#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப் போகும் நபர் எழுத்தாளர் நர்மதா ....
அவர்களைப் பற்றிய விபரங்கள் :
பெயர் : நர்மதா சுப்ரமணியம்
சொந்த ஊர் : பிறந்தது வளர்ந்தது வசிப்பது எல்லாம் சென்னை. பூர்வீகம் திருநெல்வேலி.
படிப்பு : B.E.
பணி : Technology Lead in Infosys
தளம் : பிரதிலிபி, அன்னாஸ்வீட்டி தமிழ் நாவல்ஸ், மோனிஷா நாவல்ஸ், எழிலன்பு நாவல்ஸ்.
எனது அனைத்து படைப்புகளையும் என் வலைப்பதிவிலும் படிக்கலாம்.
https://narmadhasubramaniyam.wordpress.com/
அமேசான் பெயர்: நர்மதா சுப்ரமணியம், Narmadha Subramaniyam
*******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
நான் ரொம்பவே குடும்பம் சார்ந்து வாழும் பெண். பாசமான தாய் தந்தை, அன்பான அண்ணன்னு அவங்களை சுற்றி தான் என் வாழ்க்கை.
எனக்குனு எந்த கனவும் லட்சியமும் கிடையாது. வாழ்க்கையின் போக்கில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக உபயோசிக்கனும்னு நினைப்பேன். அப்படி வாய்ப்பு தானாக தேடி வரும் போது அதுக்கு தேவையான முழு முயற்சியும் கடின உழைப்பும் போடுவேன். அது வெற்றி, தோல்வினு நிறைய அனுபவங்களை கற்றுத்தரும். அதையே படிப்பினையா வச்சி முன்னகர்ந்து போய்டுவேன்.
....
அருமையான பதில் சிஸ்டர்
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்: அமுதவல்லி கல்யாணசுந்தரம்,
சீதாலட்சுமி, அன்னா ஸ்வீட்டி, வத்சலா ராகவன், மது ஹனி, ஹமீத
அனைவரும் மனதை வருடும் எழுத்து நடையை கொண்டவர்கள். இவங்க எழுத்துகளை எல்லாம் வரி வரியாக ரசிச்சு வாசிக்கலாம். காட்சியமைப்பும் ரசிக்கத்தக்கதாக ரம்மியமாய் இருக்கும்.
*********
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
இவங்க கதையை படிச்சா மனசு இலகுவாகுதுனு சொல்றது போல தான் என் கதைகள் இருக்கனும்னு நினைப்பேன். அதனால காதல் மற்றும் குடும்பம் சார்ந்த கதைகள் தான் நான் எழுதுவது. அதுலயே என்ன புதுமைகள் செய்யலாம், என்ன மாதிரியான வித்தியாசங்கள் காமிக்கலாம்ன்ற தேடல் கண்டிப்பாக இருக்கு.
அப்படியான என் முயற்சிகளுக்கும் என் வாசகர்கள் அளிக்கும் ஆதரவு நிறைய நேரம் நெகிழ செய்திருக்கு. அதே சமயம் இந்த இடங்கள் இந்த மாதிரி வந்திருக்கலாம்னு வாசகர்கள் சொல்ற கருத்துக்களையும் எடுத்துக்கிட்டு அதுக்கேத்த போல மாற்றமும் செஞ்சிருக்கேன். இன்னும் நிறைய கத்துக்கிட்டே தான் இருக்கேன்.
என்னுடைய ஒரு கதை படிச்சிட்டு மற்ற கதைகள்லாம் தேடி படிச்ச வாசகர்கள் நிறைய உண்டு. உங்க கதை படிச்சு தான் பிரதிலிபி தளமே எனக்கு அறிமுகம்னு சொன்ன வாசகர்களும் உண்டு. ரொம்ப வருஷம் கழிச்சு லாக் டவுன்ல உங்க கதை படிச்சு தான் திரும்பவும் படிக்கிற பழக்கம் உருவாச்சுனு சொன்னவங்களும் உண்டு. நண்பர்கள்/தோழிகள் பரிந்துரை செய்து உங்க கதையை படிச்சேன் நல்லா இருந்துச்சுனு சொன்னவங்களும் உண்டு. இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னு திருத்தங்கள் சொல்கின்ற வாசகர்களும் உண்டு. இப்படியான வாசகர்கள் தான் வரம்னு நினைக்கிறேன். அப்படியான நிறைய அனுபவங்கள் எழுத்தின் மூலமாக கிடைச்சிருக்கு. அனைத்து புகழும் பிரதிலிபி தளத்தையே சாரும்.
.....
🙂🙂🙂
*******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் (Bangalore Days)
*******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
முகநூலில் என் நட்பு இணைப்பில் இருக்கும் பெரும்பாலானோர் எழுத்தாளர்கள் தான்.
பிரதிலிபி தவிர நான் எழுதும் பிற தளங்களின் உரிமையாளர்கள் அனைவரும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் தான். யுவனிகாவும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர் தான். நான் வாசகராய் இருந்து இவர்களின் கதைகளை விமர்சித்து கருத்துரை பகிர்ந்திருக்கேன். நான் எழுத்தாளராய் மாறிய பிறகும் அதே மாறாத அன்பையும், ஊக்கத்தையும் அளிக்கிறார்கள் இவர்கள் அனைவரும்!
நெருங்கிய தோழி என்றால் சிவரஞ்ஜனி குமாரவடிவேலு தான். ரஞ்ஜனினு தான் நான் அழைப்பேன். என் இன்பம் துன்பம் அனைத்தையும் இவருடன் எவ்வித தடையுமின்றி பகிர்ந்துப்பேன்.
*******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
எனக்கு வாசிப்புங்கிறது மன இறுக்கத்தை போக்கி இதமாக்கனும். படித்து முடிக்கும் போது அப்படியே மனம் முழுக்க நிம்மதியும் சந்தோஷமும் பரவனும்.
நேர்மறையாய், உணர்வுபூர்வமாய் மனதை வருடும் எழுத்து நடை உள்ள படைப்புகள் அனைத்தையும் விரும்பி படிப்பேன்!
சுவாரஸ்யமாய் வித்தியாசமான கதைக்களங்களில் அமைந்த கதைகளை படிக்கவும் ஆர்வமுண்டு. ஆனால் சோகம் அழுத்தம் நிறைந்த கதைகள் பக்கமே போக மாட்டேன். அது இருக்கிற நல்ல மனநிலையையும் மாற்றிவிட்டு அழுத்தமாக்கிடும்ங்கிற பயம் தான் முக்கிய காரணம்.
....
😂😂😂😂
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
உன் மனம் தனில் எந்தன் தொல்லையா?
என் திறமையை எனக்கே அறிமுகப்படுத்திய நாவல் இதுனு சொல்லலாம்.
2018ல் முதல் நாவல் எழுதி முடிச்சதும் பிரதிலிபியில் நடந்த குறுநாவல் போட்டிக்காக எழுதிய கதை இது. அப்போட்டியில் முதல் பரிசு பெற்றது.
பாகங்கள் இல்லாமல் ஒரே கதையாக பதிப்பிக்கபட்ட கதை. பிரதிலிபியில் இதுவரை 903000 வாசகர்கள் இக்கதையை வாசிச்சிருக்காங்க. எனக்கு நிறைய நிரந்தர வாசகர்களை அளித்த கதை இது. நான் தொடர்ந்து எழுத ஊக்கமளித்த நாவல்.
அதன்பிறகு மது'ஸ் மாறன் மற்றும் கொஞ்சும் எழிலிசையே நாவல்கள் இரண்டுமே நிறைய புது வாசகர்களை எனக்கு அளித்தன.
...
உன் மனம் தனில் எந்தன் தொல்லையோ? படிச்ச நாவல் போல இருக்கே🤔🤔🤔 (நிறம் குறைந்த நாயகி )நாயகி மீது சதா கோபப்படும் நாயகன் அவளது அழுகை கண்டு கோபத்தை விடுவதும், புரிய வைப்பதும்.... அவளது கன்னக் குளி சிரிப்பும், அவனது கருப்பட்டி அழகி பெயரும் அருமை சகோ😂😂🤣🤣.
********
நீங்கள் எழுதிய மொத்த நாவல் : 7
ஒரு குறுநாவல் சேர்த்து ஏழு நாவல்கள் எழுதிருக்கேன். அதில் மூன்று நாவல்கள் புத்தகமாய் வெளி வந்திருக்கு. எட்டாம் நாவல் தொடர் கதையாக எழுதிட்டு இருக்கேன்.
இது இல்லாமல் பத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதியிருக்கேன்.
*****
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
3 வருடங்கள் ஐந்து மாதங்கள் ஆகிறது!
என்னடா மூனு வருஷத்துல ஏழு நாவலானு நினைக்காதீங்க. என்னுடைய நாவல்கள் எல்லாம் 25000ல் இருந்து 35000 வார்த்தைகளுக்குள் தான் இருக்கும். உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் மற்றும் முள்ளில் பூத்த மலரே தான் அதிகமாய் போன நாவல்.
இப்ப இருக்கிற பரபரப்பான காலகட்டத்தில் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் அதிகபட்சம் மூனு நேரத்துல முடிக்கனும் அதே சமயம் மனநிறைவாகவும் இருக்கனும்னு நினைப்பேன்.
அதே தான் என் நாவல்களிலும் ஃபாலோ செய்றேன். தவிர்க்க முடியாத சூழலில் கதையின் போக்கிற்கு பெரியதாய் தேவைபட்டால் எழுதலாம்.
*******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
நறுங்காதல் பொழிபவனே.!
********
உங்கள் நாவல்களின் பெயர் :
உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் (Bangalore Days)
உன் மனம் தனில் எந்தன் தொல்லையா? (குறுநாவல்)
மதுவின் மாறன் (மது'ஸ் மாறன்)
கொஞ்சும் எழிலிசையே!
முள்ளில் பூத்த மலரே
என் நித்திய சுவாசம் நீ!
ஆருயிர் ஆதிரையாள்
*******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
காதல், குடும்பம் என நகரும் கதையிலேயே சமூகத்திற்கு தேவையான கருத்தையும் புகுத்தியிருப்பேன்.
********
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
நான் எழுதிய கதைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். அதில் மிக பிடித்ததுனு சொல்றது ரொம்பவே கஷ்டம். ஆனா கதையை எழுதி முடிக்க போற சமயத்துல இந்த ஜோடியை மிஸ் பண்ண போறோமேனு நான் உணர்ந்த ஜோடி 'மது'ஸ் மாறன்' கதையின் வெற்றிமாறன் மதுரவாணி, என் நித்திய சுவாசம் நீ கதையின் ஜோடி நித்திலன் நிவாசினி.
மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களும் பிடிக்கும்.
*******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
உன் மனம் தனில் எந்தன் தொல்லையா?
மதுவின் மாறன்
கொஞ்சும் எழிலிசையே
இந்த மூன்று கதைகளுமே வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. காரணம் எதார்த்தமான கதைகள். அந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் தங்களை பொருத்தி பார்க்க முடிந்தது வாசகர்களால். 'நானும் இப்படி தான், எனக்கும் இப்படி நடந்திருக்குனு, இவனை போலவே எனக்கும் ஒரு தம்பி இருக்கான், நாங்களும் இந்த ஜோடிகள் போல தான்னு' வந்த கருத்துரைகள் தான் அதிகம் இந்த கதைகளுக்கு!
*********
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?
நெஞ்சார்ந்த நன்றிகள்!
உங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளும் விமர்சனமும் தான், நான் மென்மேலும் தொடர்ந்து எழுத ஊக்கமா இருக்குது. அது தான் என்னோட உந்து சக்தியா விளங்குது. தொடர்ந்து உங்களோட ஆதரவை வழங்கிட்டே இருங்கன்றது தான் என்னோட வேண்டுகோள்!
*******
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:
கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரை, கடிதம், விமர்சனம் எழுதும் போட்டி என அனைத்திலும் பங்கேற்றிருக்கிறேன்.
தொடர்கதை/நாவல் எழுதும் போட்டியில் பங்கேற்றதில்லை. அலுவலக வேலை பளு தான் காரணம்.
*******
ஒரு சம்பவத்தின் தாக்கம் அதை பார்ப்பவர் அல்லது படிப்பவர் மனதை விட்டு சில நாட்கள் மீளாத வகையில் இருக்க அவர்கள் எப்படி பட்ட கதையம்சத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்:
பொதுவாக இதற்கு அனைவரும் அழுத்தமானதாக இருந்தால் தான் மனதை விட்டு நீங்காதுனு சொல்லுவாங்க. ஆனா என்னைய கேட்டா, நம்ம ரசிச்சு படிக்கிற காட்சிகளும் கதைகளும் கூட நம்ம படிச்சி முடிச்சதும் மனசை விட்டு நீங்காது, அதை அசை போட வைக்கும். அதற்கு தேவையானது அழகான காட்சியமைப்பும் அந்த சம்பவத்தின் உட்பொருளையும் உணர்வுகளையும் வாசகர்களுக்கு கடத்தும் எழுத்தும் தான் நான் நினைக்கிறேன். எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாகவே ஒரு சம்பவத்தினை மக்களின் மனதில் அழுத்தமாக பதிய வைக்க முடியும்னு நம்புறேன்.
********
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
என் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் இறை சித்தம்னு நினைக்கிறவள் நான்.
கனவுல கூட நான் எழுத்தாளர் ஆவேனு நினைத்து பார்த்ததில்லை. ரொம்பவே எதிர்பாராம தற்செயலாக ஆரம்பித்தது தான் என் எழுத்து பயணம்.
2015ல பெங்களூர்ல இருந்து சென்னைக்கு அலுவலக இடமாற்றம் பெற்று வந்த சமயத்துல, வீட்டிலருந்து அலுவலகத்திற்கான பயணம் நீண்ட நெடு நேரமாய் மாறி போச்சு. அப்ப தான் நான் குடும்ப நாவல்கள் படிக்க ஆரம்பிச்சேன்! முரட்டு ரீடரா இருந்து பல கதைகளுக்கு பக்கம் பக்கமா விமர்சனம் எழுதிட்டு இருந்த காலம் அது.
2017ல் கவிதை எழுத ஆரம்பிச்சேன்! பார்க்கிற பொருட்கள், படங்கள், பழகுற மனிதர்கள்னு எல்லாத்துக்கும் கவிதையா எழுதி தள்ளிட்டு இருந்தேன். கதைகளை கவிதை நடையில் எழுத பழகிட்டு இருந்தேன்!
2017 இறுதியில் சில்சீ தளத்திற்கு, "காதல் என்பது யாதெனில்?" எனும் என்னுடைய முதல் கவிதை கதையை பதிப்பிக்க அனுப்பினேன்.
2018 ஜனவரி 1 ஆம் தேதி அதை பதிப்பித்தார்கள். அதனால அந்த நாளே என் எழுத்து பயணத்தின் துவக்க நாளாக மாறிடுச்சு.
அதே 2018 பிப்ரவரி மாதம் பிரதிலிபி நடத்திய திகில் சிறுகதை போட்டிக்கு, சும்மா எழுதி பார்ப்போமேனு ஒரு திகில் சிறுகதை எழுதினேன். அது தான் என் முதல் சிறுகதை! அதுலயே முதல் பரிசு கிடைத்தது. புது அலுவலகம் அதன் அழுத்தம், அங்கு நட்புகள் என யாரும் இல்லாத நிலை, மனம் ரொம்பவே வெறுமையா உணர்ந்த நேரம் அது. அப்படி ஒரு நேரத்துல இப்படி ஒரு பரிசு தேடி வந்தப்ப, இறைவனின் ஆசியாகவே தான் நினைச்சேன். நிறைய தற்செயல் நிகழ்வுகள் இந்த வருஷத்துல நடந்துச்சு.
அதன் பிறகு 2019ல வேலை பளு காரணமாக பல மாதங்கள் எழுத முடியாமல் இருந்தப்ப, எழுதறதை விட்டுடலாம்னு இருந்தேன். அப்ப பிரதிலிபில இருந்து டாப் 200 எழுத்தாளர்கள்ல நானும் ஒருத்தினு சொல்லி ஒரு பரிசு அனுப்பினாங்க.
தொடர்ந்து எழுதுனு இறைவனே சொன்னது போல அப்படி ஒரு சந்தோஷம். மீண்டும் ஆரம்பிச்சு தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்.
இப்பலாம் என்னோட மன அழுத்தத்தை போக்கிறதுக்கு வாசிப்பை விட எழுத்தை தான் மனம் நாடுது. அந்தளவுக்கு எழுதுவது எனக்கு மன நிம்மதியை கொடுத்திருக்கு.
....
மிகவும் அருமை சிஸ்டர்
******
நாளிதழ்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லை. மின்னிதழில் கவிதைகள் வந்திருக்கின்றன.
*********
ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க:
வெற்றிங்கிறது அவங்கவங்க மனசுக்குள்ள வச்சிருக்க எல்லையை பொருத்ததுனு தான் நான் நினைக்கிறேன்.
என்னை பொருத்த வரை எழுத்தின் வெற்றினு நான் நிர்ணயிச்சிருக்கிறது இரண்டு விஷயங்கள் தான்.
முதலாவது கதையை நிறைவு செய்யும் போது சரியா முடிச்சிருக்கோம்னு எழுத்தாளராய் என் மனம் நிறைவாய் உணரனும். அடுத்தது நம்ம எதை நினைச்சு அந்த கதையை எழுதினோமோ அந்த கருத்து அல்லது உணர்வு ஒருத்தருக்காவது அதே போல சென்று சேருமானால் அது தான் அந்த எழுத்தாளனோட வெற்றினு நான் நினைக்கிறேன்.
**********
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :
எங்க வீட்டை பொறுத்தவரை கதை படிக்கிறதுலாம் நேர விரயம்னு நினைப்பாங்க. வாசிப்பதை ஊக்குவிப்பாங்க. ஆனா கதைகள் வாசிப்பது பிடிக்காது. முதல் சிறுகதை பரிசு வாங்கினப்ப கூட, போதும் இதோட நிறுத்திக்கோ இதுக்கு மேல எழுதாதனு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு இதுல தான் ஆர்வம் இருக்கு, இதுல எனக்கு திறமையும் இருக்குனு தெரிஞ்ச பிறகு எழுத வேண்டாம்னுலாம் சொல்றது இல்ல. ஆனா எழுத்து வகையில் நான் என்ன செய்றேன் ஏது செய்றேன்னுலாம் வீட்டுல சொல்லிக்கிட மாட்டேன். அவங்களும் அவளுக்கு பிடிச்சதை ஏதோ செய்றா.. செஞ்சிட்டு போகட்டும்னு என்னை எதுவும் கேட்க மாட்டாங்க.
*********
சில எழுத்தாளர்கள் நிஜத்தை அப்படியே கண் முன் காட்சி படமாக விரிவது போல எழுதுகிறார்கள். அது எப்படினு சொல்ல முடியுமா:
அந்த நிகழ்வை நம் மனக்கண்ல கொண்டு வந்து அந்த காட்சி நடக்கிற இடத்துல நம்ம பக்கத்துல நின்னு பார்க்கிறது மாதிரி பார்த்துக்கிட்டே எழுதினா அது படமாக படிக்கிறவங்களுக்கும் விரியும்.
*********
நிஜ சம்பத்தை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா
என் கதைகள் அனைத்தும் நிஜமும் புனைவும் கலந்த கலவை தான்.
*********
புத்தகங்களை தேடி அலைந்து படிப்பதற்கும், ஆன்லைனில் உடனடியாக படிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக என்ன நினைக்கிறிங்க :
புத்தகத்துல படிக்கிறது அலாதி இன்பம். அந்த உணர்வை ஆன்லைனில் பெற முடியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் இருப்பதால் தான் நிறைய வாசிப்பனுபவம் கிடைக்குது.
**********
போட்டி நிறைந்த உலகில் எழுத்தாளர்கள் பலர் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து திறமைகளை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர் அதை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா.
பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
தங்களது திறமையை நிரூபிக்க முயற்சி மேற்கொள்பவர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தான். அவர்களின் முயற்சியும் உழைப்பும் என்றைக்கேனும் ஒரு நாள் நற்பலனை வழங்கும்.
********
கூட்டுக் குடும்ப கதைகள் அண்மையில் குறைந்து, காதல் படைப்புகள் பெருகி விட்டதென்று நினைக்கிறீர்களா :
நிறைய கூட்டு குடும்ப கதைகளும் எழுத்தாளர்கள் எழுதுறாங்க தான். எல்லா எழுத்தாளர்களும் ஒரு கதையாவது கூட்டு குடும்பத்தை வச்சி எழுதியிருப்பாங்க. மாறி வரும் கால நிலைனால அவரவர் வாழ்ந்த வாழும் சூழ்நிலை வச்சி தானே எழுத முடியும்.
அதனாலேயே கூட்டு குடும்ப கதைகள் குறைவாக இருக்குனு தோன்ற வைக்குது.
கூட்டு குடும்பமா இல்லாம போனாலும் வெறும் காதல் கதைகளா இல்லாம, குடும்பம் சார்ந்த காதல் கதைகள் தான் நிறைய வருதுனு நினைக்கிறேன்.
எழுத்தாளர்கள் வித்தியாசமான படைப்பு வழங்க முயற்சி செய்வதில் காதல் படைப்புகளாய் அது காணப்படுகிறதோனு தோணுது.
*******
நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது எந்த மொழி வழக்கு பயன்படுத்தினால் வாசிக்க அழகாக இருக்கும் :
எழுத்துநடை தூய தமிழிலும், வசனங்கள் பேசும் தமிழிலும் இருந்தால் தான் வாசிக்க அழகாக இருக்கும் என்பது என் எண்ணம்.
----
இந்த வாய்பளித்த ஆனந்த ஜோதி சிஸ் அவர்களுக்கு நன்றி! வித்தியாசமான அனுபவமாக இருந்தது எனக்கு. இந்த மாதிரியான முயற்சியை முன்னெடுத்து தொடர்ந்து வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நீங்க எழுத்தாளர்களுக்கு சொல்வது போலவே, நீங்களும் பல அட்டகாசமான கதைகளை தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள் சிஸ்!
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
......
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏 உங்கள் வாழ்த்திற்கு
எனது கேள்விக்கான உங்களது பதில் இயல்பாகவும் அழகாகவும் இருந்தது.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏🙏🙏🙏
இந்த வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி ஜோதி சிஸ்.. தங்களின் இந்த தன்னலமற்ற முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ். மென்மேலும் தாங்கள் இந்த அறிமுகப்படலத்தை தொடர்ந்து செய்ய என் வாழ்த்துகள்
ReplyDelete