காஞ்சனா ஜெயதிலகர் மேடம்

 


#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு:


வணக்கம் மேம்🙏🙏


எங்களுடைய எழுத்தாளர் அறிமுகப்படலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.


நான் ராணிமுத்துவில் முதன் முதலாக வாசித்த உங்களுடைய நாவல் 'கண்ணிலே நீர் எதற்கு'


அதில் வந்த தீபன் & ஜோதிகா கதாபாத்திரங்கள், நாயகனின் குறும்புத்தனமான பேச்சு, நாயகி மீதான அக்கறை, காதல் எல்லாமே மிகவும் அற்புதமாக இருந்தது. 


அதன் பிறகு, நான் வாசித்தது 'இன்பங்கள் இலவசம்' நாவல். அது ஹோட்டல் மேலாளரின் வாரிசுக்கும், அங்கு வேலை செய்யும் பெண்ணுக்கும் இடையே நிகழும் ஊடல் நிறைந்த காதல் கதை. வாசிக்கமிகவும் ரசனையாக இருந்தது.


இடையில் சில வருடங்களாக எனக்கு வாசிக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதன் பிறகு கிட்டதட்ட ஐம்பது நாவல்கள் உங்களுடையது வாசித்திருந்தேன். 


முல்லைப் பந்தல், அழகே வா அருகே வா, ஆனந்தம் அடி ஆனந்தம், நிலா நேசம், மண்டியிட்டேன் மதனா இவை எல்லாம் கிட்டதட்ட பத்து தடவைக்கு மேல் வாசித்திருப்பேன். 


தேவி தவம், பனி பகல், நேற்று முதல் உன் நினைவு, பாலைவனத்து பன்னீர், வெண் சங்கு பெண்ணவள், நெஞ்சத்தில் நீ, மனக்கதவை திறந்து விடு, வளர்பிறை கனவுகள், நித்தமும் உன் நினைவு - எல்லாமே மனதில் பதியும் இயல்பான காதல் கலந்த குடும்ப நாவல்கள்.


ரகசிய கதவு, நினைத்ததை முடிப்பவள், தாளம் பூவும் தங்க நிலாவும், நட்சத்திர பங்களா ... நாவல்கள் கொலை, மிரட்டல் விசாரணை முன் வைத்து வந்த நாவல்கள்

சில கதைகளில் வெளிநாடுகளின் சிறப்பு, பல்வேறு மாநிலங்களில் உள்ள அரண்மனைகளின் வடிவமைப்பு, வீடு கட்டுவது, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், உணவு வகைகள், படகு, குதிரை சவாரி, நாயக நாயகியரின் சந்திப்பு, மோதல், காதல், கொலை விசாரணை, மர்மம் என்று வித்தியாசமான கண்ணோட்டத்துடனே கொடுத்துள்ளீர்கள். 


நீங்கள் வெளிநாடு சென்று பார்த்த அனுபவங்களையெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மேம். 


நீங்கள் மேலும் பல அருமையான நாவல்களை தந்து மகிழ்விக்க ஒரு வாசகியாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இனி நேர்காணல் ....


*உங்களுடைய பெயர்: 


காஞ்சனா ஜெயதிலகர் என்னுடைய இயற்பெயர் தான். என் அம்மா எனக்கு வைத்த பெயர் காஞ்சனா கமலினி. என்னுடைய கணவர் பெயர் ஜெயதிலகர். காஞ்சனா ஜெயதிலகர் எனும் எனது பெயரில் ஒரு கவர்ச்சியிருப்பதாக நண்பர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். அது கடவுள் அமைத்து கொடுத்தது என்றே கருதுகிறேன். 


******

*சொந்த ஊர்: 


நான் வளர்ந்தது படித்தது எல்லாம் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் தான்.

 

******

*படிப்பு:


பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்டில் தான் முடித்தேன். அற்புதமான ஆசிரியர்கள்.இப்போதும் அனைவரும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள்.


பிறகு, சாரா டக்கர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றேன்.


******

*பணி: 


தற்போது முழுநேர எழுத்தாளராக மாறியுள்ளேன்.


*****

*உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்: 


ஐந்து தலைமுறைகளாக படித்த குடும்பம் எங்களுடையது. என்னுடைய அப்பா கல்லூரிப்பேராசிரியர். பனிரெண்டு வருடங்கள் கல்லூரி முதல்வராகவும் ஓய்வு பெற்றவர். அம்மா மருத்துவர். பாளையங்கோட்டையில் பெரும்பாலானவர்கள்  எங்கள் அம்மாவின் கிளினிக்கில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள். அதேபோல் அதிகமானவர்கள் எங்க அப்பாவின் கல்லூரியில் பயின்றவர்களாகத்தான் இருப்பார்கள். பிறகு, எனக்கு ஐந்து செல்லப் பேரக்குழந்தைகள் உள்ளன. அவர்கள் வழியில் வந்த நான் எனது கல்யாணத்திற்கு பிறகு எனது கணவரின் ஊரான கொடைக்கானலுக்கு வந்துவிட்டேன். இங்கு எனது கணவர் உணவுவிடுதி மற்றும் தங்கும் விடுதிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பில் உள்ளது. எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிற்று.மகன் என் கணவரின் தொழிலையே கையிலெடுத்துக்கொண்டார்.


******

*வருடக்கணக்காக எழுதுவதன் மூலம் நீங்கள் எழுத்துலகில் படைத்த சாதனை:


கிறிஸ்டியன் மேகஸினிற்கென்று இதுவரை மூவாயிரம் சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். நாவல்கள் என்று பார்த்தால் எழுபத்தைந்து நாவல்கள் எழுதி இருக்கிறேன். இதை சாதனை என்று சொல்லமுடியுமா தெரியாது. ஆனால், இவையெல்லாம் நான் சந்தோஷமாக செய்த விஷயங்கள். நம்மில் எவ்வளவு பேர் செய்யும் வேலைகளை சந்தோஷமாக முழு ஈடுபாட்டுடன் செய்கிறோம் என்று தெரியவில்லை. ஆனால், நான் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தந்தன.


.....


நிச்சயமா மேம் .. பணம் சம்பாதிப்பதற்காக என்று எழுத முடியாது. நாம் எழுதிய நாவலை புத்தகமாக வாசிக்கும் போது, ​​கிடைக்கும் சந்தோஷம் திருப்தி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது ...


******


*உங்கள் நாவல்களுக்காக நீங்கள் வாங்கிய விருதுகளையும் பரிசுகளையும் பற்றி சொல்ல முடியுமா?


சிறுகதை எழுதிய சமயங்களில் அமுதசுரபி மாதிரி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.


*******


*இப்பொழுது ஆன்லைனில் புதுசு புதுசாக பல எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் அவர்களில் நீங்கள் வாசித்த எழுத்தாளர், மற்றும் வாசிக்க விரும்பும் எழுத்தாளர் அவர்களது எழுத்து நடை பற்றி சொல்ல முடியுமா? இப்பொழுது உள்ள வாசகர்களின் ரசிப்புத்திறன் பற்றி சொல்ல முடியுமா :


ஒரு வாசகராக என்னுடைய எதிர்பார்ப்பு ஒரு விஷயத்தை சுருக்கமாக சொல்லணும். அதே சமயம் சுவாரசியமாகவும் சொல்லணும். இப்போதிருக்கிற இளம் எழுத்தாளர்கள் நிறைய பேர் என் மீதுள்ள அன்பினால் அவர்களின் படைப்பை எனக்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பார்க்கும்போது சுலபமாக ஐந்நூறிலிருந்து ஆயிரம் பக்கங்கள் வரை எழுதிவிடுகிறார்கள். எனக்கென்னவோ அவர்கள் சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிற மாதிரி இருக்கிறது. சிலசமயம் இதைச்சொல்ல அதிகபடியான விவரணைகள் தேவையில்லையே என்று நினைப்பது போலவும் இருக்கிறது. இப்போதிருக்கும் வாசகர்கள் அப்படித்தான் விரும்புகிறார்களா என்றும் தெரியவில்லை.


.....


நியாயமான கேள்வி தான் மேம். நானும் இப்படி நினைப்பதுண்டு

சலிப்பின்றிய நகர்வு, பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பு அத்தோடு நாம் சொல்ல வந்த விஷயத்தையும் சொல்லி முடித்து விடுவது சிறப்பானது தான் ...


******


*உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா: 


ராணிமுத்து ஆசிரியர் திரு. அ. மா. சாமி அவர்கள் தான் என்னை மிகவும் ஊக்குவித்து எழுத வைத்தார். அவருக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


*******


*உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :


கன்னத்தில் முத்தமிட்டால் என்றொரு தொடரை முதல்முதலாக இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பாக எழுதினேன். அதில் அப்போதே வாடகைத்தாயைப் பற்றி எழுதியிருந்தேன். அடுத்து அவள் விகடனில் வெளிவந்த வேலியற்ற வீடு, சுடும் நிலவு சுடாத சூரியன் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன.

பிறகு, ராணியில் வெளிவந்த ஆனந்தம் அடி ஆனந்தமும் நல்ல வரவேற்பை பெற்றது. நன்றாக இருந்ததாக பலர் தெரிவித்தார்கள். 

 

.....


ஆமாம், 'ஆனந்தம் அடி ஆனந்தி ' பெயரை போட்டு ஒரு குரூப்பில் யாரோ வாசகி கதை பற்றி சொல்லியிருந்தாங்க. என்னடா இது நம்ம பெயரிலே கதை இருக்கே என்று தேடி வாசித்து பார்த்தேன்... சும்மா சொல்லக் கூடாது கதை அருமை, விறு விறுப்பு, சுவராஸ்யம், காதல், குடும்பம் அனைத்தும் கலந்து இருந்தது.


******


*நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாவல் எது? எதனால்:


எல்லா நாவல்களுமே எனக்கு நான் பிடித்து எழுதியவை தான். வேப்பமரத்திலொரு தேன்கூடும் அல்லிக்குளத்து வீடும் ரொம்ப நான் ரசித்து எழுதிய நாவல்கள்.


*****


*ஆன்டி ஹீரோ கதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க? நான் வாசித்த வரையில் நீங்கள் இது போல முரட்டுத் தனமான ஹீரோ கதைகளை எழுதியதில்லை என்றாலும் கேட்கிறேன். ஏன் ஆன்டி ஹீரோ கதையை பலர் வாசிக்க விரும்புகிறார்கள்:


அந்த மாதிரியான ஒரு நபருடன் இருந்தால் நிச்சயம் எனக்கு மூச்சு முட்டிவிடும். மென்மை பெண்களிடமும், முரட்டுத்தனம் ஆண்களிடமும் ரசிக்கக்கூடியது தான். ஆனால், பெண்களுக்கு மதிப்பு கொடுக்காத, அவர்களை சமமாக நடத்தாத ஆடவனை எப்படி நாயகனாக ஏற்றுக்கொள்ள முடியும்? சில ரசிக்கும் படியான அதிரடி குணங்கள் அவர்களிடம் இருக்கலாம் தான். ஆனால் எதிர்மறை குணமுடையவரை எல்லாம் நாயகராக இதுவரை என் நாவலில் நான் கொண்டுவந்ததில்லை. கண்டிப்பாக நாவல் நன்மதிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும்.


....

🙂🙂🙂


*******


*அன்றைய காலத்தில் கூட்டு குடும்ப கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுடைய எழுத்தின் திறமையால் வாசகர்களை தன் வசப்படுத்தி இருந்தார்கள் பல எழுத்தாளர்கள். இப்போது அது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? :


இப்போது எங்கே கூட்டு குடும்பம் இருக்கிறது. ஒரு தம்பதியர் ஒரு குழந்தை என்று இப்படி தான் இருக்கிறார்கள். ஆனால் அதனுள்ளேயே நூறு குழப்பங்கள். நாயகன் நாயகி என்று இருவரை மட்டுமே வைத்து அவர்களின் உறவினர் கதாபாத்திரங்களை உள்ளே கொண்டுவந்து கதையை புனையலாம். அதிலும் எனக்கு ரொம்ப கூட்டுக்குடும்பம் பற்றிய அனுபவம் கிடையாது. எனக்கென தனியறை. அதனால் அதில் என்னால் திறமையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை.


*****


*உங்கள் நாவலில் ஒவ்வொரு கதைக்களமும் ஒவ்வொரு நாட்டில் நிகழ்வது போல் சொல்லியிருக்கிறீர்களே நீங்கள் இதுவரை எத்தனை நாடுகளுக்கு பயணித்திருக்கிறீர்கள்:


இதற்கு நான் என் கணவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படியொரு கணவரை தந்த கடவுளுக்கும் தான். என் கணவருக்கு நிறைய பயணம் செய்வது பிடிக்கும். கிட்டத்தட்ட நாங்கள் இருபத்தைந்து முப்பது நாடுகளுக்கு சென்றிருக்கிறோம். நான் அங்கு செல்லும் போதெல்லாம் நினைத்ததில்லை அவைகளை நான் கதைக்களமாகக் கொண்டு கருவை எடுத்துச்செல்வேன் என்று. ஆனால், அது போல் ஆகிவிட்டது. இந்த சம்பவங்கள் அங்கு அந்த பின்னணியில் நிகழ்ந்தால் நன்றாகயிருக்குமே என்று எடுத்துச்சென்றேன். பிறகு ஒரு வாசகர் கேட்டிருந்தார் நான் கண்டிப்பாக ஜப்பான் செல்லவேண்டும் என்று. தற்போது கொரோனோ காரணமாக எங்கும் செல்ல முடியவில்லை. அப்புறம் எனக்கு சிலோனுக்கும் ரஷ்யாவிற்கும் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.


....


உங்க ஆசை நிறைவேறிட வாழ்த்துகள்.


******


*நீங்க சாதாரண லவ் ஸ்டோரி மட்டுமே எழுதாமல் அதில் மர்மம், திருப்பம், கொலைகள் என்று கொண்டு வருவதன் காரணம் என்ன: 


நீங்களே சாதாரண லவ் ஸ்டோரி என்று சொல்லிவிட்டீர்கள். அந்த சாதாரண லவ் ஸ்டோரி எழுதுவதைவிட இதுபோல் திருப்பங்கள், சஸ்பென்ஸ்கள் கொண்டு எழுதினால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் இல்லையா? அதில் ஒரு நூறு முடிச்சுகளைப் போட்டு, அப்படி வருமா இப்படி வருமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கினால் தானே அது நன்றாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.

அதற்காக நாவலில் கொலை வந்தால் அதை மையப்படுத்தி மட்டுமே என்னுடைய கதை இருக்காது. ஆனால், அதுவும் இருக்கும் லேசாக மசாலா தூவுவதை போல. அதிகபட்சமாக குடும்பத்தில் நிகழும் குழப்பங்கள், சமூக படைப்புகள் என்றே எழுதியிருக்கிறேன்.


******


*உங்களது நாவலில் எது முதன் முதலாக புத்தகமாக வெளியானது? அதைப் பார்த்த போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?


கண்ணிலே நீர் எதற்கு நாவல் தான் 1997ல் ராணிமுத்துவில் வெளியான என் முதல் நாவல். அனைவருக்கும் இருப்பது போல் தான் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நான் பார்த்ததும் பரவசமடைந்தேன்; தலைகால் புரியவில்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். அது ஒரு சந்தோஷம் தான். ஆனால், நான் அதை இயல்பாக எடுத்துக் கொண்டேன் என்றே நினைக்கிறேன். 


.... 


உங்கள் முதல் நாவல் ராணிமுத்துவில் வந்தவுடன் நான் வாசித்து விட்டேன் போல தெரிகிறது. நாயகனின் கேலியும், குறும்பும், கதை நகர்வும் மிகவும் அருமையாக இருந்தது.


******


*நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் மற்றும் உங்களது விருப்பமான எழுத்தாளர்:


எனக்கு தி.ஜானகிராமன், சுஜாதா, லாசாரா இவங்க எழுத்துக்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இவர்களின் கேரக்டரைசேஷன், கேரக்டர் ஸ்டடி, கதை கொண்டு போகிற விதம் என்று அனைத்தும் அற்புதமாக இருக்கும். அதிலும் லாசாரா எழுத்தெல்லாம் ரொம்ப திவ்யமா இருக்கும். அது கடவுள் அவருக்கு கொடுத்த கிப்ட்னு தான் நினைக்கிறேன். ஆங்கிலத்தில் என்னுடைய விருப்பமான எழுத்தாளர் என்றால் அகதா கிறிஸ்டி. அவங்களோட ரொம்ப தீவிரமான ரசிகை நான். அப்புறம் ஜாவர் சீதாராமன், தமிழ்வாணன் கதைகள் மாதிரியான திகில் கலந்த கதைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 


****


*உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:


எதுவும் எனக்கு அப்படி ஒரு உணர்வை கொடுக்கலை. ஆனா, இப்போ சமீபமா பிஞ்ச் ஆப்பில் பிரியதர்ஷினி அவர்கள் குழுவால் நான் எழுதின 'மறுபடி மழையென'ங்கிற ஒரு நாவலுக்கு உடனுக்குடனே கமெண்ட்ஸ் வந்தது. உடனே மெசேஞ்சர் வந்து பாராட்டினாங்க வாசகர்கள். உடனே போன் போட்டு மேடம் இன்றைய அத்தியாயம் படிச்சேன்னு சுடச்சுட ரிவீவ்ஸ் கொடுத்தாங்க. எனக்கு அதெல்லாம் ரொம்ப உற்சாகத்தை கொடுத்தது.


நான் ஒரு டான்ஸரா இருந்திருக்கேன். ஒரு பாடகராக இருந்திருக்கேன். அப்போ எல்லாம் மேடையேறி எல்லாம் முடிஞ்சவுடனே உடனுக்குடனே கைத்தட்டி பாராட்டு கிடைச்சுடும். ஆனா, எழுத்து விஷயத்தில் நம்ம எங்கேயோ ஒரு ஓரத்தில் உட்கார்ந்து எழுதுறோம். உடனே பாராட்டு கிடைக்கிறதுங்கிறது அபூர்வம் தான். ஆனா, இப்போ பிஞ்ச் ஆப்பின் மூலமா அது உடனுக்குடன் கிடைக்கிறதுங்கும் போது நான் உங்க எல்லாருக்கும் தான் ரொம்ப நன்றி சொல்லணும்.


******


*அன்றைய காலத்தில் இருந்து இப்போது வரையில், வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றிருப்பதற்கான ரகசியத்தை தெரிந்து கொள்ளலாமா: 


அதுக்கு நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். அப்புறம் என்னுடைய அன்பான வாசகர்களுக்கும். இதெல்லாம் வந்து பிளான் பண்ணி நடக்கக்கூடிய விஷயமா சொல்லுங்க? எனக்கு முன்னாடி எல்லாம் இதுபோல் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாது. இப்போ ரெண்டு மூணு வருஷமா தான் முகநூல் வழியா பலரை சந்திக்கிறேன். அப்போது அவர்கள் உங்க கதையை எத்தனை முறை வாசித்தேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வதை கேட்கும்போது தான் நமக்கும் இவ்வளவு வாசகர்கள் இருக்காங்களா என்று எனக்கு தெரிந்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா முழு ஈடுபாட்டோட எழுதின என்னுடைய கதைகள் மத்தவங்களுக்கு ஒரு திருப்தியை கொடுக்கிறதுங்கும் போது, அது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.


...


நிஜம் தான்


******


*நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:


சமீபத்தில் தான் பிஞ்ச் ஆப்பில் மறுபடி மழையென என்று ஒரு நாவலை எழுதினேன். அது ரொம்ப ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அது ஒரு ரொமான்டிக் நாவல் தான். ஆனால், கதைக்கரு கொஞ்சம் கனமாக இருந்த மாதிரி நான் உணர்ந்தேன். அதனால் ஒரு லைட் entertainer "காதலின் முதல் துளி" என்ற பெயரில் எழுதினேன். அதற்குள் மீண்டும் bynge app இல் இருந்து அடுத்த நாவல் கேட்டதால் இன்னொரு மர்மம் கலந்த நாவல் எழுதி கொண்டிருக்கிறேன்


வெளி தேசத்தில் நடக்கும்  கதை. அது என்ன தேசம் என்பதையும் மர்மாகவே வைத்து கொள்ளலாமே 


....


கண்டிப்பாக


******


*நீங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வாசிக்க விரும்பும் நாவல்கள்:


நான் இதுவரை யாருடைய நாவலையும் அப்படி மூன்று முறைக்கு மேல் திரும்ப திரும்ப வாசிச்சதா எனக்கு ஞாபகமில்ல. சின்ன வயசுல வாசிச்சிருக்கலாம். பனிரெண்டு வயசுல வாசிச்ச தி. ஜானகிராமன், சுஜாதா, ஜாவர் சீதாராமன் கதைகளை எல்லாம் இந்த நாட்களிலும் திரும்பப்பார்க்கிறேன். 


ஆனால், என்னுடைய நாவல்களை சிலர் பத்துமுறைக்கு மேல் வாசித்தேன்; தினமொரு நாவலென்று வாசிப்பேன் என்று சொல்வதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தாலும் அதை நான் எனது ஒரு சாதனையாக கருதமாட்டேன். கடவுள் எனக்கு கொடுத்த ஒரு வரம் என்றே நினைப்பேன்


...


🙂🙂🙂


*******


*உங்கள் நட்பில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றி சொல்ல முடியுமா:


சக எழுத்தாளர்கள் என்று சொல்லும் போது முந்தைய காலத்திலிருந்து என்னுடன் நட்புடன் இருப்பவர் ரமணிச்சந்திரன் அக்கா தான். ஒரே திருநெல்வேலி மாவட்டம் வேறு. அடிக்கடி நேரில் சந்தித்து பேசிக்கொள்வோம். அவரின் வாசகியாக இருந்தவள் நான். என் கதையை வாசித்துவிட்டு அக்கா நல்லா இருந்ததென்று  சொல்வாங்க. கடவுள் புண்ணியத்தில் இப்போது வரைக்கும் அந்த நட்பு நல்லபடியாவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இங்கே முகநூலிலும் எனக்கு சில இளம் எழுத்தாளர்கள் நண்பர்களாக கிடைத்திருக்கிறார்கள். 


சில சமயம் சிலருக்குள் உள்குத்து சர்ச்சைகள், சண்டைகள் என்று நிகழும். கடவுள் கிருபையால் எனக்கு அப்படி யாருடனும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லை.


பிறகு, சக எழுத்தாளர்களிடம் பேசும் போது ரொம்ப நேரம் பேசுவோம். அது ரொம்ப சுவாரசியமாக இருக்கும். இந்திரா சௌந்தர்ராஜன் போன்றவர்களிடம் பேசும் போது ஒரே பீல்டில் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்கு மேலேயே பேசும் சந்தர்ப்பம் அமையும். 


அப்புறம் இன்பா அலோசியஸ், அகிலாண்டபாரதி போன்றவர்கள் என்னை இங்கு கொடைக்கானல் வந்த போது நேரில் சந்தித்துவிட்டுச் சென்றார்கள்.


......


மிக்க நன்றி மேம்🙏🙏🙏


எப்போதோ நிகழ வேண்டிய இன்டர்வியூ சற்று காலதாமதமாகி விட்டது. என்றாலும் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனடியாக சம்மதித்து என்னுடைய கேள்விக்கான பதிலை அனுப்பி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், சாதனைகள் பல புரிந்திடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


மேடமின் நாவல்களை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துக்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் அவர்களது திறமையை வாழ்த்தலாம்


நன்றி



Comments

  1. Acho thank u thank u so much sago kj mam novels la evlo time read panenu enakke theriyathu avanga novels la ellame avlo alaga irukkum nalla oru feel kidaikkum heroine ah um avlo alu moonji ah kata matanga kandippa nalla confidentah theliva yosikkiravangala katiruppAnga ex ananthi..Devi.. innum manthiram punnagai heroine pani pagal nimmi soooooo cute thank u soooooo much kj mam love u athum ramani ma um neengalum ivlo close nu nejamave romba happy ennoda all time fav rc n kj enakkum Agatha christy novel read panna asa papom

    by -> Selva Priya

    ReplyDelete
  2. Mam ❤️☺️❤️☺️☺️❤️

    ReplyDelete

Post a Comment