சேதுபதி விஸ்வநாதன்

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


எழுத்தாளர் அறிமுகப் படலத்தில் இன்றைய எழுத்தாளராக வரப்போவது சேதுபதி விசுவநாதன்…


அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:


பெயர் : சேதுபதி விசுவநாதன்


சொந்த ஊர் : சின்னதாராபுரம், கரூர் மாவட்டம். தற்போது இருப்பது கோயம்புத்தூர்


படிப்பு : B.E MECHANICAL


பணி : DESIGN ENGINEER & ASTROLOGER


தளம் : pratilipi, tamilpens, Sangamam


அமேசான் பெயர்: அனைத்து இடத்திலும் சேதுபதி விசுவநாதன் என்பது தான்


*****


உங்களது முதல் படைப்பு : 


கூலிக்காரன் மவனுக்கு படிப்பு எதுக்கு? சிறுகதை தான்


….


வாவ் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே


*****


எழுத்துலகிற்கு வந்த வருடம் : 


ஜனவரி 2018


******

தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பது :

சங்கமம் தளத்தில் கள்ளக்காதல் என்ற தொடர். ஆனால் முதல் எபி வரைக்கும் தான் பதிவு செய்துள்ளேன்.


சில ஆஃப்லைன் ஸ்டோரிகள் எழுதிட்டு இருக்கேன்.


******


மொத்தம் எழுதியிருப்பவை : 


16 சிறுகதை. 1 குறுநாவல். 100க்கும் மேற்பட்ட கவிதைகள், 2 தொடர்கவிதை


*****


உங்களது படைப்புகளின் பெயர்கள் :


சிறுகதைகள்...


1.கூலிக்காரன் மவனுக்கு படிப்பு எதுக்கு

2.தந்தையால் கொலைகாரன் ஆனேன்

3. திருநங்கையுடன் ஓர் இரவு

4. ஏக்கம்

5. கருவின் கனம்

6. உயிரின் வலி

7. சுவடுகள் தெரியவில்லை

8. இருளின் நிழல்கள்

9. வாடகை சைக்கிள்

10. கந்தசாமி வாத்தியார்

11. ஒரு தந்தையின் இரவுகள்

12. பத்தோடு இதுவும் ஒன்று

13. பறவைகள் தேடும் இலையுதிர் காலம்

14. நினைவோடு போனாய்

15. உயிரோடு விளையாட்டு

16. சினிமா கூத்து


குறுநாவல்

1. காதலின் மொழியினிலே


தொடர் கவிதை

1. மொழியில்லா வலிகள்



மிகவும் வித்தியாசமான மற்றும் அருமையான பெயர்கள் தேர்ந்தெடுத்திருக்கீங்க


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


எப்படியாவது உழைத்து முன்னேறிடனும்னு நினைக்கிற சாதாரண மனிதன். நான்கு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளர். வாத்தியார் பொழப்பே கஷ்டம்னு கம்பெனி பக்கம் வந்தாச்சு.


கோவில் போறது ரொம்ப பிடிக்கும். முக்கியமாக ஜீவசமாதி. மலைமேல் உள்ள கோவிலுக்கு அதிகம் பயணம் செய்ய ஆசை. இயற்கையோடு பயணம் செய்ய விரும்புவேன். தனியா வண்டி ஓட்டிட்டு போறதுல கிடைக்கற சந்தோஷம் வேற லெவல். ஆனால் பெட்ரோல் விலைய பத்தி நான் பேசல. அப்புறம் அது அரசியல் ஆகிடும்.


முக்கியமாக 90'ஸ் கிட்ஸ்னு அலப்பறைகள் பண்ணிட்டு கூட இருக்கறவங்களை டென்சன் பண்றது தான் பொழப்பு.



🤣🤣🤣 அருமையான பதில்


******


100க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க, அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:


பெரும்பாலும் கவிதைகள் வண்டி ஓட்டும்போதும், சமைக்கும் போது, குளியலறையில் தான் பிறக்கின்றன.   சில புகைப்படங்களை பார்த்தவுடன் எழுத தோணும். சில கவிதைகளை படித்தவுடன் ஏற்படுத்தும் தாக்கங்கள் கூட சில கவிதைகளை கொடுத்துள்ளது.


ஹைக்கூ கவிதைகள், சில வரிகள் கொண்ட கவிதைகளுக்கு தற்போது முயற்சி செய்கிறேன். பெரும்பாலும் கவிதைகளில் எதுகை மோனை வைத்து தான் எழுதுவேன்.


காதல் கவிதைகள் பெரும்பாலும் சோக கவிதைகளாக தான் இருக்கும். ஏனென்றால் நான் 11ம் வகுப்பு படிக்கும் போது டி.ஆர் படத்தை பார்த்து கவிதை எழுதியவன்.



அருமை சகோ


******


நீங்கள் சிறுகதை எழுதும் போது உணருவது என்ன :


சமூகம் சார்ந்த விசயம். நம்மை சுற்றி நடக்கும் விசயங்களை தான் எழுதுகிறேன். அதனால் பெரும்பாலான கதைகளில் ‌(எல்லாமே அப்படி தானேன்னு படிச்சவங்க கருத்து) சோகமாக தான் இருக்கும். மாற்ற நினைப்பேன். ஆனால் இது தானே எதார்த்தம் என்று விட்டுவிடுவேன்.


முடிவுகளை எடுத்துக்கொண்டு தான் கதையே ஆரம்பிப்பேன். எதற்காகவும் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன்.


அழுகாச்சி ரைட்டர் தான் நான். இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பது சற்று சிரமமாக தான் இருக்கும்.


******


ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும். அதை வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் என்ன விதமான உணர்வுகள் மனதில் தோன்ற வேண்டும் :


இது ஒவ்வொரு எழுத்தாளரின் மனநிலை பொறுத்தது.  வாசிக்கும் போது இடையில் வைத்துவிட்டோ நிறுத்திவிட்டோ போகும்படி சலிப்பு தட்டிவிட கூடாது. மனதில் நிற்க வேண்டும். படிக்கும் நேரம் வீண் என்று நினைக்காத வகையில் இருக்க வேண்டும்.



நிச்சயமாக


******


போட்டி கதைகளில் பங்கு பெற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :


சங்கமம் தளத்தில் சிறுகதை போட்டியில் கலந்து கொண்டேன்.


அதேபோல் தமிழ்பென்ஸ் சைட்டில் நடந்த இருமுனை பேனா கதையில் சஹானா ஹரிஷ் அக்காவோடும், சங்கமம் தளத்தில் இரட்டை ரோஜா போட்டியில் பிரதீஷாமணி அக்காவோடும்  கலந்துகொண்டேன்.

மற்றபடி பெரும்பாலும் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டேனுங்க.


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


எனக்கு வாசிப்பு அனுபவம் கிடையாது. 15 நாவல்கள் தான் படித்திருப்பேன். சிறுகதைகள் என்று பார்த்தால் ஒரு 50க்கும் குறைவாகவே இருக்கும்.  அவ்வளவு தானுங்க.


மற்றபடி நட்பு ரீதியாக சொல்லவேண்டுமானால் பலர் உண்டு. பெயர் குறிப்பிட்டு யாராவது பெயர் மிஸ் ஆன என்னைய போட்டு தள்ளிட்டுவாங்க மைலார்ட்.


நான் வளர வேண்டும் என்று என்னை திட்டி திட்டி எழுத வைப்பதில் எழுத்தாளர் பிரதீஷாமணி அக்கா, ஆதி பிரபா அக்கா, ராஜி பிரேமா, வாணி அரவிந்த் அக்காவுக்கு நன்றி சொல்லனும். ஆனா நன்றி சொல்லி பிரிக்க மாட்டேன்.


….


🙂🙂🙂🙂


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


முகநூலில் ஜனவரி 2018ல் Suggested post ஆக ஒரு சிறுகதை வந்தது. அது பிரதிலிபி சைட். படித்தேன். நான்கைந்து சிறுகதை படித்திருப்பேன். எனக்கும் எழுத ஆசை வந்தது. ஜனவரி 2018ல் முதல் சிறுகதை எழுதினேன். நல்ல வரவேற்பு. பிறகு தான் மற்ற தளங்களில் நட்புகள் மூலமாக எழுத ஆரம்பித்தேன்.


காதல் கதைக்கு‌ தான் வரவேற்பு என்று ஒரு கதை எழுதியபோது என் தளபதி (பெஸ்ட் பிரண்ட்) "எல்லாரையும் மாதிரி எழுதாத. உனக்குன்னு ஒரு ஃப்ளாட்பார்ம் கிரியேட் பண்ணிக்கோ. ரீச் லேட்டானாலும் அதுக்கான பலன் கிடைக்கும்" என்று சொன்னான். அது தற்போது நடந்துகொண்டிருக்கிறது.


******


சிறுகதைக்கும், குறுங்கதைக்கும் உள்ள வித்தியாசமாக என்ன சொல்ல நினைக்கறீங்க :


ரொம்ப ஷார்ட்டா சொன்னா அது குறுங்கதை. இது எழுதுவது மிகவும் கஷ்டம் தான். ஏனென்றால் கற்பனைக்கு கடிவாளம் கட்டி வார்த்தைகளை தேர்ந்தெடுந்து சொல்ல வந்ததை சரியாக சொல்லி வாசகரிடம் சேர்க்க வேண்டும்.


சிறுகதையும் அப்படி தான். ஆனால் கொஞ்சம் வார்த்தைகளுக்கு பஞ்சம் இல்லை.


வித்தியாசம் அவ்வளவு தான்.


*****


இரண்டும் எழுத தேவைப்படும் வார்த்தைகளின் அளவு எத்தனை :


குறுங்கதை 500 வார்த்தைகளுக்கு மேல் செல்ல கூடாது. சிறுகதை 2500 வார்த்தைகளுக்கு மேல் செல்ல கூடாது என்பது என் எண்ணம்.


******


பெரிய தொடர்கதை எழுதும் எண்ணம் இருக்கிறதா :


எழுதிக்கொண்டு தான் இருக்கிறேனுங்க. ஒரு நாவல் எழுதிவைத்துள்ளேன். Offline கதை. அதனால் தான் தற்போது சிறுகதைகள் எழுத முடியவில்லை.


சில கதைகள் பாதி எழுதி முடிக்காமல் வைத்துள்ளேன். 5 கதைகள் அப்படி நிக்குது.


….


ஒவ்வொன்றாக முடித்து விட்டு அடுத்து தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள்


******


சிறுகதை, நாவல் இரண்டில் எது உடனடியாக வாசகர்களை சென்றடைவதாக நினைக்கறீங்க:


நாவல் தான்.  சிறுகதை படிக்க நேரம் குறைவு தான் என்பதும் கூட சில நேரங்களில் கதைகளை தவிர்க்க வைக்கின்றன பலரிடம்.


******


எழுத்துலகிற்கு புதிது புதிதாக அறிமுகமாகி வருகிறவர்கள் வித்தியாசமான படைப்புகளை வழங்குவதாக நினைத்துக்கொண்டு சரியான முறையில் கதையின் நகர்வுகளை கொண்டு போகவில்லை என்ற குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது அதைப்பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:


ஒவ்வொருவரும் ஒரு எண்ணம் உண்டு. முதலில் எழுத நினைப்பதே ஆகச் சிறந்த செயல் தான். எப்படியாவது வித்தியாசமா எழுதி பெயரும் ஒரு அங்கிகாரமும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உண்டுங்க.


தட்டி கொடுத்து தூக்கிவிட முன்னனி எழுத்தாளர்களின் நட்பு கிடைத்தால் குழந்தைகள் போல கற்று வெற்றி பெறலாம்.


….


நிச்சயமாக


******


அந்நாளில் குறைந்த எழுத்தாளர்கள் தரமான படைப்புகளை கொடுத்து நெஞ்சில் நிலைத்து நின்றார்கள். இப்போது உள்ளவர்கள் அப்படி பட்ட படைப்புகளை வழங்குவதாக நினைக்கிறீர்களா :


கட்டாயம் நிறைய படைப்புகள் இப்போதும் வலம் வருகின்றன. ஆனால் அதை எடுத்து செல்ல தான் வாசகர்கள் விரும்பவில்லை என்பது எனது கருத்து.


பெரும்பாலும் காதல் குடும்ப நாவலுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற நாவல்களுக்கு குறைவாகவே உள்ளது. அதனால் புதிதாக வருபவர்களும், வேறு genre எடுப்பவர்களும் கூட காதல் பக்கம் வருவதால் தனித்திறமை மறைக்கப்பட்டு பலர் தேங்கி நிற்கிறார்கள். நானும் அப்படி காதல் பக்கம் வந்தவன் தான்.


தமிழ்மதுரா அக்கா ஒருமுறை "காதல் பக்கம் வேணாம் தம்பி. சமூகம் சார்ந்த சிறுகதை உங்களுக்கு நல்லா வருது" என்று என்னை ஊக்கப்படுத்தி பாதையை காண்பித்தார்கள். ஆனா மனசு மீண்டும் காதல் பக்கம் செல்லும் போது பிரதீஷாமணி அக்கா "உனக்கு அமானுஷ்யம் நல்லா வருது. அதுல ட்ரை பண்ணு" என்று மீண்டும் ஒரு பாதையை மாற்றிவிட என் எழுத்து பயணம் செல்கிறது.


******


இரண்டு பேருடன் சேர்ந்து நாவல் எழுதிய அனுபவத்தைப் பற்றி சொல்லமுடியுமா :


உண்மையில் ஒரு அழகிய நட்பையும் உறவுகளையும் கொடுத்தது. இருவரும் சேர்ந்து எழுதிய போது நிறைய ஐடியாக்கள் கிடைத்தது.


ஆனா என்கூட சேர்ந்து எழுதியவங்க‌ நிலைமை தான் பாவம். படாதபாடு பட்டுட்டாங்க கதையை முடிக்கறதுக்குள்ள. ஏன்னா நான் அவ்வளவு சோம்பேறிதனம் பண்ணேன்.


*******


ஒரு படைப்பை ஒருவரின் எண்ணவோட்டத்தில் எழுதுவது என்பது மாறி இருவர் , நால்வர் சேர்ந்து ஒரு படப்பை எழுதி முடிக்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது. தனிநபரின் படப்பை போல இதுவும் சிறப்பாக இருக்குமா :


கட்டாயம் சிறப்பாக இருக்கும். ஆனால் அதில் ‌ஈகோ பிரச்சினை மட்டும் வந்துவிட கூடாது.


பலர் சேர்ந்து எழுதும் போது கதையின் முக்கிய இடங்களும் நகர்வுகளும் சிறப்பாக இருக்கும்.


ஆனால் ரிலே ஸ்டோரில் அது இருக்காது.


*******


ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க :


கட்டாயம் சோக காட்சிகளும் திருப்புமுனை காட்சிகளும் தான். நமது வாழ்க்கை அல்லது நாம் சந்தித்த சூழல் வருகின்ற காட்சிகள் நம்மை சில நேரங்களில் சரியாக சிந்திக்க கூட வைக்கும்.


*****


நீங்கள் கதை தேர்ந்தெடுக்கும் முறை :


நம்மை சுற்றி தான். சில நேரங்களில் புகைப்படங்கள், மனிதர்கள், காட்சிகள், செய்திகள், ஏதாவது ஒரு கதையில் படித்த சில வரிகள்.


நாவல்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை என்பது போல தானுங்க.


*******


இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்ல முடியுமா:


அதிகம் வாசிப்புகள் என்னிடத்தில் இல்லை. அதனால் இந்த கேள்வியை கடந்து செல்வது சிறப்பு என்று மனசாட்சியே சொல்லிருச்சு



ஓகே, விட்டு விடலாம்


*****


நீங்கள் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படும் நூல்கள் :


தொடர்ந்து வாசிக்க என்பதை விட முதலில் நான் வாசிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் தற்போது வேலை சுமை அதிகம் என்பதால் இயந்திர வாழ்க்கை வேகமாக ஓடுகிறது


*******


ஒரு எழுத்தாளர் வாசகனை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்:


தரமான படைப்புகளை தந்தாலே போதும். அது எப்படிப்பட்ட வகையாக இருந்தாலும் சரி.


******


தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


பள்ளி காதல் கதைகள் தற்போது உலா வருகின்றன. அதனை முடிந்த அளவு குறைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


படங்கள் வரும்போது எழுதுவதில் தப்பு என்ன என்று சிலர் கேட்கலாம்.


பேசிய வார்த்தைகளை விட எழுதிய வரிகளுக்கு சக்தி அதிகம்.



நிஜம் தான்


*******

 

நீங்கள் எப்போதில் இருந்து கவிதை எழுத

ஆரம்பித்தீர்கள் :


11ம், 12ம் வகுப்பில் புத்தக அட்டையின் பின்புறம் காதல் தோல்வி கவிதைகள் எழுதினேன். அதன்பிறகு பிரதிலிபியில் கவிதைக்கும் இடம் என்று தெரிந்த பிறகும் தான் எழுத ஆரம்பித்தேன்.


******


கவிதை எழுத என்ன தெரிய வேண்டும் :


கவிதைக்கு இது தான் என்ற கோட்பாடுகள் கிடையாதுங்க.


சொல்ல வர்ற விசயத்த எழுத தெரிந்தாலே போதும்.


….


மிக்க நன்றி சகோதரா🙏🙏🙏


உங்களது பதில் எதார்த்தமாகவும் அருமையாகவும் இருந்தன.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை கூறலாம். மற்றவர் அவரது திறமையை வாழ்த்தலாம்.


நன்றி

Comments