#எழுத்தாளர்அறிமுகப்படலம்
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய நிகழ்ச்சியில் நான் அறிமுகப் படுத்தப்போவது பிரபல முண்ணணி எழுத்தாளர் தமிழ் நிவேதா பற்றிதான்.
வணக்கம் மேம்,
எங்களுடைய எழுத்தாளர் அறிமுகப் படல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.
1. உங்களுடைய பெயர்:
தமிழ்நிவேதா என்பது என் எழுத்து பெயர். அப்பா திராவிட கழகத்தில் இருந்ததால் வைத்த தமிழ் என்ற பெயருடன் என் மகளின் பெயரையும் சேர்த்துக் கொண்டு தமிழ்நிவேதாவானேன்.
2. என்ன படிச்சிருக்கிங்க :
வணிகவியலில் பட்டப் படிப்பு. சமையல் கலையில் சான்றிதழ் பட்டம்
3. உங்களுடைய சொந்த ஊரின் பெயர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் சொந்த ஊர்.சுய மரியாதை கருத்துகள் அதிகம் பேசப்பட்ட இடம் எங்களுடையது.சாதிய வன்முறை,திருட்டுபயம் இல்லாத ஊர்
4. உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால்:
வாழ்வின் எல்லா தருணங்களும் எனக்கு எதையோ கற்பிக்கவே ஏற்பட்டதான பிரேமை உண்டு.சின்ன சின்ன விசயங்களை இரசிக்கும் ஆர்வம், இலக்கின்றி பயணம் செய்ய பிடிக்கும்.
எண்ணங்களில் இருக்கும் கூர்மையும், பேச்சில் தெரியும் சரளமும் என்னை ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக வடிவமைத்துக் கொள்வதில் வடிவமைத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
5. உங்களது குறிக்கோள் , எழுத்துலகில் நீங்கள் படைத்த சாதனை:
சமூக பிரச்சினைகளிலிருந்துதான் கதைக்கான கருவை எடுக்கிறேன். இளைஞர்களிடம் அதிகம் போய் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.
சாதனை என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்
6. உங்களது எழுத்து அனுபவம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
கவிதையில் தொடங்கி சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த சமயம் ஆனந்த விகடனில் ஒரு நேர்காணலுக்காக போயிருந்தேன்.அங்கு கொடுக்கப் பட்ட தலைப்பில் நான் எழுதியிருந்தவற்றை வாசித்த மறைந்த ஐயா பாலசுப்பிரமணியம் அவர்கள் எனக்கு பத்திரிக்கை பணியை விட நாவல்தான் சரியான தாக இருக்கும் என்று கூறினார். அதன் பிறகே நாவல்கள் எழுதத் தொடங்கினேன்.
7. எழுதுவது என்பது முழுநேர பணியா அல்லது வேறு ஏதாவது வொர்க் பண்ணுகிறீர்களா :
நிச்சயம் முழு நேர வேலை அல்ல. குடும்பத் தொழில் மற்றும் பல பொறுப்புகள் உள்ளன.
8. நீங்கள் எந்தெந்த நாளிதழ், வாரப்பத்திரிகையில் தொடர்கதை , நாவல்கள் எழுதியிருக்கிறீங்க:
சிவா என்ற பெயரில் பத்திரிக்கைகளில் நான் எழுதிய போது பலருக்கு எழுதுவது பெண் என்பதே தெரியாது. குமுதம், விகடன், கண்மனி, பெண்மணி என எழுதியிருக்கிறேன்.
9. நாளிதழில் நாவல் எழுதுவது என்பது அத்தனை சுலபமான விசயம் இல்லையே எப்படி எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது என்று சொல்ல முடியுமா அல்லது சொல்லக் கூடாதா ரகசியம் ஏதாவது இருக்கிறதா :
இரகசியம் எதுவும் இல்லை. முன்பு பத்து கதை அனுப்பினால் ஒன்றை பிரசுரிப்பார்கள். அதற்கு கிடைக்கிற வரவேற்பை பார்த்து அடுத்ததை வெளியிடுவதோ, நிராகரிப்பதோ நடக்கும். இப்போதைய நடைமுறை தெரியவில்லை. நான் பத்திரிக்கைகளில் எழுதி வெகு நாட்கள் ஆயிற்று.
10. உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்களது உணர்வு, வீட்டார் என்ன மாதிரி உணர்ந்தீர்கள் :
முதல் கதை நான் பதினொராம் வகுப்பு படிக்கையில் பாக்கியாவில் வந்தது. பள்ளி ஆசிரியர்களாலும், சக தோழிகளும் பாராட்டினார்கள் என்பதைத் தவிர பிரத்யேகமாக எதையும் உணரவில்லை.
11. உங்களது படைப்பு காதல் கலந்த குடும்ப படைப்பாக இருக்குமா அல்லது சமூக அக்கறை நிறைந்த படைப்பாக இருக்குமா:
காதல், சமூகம், குடும்பம் எல்லமும் கலந்த படைப்பாக இருக்கும்.
12. குடும்ப நாவல் என்றால் எப்படி இருக்கணும் என்று நினைக்கிறீங்க:
குடும்ப நாவல்களில் காதல் என்ற ஒரு விசயம் மட்டுமே இப்போது முன்னிருத்தப் படுகிறது. காதலுடன் மற்ற விசயங்களையும் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
13. காதல் உணர்வுகளையும் தாம்பத்ய காட்சியினையும் ஒரு எழுத்தாளர் எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறிங்க :
மிக நாகரீகமாக வேண்டும் என்றே நினைக்கிறேன். நேரடியாக சொல்லாமல் வாசகர்களை யூகத்திற்கு இழுத்துச் செல்பவரே சிறந்த படைப்பாளி என்று கருதுகிறேன்.
14. இன்றைய புது எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
எல்லா துறையிலும் இளைஞர்கள் நுழையும் போது புதிதான விசயங்களை உள் நுழைக்கிறார்கள். சீனியர்கள் கூட இளைஞர்களின் வேகத்துக்கேற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். ஆனால் எழுத்துலகில் அப்படி நடக்காதது பெரிய ஏமாற்றமளிக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எழுத்தாளரின் கற்பனையிலிருந்து வந்து வெற்றியடைந்த கருவை இன்றளவும் கையாள்வது ஏற்புடையதல்ல.
15. அன்றைய எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கும் இன்றைய எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
முன்பு ஒரு பத்திரிக்கையில் ஒரு போட்டி வைத்தார்கள். குமுதம் என்று நினைக்கிறேன். பிரபல எழுத்தாளர்களின் கதையிலிருந்து ஒரு பக்கத்தை மட்டும் வெளியிட்டு எழுத்தாளர் யார் என்பதை கண்டு பிடிக்க சொன்னார்கள். பெரும்பான்மையானவர்கள் சரியாக கண்டு பிடித்தார்கள். இப்போது அப்படி ஒரு போட்டி வைத்தால் வெற்றி பெறுவது சிரமம் என்றே நினைக்கிறேன்.
16. ஒரு கதை தேர்ந்தெடுக்கும் போது எழுத்தாளரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும். அதே கதை புத்தகமாக வந்து வாசகர்களின் பார்வைக்கு வந்து படித்து முடித்த பிறகு என்ன மாதிரி உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைக்கிறீங்க:
இந்த கதை மூலமாக தான் சொல்ல வரும் விசயம் என்ன என்பதை ஒரு எழுத்தாளர் உணர்ந்திருக்க வேண்டும்.படித்த பிறகு வாசகனின் வாழ்வியல் முறையில் சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.
17. புத்தகமாக வெளியிடுவதற்கும், தொடர்கதைகளாக வெளிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டில் எது இலகு என்று நினைக்கிறீங்க:
தொடர்கதைகள் இப்போது பொறுமையுடன் காத்திருந்து படிக்கப் படுகிறதா என்று தெரியவில்லை.நாவல்கள் இன்றும் விரும்பப் படுகின்றன.
18. கவிதை என்பது ஒரு எழுத்தாளரின் மனதில் தோன்றும் கிறுக்கலா அல்லது உணர்வுகளின் வெளிப்பாடா:
உணர்வுகளின் வெளிப்பாடுதான் நிச்சயமாக.
19. உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்கள்:
பொதுவாக தேடிப் போய் பழகும் ரகம் இல்லை என்பதால் தானாக அமைந்த நட்புகள்தான் அதிகம். நட்பில் உள்ளவர் அனுமதி பெற்று பெயரை சொல்கிறேன்.
20 .நாவல்களில் புகுத்தப்படும் திரைப்பட பாடல் வரிகள் சரியான தொகுப்பாக இருக்குமா? அல்லது அதற்கு ஏற்ப நாம் எழுதும் கவிதை வரிகள் ஏற்புடையதாக இருக்குமா:
திரைப் பாடல்கள் ஏற்கனவே ஒரு கதாநாயகனுக்கு எழுதப்பட்டு அவரால் நடிக்கப் பட்டு , மக்கள் மனதில் பதிந்திருக்கும்.கதைகளில் வரும் நாயகர்கள் வாசகர்களின் கற்பனைக்கு ஏற்ப இருப்பார்கள் என்பதால் சமயங்களில் மனதில் ஒட்டாமல் போகலாம்.
21.எழுத்தாளர்களின் மீதான வாசகர்களின் நம்பிக்கை பற்றி:
வாசகன் தன் இரசனைக்கேற்ப எழுத்தாளர்களை தேர்ந்தெடுக்கிறான். வாசகனின் நம்பிக்கையை பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றுவதே எழுத்தாளரின் கடமை.
22. நாவலில் அழுத்தம் அதிகமாக இருந்தால் ரசிப்பு திறன் இருக்குமா? நகைச்சுவை கலந்த படைப்பு சுவராஸ்யமான நகர்வாக இருக்குமா:
அழுத்தம் யோசிக்க வைக்கும். நகைச்சுவை மனதை லேசாக்கும். இரண்டுமே தேவைதானே?
23. நாம் எழுதும் கதைகளின் வரிகள் சினிமா காட்சிகளை ஒத்திருந்தால் அதை தவறென்று சொல்வீர்களா :
நல்ல கதைகள் பல சமயம் படமாக்கப் படுகின்றன. படங்கள் கதையாக்கப் படுகிறதா என்ற யோசனை இல்லை எனக்கு.
24. புத்தகத்தை கையில் எடுக்கும் போதும், முடித்து வைக்கும் போதும் என்ன மாதிரி உணர்வு தேன்ற வேண்டும் என்று நினைக்கிறீங்க:
புத்தகத்தை கையில் எடுக்கையில் பரபரப்பும், முடிக்கையில் அதற்குள் முடிந்து விட்டதே என்ற தவிப்பும், வாசிப்பின் கனத்தில் மனம் நகராமல் அதிலேயே நிற்பதும் என காதலுக்கும் வாசிப்பிற்கும் இலக்கணம் ஒன்றுதான்.
25.எழுத்தாளர்கள் பலர் புதுசு புதுசாக அறிமுகமாகி வந்து கொண்டிருக்கின்றனர். அவர் களுக்கு எதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
எப்போதும் சொல்வதுதான், உங்களுக்கென்று தனி பாணியை உருவாக்குங்கள் .
26. இந்த எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்தால் மனதிற்கு இதமாக இருக்கும் என்று நினைத்து வாசித்த புத்தகம் ஏதாவது உண்டுமா :
வாஸந்தி
27. அந்த நாட்களில் இருந்து இந்த நாட்கள் வரை பெரும்பாலான எழுத்தாளர்கள் ஆன்டி ஹீரோ கதைகளை கொடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் அதைப் படிக்கும் ஆர்வமும் மறுபக்கம் எதிர்ப்பும் வலுத்து வருகிறது அதைப் பற்றிய உங்களுடைய கருத்து:
அப்படியே காண்பிப்பதில் தவறில்லை. ஆனால் வில்லனின் தவறான செயல்களை ஹிரோயிசமாக சித்தரிப்பதில் உடன்பாடில்லை.
28. இன்றைய பெண்களின் முன்னேற்றம், வாழ்வியல் மாறுபாடுகள் பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால்:
கல்வியில், வேலையில், தன்னம்பிக்கையில் பல மடங்கு உயர்ந்திருப்பதை பார்க்கையில் சந்தோசமாக இருக்கிறது. சமத்துவம் என்ற பெயரில் தவறான பழக்கங்களை எளிதாக அங்கீகரிப்பது மட்டுமே கவலை தருகிறது.
29. காதல் கதைக்கும் குடும்ப கதைக்கும் உள்ள வித்தியாசமாக எதை நினைக்கிறீர்கள்:
காதல் படைப்பிலும் குடும்பம் உண்டு. குடும்ப நாவலிலும் காதல் உண்டு.காதல் பாரபட்சமற்ற சுவாரஸ்யமான ஒரு உணர்வு.
என்னை பொறுத்தவரை படிப்பிலிருந்து எதையாவது பெற வேண்டும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். எழுத்தின் சுவாரஸ்யத்திற்கு ஈடு கொடுத்து காதலும் ஓடி வர வேண்டும் என எதிர்பார்ப்பேன்.
30. நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
இதை நானும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். வாசகர்கள் உங்களுக்கு பிடித்ததை கூற முடியுமா?
ஹாய் பிரண்ட்ஸ்,
எழுத்தாளர் தமிழ் நிவேதா எழுத்துலகிற்கு வந்து முப்பது வருடங்களுக்கு மேலான நிலையில் "
இருபது நாவல்கள். சிறு கதைகள். கட்டுரைகள்,பேட்டிகள் ... மொத்தம் எத்தனை என சரியாக நினைவில் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களது மனதை கவர்ந்த நாவல் எது , பிடித்தமான கதாபாத்திரம் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு " பிடிக்காத விசயம் எதையும் எழுதுவதில்லை என்பதால் எல்லாமே பிடித்தவைதான். இருந்தாலும் எப்போதும் என்னிடம் வாசகர்கள் மறக்காமல் குறிப்பிடுவது அரபிக்கடலோரம் புத்தகம் பற்றியும் .,ஜோஷிதாவையும்தான். வெளிவந்து வெகு நாட்களுக்கு பிறகும் தாக்கம் குறையாமல் இருப்பதால் என் விருப்ப பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் நிவேதா "கைத்தலம் பற்றி , நீயாகிட வந்தேன், ஒரு நாள், பெண்ணொன்று கண்டேன், கண்ட நாள் முதல், உறவுப்பாலங்கள், பனிப்பூவே, உயிர் சுடர்... "போன்ற பல நாவல்களை எழுதி வெளியிட்டுருக்கிறார்கள்.
நானும் சிறு வயதில் இருந்தே ராணி, ராணிமுத்து, கண்மணி எல்லாம் படித்து வந்திருக்கிறேன். அதில் கண்மணி புத்தக அட்டைப்படம், உள்ளே வருகின்ற பக்கங்கள் எல்லாம் பார்க்க அத்தனை அருமையாக இருக்கும். கதைகளும் பிரமாதமான குடும்ப படைப்பாக இருக்கும்.
பிரபல முன்னாள் எழுத்தாளர்கள் பலரது நாவலை நானும் படித்திருக்கிறேன். உங்களது நாவலையும் கட்டாயம் படித்திருப்பேன் என்று தான் நினைக்கிறேன். முந்தைய உங்களது நாவல்களின் பெயர்களை பார்த்தால் கண்டுபிடித்து விடுவேன்.
நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
எழுத்தாளர் அறிமுகப்படல நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி மேம்
மேலும் பல சாதனைகள் படைத்திட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
எழுத்தாளரின் நாவல்களை படித்திருந்தவர்கள் அதைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லாதவர்கள் அவர்களது சேவை தொடர்ந்திட வாழ்த்துங்கள் நண்பர்களே
நன்றி🙏🙏🙏
Comments
Post a Comment