செல்வா செல்வசங்கரி

 



#எழுத்தாளர் அறிமுகப்படலம்


சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் செல்வ சங்கரி அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ:


பெயர் :  செல்வ சங்கரி

சொந்த ஊர் : நெய்வேலி

படிப்பு : இளம் அறிவியல் வேதியியல்…  ஆர்வத்தின் பேரில் முதுகலை தமிழ். 

பணி :  குடும்பத் தலைவி.  வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையை கணவரோடு இணைந்து பார்த்துக் கொள்கிறேன். 

தளம்: sm novels தளம்

அமேசான் லிங்:https://www.amazon.com/Selvasankari-Selva/e/B089WDH36H%3Fref=dbs_a_mng_rwt_scns_share

SM Site link :https://forum.smtamilnovels.com/index.php?categories/selvasankari.713/

தற்போதைய நாவலின் பெயர் & லிங் :  ஆழி சூழ் நித்திலமே. 

உங்களது புத்தகம் கிடைக்கும் இடம் : MS Publication. 

****

இதுக்கு முன்பு எத்தனை நாவல்கள் புத்தகமாக மாறி இருக்கு:  

இதுவரை இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 

****

உங்களது முதல் படைப்பு : முதல் சிறுகதை_  வாழ்க்கைப் பக்கங்கள். 

முதல் குறுநாவல்_ தொடுவானம் தொடுகின்ற நேரம். 

முதல் நெடுநாவல்_ என் சுவாச காற்றே.


*****


மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க:

இரண்டு குறுநாவல்கள், மூன்று நெடுநாவல்கள், நான்காவது நெடுநாவல் இன்னும் முற்றுபெறவில்லை. 


****


உங்களது படைப்புகளின் பெயர்கள் :

குறுநாவல்கள்:

*தொடுவானம் தொடுகின்ற நேரம். 

*உருகிடும் உயிர்மெய்கள். 

நெடுநாவல்கள்:

*என் சுவாசக் காற்றே

*என் ஜீவன் நீயடி

*உயிர் காதலே உனக்காகவே

*ஆழி சூழ் நித்திலமே (முற்று பெறவில்லை) 

சிறுகதைகள்:

*வாழ்க்கை பக்கங்கள்

*தீர்வுகள் புதிது. 

அருமை. அழகான பெயர்கள்


*****


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

என் பெயர் செல்வசங்கரி. பிறந்தது வளர்ந்தது படித்தது அனைத்தும் கடலூர். திருமணமாகி வந்தது நெய்வேலி. 

குடும்பத்தலைவி.  கணவரோடு இணைந்து தொழிலையும் கவனித்துக் கொள்கிறேன். 

கல்லூரி பயிலும் மகனும் பள்ளி இறுதி பயிலும் மகளும் இருக்கின்றனர். 

எனக்கு வாசிக்கும் ஆர்வம் அதிகம். 

எழுத வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. 

அதற்கு முன்பிருந்தே நாவலுக்கு பிழைதிருத்தம் செய்து வருகிறேன். 

****

நீங்கள் எப்போதில் இருந்து கதை எழுத

ஆரம்பித்தீர்கள் :

நான் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. 

Sm  தளத்தில் குறுநாவல் போட்டியில்தான் முதல் முறையாக நாவல் எழுதினேன்.


****


நாவல் எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்:

நல்ல கற்பனை வளமும்…  மனதில் நினைப்பதை வார்த்தைகளாக கோர்க்கும் திறனும் இருந்தாலே போதும் நாவல் எழுதி விடலாம்… 

 பிழையற்ற தமிழும் அடிப்படை தமிழ்  இலக்கணமும்  கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.


****

நாவல்களில் வரக்கூடிய பிழைகள், வார்த்தை கோர்வு பற்றிய உங்களது கருத்து:

வார்த்தைக் கோர்வும் எழுத்துநடையும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மாறுபடும். சிலருடைய எழுத்துநடை இலகுவாக இருக்கும்…  சிலரது எழுத்து நடை வாசிக்கக் கடினமாக கதையோடு ஒன்ற முடியாதபடி இருக்கும். 

வாசகர்களின் ரசனையும் எழுத்துநடையில் மாறுபடும். அதாவது எனக்குப் பிடித்த எழுத்துநடை எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல  நிறைய பேர் ரசிக்கும் நாவலின் எழுத்துநடை எனக்கு ஒத்துவராமல் போகலாம்… 

ஆனால் வார்த்தை, வாக்கியப் பிழைகள் என்பது வேறு. 

பொதுவாக வார்த்தைகளைத் தட்டச்சு செய்யும் போது கட்டாயம் பிழைகள் வரத்தான் செய்யும்.  தமிழில் புலமை பெற்றவர் எழுதுவதில் கூட ஒன்றிரண்டு பிழைகள் இருக்கதான் செய்யும்… 

ஆனால், நாம் எழுதுவதை இரண்டு மூன்று முறை வாசித்துப் பார்த்தாலே போதும் பிழைகளை ஈசியாக களைந்துவிட முடியும். 

றர , லளழ, னண, வேறுபாடு புரியாமல் சிலர் பிழைகள் செய்வதை பார்க்கிறேன்…  இதனைத் தவிர்க்க  செய்தித்தாள் வாசித்தாலே போதுமானது. சில மாதங்களிலேயே ஓரளவுக்கு எந்தெந்த வார்த்தைகளுக்கு எந்தெந்த எழுத்து வரும் என்பது பிடிபட்டுவிடும். 

(தற்போது வரும் ஆன்லைன் நாவல்கள் நிறைய பிழைகளோடு வருவதால்தான் செய்தித்தாள் வாசிக்கச் சொல்கிறேன். பழைய புத்தக நாவல்களைக் கூட வாசிக்கலாம்.) 

சிலர்,   ஒருமை பன்மை, இடம், பால் வேறுபாடுகளைக் கூட தவறாக  எழுதுகின்றனர்.  வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தாமல் தப்பும் தவறுமாக தமிழை எழுதுகின்றனர். 

இவையெல்லாம் படிக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பெரும்பாலான வாசகர்கள் இப்படிப்பட்ட எழுத்துகளை வாசிக்க விரும்புவதில்லை.  இதனால் அடிப்படை தமிழ் இலக்கணம் தெரிந்த பிறகு எழுதுவதே நல்லது. 

இப்பொழுது நிறைய பேர் புதிதாக எழுத வருகிறார்கள். அவர்களது ஆர்வம் மகிழ்ச்சி தந்தாலும். அவர்களது தமிழ் வேதனையளிக்கிறது. 

எழுதுவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவு தமிழை நன்கு பிழையின்றி எழுதக் கற்றுக்கொள்வதிலும் காட்டினால் அருமையான படைப்புகளை அவர்களாலும் தர முடியும். 

….


நிஜம் தான் சிஸ்டர் ரொம்ப அருமையான கருத்து. நானும் அப்படி தான் நினைப்பதுண்டு. கதையோட்டம் அருமையாக இருந்தாலும் ஒரு சிலரது எழுத்து நடை தேர்ச்சி பெற்றதாக தெரியவில்லை. "..." உள்ளேயும், வெளியிலும் ஒரே போன்ற நடையை கையாள்கின்றனர். அது வாசிப்பதற்கு சலிப்பாகவே இருக்கிறது. சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதனால் போகட்டும் என்று விட்டு விட வேண்டியாக இருக்கிறது.

பேச்சு நடையில் இலக்கணம் கலந்து வருவது, ரசனையை குறைக்கும் விதமாகவே அமைகிறது.


*****

ஒரு நாவலில் கதைக்கரு, வருணனை, கவிதை, சந்தி, ஆச்சர்ய குறி, கமா, Quato என்று நிறைய இருக்கிறது. இவற்றின் பங்கு பற்றி சொல்ல முடியுமா :

நாவலில் முக்கிய பங்கு வகிப்பது கதைக்கரு…  எடுத்துக்கொண்ட கதைக்கருவில் இருந்து விலகாமல் கதை சொல்வதே தனிக்கலை. 

கதைக்கருவுக்கு சம்பந்தமே இல்லாத காட்சியமைப்பு தவிர்க்கப்பட வேண்டும். 

வருணனைகள் கவிதைகள் கதைக்குப் பொருத்தமாய் அளவோடு இருத்தல் வேண்டும். 

இலக்கண சுத்தமாய் சந்தி உபயோகித்து எழுதாவிட்டாலும், தேவையான இடங்களில் சந்திப்பிழை இன்றி எழுத வேண்டும்…  சந்திப்பிழை சில இடங்களில் வார்த்தைகளையே பிழையாக்கிவிடும். 

!? “, ;, போன்ற குறியீடுகளை சரியான இடங்களில் பயன்படுத்தி எழுதும்போது வாசிப்பதற்கு நன்றாய் இருக்கும்.  இந்த குறியீடுகளை சரியாக பயன்படுத்தாமல் எழுதினால் வாசகர்களை கதைக்குள் உணர்வோடு ஒன்றிப் படிக்கவைக்க முடியாது. 


****


'.....' இதற்குள் வருவதற்கும் "...." வருவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது:

‘… ‘  இக்குறியை மனதில் நினைக்கும்படியான வசனங்களுக்கு…  அதாவது கதாபாத்திரம் வாய்விட்டுச் சொல்லாத வசனங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். 

“… “  இந்த குறியீடு கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கு பயன்படுத்த வேண்டும். 

இவற்றை முறையாக பயன்படுத்துவதால் எழுத்தாளர் விளக்கம் அளிக்கும் பகுதியையும் உரையாடல் பகுதியையும் வேறுபடுத்திக் காட்ட முடியும். 

அது நாவலை படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். 

…..

நிச்சயமாக. அருமை சிஸ்டர்


****

நாம் சொல்ல வருகின்ற விஷயத்தை வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப சொல்வதெப்படி:

ஒரு முழு நாவலில் அனைத்து உணர்வுகளுமே கலந்து இருக்க வேண்டும்…  நகைச்சுவை , சோகம், கோபம்,  காதல் உணர்வுகள் என அனைத்துமே கதாபாத்திரத்தின் வழியாக படிக்கும் வாசகர்கள் உணரும்படியாக இருக்க வேண்டும். 

உணர்வுகளை வாசகர்களுக்கு கடத்துவது கைவந்தாலே நாம் சொல்ல வருவது வாசகர்களை சரியாக சென்றடையும். 


****


உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

கடந்த ஒரு வருடமாக எழுத முடியாத  குடும்ப சூழல். 

 ஒரு நாவலையும் பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும் இப்போதுவரை அந்த நாவலைப் பற்றி வாசகர்கள் கேட்கும்போது மனது மிகவும் மகிழ்ச்சி அடையும். 

இத்தனை பேர் நம் எழுத்தை விரும்பி படித்திருக்கின்றனர். இவ்வளவு நாட்கள் கழித்தும் மறக்காமல் நினைவு வைத்து கேட்கின்றனர் என்பது மகிழ்வாக இருக்கும்…  அதேநேரத்தில் சற்று குற்றவுணர்வாகவும் இருக்கும்.  

அதுவே நாவலை நல்ல முறையில் விரைவில் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். 

ஆயிரக்கணக்கான நாவல்களுக்கு மத்தியில் பாதியில் விட்டுப்போன ஒரு நாவலை நினைவு வைத்து கேட்பதே எனக்கான அங்கீகாரமாக நினைக்கிறேன்… 

விரைவில் அந்த நாவலை முடித்து விடுவேன். 

நிஜம் தான் சிஸ்டர்.


*****


நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த  ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

நான் எழுதிய காட்சிகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் என் மனம் கவர்ந்தவைதான்.  இந்த கேள்வியை வாசகர்களிடம் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். 

****


நீங்கள் நாவல் எழுத என்னென்ன தேர்ந்தெடுக்கறீங்க:

கதைக்கருவை முதலில் யோசித்துக் கொள்வேன்…  அது பெரும்பாலும் செய்தித்தாளில் வந்த ஏதேனும் ஒரு செய்தியின் தாக்கமாகத்தான் இருக்கும். 

அந்த செய்தியின் உண்மைத்தன்மை, அந்த செய்தி குறித்த விரிவான தகவல்களை இணையத்தில் தேடி சேகரிப்பேன். 

பின்னர் அந்த கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் , கதை நடக்கும் சூழல், எத்தனை அத்தியாயங்கள் வர வேண்டும் என்பது போன்ற விஷயங்களை சாட் போல குறித்து வைத்து பிறகுதான் எழுத துவங்குவேன். 

*****


பள்ளி காதலை மையாக வைத்து எழுதப்படும் நாவல், திரைப்படம் பற்றிய உங்களது கருத்து :

நிறைய திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கிறது.  வரம்பை மீறாமல் ஏதேனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கதையாய் இருந்தால் பரவாயில்லை, அதைவிடுத்து  இனக்கவர்ச்சியையும் பொருந்தா காதலையும் மட்டுமே மையப்படுத்தும் கதைகளை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. 

நிஜம் தான். நானும் கூட

****


இன்றைய சமூகத்தினர் உணர்வு பூர்வமாக வாசிக்கும் படியாக நாம் எப்படி பட்ட கதையை கொடுக்க முடியும் :

நகைச்சுவை கலந்த கதைகள் நிறைய வாசகர்களை சென்றடைவதை காண முடிகிறது.  

எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் நகைச்சுவை கலந்து கூறும்போது வாசகர்கள் சலிப்பு தட்டாமல் படிக்க முடியும் என்று நினைக்கிறேன். 

நிஜம் தான்.

*****


திகில், அமானுஷ்யம், பேய், போலீஸ், கிரைம் டாக்டர், வக்கீல் இது போல கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

திகில் அமானுஷ்யம் எழுத ஆசை உள்ளது…  வருங்காலத்தில் எழுதுவேன். 

போலீஸ், க்ரைம் திரில்லர் வகை ஒன்று முயன்றிருக்கிறேன். உயிர் காதலே உனக்காவே…! 

ஓரளவு வாசகர்கள் ஆதரவை பெற்ற நாவல் அது. 

****


உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

😀😀 வேறென்ன சொல்லுவேன்…  நான் எழுதுவது மிகக் குறைவுதான்…  அதைத் தொடர்ந்து வாசித்து ஊக்கம் கொடுங்கள் என்றுதான் சொல்லுவேன். 

****

எதற்காக நீங்கள் எழுத்துலகை  தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:

எனக்கு சிறிய வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் உண்டு.  அதை ஏற்படுத்தியது என் அம்மா. கோகுலம் கதிர், அம்புலி மாமா, சிறுவர்மலர் போன்ற இதழ்களை வாசிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். 

தமிழை தங்குதடையின்றி கற்றுக் கொள்ள வாசிக்கும் பழக்கம் மிக முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். 

பின்னர் இளவயதில் நாவல்கள் வாசிக்கும் பழக்கம் என் சகோதரியிடமிருந்து வந்தது. ராஜேஷ் குமார் நாவல்களைத் தேடித்தேடி வாசிப்போம் இருவருமே. 

திருமணம் ஆன பிறகு வாசிக்கும் பழக்கம் சற்று மட்டுப்பட்டது. வெளியே சென்று விரும்பிய புத்தகங்கள் வாங்கும் சூழல் எனக்கு அமையவில்லை. 

கணவர் எதை வாங்கி வருகிறாரோ அதை வாசிக்க வேண்டும். இல்லையென்றால் வெளியூர் செல்லும் நாட்களில் கண்களில் படும் அத்தனை புத்தகங்களையும் வாங்கி வந்து வைத்து வாசிக்க வேண்டும். 

என் சகோதரி சேர்த்து வைக்கும் புத்தகங்களையும் ஊருக்குப் போகும்போது மொத்தமாக அள்ளி வருவேன். 

என் பிள்ளைகள் சற்று வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு, முதன்முதலில் இணையத்தை என் மகன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினான். 

இதில் நீங்கள் விரும்பும் எந்த புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம் அம்மா என்று கூறி அவன் இணையத்தில் தேடித் தரும் புத்தகங்களைப் படிப்பேன். ஆரம்பத்தில் தானாகத் தேடிப் படிக்கக்கூட பயம்…  எதையாவது வீணாக்கி விடுவோமோ என்று. 

பிறகு ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு ஒவ்வொரு தளமாக தேடிச்சென்று படிப்பேன். 

அப்படி படிக்கும்போது சஷிமுரளி அவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு வீணையடி நீ எனக்கு தொடரை வாசிக்க ஆரம்பித்தேன். 

அந்த நேரத்தில் எனக்கு நிறைய முன்னாள் வாசகர்கள் இந்நாள் எழுத்தாளர்கள் நட்பு கிடைத்தது. அவர்களின் மூலம் புத்தகங்களுக்கு ப்ரூஃப் ரீடிங் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. 

பிறகு தளத்தில் விளையாட்டாக கலந்துகொண்ட சிறுகதை போட்டியில் நான் எழுதிய கதையை சிறந்த கதை என்று பானுமதி ஜெயராமன் அம்மா தேர்ந்தெடுத்ததுதான் நான் எழுத வந்ததற்கு முக்கிய காரணம். 

என்னாலும் எழுத முடியும் என்று பல தோழிகள் அப்போது தந்த ஊக்கம்தான் எழுத்துலகுக்கு நான் வரக்காரணம். 

..

அழகான காரணம்

****


எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன.

இதுவரை பெரிதாக எதையுமே சாதிக்கவில்லை. 

****


உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது செய்தி இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா :

சமூக அவலங்கள் ஏதேனும் ஒன்றை சுட்டிக் காட்டியிருப்பேன். ஆனால் அது கதையோடு இணைந்து வருவது போல காட்சிகளை அமைத்திருப்பேன். 

எந்தவிதமான சமூக கருத்தும் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப நாவல் ஒன்றும் எழுதியிருக்கிறேன். (என் ஜீவன் நீயடி)

****

 

ஒரு நாவலை வாசிக்கும் வாசகர் அதில் எதிர்பார்ப்பது என்ன :

மனநிறைவு.  இதை ஏன்தான் வாசித்தோமோ என்று வாசகர் எண்ணி (நொந்து) விடாதபடி நாவல் இருக்க வேண்டும். 

****


நாவல் எழுதும் போது உள்ளத்தில் உதிப்பதை எல்லாம் எழுதி விட முடியாது. அப்படி கடினப்பட்டு யோசித்து எழுதுவது, எதனால் வாசகர்களை சரியான முறையில் சென்றடையாமல் இருக்கிறது: 

காட்சிக்கு முகம் கை கால்கள் உண்டு. 

அதாவது ஒரு காட்சியை அமைக்கும்போது அது நடைபெறும் இடம், அதில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வெளிப்படுத்த விரும்பும் கருத்து ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும்…  இல்லையெனில் காட்சி வாசிக்கும் வாசகனின் கருத்தைப் போய் சேராது. 

 முக்கியமாக அந்த காட்சி கதைக்குத் தேவையானதாக இருக்க வேண்டும்.  வெறுமனே அன்றாட நடவடிக்கைகளான உண்பது உறங்குவது போன்ற காட்சிகளே அடிக்கடி வரும்போது அந்த நாவல் அவ்வளவு ரசிக்கப்படுவதில்லை. 

நாவலின் முதல் ஒன்றிரண்டு அத்தியாயங்களிலேயே கதையை குறித்த எதிர்பார்ப்பை வாசகர்கள் மனதில் கொண்டு வரத் தெரிய வேண்டும்.  ஆரம்ப அத்தியாங்கள் ஈர்க்காவிட்டால் வாசகர்களை கதையோடு கட்டிப்போடுவது கடினம். 

நானும் அப்படி நினைப்பதுண்டு

*****

உங்களது கனவு லட்சியம் என்ன:

அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. 

எனக்கு வயது நாற்பது. எழுத வந்து இரண்டு மூன்று வருடங்கள் மட்டுமே ஆகிறது. உறவினர்கள் அல்லாத சிலருக்காவது இன்று என்னை, என் பெயரைத் தெரியும். அதற்கு காரணம் என் எழுத்து. 

கிட்டத்தட்ட முப்பத்தியைந்து வருடங்களுக்குப் பிறகு எனக்காக என் விருப்பம் சார்ந்து  நான் உருவாக்கிக்கொண்ட அடையாளம் இந்த எழுத்து. இதை கடைசிவரை தொடர வேண்டும். இதுமட்டுமே என் ஆசை. 

*****


SM தளத்தில் எழுதிய போட்டி கதையை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :

நகைச்சுவையாக குறுநாவல் எழுத வேண்டும் என்பதுதான் போட்டியே. 

கலந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது. 

பிரியங்காவும் கலந்து கொள்ளுங்கள் என்று கூறவும் கலந்துகொள்வோம் என்று முடிவு எடுத்தேன்.  ஆனால் நகைச்சுவை எல்லாம் நமக்கு வராது என்பது எழுத முயற்சிக்கவுமே தெரிந்து போனது. 

நான் தேர்ந்தெடுத்த கதைக்கருவும் நகைச்சுவைக்கு சற்றும் சம்பந்தமில்லாத கதைக்கரு. 

“எனக்கு நகைச்சுவை எழுத வரவில்லை. மாறுதலாக சோகமான கதை எழுதலாமா?” என்று கேட்டேன்.

உங்களுக்கு விருப்பமானதை எழுதுங்கள் என்று பதில் வரவும் தொடுவானம் தொடுகின்ற நேரம் நாவலை எழுதினேன்.  

என்னுடைய முதல் நாவல் முயற்சி அது. 

அனைவரும் நகைச்சுவை எழுதியபோது  நான் எழுதிய சோகமான முடிவு கொண்ட அந்த நாவலுக்கு நிறைய விமர்சனங்கள். 

நாவல் நன்றாக இருந்தபோதும் முடிவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று… 

இப்போதும் நெருங்கிய தோழிகள் அந்த நாவலைக் குறிப்பிட்டுத் திட்டுவதுண்டு என்னை.  

*****


உயிர் காதலே உனக்காகவே நாவலை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

நிறைய யோசித்து எங்கும் லாஜிக் மீறல் வந்துவிடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து எழுதிய நாவல்.  

திரில்லர் வகை நாவல்.  கதைக்கு தனியாக பிளாஷ்பேக் வைக்காமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் டைரிக் குறிப்பு வருவது போல எழுதியிருந்தேன். அது என் முதல் முயற்சி. 

 முதல் கதாநாயகன் கதாநாயகியை விட இரண்டாம் கதாநாயகன் நாயகிதான் வாசகர்கள் மனதில் நன்கு பதிந்தனர். 

அந்த நாவலுக்கு நிறைய வாசகர்களிடம் இருந்து பாராட்டும் கிடைத்தது. 

*****

 வாசகர்களுக்கான கேள்வி பதில்கள் :

வணக்கம் ஆத்தர் ஜி,  தங்களின் கதை பாதியில் நிற்கிறது, அதை எப்போது நிறைவு செய்ய உள்ளீர்கள்? (குஹப்பிரியா) 

சீக்கிரம் நிறைவு செஞ்சிடுவேன் குஹா…  இன்னும் என்னை நினைவு வைத்திருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. 

****


செல்வ சங்கரி சிஸ்டர் எஸ் எம் சைட்ல ஒரு கதை எழுதி இருந்தீர்கள். மீனவர் கதை. அது முடிந்து விட்டதா.(Banu Devi) 

இல்லப்பா,  இன்னும் சில அத்தியாயங்கள் இருக்கின்றன நிறைவுற…  விரைவில் நிறைவு பெறும் பா…  

****


 நீங்கள் எழுதிய நாவல் பெயர்கள் வேண்டும்: ( Viji Kanna) 

குறுநாவல்கள்:

*தொடுவானம் தொடுகின்ற நேரம். 

*உருகிடும் உயிர்மெய்கள். 

நெடுநாவல்கள்:

*என் சுவாசக் காற்றே

*என் ஜீவன் நீயடி

*உயிர் காதலே உனக்காகவே

*ஆழி சூழ் நித்திலமே (முற்று பெறவில்லை) 

****


உங்கள் பொழுது போக்கு என்ன :

பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது, பாடல்கள் கேட்பது,  சோஷியல் மீடியாவில் வலம் வருவது. 

****


நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க. உங்க ஊர் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளைப் பற்றி கதையில் வெளியிட்டு இருக்கீங்களா :

நான் இருப்பது நெய்வேலி. 

பிறந்து வளர்ந்தது கடலூர். எனது முதல் நாவலான என் சுவாச காற்றே முழுவதுமாக கடலூரில் நடக்கும் படியாக கதைக்களம் அமைத்திருப்பேன்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னும் கடலூர் மாவட்டத்தைப் பற்றிய சிறப்பான தகவல்களைத் தந்தேன். அது மிகவும் வரவேற்பை பெற்றது. 

****


வரலாற்று நாவல் எழுதும் ஆவல் இருக்கிறதா :

நிச்சயமாக… ஆவல் இருக்கிறது. ஆனால் அதற்கான ஆயத்தங்களை இன்னும் எதுவும் செய்யவில்லை.  நல்ல கதைக்கரு அமைந்தால் வரலாற்று புதினங்கள்  சார்ந்த தெளிவைப் பெற்ற பிறகு எழுத ஆரம்பிப்பேன். 


*****


மிக்க நன்றி சிஸ்டர்🙏

உங்களது அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ்டர். உங்களது பதில்கள் மிகவும் அருமை.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


நன்றி நட்புக்களே


Comments