#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு 18
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ஜான்சி மிக்கேல் அவர்களைப் பற்றிய நேர்காணல்:
சகோதரி ஆனந்த ஜோதி அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்.
உங்களது நேர் காணல் நிகழ்வில் என்னை பங்கேற்க அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இதோ:
பெயர் : ஜான்சிராணி மிக்கேல்
எழுத்துலகிற்கு: "ஜான்சி"
சொந்த ஊர் : பிறந்தது வளர்ந்தது என்பதால் உணர்வில் சொந்த ஊர் என்னவோ "மும்பை"
மஹாராஷ்டிரம்.
வேர்: வடக்கன்குளம், திரு நெல்வேலி
படிப்பு : MBA in HR , Commerce Graduate.
பணி : அலுவலகத்தின் புதிய பணியாளர்களுக்கு வேலை கற்றுக் கொடுப்பது. Learning Manager (US Healthcare)
தளம் :https://jansisstoriesland.com/
அமேசான் பெயர்: "ஜான்சி Jansi"
******
உங்க முதல் கதையின் பெயர் :
அமிழ்தினும் இனியவள் அவள்
*******
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர்:
என் ஜீவன் நீயே
*******
மொத்தம் எத்தனை நாவல் எழுதியிருக்கீங்க : 14
*******
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
சொல்ல முயல்கின்றேன் :)
எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், செய்வன திருந்தச் செய்யும் முனைப்புகள், பகிர்தலும் அக்கறையும் (Sharing & caring pa :p ) மனதிற்கு பட்டதை பளீரென சொல்லி விடும் சுபாவமும் இதுதான் நான்.
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
நிச்சயமாக, கொஞ்சம் நீளமாக இருக்கலாம் பொருத்தருள்க.
நான் இணையத்தில் எழுத ஆரம்பித்தது என்னமோ 2014ல் இருந்துதான். அதற்கு முன்பாக கவிதைகள், கட்டுரைகள் அதிகமாக எழுதி இருக்கிறேன். ஆலயத்தின் மாதாந்திர இதழ்களில் அவை வெளியாகி இருக்கின்றன. மராத்திய முரசு எனும் பத்திரிக்கையில் 17வது வயதில் எனது கவிதை ஒன்று வெளியானது. 2006ம் வருடம் ஆலயம் மூலமாக ஐந்து நபர்கள் எழுதி வெளியிடப்பட்டதில் ஒரு நபராக நானும் இருந்தேன். எனது எழுத்துக்கள் புத்தகமாக முதன் முதலில் பதிப்பிட்டப் பட்டது அப்போதுதான்.
இணையத்தில் CHILLZEE தளத்தில் வெகு தயக்கத்துடன் 2014ம் வருடம் ஒரு கவிதையை பதிப்பிட்டேன். அதற்கு கிடைத்த உற்சாகம் தான் இத்தனை தூரம் வரை என்னை அழைத்து வந்திருக்கின்றது. 2016-17 வருடம் எனது முதல் நாவலை (அமிழ்தினும் இனியவள் அவள்) சில்ஜீ தளத்தில் எழுதி முடித்தேன். அப்போதிருந்து நாவல்களோடு பயணம் தொடர்கின்றது.
…
அருமையான அனுபவம் சிஸ்டர்
******
உங்களது நாவலை வாசிக்கும் வாசகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன :
மிகவும் யோசித்த பின்னர் இந்த பதிலை பதிவிடுகிறேன். இதுதான் சரியான பதிலாக இருக்கும் என நம்புகின்றேன். என் நாவலை வாசிக்கும் வாசகர்கள் நான் அடுத்தடுத்து எழுத வேண்டும் என்றும், எழுதும் போது மாதக்கணக்காக/வருடக்கணக்காக இடைவெளி விடாமல் சீராக அத்தியாயங்களை பகிர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத பெரும்பான்மையான தருணங்களுக்காக மன்னிக்க வாசகர்களே.
*******
உங்களது கனவு லட்சியம்:
எனது லட்சியம் மகிழ்ச்சியாக இருப்பது, எனது கனவு உலகத்தின் அத்தனை நாடுகளிலும் சுற்றுலாப் பயணமாக சென்று வருவது.
******
எதற்காக நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:
எனது மன உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் கருவியாக எந்தன் எழுத்துக்கள் இருந்ததால், நான் எழுத்துலகை தெரிவு செய்தேன்.
*******
எழுத்துலகிற்கு வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் ஏதாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா :
எழுத்து என்பது மிகப் பெரிய வரம், மிகச் சாதாரணள் நான். என்னை இன்று எந்தன் எழுத்துக்கள் மூலமாக பலரும் அறிந்து இருக்கின்றார்கள் என்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டு. இதையே தான் நான் எனது சாதனையாகவும் கருதுகிறேன்.
******
உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது கருத்துக்கள் இருக்குமா அல்லது குடும்ப நாவலாக இருக்குமா:
பெரும்பாலான கதைகளில் நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ நிச்சயமாக ஏதாவது கருத்து நிச்சயம் இருக்கும். குடும்ப நாவலும் கூட எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் நேர்மறையான கருத்துக்களையே எழுதுவேன்.
******
உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்களது உணர்வு, வீட்டார் உணர்வு என்ன மாதிரி இருந்தது.
எந்தன் கதை பதிப்பித்து வராததற்கு காரணம் எனது எழுத்துக்கள் நன்றாக இல்லையோ? என மனதிற்குள்ளாக மிகுந்த குழப்பங்கள் நிறைந்திருந்த காலக்கட்டம் அது. அதனால் புத்தகம் பதிப்பிடப்படப் போவதாக அறிவிப்பு வந்த தருணம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன், தன்னம்பிக்கையை மீட்டுக் கொண்டேன். நன்றிகள் அறிவாலயம் மற்றும் மாரல் சப்போர்ட்டிற்கு நன்றிகள் ரோஹிணி தங்காய் (எழுத்தாளர் ஸ்ரீ)
முதல் புத்தகம் வந்த போது எனது வீட்டில் அந்த அளவிற்கு பெரிதான பிரதிபலிப்பு எதுவும் இல்லை.
எனது தீவிர வாசிப்புகள், எழுத்துக்கள் காரணமாக என் வீட்டினர் அப்போதெல்லாம் என்னை ஏலியன் போலவே பார்த்துக் கொண்டு இருந்ததால், "ஐயோ சும்மாவே அப்படி, இனி இவளை கையில் பிடிக்க முடியாதே?" என்பதைப் போல பீதியோடு பார்த்திருந்தனர். புத்தகத்தை கையில் கொடுத்த போதோ "இத்தனை கனமா இருக்கே?" என அம்மா சொன்னார்கள்.ஹா ஹா
Jokes apart வாய்விட்டு சொல்லா விட்டாலும் அவர்களுக்கும் அது மகிழ்ச்சிதான்.
*****
சஸ்பென்ஸ் திரில்லர் வகை கதை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
நிச்சயமாக,
"துரத்தும் நிழல்கள்" இதுதான் அந்த நாவலின் பெயர். மிக நல்ல அனுபவம், மொத்தமே 16 அத்தியாயங்கள் தான் ஆனால் மிகவும் மெனக்கெட்டு எழுதிய கதை. வாசித்தவர்கள் அத்தனை பேருமே மிகவும் பாராட்டிய நாவல் அது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் துப்பாக்கிகள் குறித்த தகவல்களை குறிப்பிட்டு இருந்தேன். வாய்ப்பு கிட்டினால் மறுபடியும் சஸ்பென்ஸ் திரில்லர் எழுத வேண்டும்.
******
சஸ்பென்ஸ் திரில்லர் கதை எழுத என்ன தெரியவேண்டும் :
கதை பரபரப்பாக நகர வேண்டும்
கடைசி அத்தியாயம் வரைக்கும் இரகசியம் வெளிப்படாத வண்ணம் காட்சிகளும் வசனங்களும் கவனமாக எழுத வேண்டும்.
இரத்தினச் சுருக்கமாக வசனங்கள், காட்சிகள் இருத்தல் வேண்டும்.
மென் உணர்வுகள் கூடவே கூடாதென தீர்மானித்து இருந்ததால் கவிதைகள் போன்றவைகளை தவிர்த்து விட்டிருந்தேன்.
******
காதல் காட்சிகளை வாசிப்பவர் முகம் சுளிக்காமல் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறீங்க:
எழுத்தாளரின் எழுத்து முழுக்க அப்பட்டமாக எல்லாவற்றையும் சொல்லி விடாமல் வாசகரை அந்த சூழலுக்குள் இழுத்து கற்பனை செய்ய வைக்க வேண்டும் என நான் எண்ணுகின்றேன். காதல் காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல, வெளிப்படையாக நாமே எல்லாம் சொல்லி விட்டால் எப்படி? :)
…
நிஜம் தான்
******
நீங்கள் நாவல் எழுதுவது என்பதை பகுதி நேர பணியாக செய்கிறீர்களா அல்லது முழு நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா :
வார இறுதிகளில் நேரப் போக்கிற்காக எழுதுகிறேன். இதை பணியாக கருதவில்லை.
******
நீங்க எழுதிய நாவல்களில் ரசிகர் விரும்பி ரசித்தது எது ? ஏன்:
எனது பெரும்பாலான நாவல்கள் வாசகர்களால் விரும்பப் பட்டவைகளே. எனினும், என் பக்கம் வாசகர்களை அதிகமாக கவனமீர்த்த நாவல்களை குறிப்பிட விரும்புவேன்.
"அமிழ்தினும் இனியவள் அவள்": ரூபனுடைய கதாபாத்திரம் காரணமாக பெரிதும் விரும்பப் பட்டது.
"நீயும் நானும்": சுதா ரவி தளத்தில் நிகழ்ந்த போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற என் குறு நாவல். முக நூல் வந்த புதிதில் என்னை பலருக்கும் அறிமுகப் படுத்திய நாவல் இது. Work life balance எனும் புதியக் களம், கதையின் கதாபாத்திரங்கள், கவிதைகளால் மிகவும் இரசிக்கப் பட்டது.
"நாயகி": இதுவும் குறுநாவல் தான் வண்புணர்வு செய்யப் பட்ட பெண்ணின் வலிகளை வார்த்தைகளில் வடித்திருந்தேன். அழ வைத்து விட்டாயே என ஏராளமான பாசத் திட்டுக்களும், அன்புகளும் கிடைத்தன.
"இது இருளல்ல அது ஒளியல்ல": பிறர் தொட தயங்கும் களம் தான். ஆண்மையின்மை காரணமாக எழும் மனச் சிக்கல்களை எழுதி இருந்தேன். வெகுவாக பாராட்டு பெற்ற கதை அது.
"மனதோரம் உந்தன் நினைவுகள்": சமீபத்தில் மிக அதிகமானவர்களை என் எழுத்தின் பக்கம் திருப்பிய நாவல். வாசகரிடம் காரணம் கேட்டால் கார்த்திக் கார்த்திக் என்றே சொல்வர். :)
இவை தவிர்த்து காதலும் வசப்படும், உள்ளம் உந்தன் வசம், தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!, இவைகளும் வாசகர்களால் வெகுவாக விரும்பப்பட்ட நாவல்களாகும்.
….
அருமை சிஸ்டர், வித்தியாசமான கதை போக்கினை தேர்வு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்
*****
ஒரு அத்தியாயத்தில் வரக்கூடிய வார்த்தைகளின் அளவு எத்தனை இருக்க வேண்டும் :
நான் பெரும்பாலும் ஒரு அத்தியாயத்தை1000-1500 வார்த்தைகள் வரை எழுதுவேன். குறிப்பிட்ட காட்சி பொருத்து சில நேரங்களில் அத்தியாயம் நீளலாம், வார்த்தைகள் கூடலாம்.
*******
சிறுகதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
ஆம், சிறுகதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இதுவரையிலும் 28 சிறுகதைகளும், 10 சிறுவர் சிறுகதைகளும் எழுதி உள்ளேன்.
******
உங்கள் நாவல்களை வாசித்து வரும் வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது :
உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிகுந்த அன்புகளும் நன்றிகளும்.
******
ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் மற்றும் வார்த்தைகள் எத்தனை வரிகளில் இருப்பது ஏற்புடையது :
அது கதைக்கருவை பொருத்தது.
*****
ஒரு நாவல் எழுத நீங்கள் தேர்ந்தெடுப்பது என்ன:
பெரும்பாலும் ஏதோ ஒரு உணர்வை எழுத்தில் வடிக்க வேண்டும் எனும் உந்துதல் ஏற்படும் அதனை தொடர்ந்தே நான் எழுத முற்படுவேன். சுற்றும் முற்றும் பார்த்த, கேட்ட ஏதோ ஒரு விஷயத்தின் தாக்கத்தை எனது எண்ணத்தை எழுத்தில் கொண்டு வர வேண்டும் எனும் எண்ணமே என்னை நாவல் எழுத வைக்கின்றது.
******
இன்றைய புதிய எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா.
புதிது புதிதாக எழுதி உங்கள் எழுத்துக்களை மெருகேற்ற நல்வாழ்த்துகள்.
******
அது எழுத்தாளரின் மொழி வளம் மற்றும் எழுதும் கருத்தைப் பொருத்தது, பொதுவாக நான் அப்படி எழுத்துக்களை மிகவும் இரசிப்பேன், தேவைக்கு அதிகமான வருணனைகள் அல்லது கதையே இல்லை வெற்று வருணனைகள் எனில் வாசிப்பை நிறுத்தி விடுவேன்.
******
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
ஆம், JSL Tamil Audio Novels என்பது எனது Youtube channel ன் பெயர்.
*****
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :
ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர், பலதரப்பட்ட எழுத்துக்களை வாசிப்பேன்.
******
தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :
எழுத்தாளர் துமியின் "இமை மீதூரும் துளிகளில்"
எழுத்தாளர் சம்யுக்தாவின் "மாயத் தூரிகை"
*****
ஒரு சமூக கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கணும், என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:
ஓரு சமூகக் கதையில் நிதர்சனம் இருக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் நிகழ்வனவற்றை கதை பேச வேண்டும்.
உயரிய விழுமியங்களை கதை முன் வைக்க வேண்டும்
நேர்மறையான தீர்வுகளை கதை சொல்ல வேண்டும்
பெண்ணடிமைத்தனம் இருத்தல் கூடாது என நான் எண்ணுகின்றேன்.
*******
உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் (துரத்தும் நிழல்கள்)
ஒரு குடும்ப கதை ( என்றும் நீதானே!)
ஒரு வரலாற்று கதை (தொண்ணூறும் இரண்டும்) தவிர்த்து என் கதைகள் இரண்டு வகைதான்
அ. மென் காதல்
ஆ. சமூகம்
வாசகருக்கான கேள்வி பதில் :
ஜான்சி மிக்கேல் அக்காவின் இருளல்ல ஒளியல்ல கதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கதை... கதை நகர்வு விதம் அருமையாக இருக்கும் இந்த கதை எழுத தூண்டுகோலாக இருந்தது என்ன :
மிக்க நன்றிகள் சேதுபதி தம்பி. பதில் கொஞ்சம் நீளமாக போய்விடும் என எண்ணுகின்றேன்.
அ.முதன் முதலில் சொல்ல விரும்புவது ஒரு உளவியல் கட்டுரை வாசித்த போது அறிய கிடைத்த கருத்து. தம்பதியரின் மண வாழ்க்கை பிரச்சனைகளுக்கு இரண்டே காரணங்கள் தானாம் ஒன்று பொருளாதாரம் இரண்டு தாம்பத்தியம்.
ஆ.நமது மக்களுக்கு ஆண்மையின்மை மற்றும் மலட்டுத் தன்மை குறித்த விழிப்புணர்வுகள் இல்லை என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
இ.குழந்தை பிறந்து விட்டால் ஆண்மையுள்ள ஆண்மகன் அவனுக்கு ஏதும் குறையிருக்காது என்பது ஒரு கருத்தியல்.
ஈ. குழந்தை இல்லாத தம்பதிகள் மண வாழ்வில் குறையுள்ளவர்கள் என்பது ஒரு கருத்தியல்.
இந்த இரண்டு கருத்தியல்களும் எப்போதும் சரியாக இருப்பவை அல்ல. இவை காரணமாக பெரும்பாலான பெண்கள் பற்பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனை ஒட்டி நிகழ்ந்த என் மனதை பாதித்த நிஜ சம்பவங்களை கதையாக்கி விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் எனும் முனைப்பில் எழுதிய கதை அது. அந்தக் கதையின் கடைசி சில வாக்கியங்கள் தவிர்த்து 99% அத்தனையும் நிஜத்தில் நிகழ்ந்தவைகளே. :)
******
ஜான்சி மிக்கேல் அவங்க நாவல்கள் எல்லாம் வேற லெவல்..யதார்த்ததுடன் கூடிய அசத்தல் சிந்தனைகளுடன் எளிமையான எழுத்து நடையில். சொல்ல வரும் கருத்துக்களை நச் என்று சொல்வதில் கை தேர்ந்தவர் ...ஒவ்வொரு நாவலும் ஒவொரு ரகம் :
மிக்க நன்றிகள் ஜோவிதா. உங்களது பாராட்டுக்கள் எப்போதும் எனக்கு ஊக்கம் தருவன.
*******
உங்களுக்கு பிடித்த நாவல்களில் ஒன்று பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
ஏராளம் இருக்கின்றன ஒன்றை சொல்வதானால்... ஜெய் சக்தி அவர்களின் "கனிந்த மன தீபங்களாய்."
******
எதார்த்தமான கதைகள் தவிர்த்து வேறு மாதிரி எழுத ஆசை உண்டா... சரித்திர நாவல் போல:
மிக்க நன்றிகள் வெற்றி வேந்தன் தம்பி.
கதைகள் எல்லா வகையிலும் எழுத ஆசைதான் குடும்ப நாவல் ( என்றும் நீதானே! I mean மாமியார் மருமகள் பிரச்சனைகள்.), சஸ்பென்ஸ் திரில்லர் "துரத்தும் நிழல்கள்" என மற்றவைகள் ஏற்கெனவே முயன்று இருக்கிறேன். சரித்திர நாவல் எழுதும் அளவு தன்னம்பிக்கை இன்னும் வரவில்லை.வரும் காலத்தில் வாய்ப்பிருந்தால் நிச்சயம் முயலுவேன்.
******
கதை திருட்டும் pdf திருட்டும் எழுத்தாளர்களை தாக்கும் கொடிய விஷம். இதிலிருந்து விடுபட ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறீங்களா :
எழுத்துலகிற்கு வந்த பின்னர் மிக அதிகமாக யோசித்த மற்றும் விவாதித்த ஒரு விஷயம் pdf. தற்போதைய நிலவரம் பார்க்கையில் இதற்கு தீர்வுகள் இல்லை என்று எண்ணுகின்றேன். யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டாமல், யார் மனதும் வருந்தாமல் இதற்கு ஒரு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சியே.
என்னைப் பொறுத்தவரையில் இதிலிருந்து விடுபட வாசகர்களின் ஒத்துழைப்பு வேண்டும். இன்னும் ஆழமாய் விவாதிக்கலாம் தான் ஆனால், மின்சாரத்தை போல ஷாக்கடிக்கும் டாபிக் இது. அதனால் இதை இங்கேயே விட்டு விடலாம்.
கதை திருட்டு எழுத்தாளரின் மனதை நேரடியாக பாதிக்கும் விஷயம். நம் குழந்தையை யாரோ சொந்தம் கொண்டாடும் போது எழும் வலியை ஒத்தது. திருடி கதை எழுதும் நேரத்தில் சொந்தமாக யோசித்து எழுதலாம் அல்லவா? என்பது மனதில் எழும் கேள்வி.
….
நிச்சயமாக சிஸ்டர்
*******
உங்கள் கதைகள் பற்றிய விபரங்கள் குறிப்பிட முடியுமா?:
ஜான்சியின் நாவல்கள் மற்றும் குறு நாவல்கள்:
1.அமிழ்தினும் இனியவள் அவள்
2.நீயும் நானும்
3. இந்திரனின் காதலி
4. நாயகி
5.உள்ளம் உந்தன் வசம்
6.தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
7.இது இருளல்ல அது ஒளியல்ல
8.காதலும் வசப்படும்
9.துரத்தும் நிழல்கள்
10.தொண்ணூறும் இரண்டும்
11.மனச் சோலையின் மழையவள்
12. என்றும் நீதானே!
13.பிரபஞ்சத் துகள்.
14.மனதோரம் உந்தன் நினைவுகள்
சிறுகதைகள்:
1.என்னவள்
2.முதன் முறையாக பார்த்த போது
3.நான் என் செய்வேன்?
4.பேராண்மை
5.பாலைவன ரோஜாக்கள்
6.காதலியா? மனைவியா?
7.மனைவி ஒரு மந்திரி
8.நீதி வேண்டும்
9.நிஜமும், நிழலும்
10.என்னமோ நடக்குது?
11.மாற்றம்
12.நல்லதா? கெட்டதா?
13.மறக்க முடியுமா?
14.காவற் படை
15.துவேஷம்
16.உயிரினும் ஓம்பப் படும்
17. எப்புடி இருந்த நான்?
18.திருமணப் பரிசு!
19.இனியவன்
20.அப்பாலே போய் விடுகிறேன் சாத்தானே
21.புதுக் கள்ளன்
22.அடுத்த பக்கம்
23.இழந்த சொர்க்கம்
24. நலம் வாழ வா…
25. சுவர்
26. மழை மழை!
27. நானும்/எனக்கும்
28. “வளி”யவள்
சிறார் சிறுகதைகள்:
1.வாய்மையே வெல்லும்
2.பேராசை பெரு நஷ்டம்
3.குட்டித் தக்காளியும் மந்திரக் கோலும்
4.திடீர் சாமியார்
5.கோக்கு மாக்கு கோபாலு
6. கோக்கு மாக்கு கோபாலு-2
7. யார் அவர்?
8.கற்பனை உலகம்
9.வல்லவனுக்கு வல்லவன்
10.சின்னுவுடன் ஒரு நாள்
கவிதை தொகுப்புகள்:
1.எழுந்து வா
2.காதல் என்பது...
3.காதலும் வசப்படும்_கவிதைகள்
4.அவளின் கவிதைகள்_பாகம் 1
5.அவளின் கவிதைகள் _பாகம் 2
6.அவளின் கவிதைகள்_பாகம் 3
7.அவளின் கவிதைகள்_பாகம் 4
8. அவளின் கவிதைகள்_பாகம் 5
9.மனதோரம் உந்தன் நினைவுகள்_கவிதைகள்
10.நீயும் நானும் கவிதைகள்
11.ரூபன் அனிக்கா காதல் சரங்கள்
மற்றவை:
1. ஏதேதோ எண்ணங்கள் பகுதி 1 மற்றும் 2
2. மனதும் நினைவும்
எழுத்துலகிற்கு:
எழுத்தும் வாசிப்பும் என தாய் மொழியாம் தமிழ் வழியாக நாம் இணைந்துள்ளோம். இங்கே நானும் ஒரு சிறு துளி என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். சீரிய படைப்புக்களை படைப்போம். சிறந்த எண்ணங்களை முன்னெடுப்போம். எழுத்தாள மற்றும் வாசக நட்புக்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்.
அனைவரது பணிகளும் சிறக்க நல்வாழ்த்துகள். நேர்காணலுக்கு வாய்ப்பு தந்தமைக்கும், பல வித கேள்விகளால் நிறைய யோசிக்க வைத்தமைக்கும் ஆனந்த ஜோதி சகோதரிக்கு அன்பும் நன்றிகளும்.
வணக்கம்.
அன்புடன்,
ஜான்சி
…..
மிக்க நன்றி சிஸ்டர்
ரொம்ப ரொம்ப அருமையாகவும், அட்டகாசமாகவும் இருந்தது உங்களது பதில்கள்.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய நேர் காணல் சற்று பெரிதாகப் போய்விட்டது என்றாலும் பதிலும் கேள்வியும் யோசிக்கும் விதமாக இருப்பதால் வாசித்துப் பார்த்து கருத்துகளை தெரிவியுங்கள்
நன்றி
Akka arumai congrats to ananthi akka and jancy akka
ReplyDelete