிர பெரிதாக இதற்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பரவாயில்லை எனக்கு எழுதுவதன் மூலம் கொஞ்சம் ஆத்ம திருப்தி கிடைக்கிறது அதுவே போதும். இறுதி மூச்சு இருக்கும் வரை எழுத வேண்டும் என்பது என் விருப்பம், அதற்கு மேல் அனைத்தும் இறைவனின் சித்தம். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
எழுத்தாளர் ராணிதென்றல் அவர்களின் தென்றல் சீரிஸில் தேவமாருதன்னு ஒரு அற்புதமான கேரக்டர் வரும். நான் படிச்ச நாவல்களிலேயே எனை மிகவும் கவர்ந்த ஒரு கதைமாந்தர் அவர்.அவருக்காக நான் எழுதிய சிறு கடிதம், உங்களுக்காக. இதே போல நெறைய எழுதி வெச்சுருக்கேன் 😍😍😍😍( படிச்சுட்டு யாரும் கட்டையை தூக்காம இருந்தா சரி தான்)
நிகழ்கால நினைவுகளை
மறந்து கனவுலகிலாவது
கரம் கோர்த்திட மாட்டீரா? என்ற ஏக்கத்தினை என்னுள் விதைத்த தேவாதி தேவனே!!
தாங்கள் நலம் தானா? நான் நலமில்லை மன்னவா? தங்களது நினைவால் நித்தம் வாடி வதங்குறேன். உள்ளத்தில் தங்களை உருவேற்றிக் கொண்டதால் ஓயாமல் மன உளைச்சலைச் சந்திக்கின்றேன். எப்படி உரைப்பேன் தங்கள் மீது நான் கொண்ட அன்பினை? எந்தன் அன்பு எவ்வளவு ஆழமென்றோ? எவ்வளவு நீளமென்றோ? எவ்வாறு உரைப்பேன். அடிமனதின் ஆழத்தில் தங்கள் மீது ஏற்பட்டிருக்கும் பேரன்பை அளப்பதற்கு ஏதேனும் கருவிகள் உண்டா என்ன? அவவீடாய் அளந்து சொல்வதற்கு. எப்பொழுதுமே நிஜத்தை விட நிழலுக்கு அனைவரும் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் நாதா! அது ஏனென்று தாங்கள் அறிவீரா? ஏனெனில் அவை அனைத்தும் நிறைவேறும் என்பதே நிதர்சனம். நிழல் உலகில் கண்டிப்பாக தாங்கள் எண்ணியது போல் அனைத்தும் எண்ணியவாறே நிறைவேறும் என்ற எண்ணம் அனைவருள்ளும் உள்ளது ஆதலால் தான் அனைவரும் நிழலை விரும்புகின்றனர். என்னுள்ளம் அந்த எண்ணமது இருந்தது வஜ்ராயரே! தாங்கள் நிஜ உலகில் என் கரம் கோர்க்க வர மாட்டீர்கள் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஆனால் கனவிலாவது கரம் சேர்ப்பீர்! தங்களைக் கண்ணுக்குள் பொத்தி வைத்து பார்த்து கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் இப்பேதையவளை தவிக்க விட்டு தாங்கள் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள் நாதா? உள்ளத்தில் நேசம் என்ற மலரானது ஒருமுறைதான் மலருமென்று யார் உரைத்தது. ஆன்றோரைக் கேட்டுப்பாருங்கள் சரித்திர பின்னணியில் எத்தனையோ காதல்கள், எத்தனையோ நேசங்கள் இருந்ததாக வரலாறுகள் விளிக்கின்றன. அதே போல் தங்களுக்கும் மீண்டுமொருமுறை நேசம் மலரலாம் முயன்றிடுங்கள். சரி முயல வேண்டாம் ஒரே முறையேனும் எனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் நாதா!
அந்த அம்மணியவளை விட்டு விட்டுங்களேன். உங்களை எந்நேரமும் அடிமைபோல் நடத்தும் அந்த அம்மணியை அடியோடு வெட்டி விட்டு விட்டு வந்து விடுங்கள் நாதா! உரிமை உணர்வு கொண்டு உள்ளத்தில் உங்களை ஓர் உன்னதமான இடத்தில் வைத்து பூஜிப்பதற்கு பலகாலம் ஏங்கித் தவித்து வாடிக்கொண்டிருக்கும் எனது கண்ணீர் கூட தங்களைக் கரைக்கவில்லையா?
உள்ளத்து உணர்வுகளை உங்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பலகாலம் ஏங்கி தவித்து தவமேற்க்கொள்வது போன்றதொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தேவாதி தேவரே! அதற்காகவேணும்
ஒரே ஒரு முறையாவது தங்களது சுருங்கிய கடைக்கண் பார்வைதனை எந்தன் புறம் திசை திருப்பிடக்கூடாதா?
சர்வ வல்லமை வாய்ந்தவர்கள் கூட தங்களது சரீரம் கண்டு தடுமாறி வீழ்ந்து தடம் தெரியாமல் சென்றிருக்கையில் சாமானியரின் நிலையை கூறவும் வேண்டுமோ?
சர்வ வல்லமை வாய்த்தோருக்கே அப்படி ஒரு நிலையென்றால் சாதி மல்லிப் பூச்சரத்தினைப் போல் மெல்லிய மனமும், மலர்த்தண்டினைப் போல் மெல்லிய தேகமும் கொண்ட இந்த பேதையவளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் அறிந்து கொள்ள முயலுங்கள்!
ஒயிலாக நடைபயின்று
ஓயாது இதழ் பிரித்து உன்னதனமான உயரிய வார்த்தைகளை உச்சரித்து மங்கையரின் மனதில் ஓர்
இடம் பிடிக்க நினைக்கும் மானிடரின் மத்தியில்..!
அழகினை மொத்தமாய் குத்தகை பெற்று தேவதையவளின் அம்சம் வாய்க்கப்பெற்ற அத்துணை அழகிகளையும் அலட்சியமாக உறுத்து விழித்து ஒதுக்கி
ஓரங்கட்டிய அகசாய சூரனே.!!
அக்னியாய் விழிகளை உருட்டி அணலாய் அனைவரையும் முறைத்து அச்சம்தனை அமர்த்தலுடன் வரவழைத்த
வல்லவேல் சோழனே..!!
எந்தன் உள்ளத்தில் நாயகனாக வலம் வரும் தேவாதி தேவ தேவமாருதனே!
தங்களிடம் உரையாடுவதற்கு வார்த்தைகளைத் தேடி தேடி களைத்து விட்டேன் நாதா! வார்த்தைகளுக்கு பஞ்சமா? அன்று அனுதினமும் தங்களது நினைவில் வாடுவதால் சிந்தை மழுங்கி விட்டதா? தங்களைப் பற்றியே சிந்திப்பதனால் வார்த்தைகள் யாவும் மறைந்து மறந்து போனதா? என்பதையும் நான் அறியேன்!
நிரந்தரமற்ற இல்வாழ்வில் அனைவருக்கும் தோன்றும் இன்னலோ! மகிழ்வோ! அனைத்திற்கும் வடிகாலாய் அமைவதென்னவோ மேன்மை பொருந்திய வார்த்தைகள் தான்.
எந்தன் மகிழ்வோ! இன்னலோ! துயரமோ! தங்களிடம் இறக்கிவைத்து எந்தன் உள்ளத்து வேதனைகளை பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டு காத்திருக்கிறேன்! எந்தன் ஏக்கங்களைப் புரிந்து கொண்டு சிறிதேனும் கருணை காட்டுங்கள்!
உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் அம்மணியவளின் இடத்தை எனக்குத் தாருங்கள் என்று வினவவில்லை.!
அவளுக்கு ஈன்றளிக்கும் ஈடில்லா அன்பில்
சிறிதேனும் இந்த இளையவளுக்கும் பகிர்ந்தளித்திடுங்கள் என்றே வேண்டுகிறேன்..
விதவிதமான விண்ணப்பங்கள் ஏராளமாக வந்து சேர்ந்தாலும் விண்ணப்பங்கள்தனில் பூர்த்தி செய்யப் பட்டிருக்கும் விவரங்களை ஆராய்ந்து அதற்கேற்ப பதவிகளை பரிசாக வழங்கிட மாமன்னரே!
நான் தங்களிடம் பதவிக்காக விண்ணப்பிக்கவில்லை ..!
தங்களின் மனம் எனும் சிம்மாசனத்தில் ராணியாக வீற்றிருக்கும் அம்மணியவளின் இடத்தையும் தானமாக கேட்டு விண்ணப்பிக்கவில்லை..!
தங்களின் அன்புக்கு பாத்திரமாக வேண்டும் என்றே விண்ணப்பிக்கிறேன்! அம்மணிக்கு தாங்கள் அளித்திடும் அன்பில் ஒரு
சிறு துளியேனும் தாங்கள் எனக்கும் தானமாகவாவது கொடுத்து விடுங்கள் என்றே விண்ணப்பிக்கிறேன்..!!
பிட்சையை ஏந்துவது அத்தனை தரம் வாய்ந்த செயல் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் நான் பிட்சையாய் பெற விரும்புவது பணத்தையோ? பொருளையோ? அல்ல எந்தன் உள்ளத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கோமகனின் அன்பினைத் தான் பிட்சையாய் யாசிக்கின்றேன்.! தங்களது அன்பினை பிட்சையாக இட்டுவிடுங்கள் தேவனே! காத்திருக்கிறேன்!
உயிர் பிரியும் வரை
காத்திருப்பதுவும் சுகமே!
உங்களுக்காக காத்திருக்கச் சொல்வதாயின்.
கரை தாண்டிடும்
கண்ணீரும் சுகமே!
உங்களை எண்ணியதின் விளைவால் பெருகி வருவதாயின்.
உயிர் உறையும்
வெண்பனியும் சுகமே..!
உங்கள் முகமதை உள்ளத்தில் இறுத்திக் கொண்டு இயல்பை தொலைப்பதாயின்..
இம்சை தரும் இன்னல்களும், இதயத்தில் வலி தரும்
வார்த்தை அம்புகளும் சுகமே!
உன்னுடன் இணைத்து என்னை விளிப்பதாயின்..!!
முகமில்லா நிழலுயிரே.. !!
உருவமில்லா உனது
முகவுரையை நான்
அறிந்ததில்லை..!
ஆனால் இக்கணம்
முடிலில்லா உந்தன்
புகழுரையை எழுதுகிறேன்
என்றாவது உந்தன் நிழல் நிஜமாகிடும் என்ற
எண்ணத்துடன்...!
இப்படிக்கு…
தங்கள் மீது அளவில்லா நேசத்தை சுமந்துகொண்டு நிழலிலாவது தங்களது கரம்பிடித்து, தாங்கள் கொடுத்திடும் அளப்பரிய அன்பினை திகட்ட திகட்ட அனுபவிக்க காத்திருக்கும் காரிகையவள்.!!
இவ்வளவு நேரம் இவறறைவாசித்தமைக்கு நன்றி.
- ரம்யா சந்திரன்...
.....
வாவ் மிகவும் அருமை மா. மிக்க நன்றி🙏🙏🙏
எழுத்துலகில் மேலும் பல சாதனைகள் படைத்திடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவல்களை வாசித்திருப்பவர்கள் அது பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்துங்கள்
நன்றி
அருமை அருமை செம பா ரம்யா மா சூப்பர் 👌👌அந்த கடிதம் awesome 👏👏👏👏👏 உங்க கதைகள் இதுவரை படித்ததில்லை மா இப்போ தான் இந்த போஸ்ட் படிக்கும் முன்னே kindle இல் வரமாய் வந்த வான்முகிலே download பண்ணி இருக்கேன் படிச்சிட்டு சொல்றேன் பா இன்னும் நிறைய எழுதி புகழ் பெற வாழ்த்துக்கள் மா ❤❤❤👍👍👍👍👍
ReplyDeleteஅருமை. வாழ்த்துக்கள் மா💐💐💐💐
ReplyDelete