ராகவி குமார்

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளராக வரப்போவது ராகவி குமார்...


அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:



பெயர் : கவிதா புனைப்பெயர் : ராகவி


சொந்த ஊர் : சென்னை


படிப்பு : BCS அதற்குபின் மென்பொருள் சம்பந்தமாக நிறைய கோர்ஸ், செர்டிஃபிகேஷனஸ் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


பணி : மென்பொருள் துறையில்


தளம் : mallikamanivaan.com and tamilnovelwriters.com


அமேசான் பெயர்: அமெசானில் இல்லை



*****


உங்களது முதல் படைப்பு : விண்மீன்களின் சதிராட்டம்


*****


தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பது : Story # 5 - தலைப்பை தேடிக்கொண்டிருக்கிறேன்!


*****


மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க: 4


******


உங்களது படைப்புகளின் பெயர்கள் :


     விண்மீன்களின் சதிராட்டம்

     மெல்லத் திறந்தது மனசு

     உயிரின் நிறைவே

     தழலாய் தகிக்கும் நினைவுகள்


*****


உங்களைப் பற்றி சொல்ல முடியுமா :

 

நாவல்கள்தான் என் பிரதான பொழுதுபோக்காக எப்போதும் இருந்திருக்கிறது. எட்டு-பத்து வயதில் அப்பா அறிமுகப்படுத்திய எனிட் ப்ளைட்டனை வாசித்து நாவல்கள் பிடியில் சிக்கியவள் இன்னுமே சிக்கியிருக்கிறேன்.  ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு மணி நேரம் படிப்பேன். அலுவலக பயண நேரம், மதிய உணவு நேரம், இரவு உறங்கும் முன் என்று  எப்போதும் நாவல்தான் என் உலகம். அப்போதெல்லாம் தெரியாது  ஒரு நாள் நானும் எழுதுவேன் என்று. படித்த அத்தனையும் ஏதோ ஒரு வகையில் உள் வாங்கியிருக்கிறேன். அதனாலேயே காட்சி அமைப்புகள் முதல் கதையிலிருந்தே சரியாக வருகிறது என்று நினைக்கிறேன். எழுத ஆரம்பித்த பின்தான் படிக்கும் நேரம் குறைந்திருக்கிறது. அதுவும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இந்த இரு வருடங்கள் பயண நேரம் இல்லாததால் மிகவும் குறைந்துவிட்டது.


   மற்றபடி உங்களைப் போன்றே  வேலை, பிள்ளைகள் , குடும்பம் என்று சமாளித்து வருபவள் :)

 

….


அருமை சிஸ்டர்


*****


எழுத்துலகிற்கு நீங்கள் வந்தது பற்றி சொல்ல முடியுமா :

 

 சரயூ வின் ஒரு கதைக்கு எபிலாக் போட்டி வைத்தார்கள் மல்லிகா மணிவண்ணன் தளத்தில். நான் விரும்பிப் படித்துக் கொண்டிருந்த கதைக்கு 500 வார்த்தைகளில் ஒரு எபிலாக் எழுதினேன். அது மூன்றாம் பரிசு பெற்றது. அதுவே தொடக்கம். விளையாட்டாய் மனதில் தோன்றிய ஒரு கருவுக்கு எழுதுவோமா என்று நினைத்த போது, நான் "சிதறிய நினைவுகளில் எல்லம் உன் பிம்பமே" நாவல் படித்து, கமென்ட் எழுதி தோழியான ஷோபா குமரன் எந்த மென் பொருள் வசதி என்று பிள்ளையார் சுழி போட்டு கொடுத்தார். நான் எழுதியதை படித்து, நன்றாக இருப்பதாக நம்பிக்கை கொடுத்த வரும் அவரே. இப்படித்தான் எழுத்துலகிற்கு நான் வந்தது. ஆனால் அப்படி ஒரு எண்ணமே அதற்கு முன்பு இருந்ததில்லை. அதுவும் தமிழில் எழுதுவேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை.  எனக்கே ஆச்சரியம்தான்.


….


🙂🙂


*****


உங்கள் நாவல்கள் சமூகம், குடும்பம், காதல், நகைச்சுவை இதில் எதைப் பொறுத்து வரும்:


இதுவரை குடும்பம், காதல் , நகைச்சுவை கலந்த நாவல்கள் எழுதியிருக்கிறேன்.  


******


நீங்கள் விரும்பி வாசிக்கும் நாவல்கள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்பீர்கள்:

 

    நான் படிக்கும் கதையின் போக்கு தொய்வில்லாமல், லாஜிக் இடிக்காமல் இருக்க வேண்டும். ஆளுமையான நாயகிகள் கொண்ட நாவல்களை விரும்பி படிப்பேன்.

 

*****


உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:


தனிப்பட்ட முறையில் ஷோபா குமரன், நீலா மணி, சரண்யா ஹேமா FBயில் கலாய்த்துக்கொள்ளும் அளவு :),   ஒரு வழிகாட்டியாக மல்லிகா மணிவண்ணன்.


******


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க :

 

முதல் நாவல் விண்மீன்களின் சதிராட்டம் - திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களாலும், தள வாசகர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் பரிசினை வென்றதனால் எழுத்தாளராக களத்தில் குதித்தேன். எனவே அதையே சொல்கிறேன்.

 


நான் உங்க போட்டிக் கதைக்கு வோட் போட்டு தேர்வு செய்திருந்தேன் சிஸ்டர்🙂🙂🙂


*******


உங்களது நாவலை வாசிக்கும் போது சாதாரண குடும்ப கதையாக இருக்குமா அல்லது அழுத்தம் கலந்த குடும்ப கதையாக படிப்பவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்குமா :

 

முடிந்த வரை மிகையான அழுத்தம் இல்லாமல்தான் என் கதைகளை தந்திருக்கிறேன். 


******


ஒரு தொடர்கதை அல்லது நாவல் எழுத ஒரு எழுத்தாளருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்:


  கதையை சுவாரசியமாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். மிகச் சாதாரணமான கதைக் களம், கதை முடிச்சு இருந்தாலும், சொல்லும் விதத்தில் வாசகரை கட்டிப் போடத் தெரிய வேண்டும். நான் படிக்கும் நாவல்களில் இதை எதிர்ப்பார்ப்பேன், எனவே அதையே சொல்லியிருக்கிறேன். ஆனால் இதற்கு நிறைய விதமான பதில்கள் சொல்லலாம்.


….


கட்டாயம்


******


ஒரு நாவல் எழுத நீங்கள் தேர்ந்தெடுப்பது என்ன:

 

எழுதியிருப்பதே நான்கு நாவல்கள்தான். என்னை நானே இன்னும் சோதித்துக்கொண்டிருக்கிறேன். விண்மீன்களின் சதிராட்டத்தில் கொஞ்சம் காமெடி வர, அதை கதையில் சற்று விரிவாக எழுதினேன். இரண்டாவது கதையில் முதல் அத்தியாயத்தில் இறந்து போன பாட்டியை சுற்றியே, அவர் வாழ்க்கையை சுற்றியே கதையை சுவாரசியாமாக அமைக்க முடியுமா என்று சவாலாக நினைத்து 'மெல்லத் திறந்தது மனசு' எழுதினேன். முதல் கதையை எழுதி, அதே மாந்தர்கள் வைத்து, பத்து வருடங்களுக்கு முன்னால் (pre-quel) மற்றொரு ஜோடியின் கதையை, சுவாரசியமாக கொண்டு போக முடியுமா என்று எழுதியது 'உயிரின் நிறைவே'. ஒரு சின்ன முடிச்சு, ஏன் என்று கடைசி அத்தியாயம் வரை படிப்பவரை யோசிக்க வைக்க ஆசைப்பட்டு எழுதியது 'தழலாய் தகிக்கும் நினைவுகள்'. எல்லாக் கதைகளுக்குமே வாசகர்கள்  தளத்தில் வரவேற்பைத் தந்து ஊக்கமளிக்கிறார்கள். சுய பரிசோதனை முயற்சிகள் தொடரும் !

      


வாழ்த்துகள் சிஸ்டர்


******


போட்டி கதை எழுதிய அனுபவத்தை பற்றி சொல்லமுடியுமா:

 

போட்டி வரப்போவது பற்றித் தெரியாமல் தளத்தில் போட கதையை ஆரம்பித்து, சில அத்தியாயங்கள் எழுதியபின் போட்டி அறிவிப்பு. மல்லிகாவிடம் கதையைப் பதிவிட திரி கேட்க, அவரும் போட்டியில் பதிவிடுமாறு கூறினார். விதிமுறையில் 50000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றிருக்க, நான் யோசித்த கதை 25000 வந்தாலே பெரிய விஷயம். ஷோபா குமரன் இன்னொரு ஜோடியை சேருங்கள் என்று பேசி நம்பிக்கை கொடுத்தார். அப்படித்தான் இரண்டாவது ஜோடியாக ராஜன்-மஞ்சரி சேர்ந்தனர். ஆனால் கதையில் முதல் ஜோடி விக்ரம்-வேதாவையும் மிஞ்சி வாசகர்கள் வரவேற்பைப் பெற்றனர். அவர்கள் கதையைப் பாதி எழுதியபின் தான் இரத்த சம்மந்தம் இல்லையென்றாலும், பெண் கொடுத்த முறையில்  ராஜன் - மஞ்சரி அண்ணன் தங்கை உறவாக வரும் என்று தெரிய வந்தது. அதுவும் எனக்குத் தெரியவில்லை, ஷோபா கண்டு பிடித்து சொல்ல ஒரே டென்ஷன், ஜோடியையும் , உறவையும் மாற்றவும் முடியாது. அறிந்த, தெறிந்தவர்களிடமெல்லாம் சர்வே எடுத்து, சம்பந்தி முறையில் மட்டும்தான் என்றால் திருமணம் செய்யலாம் என்று கூறவும், அதையும் கல்யாணம் எதிர்க்க ஒரு காரணமாக வைத்து, கொஞ்சம் காமெடி கலந்து சுபமாக முடித்தேன்.

 


அருமை சிஸ்டர்


******


போட்டியில் வரக்கூடிய கதைகள் எதை பொறுத்து இருக்கணும்னு நினைக்கறீங்க:

 

எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். சுவாரசியமாக இருக்க வேண்டும். நேர்மறையாக இருக்க வேண்டும். லாஜிக் அடி வாங்காமல் எழுத வேண்டும்.


*******


ஒரு கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு முழுவதையும் டைரியில் எழுதி விட்டு அத்தியாயம் வாரியாக கொடுக்கிறீர்களா அல்லது மனதின் எண்ணங்களை வார்த்தைகளாக கோர்க்கிறீர்களா :


 கதையின் முடிச்சு மட்டும்தான் யோசிப்பேன். எதுவும் எழுதி வைப்பது இல்லை. மனதிலேயே சில காட்சிகள், வசனங்கள் சும்மாயிருக்கும் நேரம் யோசிப்பேன். அதையும் எழுதி வைப்பதில்லை. கதை டைப் பண்ணும்போது என்ன வருகிறதோ எழுதுவேன். பல முறை படிப்பேன். அப்போதும் திருத்தங்கள் அதிகம் இருக்காது. சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறோமா என்பதில்தான் கவனம் இருக்கும். முக்கால்வாசி கதை எழுதிய பின்தான் பதிவிடுவேன். வாசகர்கள் கேள்விகள் பொறுத்து அடுத்து வரும் அத்தியாயத்தில் சில தெளிவுகள் தேவைப்பட்டால் சேர்ப்பேன்.


******


உங்கள் நாவல்களின் அத்தியாயம், வார்த்தைகளை இத்தனைக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்வீர்களா அல்லது கதையின் போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்களா :


 முதல் இரண்டு கதைகள் 1000-1200 வார்த்தைகள் எழுதினேன். வாசகர்கள் டீசர் போல இருக்கு, டீசரில் டீ கூட வரவில்லை என்று கலாய்க்கவும், இப்போதெல்லாம் 1700 -2000 சில நேரம் அதுக்கும் மேலே வருவது போல எழுதுகிறேன். 


******


ஆன்டி ஹீரோ கதைக்கான எதிர்ப்பு, விருப்பம் இதைப்பற்றி ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :


 ஆன்டி ஹீரோ கதைகள் தமிழில் படித்ததில்லை. நிறைய பொங்கல் போஸ்ட் பார்க்கிறேன். ஆங்கில நாவல்கள் ஒன்றிரெண்டு அது போல படித்து பாதியில் விட்டிருக்கிறேன். எனக்குப் பிடிக்கவில்லை.


******


ஒரு நாவலை வாசிப்பவர் அதில் உள்ள logical Mistake மற்றும் காட்சிகளை பொதுவெளியில் விமர்சிக்கும் போது அதற்கான எதிர்ப்பு மற்றும் ஆதரவு பற்றி சொல்ல முடியுமா :


லாஜிக் இல்லை என்பது ஓரிரு அத்தியாயத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு மேல் என்னால் தொடர முடியாது. கடந்து போய்விடுவேன். அதை பொங்கல் போஸ்ட் போட்டு பிரபலப்படுத்த வேண்டாம் என்பது என் எண்ணம்.


இப்படித்தான் ஆனபெல் சேதுபதி மோசமாக பொறுமையை சோதித்தது என்று படித்து படித்து, அதனாலேயே படம் பார்த்து, நானும் நொந்து போனேன். அதைப் பற்றி இவ்வளவு பேச்சில்லாமல் இருந்திருந்தால் பார்த்தே இருந்திருக்க மாட்டேன் !

 


உண்மைதான் சிஸ்டர். ஆனால் அது புரிய வேண்டாமா ஒரு சிலருக்கு…


******


எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை எழுதி முடித்து விட்டு வாசித்து கருத்துகளை தெரிவியுங்கள் என்று கேட்கும் போது அந்த மாதிரி போஸ்ட் கண்ணிலே விழாதவர் போல ரசனையில்லாத படைப்புகளை வாசித்து அதைப்பற்றி Negative விமர்சனம் கொடுப்பது பற்றி ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :


என்ன படிக்க வேண்டும் என்று வாசகர்தான் முடிவு செய்ய வேண்டும். சில சிறந்த படைப்புகள் நீங்கள் சொல்வது போல கவனிக்கப்படாமல் போகிறது, இன்றைய காலகட்டத்தில் மார்க்கெட்டிங் மிக முக்கியம். வாசகர்கள் விரும்பும் கதை களங்களில் முதலில் எழுதி, அவர்களைக் கவர்ந்த பின் சற்று வித்தியாசம் காட்டலாம் என்பது என் கருத்து.

 


நிச்சயமாக


*******


ஒரு நாவலை வாசிப்பது என்பது பொழுதுபோக்கிற்காகவா அல்லது அதுபோல தனக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்காகவா :

 

கண்டிப்பாக பொழுது போக்கு. நல்ல நாவல் அதன் முடிச்சுகளை முடிவுகளைப் பற்றி யோசிக்க வைக்கும். அங்கே நாமிருந்தால் என்ன செய்திருப்போம் என்று சிந்திக்க வைப்பது ஒரு போனஸ்தான்.


******


நேரடியாக நடந்த நிஜ சம்பவத்தை நாவலாக எழுதிய அனுபவம் இருக்கிறதா :

 

இதுவரை இல்லை. சம்பவங்களின் தாக்கம் கொண்டு எழுதியிருக்கிறேன்.


*******

 

ஒரு நாவல் வாசிப்பவர் மனதை சென்றடைய எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும் :

 

சிறந்த கதை சொல்லியாக இருக்க வேண்டும்.

 

******


உங்கள் நாவல்களை வாசித்து வரும் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது :


 கண்டிப்பாக சொன்ன கிழமைகளில் பதிவுகள் தவறாமல் வரும். கதையை பாதியில் நிறுத்த மாட்டேன். நம்பி ஆன்-கோயிங் படிக்கலாம். பெரிதாக அழுத்தம் இல்லாத, சுப முடிவுடன் கூடிய லாஜிக் இடிக்காத கதைகள் தொடர்ந்து வரும் !

 

******


இனி வாசகருக்கான கேள்வி பதில்கள் :


உங்களுடைய முதல் கதை உண்மை கதையா:


திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் வைபவங்களைப் பார்த்த தாக்கத்தால் எழுதியது. உண்மை சம்பவம் இல்லை.


******

உங்களுடைய FB link தர முடியுமா,

நீங்கள் சமூக வளைத்தளங்களில் அதிகம் உங்களை வெளிப்படுத்துவதில்லயா இல்லை எனக்குத் தான் உங்களை தெரியவில்லையா :


I am not active in social media....no insta, twitter or FB personal page ma

ரொம்ப யோசனைக்கு அப்பறம்தான் Rakavi என்னோட pen name la open seithen…

 ******

கிரைம் நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா : - 

 

மனதில் ஒரு கரு இருக்கிறது. என் மகள் கிரைம் நாவல் எழுதச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அதற்கு மெனக்கெட்டு தகவல்கள் திரட்ட வேண்டும். சீக்கிரமே எழுதுவேன் என்று நினைக்கிறேன்.


*****


அன்றைய எழுத்தாளர்களின் நாவல்களை வாசிக்கும் போது நிறைய தகவல்கள், வார்த்தைகளின் வடிவமைப்பு, காட்சிகள் நம் விழிகளுக்கு புலனாகிறது. ஆனால் இப்போது எழுதுபவர்களிடம் அப்படி எதிர்பார்க்க முடிகிறதா :


அப்போது கூகிள் இல்லை. அதனால் அந்தத் தகவல்கள் முக்கியமாக இருந்தது. இப்போது தகவல்களை சுருக்கமாக கதைப் போக்கில் சொல்லி, கீழே வலைதளத்தின் சுட்டியை கொடுத்துவிடலாம். பக்கம் பக்கமாக விவரிக்கத் தேவையில்லை.


வார்த்தைகளின் வடிவமைப்பு, காட்சிகள் காலத்திற்கேற்ப மாறுகிறது. கம்பர் எழுதிய காட்சிகள் விழிகளுக்குப் புலனாகியது என்று அதையே அளவுகோலாக வைக்கமுடியுமா?  இரண்டு வரி ஹைக்கூவிற்கும் அதே சக்தி இருக்கிறது. அதனால் இந்த ஒப்பீடே கூடாது என்பேன். என்ன இப்போது நிறைய குப்பைகள் இருப்பதால், ஒளிந்திருக்கும் மாணிக்கங்களை தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக மாணிக்கங்களே இல்லை என்று சொல்லிவிடமுடியாதில்லையா?


******


Vijayasanthi questions:

1.ஒரு ரைட்டருக்கு அவங்க தான் அவங்களோட முதல் வாசகியா இருக்கனும். அப்பதான் அவங்களோட நெகட்டிவிட்டி இருந்தா அவங்களே தெரிஞ்சுக்க முடியும். ஸோ உங்க கதை எழுதிமுடிச்சதும் ஒரு வாசகரா நீங்க அதைப் படிக்கும்போது என்னத் தோனும். எதாது ஒரு இடத்தில மாத்தி எழுதிருக்கலாமோனு தோனிருக்கா....


இன்னும் ஒரு அத்தியாயத்தை சரியாக கணித்து எழுத எனக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். முதல் நாவலுக்கு இப்போது நான்காவது நாவலில் இந்த விஷயத்தில் சற்று முன்னேற்றம் இருப்பது போல தோன்றுகிறது. வாசகர்கள்தான் சொல்லவேண்டும். ஆனாலும் Chapter Planning இன்னும் சரியாக செய்யவில்லை என்றுதான் படுகிறது.


எந்த நாவலுமே தளத்தில் முழுமையாக பதித்துவிட்டபின் படிக்கவில்லை. அதற்கு முன்னர் பல முறை படிப்பேன். கண்டிப்பாக இன்னும் நேர்த்தியாக எழுதலாம், வார்த்தைகளை யோசித்து இன்னும் கவனமாக கையாளலாம், ஆங்கில வார்த்தைகளை குறைக்கலாம் என்று பல 'லாம்'கள் என் லிஸ்ட்டில் இருக்கிறது!


*******


2. இதுவரை நீங்க எழுதுன நாலு கதையும்கொஞ்சம் பிரச்சினைகளான களம்.. ஆனா எல்லாமே நிதர்சன வாழ்க்கைல நடக்குறது.. எப்படி இந்த மாதிரி கதைக் கருவைத் தேர்ந்தெடுக்றீங்க.


கதையின் முடிச்சு எனக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும். யோசிக்கும்போதே காட்சிகள், வசனங்கள் நிறைய தோன்ற வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே தேர்வு செய்வேன்.


*******


3. நீங்க எழுதின முதல் கதையே ஐம்பது கதைகளுக்கு நடுவுல முதல் மூனு இடத்துக்குள்ள வந்திருக்கு... அந்த வெற்றியை நீங்க எப்டி ஃபீல் பண்ணீங்க..


ரசிகர்களின் கடைசி பத்து நாவல்களில் என்னுடையது இருந்தால் போதும். அதுவே வீட்டில் இருப்பவர்களின் கேலியிலிருந்து தப்ப வைக்கும் என்ற அளவில்தான் யோசித்திருந்தேன். அது நடந்ததுமே, இது போதும் என்று சந்தோஷம். அடுத்து திரு. இந்திரா சௌந்தர்ராஜன் படிக்கப் போகிறார் என்ற போது பயம்தான். அவர் ஒவ்வொரு நாவலாக விமர்சனம் செய்ய, பேராசிரியர் வகுப்பில் வினாத்தாளை வைத்து, நாம் எழுதியதைப் படித்துக் காட்டி விமர்சனம் செய்யும் போது படும் அவஸ்தை. என் நாவலுக்கு அவர் நல்லதாகவே கூறியதும், அதுவே மகிழ்ச்சி. மூன்றாம் பரிசு என்றதும் செம்ம சந்தோஷம். நான் மனதில் பரிசுக்குரியவை  என்று தேர்ந்தெடுத்ததில் ஒன்று மட்டுமே அவருடன் ஒத்துப் போனது. நான் எனக்கு கொடுத்துக்கொண்ட ராங்க் ஐந்து. என்னவோ, அவருக்கு ராஜன்-மஞ்சரி ஜோடியைப் பிடித்து விட்டது :) எனக்கு ஒரு அங்கீகாரத்தையும், இன்னும் எழுத வேண்டும் என்று ஒரு உத்வேகத்தையும் கொடுத்தது அந்த வெற்றி.


******


நீலா மணி கேள்வி : எந்த மாதிரியான கதைகள் எழுத உங்களுக்கு விருப்பம் ?


முன்பு சொன்னது போல கொஞ்சம் க்ரைம் பக்கம் எட்டிப் பார்க்க ஆசை இருக்கிறது. நன்றாக வந்தால் தொடரலாம். இன்னும் என்னை நானே சோதனை செய்யும் முயற்சியில் தான் இருக்கிறேன். என்னவெல்லாம் செய்ய முடிகிறது என்று பார்க்கலாம் :) வேறு ஜானர் கதைகள் எழுத நிறைய தகவல்கள் திரட்ட வேண்டும். அதற்கான கால அவகாசம் இல்லை. இந்த க்ரைம் நாவலுக்கே, நான் கேட்ட மாதிரியான வேதிப் பொருளை என் மகள்தான் வலைதளத்தில் தேடி எடுத்துக் கொடுத்தாள். ஆனால் இன்னும் நிறைய தகவல்கள் இல்லாமல் எழுதவே ஆரம்பிக்க முடியாது. அதனால் பெரிதான தேடல் இல்லாத கதையையே தற்சமயம் கையில் எடுத்திருக்கிறேன்.


******


ஸ்னேகா ஸ்ரீதரன் கேள்வி:

எந்த எழுத்தாளர் உங்களைக்  எழுதத் தூண்டியவர், அல்லது உங்கள் குரு?


எழுதுவேன் என்றே தெரியாது, அதனால் எழுதத் தூண்டியவர் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. Judith McNaught புத்தகங்கள் விரும்பிப் படிப்பேன். எதாவது ஒரு பக்கத்தில் கதையை படிக்க ஆரம்பித்தாலும் அப்படியே நம்மை உள்ளே இழுத்துவிடும் தன்மை உண்டு அவர் எழுத்திற்கு. Patricia Cornwell, Fredrick Forsyth, Vince Flynn என்று ஒவ்வொரு ஜானருக்கும் ஒவ்வொருத்தர் பிடிக்கும். இவர்கள் அளவுக்கெல்லாம் என்னால் எழுத நினைக்கக்கூட முடியாது, அதனால் படித்து மட்டுமே மகிழுவோம்.


******


நீங்கள் சமீபத்தில் படித்து ரசித்த நாவல்கள் -


செப்டம்பர் மாதம் பிடித்துப் படித்தது -

ஷோபா குமரனின் -  வா...காதோரம் காதல் சொல்ல

க்ஷிப்ரா எழுதிய - நியமனம்

நீலா மணி - நெடு நல் வாடை உன் நேசம்

ரேணுகா முத்துக்குமார் - ஆலோலம் பாடும் கிளிகள்


******


100வது நாவலாக இருந்தாலும் இந்த ஒரு விஷயம் உங்கள் நாவலில் இருக்கும் என்றால் அது என்ன?


100 நாவல்கள் எழுதுவேன் என்று நீங்கள் நினைப்பதே சந்தோஷம். கண்டிப்பாக லாஜிக் இருக்கும். நேற்மறையான கதைப் போக்கு இருக்கும். எது மாறினாலும், இந்த இரண்டு விஷயங்கள் என் அடிப்படை நம்பிக்கை. எனவே அது மாறாது என்று தைரியமாகச் சொல்லலாம்.


******


எழுதுவது தவிர நீங்கள் வேறு எதில் சிறப்பாக இருக்கிறீர்கள் ?


இன்டெர்னெட்டில் ரேடியோக்கள் வருவதற்கு முன்னர், 90களின் கடைசியில் ஆன்லைன் ரேடியோக்கள் சிலது புகழ் பெற்றிருந்தது. அதில் ஒன்று மோகன்குமார்ஸ்.காம். அதற்கு ரேடியோ ஜாக்கியாக, அரை மணி நேரம் ஒரு மணி நேரம் எதாவது ஒரு கான்செப்ட் எடுத்து அதைப் பற்றி பேசி, இடையில் பாட்டுக்கள் வரும்படி அமைத்து ஒலிப்பதிவு செய்து அனுப்புவேன். அதில் கேட்பவர்களிடம் இருந்து நிறைய பாராட்டு ஈமெயில்கள் வந்தது, இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுவும் செய்து பார்ப்போமே என்று செய்த முயற்சிதான் !


 நிறைய மேடை நிகழ்ச்சிகளுக்கு முன்பு தொகுப்பாளினியாக இருந்திருக்கிறேன். இப்போது செய்வதில்லை.


….


மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏 


உங்களுடைய பதில்கள் ஒவ்வொன்றும் அருமையாகவும், நிதர்சனத்தை உரைக்கும் விதமாகவும் இருந்தது. 


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்களாக இருந்தால் அது பற்றிய கருத்துக்களை முன்வையுங்கள். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்துங்கள்.



Comments