#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ரிஷா
அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ :
பெயர் : ரிஷா (புனைப்பெயர்) உண்மையான பெயர் நூர் நிஷா
சொந்த ஊர் : மலைக்கோட்டை மாநகரம்
படிப்பு : B.SC ,B.Ed
பணி : Teacher
தளம் : தற்போது எந்த தளத்திலும் எழுதவில்லை.கதை எழுதுவதில் ஒரு பெரிய இடைவெளி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அமேசான் பெயர்: ரிஷா
*****
உங்களது முதல் படைப்பு : சந்தோசச் சாரல் நீயே
******
தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பது :
உன் காதல் என் காவியம் பாகம் 2 (ஒன்றரை வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.கதையை முடிக்கும் சூழ்நிலை இல்லையாதலால் கிடப்பில் இருக்கிறது)
*****
மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க:
8 நாவல்,3 சிறுகதைகள் ,2 குறு நாவல்கள்
******
உங்களது படைப்புகளின் பெயர்கள் :
1.சந்தோசச் சாரல் நீயே
2.முன்ஜென்மத் தேடல் நீ
3.யாரும் இல்லை இவ(ன்)ள் போலே
4.மனம் மயக்கும் மயிலே
5.உயிரினும் ஓம்பப் படும்
6.குடியிருக்க நான் வரலாமா?(சிறுகதை)
7.மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு(குறு நாவல்)
8.அஞ்சுவது பேதைமை (சிறுகதை)
9.மந்திரக்காரி மாயக்காரி (சிறுகதை)
10.கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு (குறு நாவல்)
11.உயிர்த்தேடல் உன்னாலே
12.உன் காதல் என் காவியம்
13.காதல் அளபெடை
14.உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் (அமேசானில் 4 அத்தியாயம் மட்டும் இருக்கும்)
....
அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
*******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
நான் ஒரு கணித ஆசிரியை. கணக்கு வகுப்புக்குள் நுழைந்திட்டாலே எனக்குள்ள இருக்க ஸ்ட்ரிக்டான ஆசிரியர் வெளிய வந்துடுவாங்க.கடைசி நிமிஷம் வரை பாடம் நடத்தி கொலல மாட்டேங்குற ஒரே காரணத்துனால என் க்ளாசை பசங்க கட் அடிக்க மாட்டாங்க.
அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி, அமைதியின் சிகரம்னு நிறைய பேர் சொல்வாங்க. அப்பப்போ பிக்காசோவும் பிரபுதேவாவும் எனக்குள்ள வந்துட்டு போவாங்க.
தோல்வியை சந்திச்சா கொஞ்ச நேரம் வருத்தப்படுவேன். அச்சோ தோத்துட்டேன்னு அழுது பிரண்டுட்டே இருக்க மாட்டேன்.ஜெயிச்சா தலைக்கணத்தை தலைல வச்சுக்க மாட்டேன். எப்பவும் 'இதுவும் கடந்து போகும்' என்கிற தாரக மந்திரத்தை மனசுல வச்சுக்கிட்டு அமைதியா கடந்துடுவேன்.
...
அருமை சிஸ்டர், ரொம்ப சரியா சொன்னீங்க. எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் இருப்பது சிறப்பு
*****
நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் :
தனிமையில் இனிமை காண தான். எனக்குன்னு நான் உருவாக்கிக்கிட்ட இந்த உலகத்துல என்னை விட சந்தோஷமா யாரும் இருக்க முடியாது. 24 மணி நேரமும் என் கதை மாந்தர்கள் என்னை அவங்களை பற்றியே நினைக்க வச்சிட்டு இருப்பதால் இப்போதெல்லாம் தனிமை தன்னந்தனியாக என்னை விட்டு தள்ளி நின்னுட்டு இருக்கு.
*****
உங்கள் முதல் படைப்பை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
சந்தோசச் சாரல் நீயே தான் என் முதல் கதை. வாசகர்கள் கிட்ட என்னை ஒரு எழுத்தாளரா பதிய வச்ச கதை. நிறைய சொதப்பி இருந்தாலும் வாசகர்கள் என்னை தட்டி குடுத்திட்டே இருந்தாங்க. அதுனால தான் அடுத்தடுத்து எழுத முடிஞ்சது. ப்ராப்பர் கமா, கொட்டேஷன் இல்லாம நான் பாட்டுக்கு எழுதி வச்சிருப்பேன். ட்விஸ்டுங்குற பேர்ல புஸ்வானமெல்லாம் அந்த கதைல வந்து இருக்கு. ஆனா வாசகர்கள் அதை பெரிதுபடுத்தாம அதுல இருக்க நிறைகளை மட்டும் எடுத்துக்கிட்டு பாராட்டினாங்க. முகநூல், தளம்னு அந்த கதைக்கு வந்த விமர்சனமெல்லாம் ரொம்ப சந்தோஷத்தை குடுத்தது. அடுத்த கதை எழுதுவதற்கும் பெரிய ஊக்கம் குடுத்தது.
...
நிஜம் தான் சிஸ்டர் . வாசகர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதமாக படைப்புகளை வழங்கினால் அதற்கான பலன் உடனே கிடைத்து விடுகிறது.
******
உங்கள் படைப்புகளை வாசிக்கும் வாசகர்களை உங்கள் எழுத்தின் மூலம் திருப்தி படுத்தியிருக்கிறீர்களா:
இதை வாசகர்கள் கிட்ட தான் கேட்கனும். என்னளவில் எனக்கு திருப்தியான படைப்புகளை தான் நான் வாசகர்கள் கிட்ட கொடுப்பேன். ஏன்னா என் கதைக்கு நான் தான் முதல் வாசகி. அப்படிங்குறப்போ எனக்கு திருப்தி தர்ற படைப்புகளை தான் அவங்களுக்கு கொடுப்பேன். அவங்க திருப்தி அடைஞ்சாங்களான்றதை அவங்களோட விமர்சனம் மூலமா தான் தெரிஞ்சுக்க முடியும்.
...
கட்டாயம்
*****
உங்கள் வாசகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது :
வேற என்ன சரியான சமயத்தில் கதையை முடிப்பது ஒன்றை மட்டும் தான் அன்றும் இன்றும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பது. கடந்த இரண்டு வருடமாக நான் கதையை முடிக்கவில்லை. அது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினாலும் என் சூழ்நிலையை புரிந்து கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களின் காத்திருப்புக்காகவாது நான் சீக்கிரம் கதையை முடிக்கனும்.
*****
நீங்கள் ஒரு நாவல் எழுதுவதற்கு முன்பும் பின்பும் செய்வது என்ன:
நாவல் எழுதுவதற்கு முன்பு அந்த கதை எப்படி வர வேண்டும், எங்கெல்லாம் பயணிக்க வேண்டும் என்பதை ஒரு அவுட்லைனாக வைத்துக் கொள்வேன். முழுதாக கதை எழுதி அப்டேட்ஸ் போடுவதெல்லாம் எனக்கு வராது. இத்தனை அத்தியாயங்களில் முடித்து விட வேண்டும் என்பதை பிக்ஸ் செய்து கொண்டு தான் எழுத துவங்குவேன். கதையை முடித்த பிறகு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து காத்தாட கட்டிலில் படுத்து உறங்கி விடுவேன். வாசகர்கள் விமர்சனம் மூலம் தட்டி எழுப்புவார்கள் அவ்வளவு தான்.
*****
உங்களுடைய முதல் கதைக்கு கிடைத்த பாராட்டு விமர்சனத்தைப் பற்றி சொல்லமுடியுமா:
முதல் கதைல ஹீரோயின் ஸ்கூல் படிக்குறதுல இருந்து தான் கதையே ஆரம்பிக்கும். அவங்களோட பள்ளி கலாட்டாக்களை எல்லாம் வாசகர்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் படித்து பாராட்டினார்கள். முக்கியமாக பள்ளி பருவத்திலேயே காதல் வருவதைப் போல எழுதாததற்கு சிறப்பு பாராட்டு பல தரப்பிலிருந்தும் கிடைத்தது.
*****
போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
ஆம். முதலில் கலந்து கொண்ட போட்டியில் பாதியிலேயே கதையை முடிக்க முடியாமல் வெளியேறி விட்டேன். அடுத்து கலந்து கொண்ட போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். சகாப்தம் தளத்தில் வண்ணங்கள் சிறுகதை போட்டியில் முதல் பரிசும், சங்கமம் தள போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளேன்.
*****
நீங்கள் எழுதும் படைப்புகளில் நிஜ சம்பவங்களின் தாக்கம் அதிகமாக இருக்குமா அல்லது நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாக இருக்குமா :
ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் கதையை உருவாக்குவேன். அதில் கற்பனையும்,நிஜமும் சரிவிகிதத்தில் கலந்து இருக்கும்.
******
விமர்சனங்களில் நெகடிவ் வந்தவுடன் பொங்குபவர்களை பற்றிய உங்களது கருத்து:
கருத்து சொல்ற அளவு நான் கருத்து கந்தசாமியெல்லாம் இல்லீங்க. இப்போலாம் கருத்து சொன்னா கந்தல் ஆக்கி தான் விட்டுடறாங்க. என்னுடைய புரிதலை மட்டும் சொல்றேன்.
பொங்கல் என்பது விமர்சனங்களை கையாள்பவர்களை பொறுத்தது. நாம் யாரையும் நீ இப்படி செஞ்சிருக்கலாம் அப்படி செஞ்சிருக்கனும் என்று சொல்ல முடியாது. அவர்கள் சூழ்நிலை எப்படியோ, மைண்ட் செட் எப்படியோ அப்படி தான் அவர்களின் எதிர்வினை இருக்கும். சிலர் சென்சிடிவ்வாக இருப்பார்கள். நெகட்டிவ் விமர்சனம் அவர்களை பாதித்திருக்கும். அதை பொறுக்க முடியாமல் பொங்கி எழுவார்கள். பொங்கியதும் அவர்களின் மன அழுத்தம் சற்று குறையும். இது பொங்கியவரும் பொங்கல் வாங்குபவரும் மட்டும் பேசி தீர்த்துக் கொண்டால் சுபம். இந்தப் பக்கம் பத்து பேர் அந்தப் பக்கம் பத்து பேர் என்று களம் இறங்கினால் கட்டதுரைக்கு கட்டம் சரியில்லாமல் போய்விடும். எழுத்தாளருக்கோ வாசகருக்கோ ஆதரவு தருகிறேன் என்று தான் களம் இறங்குவார்கள். ஆனால் அது யாரோ ஒருவரால் திசை திருப்ப பட்டுவிடும். பிறகு பொங்கலுக்கு பொங்கல், எசப்பொங்கல், சைட் பொங்கல் என்று பொங்கலோ பொங்கலாக போய் படிப்பவர்களை பொங்கி பொங்கி குமுற செய்து விடும். நானும் பொங்கல் வைத்திருக்கிறேன்,வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அதையே வாரக்கணக்காக செய்தது இல்லை.
என்னுடைய 'முன்ஜென்ம தேடல் நீ ' கதையை தெலுங்கு டப்பிங் கதை மாதிரி இருக்கு, நந்தினி சீரியல் பார்த்து எழுதினீங்களா, ஹிந்தி சீரியல் கதையை ஏன் காப்பி அடிக்கிறீங்க? என்று நான்கைந்து விமர்சனம் வந்தது. பத்தி பத்தியாக பொங்கி விளக்கம் அளிக்காமல் நீங்க சொன்ன அந்த ஹிந்தி ,தெலுங்கு ,நந்தினி சீரியல் &படத்துக்கான லிங்க்கை கொடுத்தீர்கள் என்றால் அடுத்த பாகம் எழுத மிகவும் உதவியாக இருக்கும் என்று ரிப்ளை செய்தேன். ப்ச் அவர்களுக்கு எனக்கு உதவ மனம் இல்லை போலும். கடைசி வரை லிங்க் மட்டும் தரவே இல்லை.
நெக்ட்டிவ் விமர்சனம் வந்தால் உடனே 'அது எப்படிடா நீ என்னை பாத்து அப்படி சொல்லலாம்?' என்று கவுண்டரை போல் கன்னத்திலேயே போடாமல், என்ன சொல்ல வருகிறார்கள் என்று பாருங்கள். ஏற்புடையதாக இருந்தால் பதிலளியுங்கள்.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் எழுத்தாளரையோ,வாசகர்களையோ காயப்படுத்தி விமர்சனம் போட்டால் உங்கள் ஸ்டைலில் திருப்பி கொடுங்கள்.
....
👌👌👏👏👏👏 சபாஷ் அட்டகாசமான விளக்கம்.
அதிலும் அந்த லிங்கை கொடுத்தால் அடுத்த பாகம் எழுத உதவியாக இருக்கும் என்றீர்களே அது அருமையோ அருமை.
*****
நீங்கள் எழுதிய நாவல்களில் உங்களுக்கு பிடித்தது எது அதைப் பற்றி சொல்லமுடியுமா:
எல்லாம் ஒவ்வொரு விதத்தில் பிடித்தது தான். அதில் 'முன்ஜென்மத் தேடல் நீ ' கொஞ்சம் ஸ்பெஷல். இன்றுமே அவினாஷ், தியாவை பற்றி என்னிடம் பாராட்டாதவர்கள் இல்லை எனலாம். தலைப்பிலேயே அது என்னவிதமான கதை என்று புரிந்திருக்கும். முன்ஜென்மம் இன்றைய காலகட்டம் என்று கதையை விவரித்ததில் தான் என்னாலும் இப்படி எழுத முடியுமா என்று கண்டு கொண்டேன். நான் முதன் முதலில் எழுதிய மிக நீள நாவலும் இதுதான்(56+K words).மிகவும் ரசித்து எழுதிய கதை.
...
பெயர் வித்தியாசமாக தெரிந்ததால் பிரதிலிபியில் பார்த்தேன். ஆரம்பமே அருமையாக இருந்தது. அந்த அத்தியாயம் முடியும் இடத்தில் கொடுத்திருந்த கவிதை மிகவும் அழகு. கட்டாயம் வாசிச்சுட்டு சொல்றேன்.
*****
உங்கள் நட்பில் உள்ள எழுத்தாளர்கள் :
நிறைய பேர் இருந்தார்கள். இப்பொழுது
பலரிடம் தொடர்பிலே இல்லை. ஆனால் என் டோலி துமி நான் செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் ராக்கெட்டில் வந்து என்னை துலாவி கண்டுபிடித்து விடக்கூடியவள். அவளுடன் மட்டும் நட்பு தொடர்கிறது.
******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படும் எழுத்தாளர்:
இப்பொழுதெல்லாம் யாருடைய கதையாக இருந்தாலும் இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் நான் வாசிப்பது கிடையாது. என்னமோ வாசிப்பில் ஒரு தேக்கம் வந்து விடுகிறது. எதிர்காலத்தில் ஆசைப்படலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது.
******
ஆன்டி ஹீரோ கதைகளுக்கு வரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றிய உங்களது கருத்து:
அவங்கவங்களுக்கு பிடிச்சதை அவங்க செய்றாங்க.யாருடைய ரசனையிலும் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது. பிடிச்சா படிங்க, பிடிக்காட்டி கடந்து போயிடுங்க அவ்வளவு தான் என்னைப் பொறுத்தவரை!
....
நிஜம் தான். ஆனால் பொறுமையாக முழுசும் படிச்சுட்டு பொங்கலோ பொங்கல் போடுவதை பார்க்கிறப்போ சிரிப்பும் கடுப்பும் கலந்தே வந்திடுது🤣🤣
******
ஆன்டி ஹீரோ கதை என்றால் எப்படி இருக்கனும்னு நினைக்கறீங்க:
முதலில் ஆன்டி ஹீரோன்னா யாருன்னு தெளிவான ஒரு விளக்கம் எனக்கு கிடைக்கனும். அப்புறம் தான் அது எப்படி இருக்கனும்னு சொல்ல முடியும். ஆனா ஆன்டி ஹீரோ கதைங்கற பேர்ல மன வக்கிரத்தை கொட்டுறதா மட்டும் இருக்க கூடாது.
..
நிச்சயமா . ஆணை முரடனாக காட்டி பெண்ணை அவனுக்கு அடிமைப்படுத்துவது போலவும், அவனுக்காக ஏங்க விடுவது போலவும், தவறான காட்சிகளையும் ஒரு சிலர் இணைப்பதால் அந்த ஹீரோவுக்கு மட்டுமல்ல , கதை எழுத ஆசைப்படும் எழுத்தாளருக்கும் கெட்ட பெயர் தான் கிடைக்கிறது.
******
உங்கள் நாவல்களில் கவிதை, வர்ணனை கலந்து எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இருக்கிறது.என் முதல் கதை 'சந்தோசச் சாரல் நீயே' வில் எழுதினேன். அதன் பிறகு கவிதையும் வரவில்லை, வர்ணனையும் வரவில்லை.
******
நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :
எஸ். பொதுவாக முப்பது அத்தியாயத்திற்குள் முப்பதாயிரம் வார்த்தைகளுக்குள் முடிச்சிடனும் என்று தான் எழுதுவேன்.சில நேரங்களில் 2 எபி அல்லது 2000 வார்த்தைகள் கதைக்கேற்ப அதிகமாகி இருக்கும்.
******
உங்களது படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது:
லவ் யூ சோ மச் என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? எப்பொழுது கதை போட்டாலும் படித்து ஆதரவு தருபவர்களுக்கு அன்பை அள்ளித் தருவது தானே முறையாகும்!
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம் :
சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை சகோதரி.
******
எழுத்தாளனின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும். அதை வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் என்ன விதமான உணர்வுகள் மனதில் தோன்ற வேண்டும் :
அந்த கதைக்குள் நம்மையும் ஒருவராக பயணிக்க வைக்க வேண்டும். அதன் தாக்கம் ஒரு நாளாவது நம் மனதில் இருக்கும். வார்த்தை கோர்ப்புகள்,சொல்லாடல்கள் இவற்றுக்கெல்லாம் முக்கிய பங்கு உண்டு.
எழுத்துப் பிழைகள், இடைவெளியில்லா உரையாடல்கள், நிறுத்தற்குறியீடுகள் இல்லா பத்திகள் படிப்பவரை நிச்சயம் வெறுக்க வைக்கும்.
...
அழகான பதில்
****
போட்டி கதைகளில் பங்கு பெற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :
முதலில் கலந்து கொண்ட போட்டியில் சரியான திட்டமிடல் இல்லாமல் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்ட வார்த்தை அளவுகளில் கதையை முடிக்க முடியாது போனது.
ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில்
சரியான திட்டமிடல் வைத்திருந்தேன். சங்கமம் தளத்தில் பெயர் வெளியிடாமல் சென்ற வருடம் நடந்த போட்டியில் பங்கு பெற்றேன். அது ஒரு த்ரில்லான அனுபவம்.நம் கதையை பாராட்டும் போது பதிலளிக்க முடியாமல் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்ததெல்லாம் 'எரிமலை எப்படி பொறுக்கும் 'மொமன்ட் தான் .
...
🤣🤣🤣
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
ரமணிசந்திரன், அமுதவல்லி கல்யாண சுந்தரம், காஞ்சனா ஜெயதிலகர் ,ஸ்ரீ கலா மற்றும் பலர் .முக்கியமாக திருமதி துமி. காதலர்களை சேர்த்து வைக்காமல் கல்தா கொடுப்பதில் இவர் வல்லவர்.
...
நானும் துமி சிஸ்டரோட ஒரு நாவல் வாசித்தேன். ரொம்ப அருமையாக இருந்தது. பாவம் ஜோடிகளை பிரிச்சுட்டாங்க
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
என் எழுத்தில் முதிர்ச்சி வந்து விட்டதா என்றால் இல்லை எனலாம். ஆனால் முதல் கதைக்கும் 13 வது கதைக்கும் நிச்சயம் பெரிய வித்தியாசம் உண்டு. ஒவ்வொரு கதையின் போதும் வாக்கிய அமைப்பு, வசன அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் முன்னேற்றம் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். கல்லாதது இன்னும் உலகளவு உண்டு தானே.
....
கட்டாயம்
******
சிறுகதைக்கும், குறுங்கதைக்கும் உள்ள வித்தியாசம் என்ன :
ஒரு அத்தியாயம் எழுத செலவிடும் நேரத்தில் ஒரு சிறுகதை எழுதி விடலாம்.குறுங்கதை ஜவ்வாக இழுக்காமல் சொல்ல வந்ததை ஷார்ட் அண்ட் க்ரிஸ்பியாக எழுதி முடித்து விடலாம்.
******
உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:
அனைத்து ஜானர்களிலும் எழுதி விட்டேன். எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும். முழு நீள வரலாற்று நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்பது விருப்பம்.
...
வாவ்!! அருமையான பதில் சிஸ்டர். எனக்கும் கூட...
*****
நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
சமீபமாக எழுதிய 'காதல் அளபெடை' பற்றி சொல்கிறேன். அதிகம் மெனக்கெடாமல் ,சிரமப்படாமல் எழுதிய கதை. இஸ்லாமிய கலாச்சாரத்தை லேசாய் எடுத்துக்
கூறியிருப்பேன். அன்பு,நம்பிக்கை உறவுகளுக்குள் எவ்வளவு முக்கியம் என்பதை இக்கதையில் கூறியிருப்பேன். 'ஜின்' என்ற அமானுஷ்யம் பற்றி சொல்லியிருப்பேன். ஜின்னை அடிப்படையாக வைத்து ஒரு சீரிஸ் எழுத வேண்டும் என்பது அவா. இறைவன் நாடினால் அடுத்த ஆண்டு சீரிஸ் வரும்.
...
உங்கள் ஆசை நிறைவேறிட என்னுடைய வாழ்த்துகள்
*****
உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்களது உணர்வு, வீட்டார் உணர்வு என்ன மாதிரி இருந்தது:
'மனம் மயக்கும் மயிலே' கதை நான் முதன் முதலில் புத்தகமாக வந்தது. வாசகர்கள் புத்தகம் வாங்கி போட்டோ ஷேர் செய்யும் போது குளுகுளுவென்று இருக்கும். ஆனால் இன்றுவரை வீட்டிற்கு நான் கதை எழுதி புத்தகம் போடுவது தெரியாது. அம்மாவிற்கு மட்டும் லேசாக தெரியும். மற்றபடி என் எழுத்துப் பயணத்தில் குடும்பத்தினரின் ஊக்குவிப்பு என்பது இல்லை. ஹா ஹா என்றாவது ஒருநாள் அவர்களிடம் சொல்ல வேண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒரு கதாபாத்திரமாக வைத்து கதைகள் எழுதி வாசகர்களை
உங்களை பாராட்டவும்,திட்டவும் வைத்திருக்கிறேன் என்று 😛
...
🤣🤣🤣
******
கற்பனை காட்சியும் வருணனையும் அதிகமாக கலந்து எழுதப்படும் நாவல் வாசிக்கும் போது என்ன மாதிரி உணர்வை தோற்றுவிக்கும் :
எனக்கு இப்பொழுது வர்ணனை சலிப்பை தருகிறது. கற்பனை காட்சியை
ஓரளவு உள்வாங்கி கொள்வேன். மற்றபடி எழுத்தாளரின் எழுத்தாளுமையில் தான் நாவல் வாசிக்கும் போது வர்ணனையம்
கற்பனையும் சுகமான அனுபவத்தையோ அல்லது எப்பொழுதடா முடியும் என்ற உணர்வையோ தரும்.
*****
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
இப்பொழுது இல்லை.இனி வருங்காலங்களில் உதயமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.
******
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதில்கள் ஒவ்வொன்றும் அத்தனை அருமையாகவும், என்னை ஒத்த குணாதிசயம் உள்ளதை போலவும் இருந்தது.
மேலும் பல படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர் அது பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம். மற்றவர் வாழ்த்தலாம்.
நன்றி
Comments
Post a Comment