நந்தினி சுகுமாரன்

 



#எழுத்தாளர்அறிமுகப்படலம்

#இதுநம்மஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் நந்தினி சுகுமாரன்...

அவர்களைப் பற்றிய விபரங்கள் :

இயற் பெயர் : துர்காதேவி

புனைப்பெயர் : நந்தினி சுகுமாரன்.

(நந்தினி முதல்ல எனக்கு வைக்கிறதுக்காக தேர்ந்தெடுத்த பெயர். ஆனா ஜாதகப்படி வைக்கிறதுக்காக வேற பேரை மாத்திட்டாங்க, அதுனால அதை என்னோட புனைப்பெயரா தேர்ந்தெடுத்துக்கிட்டேன். சுகுமார் என்னோட அப்பா)

சொந்த ஊர் :

பிறந்த ஊர் : மதுரை.

கல்யாணம் ஆகி வந்தது : தேனி.

படிப்பு : Diploma in ECE

பணி : இல்லத்தரசி.

தளம் : பிரதிலிபி, eread..

போட்டி நடைபெறும் சில தளங்கள்.

அமேசான் பெயர்: Nandhini Sugumaran நந்தினி சுகுமாரன்.

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

பெருசா ஒண்ணுமில்ல. கூண்டுக்குள்ள வளர்க்கப்பட்டக் கிளி. அதே போல இன்னொரு கூண்டைப் பிடிச்சு தள்ளி விட்டுட்டாங்க. அதாங்க கல்யாணம். குடும்பம் முதலில், மற்றவை இரண்டாம் இடத்தில். அவ்வளவு தான் சிஸ்.

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

எழுத்தாளர்கள்னு நான் பெயரைப் பார்க்கிறதில்லை. எனக்கு எழுத்துன்னாலே பிடிக்கும்.

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

எழுதிப் பார்ப்போம்னு எழுத ஆரம்பிச்சது. அது அப்படியே கண்டின்யூ ஆகுது. இப்ப கடமைக்குன்னு எழுதாம, முழு விருப்பத்தோட எழுதுற ஒவ்வொரு வரியையும் ரசிச்சு எழுதுறேன். நிறைய கத்துக்கணும், புது புது விசயங்களை தெரிஞ்சிக்கணும். அதை என் பாணியில எழுதணும் அவ்வளவு தான்.

....

நல்லது

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

காத்திருக்கிறேன் மான்விழியே!

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

கனிந்த மனம் மூன்று பாகங்களும் (பிரதிலிபி தளத்தில்)

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

13

(சில சிறுகதைகள்)

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

வரும் செப்டம்பருடன் மூன்று வருடம் நிறைவடைகிறது.

தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா :

இதுவரை நாவல் எழுதிய அனுபவமில்லை. தொடர்கதை மட்டுமே எழுதியுள்ளேன். அதனால் அதுவே சுலபம் என நினைக்கிறேன்.

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

பிழையாய் நான்.. திருத்தமாய் நீ! (சகாப்தம் தளத்தில் வண்ணங்கள் போட்டிக்காக)

உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :

1. காத்திருக்கிறேன் மான்விழியே

2. கை சேர்ந்த கவிதை

3. கனிந்த மனம்

4. தேனும் தமிழும் (கனிந்த மனம் இரண்டாம் பாகம்)

5. வானவில் பூக்கள் (கனிந்த மனம் மூன்றாம் பாகம்)

6. மயங்குவதேனோ மதுரவனே!

7. சகியே [சகாயனே] நின்னடிமை யாகவா?

8. தேன்மழைச் சாரலாய்

9. உயிர்க்கிறேனடா உந்தன் காதலில்

10. உயிர் தந்தாயே உறவே

11. கண்மணியே என் கண்ணம்மா

12. எனதழகே[கா]

13. ரகசியமாய் சுவாசிக்கிறேன் உனையே!

....

அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :

இருக்கிறது.

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?

அப்படி எதையும் பிரித்துச் சொல்ல முடியாது சிஸ். எல்லா கதைகளையும் கதாபாத்திரங்களையும் மனதிற்குப் பிடித்துதான் எழுதுகிறேன்.

குறிப்பிட்டு சொல்வதென்றால்..

கனிந்த மனம் - மீரா

தேனும் தமிழும் - தமிழ், மங்கை, காசி

மதுரவனே - மதுரவன், வித்யா

சகியே - அபியுக்தன்

எனதழகே[கா]  - மஹாலெக்ஷ்மி, மனோபரண்

உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :

கனிந்தமனம் (பிரதிலிபி தளத்தில் அதிக வாசகர்களை சென்றடைந்தது)

மயங்குவதேனோ மதுரவனே (தளத்தைக் கடந்த வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது)

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

நிறைய பேர் இருக்காங்க. எல்லாரோடவுமே பேசுவேன்.

ரொம்ப நெருக்கமானவர்கள் : மீனாட்சி அடைக்கப்பன், சுபாஷினி (இணையக்காதலி), சுந்தரி செழிலி, அர்ஜுன் கிருத்திவாசன், எமிதீப்ஸ், ஜானுமுருகன், கிருத்திகா, உமா மகேஸ்வரி சுமிரவன், ஈஸ்வரி, பிரியா தினேஷ், நேத்ரா. இன்னும் சில தோழிகள், தங்கைகள், தமக்கைகள் இருக்காங்க..

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

விருப்பம்னு தனியா ஒதுக்குறது இல்ல,  எல்லாத்தையுமே படிப்பேன்.

உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.. நிறைந்த அன்புகளும்..❤️❤️❤️😍😍😘😘😘

தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:

அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். கதாபாத்திரங்களைப் பற்றிய தெளிவு ஓரளவு இருத்தல் வேண்டும். கதையைப் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் தான் (என் கதைகளில் பதினைந்து அத்தியாயங்கள் கடந்தால் தான் கதையே புரிபடும்..😜)

....

🤣🤣🤣🤣

ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள் :

முதலில் அது அவர்களுக்குப் பிடித்தக் கதைக்களமாக இருக்கும் பட்சத்தில் அதை வாசிக்க விரும்புகிறார்கள். (காதல், நகைச்சுவை, குடும்பம், அறிவியல் புனைவு, ஃபேன்டஸி வகை)

மாற்றி விடுவதற்கான காரணம்.. அவர்கள் அதில் அடையும் ஏமாற்றம் (கதை நகர்வு முன்பே யூகிக்கும்படி இருத்தல், தொய்வான கதை நகர்வு, சுருங்கச் சொல்லாது இழுத்தல், சில வாசகருக்குப் பிழைகள் பெரிதாய்த் தோன்றலாம், எழுத்துநடை பிடித்தமில்லாது போகலாம்)

...

நிஜம்தான் சகோதரி. அதனால் தான் இறுதி வரை சஸ்பென்ஸ் நீடிக்கப்படுகிறது நட்புக்களே🙂🙂🙂

ஒரே நாவல் பெயரை இருவர் or பலர் வைப்பது என்ன தவறென்று சொல்ல முடியுமா :

தவறென்று சொல்வதற்கில்லை. ஆனால் அப்படி வைக்காதிருத்தல் நலம். வாசகரின் தேடலின் போது குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. எழுத்தாளருக்கான தனித்துவம் அதில் சற்று சறுக்கி விடுவதாய் நினைக்கிறேன். தலைப்பை உறுதி செய்வதற்கு முன் எழுத்தாளர்கள் அந்தப்பெயரில் ஏதேனும் கதைகள் இருக்கின்றனவா? என ஒருமுறைத் தேடிப் பார்த்தல் நலம்.

உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:

குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படியாய் இருக்கும். குடும்பத்தில் காதல் இல்லாமல் ஏது..? என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு குடும்பமும் தன்னளவில் சரியாய் இருந்தால், சமூகம் சிறப்புடனே இருக்கும். அதனால் அது சமூகம் சார்ந்ததாகவும் இருக்கும்.

...

👏👏👏

நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

எனதழகே[கா] - சந்தர்ப்ப சூழ்நிலைகளால், ஊராரின் சில அடக்குமுறையான நடவடிக்கைகளால் சொந்த ஊரை விட்டு வெளியேறும் இரு குடும்பத்தாரின் கதை. சமூகத்தில் அவர்களுக்கான இடம் மறுக்கப்படும் போது, முயன்று தனக்கான அங்கீகாரத்தை அடைந்து, தன் குடும்பத்தை முன்னேற்றப் போராடும் அவர்களது வாரிசுகளின் உணர்வுகளும், அதில் அவர்கள் சந்திக்கும் நிராகரிப்பு, வலிகள், ஏமாற்றம், தோல்வி, காதல், மகிழ்ச்சி, வெற்றி.. என இயல்பான வாழ்வியலைக் கூறும் கதை.

விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. வாங்கியிருந்தால் நாவலின் பெயர்களைச் சொல்லுங்கள்:

தீண்டாதே (சிறுகதை) - பிரதிலிபி கதைத்திருவிழா போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது.

உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் - சங்கமம் தளத்தின் கதைசங்கமம் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்தது.

நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதாவது உண்டுமா :

எனக்கு அப்படி எதுவும் தெரியல சிஸ். எழுத்தாளரோட எண்ணங்கள் சரியான எழுத்துக்கள் மூலமா வாசகரை சென்றடைஞ்சா போதும்னு நினைக்கிறேன். உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்கிறேன்.

...

நானா? என்னைப் பொருத்தவரையில் நகைச்சுவை என்றால் மனம் விட்டு சிரிக்க வேண்டும் .காதல் என்றால் நமக்கும் இப்படி ஒருத்தர் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைக்க வேண்டும். அழுத்தம் என்றால் இறுக வேண்டும். சோகம் என்றால் ஒரு சொட்டு கண்ணீராவது விட வேண்டும். குடும்பம் என்றால் அதில் வரும் பாத்திரம் கட்டாயம் பிடிக்க வேண்டும். எதிரி வெறுப்பிற்கு உள்ளாக வேண்டும். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடனே ஒவ்வொரு அத்தியாயங்களும் கடந்து கடைசி அத்தியாயம் வரை விருவிருப்பாக செல்ல வேண்டும். கண்டிப்பாக வாசகர்களின் ஊகத்திற்கான டுவிஸ்ட் கொடுக்க கூடாது. தவறான காட்சிகள் சேர்த்தல் கூடாது. அவ்வளவு தான் நான் ஆரம்பம் முதல் இப்போது எழுதும் 8வது கதை வரையில் பின்பற்றும் விதிமுறைகள்.
🙏🙏

ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :

இதுவரை அப்படி எந்த வரையறையுடனும் எழுதியதில்லை.

உங்கள் கதைகளில் கவிதை, வருணனை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

இருக்கிறது. வர்ணனை நான்கு வரிகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வேன். கவிதை அவசியமெனில் மட்டுமே!

ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க:

நம்ம மனதிற்கு நெருக்கமான எந்த காட்சியாக வேணும்னாலும் இருக்கலாம். அம்மா பொட்டு வச்சுவிடுறது, அப்பா சோறு ஊட்டுறது, தாத்தா பாட்டி கதை சொல்லுறது, கூடப்பிறந்தவங்களோட ஸ்கூல் போறதுன்னு. கணவன் மனைவிக்கு இடையேயான காதல், உடன்பிறந்தப் பெண்ணிற்காக சீர் செய்யும் அண்ணன் தம்பி, தேவையான நேரத்தில் கைக்கொடுக்கும் நட்பு.. இது ஒவ்வொருத்தருக்கும் அவங்க தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்ட அனுபவத்தைப் பொறுத்து, மனசுல ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

...

🙂🙂🙂

எழுத்தாளர், வாசகர், விமர்சகர்களுக்கு இடையேயான நட்புணர்வு எப்படி இருக்க வேண்டும் :

முதல்ல நிதானம் வேணும். சொல்லப்படுற  விசயங்களை முழுசா அவங்க சொல்றதுக்கான வாய்ப்பை முதல்ல கொடுக்கணும். அதுக்கப்புறம் தான் நம்மளோட எதிர்ப்பை, விளக்கத்தையோ கொடுக்கலாம். நிறைகள் சொல்றப்ப சந்தோஷப்படுற மனசை, குறை சொல்லுறப்ப அதை ஆராய்ஞ்சு சரி பண்ணிக்கிறதுக்கும் பக்குவப்படுத்தணும். பேசப்படுற கரு எழுத்தா மட்டும் தான் இருக்கணுமே தவிர, அது எழுத்தாளரையோ அவங்க சம்மந்தப்பட்ட மத்ததையோ தாக்குறதா இருக்கக்கூடாது. ஆரோக்கியமான விவாதங்கள்.. என்னைக்குமே நல்உறவுக்கு வழிவகுக்கும்.

எழுத்தாளர் இல்லாமல் வாசகர் இல்லை, வாசகர் இல்லாம எழுத்தாளர் இல்ல. ஒரு நேர்மையான விமர்சகரின் கடுமையற்ற சுட்டிக்காட்டலால் எழுத்தாளரின் எழுத்துக்கள் பட்டைத்தீட்டப்படுது

...

புரிந்து கொண்டால் சரிதான்

நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :

ஜெயகாந்தன், அவரோட அக்னிபிரவேசம் மட்டுமே ரீட் பண்ணியிருக்கேன். அதோட தாக்கம், அவரோட எழுத்துக்களை வாசிக்கத் தூண்டியிருக்கு. காதல், குடும்பக் கதைகள் தவிர்த்து மற்றவற்றைக் கருப்பொருளா வச்சு எழுதுற எல்லா எழுத்தாளர்களோட எழுத்துக்களையுமே வாசிக்க ஆசை.

தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :

இப்போதைக்கு எதுவுமே வாசிக்கல நான். எழுதுறப்ப வாசிச்சா அதோட தாக்கம் என் கதைகள்ல வந்திடுமோன்னு சின்ன பயம். இப்ப எழுதிக்கிட்டு இருக்கேன், அதை முடிச்சிட்டுதான் வாசிக்கணும். மத்தபடி ரெண்டு மூணு சிறுகதைகள் தினமும் வாசிப்பேன்.

ஒரு குடும்பக் கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:

அன்பு மட்டுமே அங்க கருப்பொருள். உறவுகள் என்னைக்குமே சிக்கலானது தான். அதை எழுத்துக்கள் மூலமா சரியா கையாளணும். என்னைப் பொறுத்தவரை விட்டுக் கொடுத்தலும், தேவையான நேரங்கள்ல அமைதியும் பலநேரங்கள்ல உறவைக் காப்பாத்திக் கொடுக்கணும். ஆனா அவசியமான இடங்கள்ல கண்டிப்பா பேசியே ஆகணும்.  என்னுடைய கதைகள்ல.. வலியைக் கொடுத்தாலும் மருந்து போடுற உறவுகளைத்தான் கொடுப்பேன். குடும்பக்கதையின் எழுத்துக்கள் வழிகாட்டுதலா இருந்து முன்னேறிப் போக துணையா இருக்கணுமே தவிர, வழிகளை அடைக்கக்கூடாது.

...

அருமை சிஸ்

எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த ஆனந்த ஜோதி சகோதரிக்கு மிக்க நன்றிகள். உங்களுடைய இந்தப் பணிக்கும், அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள் சிஸ்..

ஏதோ எனக்குத் தெரிஞ்ச, தோணின பதில்களைச் சொல்லியிருக்கேன். அதுல எதும் தவறா இருந்தா இந்த சின்னப் பிள்ளையை மன்னிச்சு விட்டுடுங்க ஃப்ரண்ட்ஸ்..😁😁

நன்றி..🙏🙏🙏

....

மிக்க மகிழ்ச்சி உங்களது கருத்துகள் மிகவும் அருமையாக இருந்தன.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளர்  கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

மிக்க நன்றி
🙏🙏🙏🙏

Comments