#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் கமலி ஐயப்பா, அவர்களைப் பற்றிய நேர் காணல் :
பெயர்: கமலி ஐயப்பா
சொந்த ஊர்: புதுச்சேரி
படிப்பு: B.Tech மேல ஒரு கோடு போட்டுக்கோங்க. இப்ப தான் 3rd year படிக்கறேன்.
பணி: இன்னும் படிப்பே முடியலயே. இப்போதைக்கு மாணவி.
தளம்: ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் இருக்கே. எது எது எங்க இருக்குன்னு இந்த linkல பாருங்களேன். https://kamaliwrites.blogspot.com/2021/04/blog-post.html#more
அமேசான் பெயர்: Kamali Ayappa
****
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா?
‘என் பொண்ணு செய்றது சரியா தான் இருக்கும்’ன்னு என்னை நம்பும் அப்பா அம்மாக்கு பொண்ணு.
நிறைய அனுபவங்களோ, புது மனிதர்களை சந்திக்கும் வாய்ப்போ அதிகம் கிடைக்காம, வீட்ல இருக்கவங்க பின்னாடியே சுத்தி வர பொண்ணு. அதே நேரம் நான் பார்க்கும் கொஞ்சம் மனிதர்களை படிக்கவோ, கிடைக்கும் கொஞ்சம் அனுபவங்களில் இருந்து கத்துக்கவோ தவறியதில்லை.
சின்ன விஷயத்துக்கு சந்தோஷப் பட்டு, சின்ன விஷயத்துக்கு கோவப்பட்டு, திடீர்ன்னு ஜாலி மூட்ல இருந்துக்கிட்டு, திடீர்ன்னு டென்ஷன் ஆகி, இப்படி நான் என்ன டிசைன்னு இன்னும் என்னாலயே கண்டுப்பிடிக்க முடியலயே. நான் எப்டி என்னப் பத்தி உங்களுக்கு சொல்லுவேன்!
…
சீக்கிரம் கண்டுபிடிச்சிடுங்கள், அதுக்கு முன்னாடி நான் சொல்லிடறேன் எனது குணாதிசயத்தை ஒத்தவரோ🤔🤔🤣🤣
*****
உங்களது கனவு லட்சியம் என்ன:
இப்போதைக்கு எல்லார் மனசுலயும் நிக்கற மாதிரி ஒரு கதை எழுதணும்.
******
எதற்காக நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:
வாசிக்க பிடிக்கும். நம்ம எழுதுனா எப்டி இருக்கும்னு ஒரு ஆர்வக்கோளாறுல தலைய உள்ள நுழைச்சிட்டேன். அவ்வளவு தான். மத்தபடி ரொம்ப யோசித்து எல்லாம் எழுதத்தொடங்கல. ஒரு பொழுதுப்போக்குன்னு தொடங்கியது தான்.
******
எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன:
யோசிச்சு பார்த்தா இன்னும் எதுவும் சாதிக்கல. இப்போதைக்கு,
சுதாரவி.காம் தளத்தில் நடந்த ‘சிறப்பு சிறுகதை போட்டி’, சங்கமம் தளத்தில் நடந்த ‘தனிமை’ சிறுகதை போட்டி, சிவரஞ்சனி.காம் தளத்தில் நடந்த குறுநாவல் போட்டி, பிரதிலிபியில் நடந்த ‘மகாநதி’ போட்டி இதில் எல்லாம் பரிசு வாங்கியிருக்கேன். இப்போதைக்கு இதையெல்லாம் வச்சு இந்த பதிலை நிரப்பிக்கறேன்.
….
இல்லைனு சொல்லிட்டு வரிசையா பெயர் சொல்றீங்களே...
வாவ்!! அருமை மேலும் நிறைய சாதித்திட வாழ்த்துகள்
*****
உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது செய்தி இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா :
பொழுதுப்போக்கு கதைகள்ன்னு எழுதும் போது அதில் அங்க அங்க கொஞ்சமே கொஞ்சம் செய்தி / சமூக கருத்து இருக்கும்.
சில கதைகள் ‘இந்த கருத்தை பதிய வைக்கணும்’ன்னு குறிக்கோளோடு எழுதுவேன். அப்படி எழுதும் கதைகளில் கொஞ்சம் அதிகமாக இருக்கும். (கொஞ்சம் ஓவரா தான் கருத்து ஊசி போடறோமோன்னு நானே யோசிச்சிப்பேன்)
*******
நாவல் எழுதும் போது உள்ளத்தில் உதிப்பதை எல்லாம் எழுதி விட முடியாது. அப்படி கடினப்பட்டு யோசித்து எழுதுவதும் வாசகர்களை சரியான முறையில் சென்றடையாமல் இருப்பது எதனால்:
இதுக்கு நிறைய காரணம் இருக்கலாம். ஒன்னு இப்படி ஒரு எழுத்தாளர் எழுதுறதே யாருக்கும் தெரியுமா இருக்கலாம். விளம்பரம் அவசியம். எழுதுறதோட சேர்த்து, ‘நான் எழுதுறேன்’ன்னு எல்லாருக்கும் சொல்றதும் எழுத்தாளர்களோட பொறுப்பாகிடுச்சு. அதுவும் இணைய எழுத்தாளர்களுக்கு கண்டிப்பா.
‘நான் எழுதுறேன்னு எல்லாம் எல்லாருக்கும் தெரியும்ங்க. விளம்பரம் எல்லாம் பண்றேன் ஆனாலும் அதிக வாசகர்களை சென்றடையல’ன்னு சிலருக்கு வருத்தம் இருக்கும்.
ஜனரஞ்சக கதைகள் தானாகவே வாசகர்களை சென்றடையும். ஆனால், வித்தியாசமான கதைக்களங்கள், புதிய வகைக்கதைகள் எழுதும் போது அது அத்தனை எளிதில் வாசகர்களை சென்றடைவதில்லை. அதுக்கு காரணம், அந்த வகைக்கதைகளுக்கு வாசகர் பழக்கப்படாததாக இருக்கலாம்ன்னு நினைக்கறேன்.
…
நிஜம் தான், வாசகர்களின் சுவை அறிவது மிகவும் கடினம்.
******
ஒரு நாவல் என்பது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக மட்டும் இருக்க வேண்டுமா அல்லது எழுத்தாளனின் கற்பனையில் மிளிர்ந்த படைப்பாக இருக்க வேண்டுமா :
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளோடு நம்மால் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். கற்பனையில் மிளிர்ந்த படைப்புகள் நம்மை கற்பனை உலகில் பறக்க வைக்கும்.
இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் அழகு தானே!
*******
ஒரு நாவலை வாசிக்கும்போது அந்த சம்பவத்தின் தாக்கம் வாசித்து சில நாட்கள் தாண்டியும் தீராமல் இருக்க வேண்டுமானால் அதற்கு என்ன மாதிரி கதையம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்:
என் பார்வையில்,
ஒரு கதை நமக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருந்தால் அந்த கதையின் தாக்கம் நீடிக்கும்.
இல்லையேல், அனைவருடைய வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்களின் நினைவுகளை அழகாக தீண்டிச்செல்லும் கதைகளின் தாக்கம் அதிகம் இருக்கும்.
******
திருமணத்திற்கு முன் வரும் காதல் பின் வரும் காதல் என இரண்டு மாடலில் கதைகள் எழுதப் படுகிறது. எது மிகவும் விரும்ப தகுந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீங்க:
எனக்கு திருமணத்துக்கு முன் வரும் காதல் பிடிக்கும்.
அனைவராலும் விரும்பப்படுவதுன்னா? இரண்டு வகைக்கதைகளையும் ரசிக்கறாங்கன்னு தான் நினைக்கறேன்.
******
லிவிங் டுகெதர் கதைப் பற்றிய உங்களது கருத்து:
லிவிங் டுகேதரில் வாழும் நாயகன் நாயகியைப் பற்றிய கதையென்றால், லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை வெறுமென glorify செய்யாமல், அதன் பாதகங்களையும் எடுத்துரைக்க வேண்டும்.
…
அருமையான பதில் சகோதரி
*****
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
நிறைய எழுத்தாளர்கள் உண்டு. நான் தமிழ் வாசிக்கத் தொடங்கியதே கல்கியின் கதைகளால் தான். அதனால் எப்போதும் அவர் விருப்பமான எழுத்தாளர். இப்போ இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள் பலரின் கதைகள் விருப்பமானவையே.
*******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
அனுபவம்ன்னு சொல்ற அளவுக்கு அதிகம் எழுதல. கொஞ்சம் நாள் கொஞ்சம் கதை தான் என் எழுத்து அனுபவமே.
ஆனால், இந்த கொஞ்சம் நாள்லயே நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். நிறைய அழகான விமர்சனங்கள். அனுபவசாலிகளின் பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்திருக்கு. இரண்டு கதைகள் புத்தகங்களா வந்துருக்கு. இத்தனை இனிமையாக நிகழ்வுகள் இருக்கும் போது நான் என்ன சொல்ல?
இனிமையான அனுபவம் தான்.
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
முழுதாக எழுதிய முதல் நாவல் “புள்ளினங்காதல்”
*******
உங்களது நாவல்களின் பெயர் :
புள்ளினங்காதல்
காதலோ நாணலோ (நயனம் நிறைத்த நீர்கானல்)
விண்ணப்பித்து பூப்பதில்லை பூக்கள்
குறுநாவல்கள்:
நகுநிலா
மெய்க்காதல் உணராமை பேதைமை
மலரட்டும் மழை லில்லிக்கள் (Composite novel வகை)
eXXLent
மாடர்ன் கோப்பெருந்தேவி
(முடித்த கதைகளின் தலைப்புகள் மட்டும் தான் சொல்லியிருக்கேன்)
…
அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
******
எழுத வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் எதையாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா:
எதுவும் சாதிச்சிட்டோம்ன்னு நினைச்சதில்லை. ஆனா, புதுசா ஒரு எழுத்தாளரிடம்/வாசகரிடம் என்னை கமலின்னு அறிமுகப் படுத்திக்கொள்ளும் போது, என் கதை பேர் எதையாவது சொல்லி, ‘இந்த கதை எழுதுன கமலி தான’ன்னு கேட்கும் போது எதையோ சாதிச்ச மாதிரி உணர்ந்திருக்கேன்.
…
நிஜம் தான்
******
நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி தோன்றியது:
பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடமே பிடிக்காம இருந்த ஆள் நான். சும்மாவே பேப்பர்-பென் கொடுத்து எழுத சொன்னா ரொம்ப பொறுமையா எழுதுற ஆள் நான். Slow writer. இங்கிலீஷ்க்கே அந்த நிலை. தமிழ்ல ஒவ்வொரு எழுத்துக்கும் வேற கை எடுத்து எடுத்து எழுதணும்ல்ல. ரொம்ப பொறுமையா எழுதுவேன். ஸ்கூல்ல நான் திட்டு வாங்குறதுன்னா அது தமிழ் மிஸ் கிட்ட தான் இருக்கும்.
‘தமிழ் பேப்பர் இப்டி முடிக்காம விட்டா எப்டி ஸ்டேட் ரேங்க் வாங்க முடியும்’ன்னு திட்டு வாங்கியிருக்கேன். சரி பேப்பர் முடிக்கணும்ன்னு வேகமா எழுதுனா கையெழுத்து மோசமா வரும். அதனால தமிழ் மேல கோவம். இப்போ நெனச்சா சிரிப்பு வருது.
11th std CBSE ல படிச்சேன். அங்க போனா 11th, 12th க்கு எல்லாம் இரண்டாம் மொழி பாடம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. “ஹையா! தமிழ் படிக்க வேணாம். தமிழ் எழுத வேணாம்”ன்னு நானும் சில மாசம் ஜாலியா இருந்தன்.
ஆனா, கொஞ்சம் நாள்லயே திடீர்ன்னு தமிழ் மேல பாசம் பொங்கி வந்துடுச்சு. எதுவும் இருக்கும் போது அதோட அருமை தெரியாது. இல்லாதப்போ தான் தெரியும்ன்னு சும்மாவா சொன்னாங்க.
தமிழ் வாசிக்க ஏக்கம் வந்து அப்போ கைல ‘பொன்னியின் செல்வன்’ எடுத்த பொண்ணு தான். அந்த புத்தகம் கொடுத்த போதைல நிறைய படிச்சு, அப்படியே நம்ப எழுதுனா என்னன்னு ஒரு ஆர்வக்கோளாறு ஆசை வந்து எழுத தொடங்கினது தான்.
******
ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை:
ஒரு வேகத்துல ஒரே வாரத்தில் ஒரு குறுநாவல் எழுதி முடித்த அனுபவமும் உண்டு. ஒரு நாவல் எழுத மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டதும் உண்டு (பல மாசம் ஆகியும் முடிக்காம அப்டியே வைத்திருக்கும் கதைகளும் உண்டு)
கதைக்களம் பொறுத்தும், என் மூட் பொறுத்தும், ப்ரீ டைம் கிடைப்பது பொறுத்தும் கணக்கு வேறுப்படும்.
******
ஒரு அத்தியாயம் எழுத எத்தனை மணி நேரம் தேவைப்படும். அப்படி எழுதப்படும் அத்தியாயம் திருப்தியை கொடுக்கும் விதமாக அமையுமா:
கவனம் சிதறாமல் எழுதினால் ஆயிரத்து ஐந்நூறு வார்த்தைகள் கொண்ட அத்தியாத்தை இரண்டு மணி நேரத்தில் எழுதலாம்.
ஆனால், அப்படி கவனம் சிதறாத இரண்டு மணி நேரம் கிடைப்பது கடினம். அதனால், ஒரு நாள் முழுதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன்.
எழுதியதை இரண்டு மூன்று முறை வாசித்து பார்த்து, சில சொற்கள், வாக்கிய அமைப்பை எல்லாம் சரிசெய்த பிறகு திருப்தி அளிக்கும்.
*****
எழுத்து உலகில் உங்களுக்கு கிடைத்த நட்புகளை பற்றி சொல்ல முடியுமா:
நிறைய நிறைய நட்புக்கள் கிடைத்திருக்காங்களே. என் வயசு, என் அக்கா வயசு, அம்மா வயசுன்னு எல்லா வயசுலயும் நட்புக்கள் கிடைத்திருக்காங்க! நிறைய ‘positive vibes’ கிடைக்கறது எழுத்துலக நட்புக்களிடம் தான்.
*****
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நூல்கள்:
Fantasy நூல்கள் நிறைய வாசிக்க ஆசை. கூடவே காதல் கதைகளும். யாருக்கு தான் காதல் வாசிக்க விருப்பம் இருக்காது.
******
கொரானா / புயல்/ வெள்ளப்பெருக்கு/ சுனாமி இதைப் பற்றி ஏதாவது நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லையே. இந்த கேள்விக்குப் பிறகு தான் எழுதலாமான்னு யோசிக்கறேன்.
….
😊😊😊
******
ஒரு தொடர்கதை அல்லது நாவல் எழுத ஒரு எழுத்தாளருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் :
கற்பனைத்திறனும், மொழித்திறனும் அவசியம். மத்தப்படி ‘இது தெரிந்தா தான் நீ எழுத்தாளர்’ன்னு எல்லாம் எதுவும் இல்ல.
ஆனா, எழுத்தாளர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். நிறைய தெரிந்துக்கொள்ளலாம். அது கற்றல் நிச்சயம் எழுத்துக்கள் மூலம் வாசகர்களை சென்றடையும்.
*****
ஒரு நாவலில் வருணனை மற்றும் கவிதைகளின் பங்கு எங்கனம் இருக்க வேண்டும் :
நாயகன், நாயகியின் உருவ வருணனை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் கதை நடக்கும் இடத்தைப் பற்றிய வருணனை மிக முக்கியம்ன்னு நினைக்கறேன்.
‘White room syndrome’ன்னு சொல்லுவாங்க. கதை நடக்கற இடத்தை பற்றி வர்ணனைகள் எதுவுமே இல்லாம எழுதும் போது, வாசிப்பவர்களின் கற்பனையில் கதாப்பாத்திரங்கள் ஒரு வெள்ளை அறைக்குள் இருப்பது போல் இருக்குமாம். அதைத் தவிர்க்க கதை நடக்கும் இடத்தைப் பற்றிய வர்ணனைகள் மிக அவசியம்.
அதே சமயம் கதை தொடங்கும் போதே இரண்டு பக்கத்துக்கு வர்ணனைகள் மட்டுமே எழுதினால் அதுவும் படிப்பவர்களுக்கு சலிப்பைத் தரும்.
கவிதைகள்! ஏற்கனவே அழகா இருக்கும் உரைநடைக்கு இன்னமும் அழகு சேர்ப்பன கவிதைகள்.
….
அருமையான பதில் சகோதரி
******
உங்களது நாவல் காதல், குடும்பம், திகில், வரலாறு இதில் எதை பெறுத்து காணப்படும்:
கண்டிப்பா காதல் இருக்கும். சில கதைகளில் அங்க அங்க காமெடி இருக்கும். அங்க அங்க கொஞ்சம் கருத்து இருக்கும்.
திகில், வரலாறு பக்கம் எல்லாம் இதுவரை போகல
*******
நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
நிறைய இருக்கே!
ஒன்னே ஒன்னு சொல்லணும்ன்னா. ‘மாடர்ன் கோப்பேருந்தேவி’ கதையில், நாயகி கணவன் இறந்ததும், வரதட்சணையாக கொண்டு வந்த நகையை திரும்பப் பெற்று அதை வைத்து மேற்படிப்பு படிப்பா. அந்த சீன் ரொம்ப பிடிக்கும்.
******
உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நன்றி நன்றி நன்றி!
நான் எழுத்தை ரொம்ப சீரியஸா எடுத்து எழுதற ஆள் இல்ல. I am neither perfect nor professional. வயசு, அனுபவம் எல்லாமே உங்களை விட கம்மி. அங்க அங்க தப்பு நிறைய பண்ணுவேன். தப்பை எடுத்து சொல்லி, தாட்டிக்கொடுத்து வாசிப்பவர்களுக்கு நன்றிகள்!
******
வாசகர்களுக்கான கேள்வி பதில் :
கமலியின் புள்ளினங்காதல் முதல் கதை எனக்கு மிகவும் பிடித்தது. எக்ஸெல் பிடித்தது. நெடுங்கதைகள் கொடுக்கலாமே:
நெடுங்கதைகளா!
எனக்கும் ஆசை தான். ஆனா, நான் எந்த நேரமும் பரபரப்பா இருக்க ஆள். கொஞ்சமும் பொறுமை இல்ல. ஒரு கதை எழுதி முடிக்கறதுக்குள்ள அடுத்த கதை மண்டைக்குள்ள வந்து ரொம்ப குடைச்சல் கொடுக்கும். அதனாலயே ஒரு கதைக்கு அதிக நேரம் செலவிட்டு எழுத முடியாது. குட்டி குட்டியா முடிச்சிடறேன். நெடுங்கதையா எழுத நினைத்து தொடங்கிய கதையெல்லாம் பாதியில நிக்குது. எனக்கும் நெடுங்கதைக்கும் இப்போதைக்கு செட் ஆகலங்க.
பரபரப்பான கமலி எப்போ பொறுமையான கமலி ஆனா தான் நெடுங்கதைகள் எழுத முடியும் போல.
இதுவரை எழுதின கதைல ‘விண்ணப்பித்து பூப்பதில்லை பூக்கள்’ கொஞ்சம் பெரிய கதை தான்.
******
கமலியின் வித்தியாசமான சிந்தனைகளை வரவேற்கிறேன். இப்படியான கதைகளை எப்படி தேர்வு செய்கிறார்.
வித்தியாசமான சிந்தனைகள்ன்னு கேட்கவே சந்தோசமா இருக்கே. நன்றி நன்றி. கதைன்னு யோசிக்கும் போதே ரொம்ப சாதாரண கதையா இல்லாம கொஞ்சமாவது வித்தியாசமா இருக்கணும்ன்னு யோசிப்பேன்.
சில கதைகள், பல முறை சொல்லப்பட்ட கதைகளாக இருந்தாலும், அதை என் ஸ்டைலில் கொடுக்கிறேன்.
பல எழுத்தாளர்கள் போல், எனக்கும் பார்க்கும் யாவும் கதைக்கான கன்டென்ட்டா தான் கண்ணுக்கு தெரியும். அதுல இருந்து ஏதாவது ஒன்னு கதையாகிடுது அவ்வளவு தான்.
*******
காதலோ நாணலோ, நகுநிலா கதை வாசிச்சிகிறேன் ரொம்ப நல்லா இருந்தது அப்படி ஒரு கதை எழுத உங்களுக்கு எப்படி தோன்றியது :
நகுநிலா... கனவுல கிடைச்ச கன்டென்ட் அது. ஒரு பொண்ணு சிரிக்க சிரிக்க ஒரு டிராகன் கொஞ்சம் கொஞ்சமா மனுஷனா மாறுவது போல் கனவு அது. ஹிஹி. அதை கொஞ்சம் கொஞ்சமா பில்ட் பண்ணி கதையா மாத்தியாச்சு.
எனக்கு ரொம்ப பிடித்த கதை அது. அதிகம் யாரும் படிச்சதில்லை. அதைக் குறிப்பிட்டு கேட்டதுக்கு நன்றி நன்றி.
காதலோ நாணலோ கதை எழுதும் போது மனசுல இருந்தது எல்லாம் ‘நல்ல ஒரு காலேஜ் லவ் ஸ்டோரி எழுதணும்’ன்னு மட்டும் தான். அதுக்கப்றம் delusion பற்றி யோசிச்சு, அதைப் பத்தி கொஞ்சமா தெரிஞ்சிக்கிட்டு கதையை பில்ட் பண்ணது.
******
பெரு வாரியான கதைகளில் 6 அடி ஹீரோக்களையே ஏன் எழுத்தாளர்கள் பயன்படுத்துகிறார்கள்:
ஹீரோயின்னா பால் நிறத்துல இருக்கணும், கொடி இடை இருக்கணும், மீன் மாதிரி கண்ணு இருக்கணும்ன்னு சில டெம்பிளேட் வர்ணனை இருக்குல்ல. அதே மாதிரி ஹீரோக்கு இந்த ஆறடி.
இப்டி இருந்தா தான் அழகுன்னு நம்ப மனசுலே சில விஷயம் பதிஞ்சி போய்ருக்கும்ல்ல. அப்டி தான் ஹீரோ ஆறடில இருந்தா தான் அழகுன்னு பதிஞ்சிருக்கு.
எழுத்தாளர் ஹீரோவோட உயரத்தை பத்தி எதுவுமே சொல்லாமா, ஹீரோவோட உருவத்தை வாசகர்களையே கற்பனை செய்ய சொன்னா எப்டி கற்பனை பண்ணுவாங்க? அவங்க கற்பனை செய்யும் ஹீரோ எந்த உயரத்துல இருப்பாங்க? யோசிச்சு பார்த்தா நான் ஆறடில ஒரு பையன தான் கற்பனை பண்ணுவேன்னு தோணுது.
அதனால கூட ஆறடி ஹீரோக்கள் அதிகம் கதைகளில் வரலாம்.
அந்த ஆறடிய விடுங்க. அவன் ஏதோ தானா உசரமா வளர்ந்திருப்பான்.
ஆறடின்னு சொன்னதும் அடுத்த லைன்ல ‘படிக்கட்டு தேகம்’ன்னு சொல்லியிருப்பாங்க. அதை என்னன்னு கொஞ்சம் கேளுங்க. கிளாஸ்ல பாடம் நடத்துற ஹீரோல இருந்து, வயல்ல களை எடுக்கற ஹீரோ வரைக்கும் எல்லாரும் சிக்ஸ் பேக் வச்சிக்கிட்டு சுத்துறாங்கங்க.
…
🤣🤣🤣🤣 நான் இதுவரை கொடுத்ததில்லை சகோ
*******
ஆர்.சி மேம் நாவலின் சாயலில் பலர் கதை எழுதுவது பற்றிய உங்களது கருத்து :
அதே சாயல் கதைகள் இன்றளவும் விரும்பப்படுகிறது. அதனால் எழுதறாங்க. அதுல நம்ப எதுவும் கருத்து சொல்ல முடியாதே.
ஆனா, ‘ஆர்.சி மேம் சாயல்ல கதை எழுதுவாங்க’ன்னு ஒரு அடையாளத்தை தாண்டி, தனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்ன்னு நினைக்கறவங்க அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைல்ல உருவாக்கிக்கனும்ன்னு நினைக்கறேன்.
…
கண்டிப்பாக, எந்த ஒரு எழுத்தாளரும் தனக்கென்று தனி அடையாளத்தை வைத்து வெற்றி அடைவதே சால சிறந்தது
******
ஆன்டி ஹீரோக் கதைகளை தேடி தேடி வாசிக்கும் வாசகர்கள் ஏன் குடும்ப நாவலுக்கு அந்த அளவு வரவேற்பை கொடுப்பதில்லை:
அது எனக்கும் தெரியலங்க. ‘எப்போவாது ஆன்டி-ஹீரோன்னா ஓகே. எப்பவுமே ஆன்டி-ஹீரோன்னா எப்படி மா’ன்னு விவேக் சார் ஸ்டைல்ல கேட்டுப் பார்ப்போமா?
…
கேட்க வேண்டியது தான் போல தெரிகிறது
******
காதல் கவிதைகள் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
சொந்த வாழ்க்கைலயா? கதைலயா?
ரெண்டுத்துலயுமே எழுதுனதில்லையே.
எனக்கும் லவ்வுக்கும் சம்மந்தம் இல்ல.. அதனால என் கதைல வரவங்களையும் உருகி உருகி லவ் பண்ண வைக்க மாட்டேன்.
அதான். நானும் காதல் கவிதை எழுதுனதில்ல. நான் உருவாக்குன கதாப்பாத்திரங்களும் எழுதுனதில்ல.
…
பாவம்மா, கொஞ்சம் அனுமதி கொடுங்க🤣🤣
*****
நீங்கள் எழுத்தாளராக வந்த பிறகு உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்ன :
நிறைய நிறைய மாற்றம் இருக்கு. முன்ன எல்லாம் லொட லொடன்னு பேசிட்டு இருந்த நான் இப்போலாம் பேசுறது கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. மத்தவங்க பேசுறதை அதிகமா கவனிக்க தொடங்கியிருக்கேன். இதை ஒரு நல்ல மாற்றமா தான் பாக்கறேன்.
கூடவே கதைகளில் தப்பான கருத்தை சொல்லிட கூடாதுன்னு கொஞ்சம் பொறுப்பு வந்துருக்கு.
*****.
மிக்க நன்றி சகோ
உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாகவும் அட்டகாசமாகவும் இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
அருமை, இவ்வளவு கூறிய நீங்கள் எந்த தளத்தில் கதைகளை அறிமுக படுத்துகிறீர்கள் என்று கூறவில்லை கண்மணி, நான் உனக்கு பாட்டியாக இருப்பேன், அந்த இடம் உனக்கு வெற்றிடம் அல்லவா பூர்த்தி செய்து கொள்.
ReplyDelete