#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப் போகும் எழுத்தாளர் பிரேமலதா பாலசுப்ரமணியம்...
அவர்களைப் பற்றிய தகவல்கள்:
பெயர் :
பிரேமலதா பாலசுப்ரமணியம்
சொந்த ஊர் : சென்னை
படிப்பு : B.Sc.,Computer Science and Software Development & Data Management Courses.
பணி : கடந்த வருடம் பணியை விட்டு விட்டேன்'
தளம் :
https://premalathabalasubramaniamnovels.wordpress.com
இந்த வலைப்பதிவில் என்னுடைய நாவல்களை நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக பதிவிடும் எண்ணம் உள்ளது.
புத்தகமாகவும், அமேசான் கிண்டிலிலும் படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இது உதவும் என்று நம்புகிறேன்.
எனது கதைகள் ஆடியோ நாவல்களாகவும் எனது யூட்யூப் சேனலில் இருக்கின்றன.
https://www.youtube.com/channel/UCkdB1Mi4q1PySaNgjYNFCLw
அமேசான் பெயர்: Premalatha Balasubramaniam
https://www.amazon.in/PREMALATHA-BALASUBRAMANIAM/e/B085THJY9X?ref=sr_ntt_srch_lnk_1&qid=1623059798&sr=8-1
...
மிகவும் அருமையான வாய்ப்பு வாசகர்களுக்கு உங்களது நாவலை வாசிப்பதற்கு
*******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
சிறு வயதில் இருந்தே வாசிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவள். அதற்கு காரணம் என் அன்னை. அவரும் வாசிப்பில் அதிக ஆர்வமுடையவர். அவரிடமிருந்து எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது.
மிகச் சிறு வயதில் இருந்து வாசிக்க ஆரம்பித்து விட்டேன். திருமணத்திற்கு முன்பு வரை என்னுடைய மிகப் பெரிய பொழுதுபோக்கே வாசிப்பு தான். சோறு தண்ணி கூட இல்லாமல் படிச்சிட்டு இருக்கா என்று என் அன்னை அலுத்துக் கொண்டாலும், என் வாசிப்பிற்கு என்றும் தடை சொன்னதில்லை.
திருமணத்திற்கு பிறகு வாசிப்பதற்கு நேரம் கிடைக்காமலே போனது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. சில வருடங்கள் வாசிப்பில் இடைவெளி. அதன் பிறகு நூலகத்தில் சேர்ந்து, பேருந்தில் வேலைக்கு செல்லும் நேரம் எல்லாம் புத்தகம் தான் துணை.
இணையத் தளத்தில் தற்செயலாக அமுதா ப்ளாக் கண்ணில் பட்டது. அப்போது தளம் துவங்கப் பட்ட புதிது.
சிலர் அங்கே தங்கள் அறிமுகக் கதைகளை எழுதிக் கொண்டிருந்தனர். அக்கதைகளைப் படித்து வாசகராக நானும் என் கருத்தைப் பதிவு செய்தேன். ஒரு சங்கிலித் தொடர் கதை துவங்கப் பட்ட போது, தோழமைகள் என்னையும் அழைக்க நானும் எழுதத் துவங்கினேன்.அதைத் தொடர்ந்து 2008-ல் கண்ணுக்குள் உன்னை வைத்தேன் என்ற என் முதல் கதையை எழுதினேன்.
கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நேரத்தில் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எழுத தளம் அமைத்து கொடுத்த முகமறியா தோழி அமுதாவுக்கு என் மனமார்ந்த நன்றியைத தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு வேலை மாற்றம், இட மாற்றம், குடும்பப் பொறுப்பு என்று கதை எழுதியதையே மறந்து போகும் அளவுக்கு நான்கு வருட இடைவெளி.
மீண்டும் தோழமைகள் கொடுத்த ஊக்கத்தில் 2012-ல் இரண்டாவது கதை எழுதினேன். அப்போது தான் முதல் கதையும் அருணோதயம் பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளி வந்தது. இந்நேரத்தில் அமரர். அருணன் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
எட்டு கதைகள் புத்தகங்களாக வெளி வந்த நிலையில் இட மாற்றம், வேலை மாற்றம் என்று மீண்டும் ஒரு இடைவெளி.
சென்ற ஆண்டுதான் மீண்டும் எழுதத் துவங்கி இருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு வந்தாலும், எனது கதைகளைப் படித்து ஊக்கம் கொடுத்த அன்பு வாசக நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
....
மிகவும் அருமை சிஸ்டர்
********
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
ஒரு ஆர்வத்தில் தான் முதலில் கதை எழுதத் துவங்கியது. அதன் பிறகு வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு கதைக்கும் கிடைத்த அன்பு ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. எழுத்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் எல்லையை விரிவாக்கி இருக்கிறது. எழுத்து முகமறியாத பலரின் அன்பையும் நட்பையும் பெற்றுத் தந்திருப்பதை வரமாக கருதுகிறேன்.
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
என்னுடைய முதல் இரண்டு நாவல்களும் அமுதா ப்ளாகில் எழுதப் பட்ட போது நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், மூன்றாவது நாவல் பாயும் ஒளி நீ எனக்கு நேரிடையாக புத்தகமாக வெளி வந்த போது, வாசகர்கள் எப்படி ரசித்தார்கள் என்று உடனே அறிந்து கொள்ள இயலவில்லை. சில நாட்கள் கழித்து அறிமுகமே இல்லாத வாசகர்டளிடமிருந்து வந்த மின்னஞ்சல்கள் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்போதும் மற்ற நாவல்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ஒரு சில வரிகள் அந்த நாவலைப் பற்றி இருக்கும்.
*******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
பத்து நாவல்கள்.
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
2008 ஆம் ஆண்டு என்னுடைய முதல் நாவலை எழுதினேன். பிறகு, 2012-ல் எனது இரண்டாவது கதையை எழுதத் துவங்கி 2015-ல் என் எட்டாவது நாவல் வெளியான பிறகு, வேலை மாற்றம், இடை மாற்றம், அதிகப்படியான குடும்பப் பொறுப்புகள் என்று வாசிப்புக்கும் எழுதுவதற்கும் சூழ்நிலை அமையாமலே போனது. சென்ற வருடத்தில் இருந்துதான் மீண்டும் எழுத்து துவங்கி இருக்கிறேன். கடவுள் அருளால் இனிமேல் இடைவெளியின்றி எழுத்து தொடரும் என்று நம்புகிறேன்.
******
தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா :
நான் முதல் இரண்டு கதைகள்தான் தொடராக எழுதினேன். தொடராக எழுதும் போது வாசகர்களின் எண்ணம் உடனுக்குடன் தெரிந்து விடும். முழு நாவலாக எழுதும்போது அது தெரியாது. அதுதான் வித்தியாசம். மற்றபடி எழுத்து என்னவோ ஒன்றுதான்.
*******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
******
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :
கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
உயிரென நீ வந்தாய்
பாயும் ஒளி நீ எனக்கு
பிரியாத வரம் வேண்டும்
நெஞ்சமெல்லாம் நீயே
நீ எந்தன் வானம்
உன் தோள் சேர ஆசைதான்
நீ என்னை நீங்காதே
சேர்ந்ததே நம் ஜீவனே
நாடித் தவம் புரிந்து
....
அழகான பெயர்கள் தேர்ந்தெடுத்திருக்கிங்க ஆனால் அதில்(பிரியாத, நெஞ்சமெல்லாம்) இரண்டு பெயர்களும் வாசித்த கதை. உங்களுடையதா? அல்லது வேறு எழுத்தாளர்களுடைய தாக் கூட இருக்கலாம்....
********
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
ஒவ்வொரு கதையும் பிடித்து தான் எழுதுகிறேன். எந்தக் கதை எழுதுகிறேனோ அந்த சமயத்தில் அந்தக் கதைதான் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதையும் தாண்டி பாயும் ஒளி நீ எனக்கு, நாடித் தவம் புரிந்து இரண்டும் என்னால் என்றுமே மறக்க முடியாத நாவல்கள்.
என் கதைகளின் எல்லா கதாப்பாததிரங்களுமே எனக்கு பிடித்தவைதான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், பாயும் ஒளி நீ எனக்கு - சக்தி-அபிராமி, நாடித் தவம் புரிந்து – மீரா, நீ எந்தன் வானம் – ஆகாஷ் & பானுப்ரியா, உன் தோள் சேர ஆசைதான் – தமிழ்ச்செல்வன், நீ என்னை நீங்காதே – மனோகர், சேர்ந்ததே நம் ஜீவனே – கண்மணி.
வாசகர்களுக்கு பிடித்தது எது என்று அவர்கள் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
********
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
முக நூலில் முகமறியா பல எழுத்தாளர்கள் தோழமையில் உள்ளனர். தொடக்க காலத்தில் எழுத்தால் இணைந்திருந்தாலும், அதையும் தாண்டி உற்ற நட்பாக மாறிய சில இனிய தோழமைகளும் உண்டு.
*******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
என்னுடைய ரசனை மிக கலவையானது. கனமான நாவல்கள் அதிகம் பிடிக்குமென்றாலும், நல்ல நகைச் சுவை கதைகளும் பிடிக்கும். பொதுவாக, நேர்மறையான எழுத்துக்கள் என்னை அதிகம் கவரும்.
********
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நன்றியைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் நான் எழுதவில்லை. முக நூலிலும் இல்லை. ஆனால், அந்த இடைவெளியில் என்னுடைய நாவல்களைப் படித்து விட்டு அடுத்த நாவல் எப்போது என்று மின்னஞ்சலில் வாசகர்கள் கேட்கும் போது மிக நெகிழ்வாக இருக்கும். சென்ற வருட ஆரம்பத்தில் என் தந்தை மறைந்த போது மனம் மிகவும் சோர்வடைந்திருந்தது. மனதைத் திசை திருப்பவே மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன் எனலாம். அந்த நேரம் தோழமைகள் அமேசானில் என்னுடைய கதைகளைப் பதிவிடச் சொன்ன போது, சற்று தயக்கத்துடன்தான் பதிவிட்டேன். ஆனால், அப்போது பழைய வாசகர்களோடு புதிதாய் நிறைய வாசகர்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்ததில் மனம் நிறைந்து போனது. அவர்கள் கொடுத்த ஊக்கமே மீண்டும் என்னை எழுதத் தூண்டியது. இந்நேரத்தில் வாசகத் தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
******
ஒரு தொடர்கதையின்
ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:
வெறும் அறிமுகப் படலமாக மட்டுமல்லாமல் கதை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருப்பது சிறப்பு என்பது வாசகராக எனது கருத்து.
******
நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள் :
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. அவர்களது ரசனைக்கு ஒத்து வரும் விதத்தில் இருந்தால் தொடர்ந்து வாசிப்பார்கள்.
******
ஒரு நாவலில் நாயகன் நாயகி அறிமுகம் எப்படி இருக்க வேண்டும்:
அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பாக இருப்பதே நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
*******
ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :
பொதுவாக, மிக நீளமாக எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. கதையின் தேவைக்கு ஏற்பத்தான் அதன் நீளம் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் எழுதுவேன்.
********
ஒரு நாவலில் வருணனையின் பங்கு:
வரலாற்று நாவல்களில் வருணனை மிக அவசியம். மற்ற நாவல்களில் கதையோட்டதைத் தடை செய்யாத படி இருத்தல் நலம்.
******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :
சிறு வயதில் இருந்தே படிக்கும் பழக்கம் உள்ளவள் என்பதால், நிறைய எழுத்தாளர்களின் ஆயிரக் கணக்கான கதைகளைப் படித்திருக்கிறேன்.
பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் கதைகள் என்பதற்கு மிக மிக நீளமான பட்டியல் இருக்கிறது. அமரர் கல்கி அவர்களுக்கு என்றுமே முதலிடம்! பொன்னியின் செல்வனும், அலை ஓசையும் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்ஸ்.
என் அன்னை அதிகம் படித்தது லக்ஷ்மி மற்றும் அனுராதா ரமணன் கதைகள். அதனால் ஆரம்பத்தில் நானும் அவர்களது கதைகளை அதிகம் படித்திருக்கிறேன். அதன் பிறகு ரா.கி.ரங்கராஜன், பி.வி.ஆர்., தி,ஜானகிராமன், ஜெயகாந்தன் என்று மிக மூத்த எழுத்தாளர்களின் கதைகளையும் படித்திருக்கிறேன்.
அதன் பிறகு எண்ணற்ற எழுத்தாளர்களின் கதையைப் படித்து ரசித்திருக்கிறேன்.
மிகப் பிடித்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், எழுத்தாளர் சுஜாதா அவர்கள், சிவசங்கரி அவர்கள், வித்யா சுப்பிரமணியம் அவர்கள். இவர்களது நிறைய நாவல்களை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன்.
மிகப் பிடித்த கதைகள் என்றாலுமே எண்ணிக்கை அதிகம்தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், ரா.கி.ரங்கராஜன் அவர்களின் ப்ரொஃபசர் மித்ரா, மிகச் சிறு வயதில் படித்திருந்தாலும் என்னுள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய நாவல். இப்போதும் அதே ஆர்வத்தோடு அக்கதையைப் படிப்பேன்.
சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கொலையுதிர் காலம், ஆ, கனவுத் தொழிற்சாலை மிகப் பிடித்தவை. அவரது வாழ்க்கை அனுபவங்களை சுவை படக் கூறும் கற்றதும் பெற்றதும் என்னுடைய மோஸ்ட் ஃபேவரிட். அறிவியலை சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் எழுதிய கற்பனைக்கும் அப்பால் புத்தகம் என்னுள் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவசங்கரி அவர்களின் நண்டு, அவன், ஒரு சிங்கம் முயலாகிறது, கருணைக் கொலை, ஏரிக்கடியில் சில கனவுகள், சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?, மலையின் அடுத்த பக்கம், 47 நாட்கள் என்று பட்டியல் நீளும்.
பாலகுமரான் அவர்களின் மெர்க்குரி பூக்கள், உடையார்
இந்துமதி அவர்களின் தரையில் இறங்கும் விமானங்கள்.
வாஸந்தி அவர்களின் பொய்யில் பூத்த நிஜம்.
அனுராதா ரமணன் அவர்களின் நிறைய கதைகள் பிடித்தாலும் என்னால் என்று மறக்க முடியாத கதை என்றால் அது முத்தமிட்ட சொப்பனங்கள்.
வித்யா சுப்பிரமணியம் அவர்களின் உன்னிடம் மயங்குகிறேன், ஆசை முகம் மறந்ததோ, அவள் முகம் காண.
சுபா அவர்களின் கண்மணி சுகமா
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கனவுகள் இலவசம்
எண்டமூரி வீரேந்திர நாத்தின் காதல் சதுரங்கம்
ரமணிச்சந்திரன் அவர்களின் வெண்ணிலவு சுடுவதென்ன?
காஞ்சனா ஜெய்திலகர் அவர்களின் சுடும் நிலவு சுடாத சூரியன்
ஜெயசக்தி அவர்களின் அன்பு மொழி கேட்டு விட்டால்.
இன்னும் பல எழுத்தாளர்களின் கதைகளின் பெயர் நினைவில் இல்லையென்றாலும் கதைகள் இன்றும் நினைவிலிருக்கிறது.
*******
நல்ல ரசிகை தான் போல,
ஆனால் ஒரே நாவலின் பெயரில் வேறு வேறு எழுத்தாளரின் கதைகள்😂😂. ஆனால் இந்த ஆன்லைனில் மட்டும் ஏன் இந்த குடுமி பிடி.... என் சீட்டு, என் கதை பெயருனு....
******
தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :
நீண்ட வருடங்களாக எனது வாசிப்பது மிக மிக குறைந்து விட்டது. சென்ற வருடம்தான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னுடைய விருப்ப எழுத்தாளர்கள் தவிர, சக எழுத்தாளர்களின் கதைகளைத் தேடித் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படி படிப்பதில் என் மனத்தைக் கவர்ந்த நாவல்களுக்கு, என்னுடைய கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்போது சில மாதங்களாக எதையும் வாசிக்க இயலவில்லை.
*****
அழுத்தம் நிறைந்த கதைக்கும், நகைச்சுவை நாவலுக்கும் உள்ள வித்தியாசம் :
அழுத்தம் நிறைந்த கதைகள் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும். நகைச் சுவை நாவல்கள் படிக்கும் நேரம் நம் மன அழுத்தத்தைக் குறைத்தாலும், அவற்றை நீண்ட நாள் நினைவில் வைத்திருக்க இயலாது என்பது என் எண்ணம்.
*******
உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:
காதல் குடும்பம் சமூகம் இவற்றின் கலவைதான்.
*******
நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
நாடித் தவம் புரிந்து நாவல் எழுதும் எண்ணம் ஆறு வருடங்களுக்கு முன்பு உருவானது. ஒரு பத்திரிகைச் செய்தி மனதில் ஏற்படுத்திய தாக்கத்தில் உருவான கதை அது. ஆனால், அப்போதிருந்த சூழ்நிலையில் என்னால் உடனடியாக எழுத இயலவில்லை.
சென்ற வருடம் மீண்டும் எழுதத் துவங்கிய போதும், அதைத் தான் முதலில் எழுத நினைத்தேன். ஆனால், அதற்கு முன் சில தகவல்களைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
ஒரு பெண், மூளைச் சாவு மூலம் மரணமடைந்த தன் கணவரின் விந்தணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி, மருத்துவரின் உதவி மூலம் PSR (Posthumous Sperm Retrieval) முறையில் அவரது விந்தணுவை பாதுகாத்து வைத்ததாக வந்த ஒரு செய்தி மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்போது தான் அம்மாதிரியான ஒரு தகவலை நான் கேள்விப்பட்டேன். மிக ஆச்சரியமாக இருந்தது. அதன் நம்பகத் தன்மையை அறிந்து கொள்வதற்காக நிறையத் தகவல்களைத் தேடினேன். சில மருத்துவர்களிடமும் பேசினேன். ஆனால், முழுத் திருப்தி தோன்றவில்லை. பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறை சிகிச்சையில் புகழ் பெற்ற டெல்லியை சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா தவான் பஜாஜ் MBBS, DGO, DNB, MNAMS and M. Med Science in Assisted Reproductive Technology from Nottingham University, UK (London) அவர்களைத் தொடர்பு கொண்டு எனக்கிருந்த சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டேன்.
இந்த தருணத்தில், தொலைபேசியில் பொறுமையாக எனக்கு விடையளித்த, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையில் சிகிச்சை முறை பற்றி மிக விரிவாக எழுதா விட்டாலும், நாம் எழுதும் ஒரு விஷயத்தின் நம்பகத் தன்மை பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்றியது. மற்றபடி, உணர்வுகளுக்குத்தான் அந்த கதையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
எந்த ஒரு எழுத்தாளருக்குமே, அவர்களது படைப்புக்கு வரும் கருத்துப் பதிவுகள் மனதுக்கு ஊக்கம் தரும் ஒன்று! அது ஒரு வார்த்தை ஆனாலும் சரி! ஒரு வரி ஆனாலும் சரி!
ஆனால், நாம் எந்த அளவுக்கு உணர்ந்து எழுதி இருந்தோமோ, அதே அளவு வாசிப்பவரையும் உணர வைத்திருக்கிறோம் என்பதை அறிவதில் இருக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
அத்தைகைய விமர்சனங்கள் நாடித் தவம் புரிந்து நாவலுக்கு கிடைத்ததில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது . அதற்கு மீண்டும் இந்த நேரத்தில் வாசகத் தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் ஒரு வாசகி என்னுடைய நாவல்களுக்கான விமர்சனங்களைத் தன் கைப்பட கடிதமாக எழுதி அதை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். கடிதம் என்பதே அரிதாகி விட்ட நிலையில், அக்கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அக்கடிதத்தில் நாடித் தவம் புரிந்து நாவலுக்கான கருத்தும் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி.
...
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர். ஒரு கதைக்கான தகவலை திரட்ட நீங்கள் மேற்கண்ட முறைகள் மிரள வைக்கிறது.
*********
உங்களது நாவல் புத்தகமாக வந்த போது உங்களது மனநிலை எப்படி இருந்தது :
முதல் நாவல் புத்தகமாக வெளி வந்து நம்முடைய பெயரைப் புத்தகத்தில் பார்ப்பதென்பது மிக மகிழ்வான தருணம். அந்நேரத்தில் இறைவனுக்கும் புத்தகம் வெளி வரக் காரணமாக இருந்த அனைவருக்குமான நன்றியுணர்வுதான் மனதில் நிறைந்திருந்தது.
அவரவர் வேலையைப் பார்க்கவே நேரம் கிடைக்காத இந்த அவசர காலத்தில், எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பாலமாக அமையும் விதத்தில், எழுத்தாளர் அறிமுகப் படலத்தை முன்னெடுத்து சிறப்பாக செய்து வரும் சகோதரி ஆனந்த ஜோதிக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.!
அன்புடன்
பிரேமலதா பாலசுப்ரமணியம்
....
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
எனது கேள்விகளுக்கான உங்களது பதில்கள் அனைத்தும் அட்டகாசம்👌👌👌
மேலும் பல படைப்புகள் படைத்திடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐
இன்றைய எழுத்தாளரின் நாவல்களை படித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளலாம் மற்றவர்கள் வாழ்த்தலாம்
நன்றி
.....
Comments
Post a Comment