#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு (142)
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ஜன்னத் பர்வீன் அவர்களைப் பற்றிய நேர்க்காணல் இதோ:
உங்கள் பெயர் : ஜன்னத் பர்வீன்
ஊர்: சென்னை
படிப்பு : பி.ஏ (ஆங்கில இலக்கியம்)
பணி : இல்லத்தரசி
தளம் : எஸ்.எம் தமிழ் நாவல்ஸ்
அமேசான் லிங் : -
******
உங்களது முதல் படைப்பின் பெயர் :
❤️கானல் நீராய் என் காதல்
*****
தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங்:
❤️காதல் அடைமழை காலம்
லிங்க் :
*****
நீங்கள் எழுதிய மொத்த படைப்புகள் எத்தனை :
❤️நாவல்கள் - 3
சிறுகதைகள் - 8
*****
உங்களது படைப்புகளின் பெயர்கள் :
நாவல்கள்
01. கானல் நீராய் என் காதல்
02. சாக்லேட் பாய்
03. காதல் அடைமழை காலம் ( ஆன்கோயிங்)
சிறுகதைகள்
01. காதல் கொண்டேன் (
தினத்தந்தி குடும்ப மலர் இதழில் வெளிவந்தது)
02. செல்லமே
03. படி தாண்டும் பத்தினிகள்
04. பிரியாத வரம் வேண்டும்
05. காதலை உணர்ந்தேன்
06. ஒரு குட்டி கதை
07. Magical cave (கல்லூரி காலத்தில் எழுதியது)
08. ரசகுல்லா ( கல்லூரியில் நடந்த போட்டியில் இரண்டாம் பரிசை வென்றது)
…
அருமை சகோதரி
*****
உங்களைப் பற்றி சொல்ல முடியுமா :
❤️ நான் ஒரு இல்லத்தரசி. இரு குட்டி தேவதைகளின் தாய். சிறு வயதிலேயே படிக்கும் பழக்கம் அதிகம். பதார்த்தம் கட்டி வரும் துண்டு காகிதத்தை கூட விடாமல் படிப்பேன். கற்பனை திறனும் அதிகம். அதனாலேயே எழுதும் ஆர்வமும் வந்துவிட்டதென நினைக்கிறேன். என்னுடைய எழுத்தார்வத்துக்கு தீனி போட்டது என் ஆங்கில இலக்கிய பாடங்கள் தான். எந்த பாடத்தையும் நான் மனபாடம் பண்ணி எழுதியதில்லை. என்னியல்பிலேயே எழுதுவேன். கதை எழுவதின் அடிப்படை விதிகளை நான் படிக்கும் போது கற்றுக் கொண்டேன். என்ன தான் ஆங்கில இலக்கியம் படித்தாலும் தமிழ் தான் என் உயிர்மொழி. என்ன தான் ஆங்கிலத்தில் பேசினாலும் நம் உணர்வுகளை துல்லியமாக உணர்த்துவது தமிழ் தான் என நினைப்பேன். ம்.... இன்னும் என்ன சொல்வது.... நல்ல சமைப்பேன். ஆனால் அது திருமணத்திற்கு பின்பு தான். அதுவரை என கைகள் அதிகம் புழங்கியது பேனாவை தான்.
…
அருமை
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
❤️ எழுத்து அனுபவம் என்பது அலாதியானது. கல்லூரி காலத்திலேயே எழுத ஆரம்பித்து விட்டாலும் இணையத்தில் எழுத துவங்கியது திருமணத்திற்கு பிறகு தான். எழுத ஆரம்பித்து விட்டால் சுற்றி நடப்பதே மறந்துவிடும். என்னையுமறியாமல் கதைக்குள் சென்று அந்த கதாபாத்திரமாகவே மாறிவேன்.மிக குறைந்த படைப்புகளை மட்டுமே கொடுத்திருந்தாலும் அந்த அனுபவம் எனக்கு எல்லையில்லா மனநிறைவை தந்திருக்கிறது
*****
நீங்கள் எழுத்துலகிற்கு அடி எடுத்து வைத்ததன் காரணம் :
❤️காரணம்னு கேட்டா என் கற்பனை திறன் தான் . நான் கதை எழுத சிறு பொறி போதும். ஒரு வார்த்தை, ஒரு சம்பவம், ஒரு சிறு உரையாடல் என்னுள் ஒரு நாவலையே உருவாக்கிவிடும். அப்படியான நான் இணையத்தளத்தில் கதை படிக்க ஆரம்பித்ததும் என்னுடைய எழுதும் ஆர்வம் மேலோங்கியது. வளர் எழுத்தாளர்களுக்கு நம் வாசகர்கள் கொடுக்கும் ஊக்கத்தை கண்டு தைரியமாக எழுத்துலகில் அடி எடுத்து வைத்துவிட்டேன்.
…
நல்லது
*****
உங்க அப்பா எழுத்தாளர்னு சொல்லியிருக்கீங்க. எந்த நேரம் எழுத்துலகில் இருந்தாங்க. அவங்க படைப்புகளின் பெயர்கள் என்ன :
❤️என் தந்தை தாதன்குளம் நூர்தீன் என்ற பெயரில் 80-90 களில் எழுதினார்கள். மின்மினி, பாக்யா போன்ற பத்திரிகைகளில் எண்ணற்ற சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். போட்டி கதைகளில் பரிசுகள் பெற்று ஜெயித்திருக்கிறார்கள். அப்போது நான் சிறுமி என்பதால் எல்லா படைப்புகளின் பெயர்களும் நினைவில்லை. எனினும் கேட் நைன், சேலையோடு ஒரு பயணம் போன்றவை நினைவிருக்கிறது.
*****
உங்க அப்பாவிடம் இருந்து நீங்க கற்றுக் கொண்டது என்ன? அவரது நாவலை வாசித்திருக்கும் நீங்க அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
❤️அப்பாவிடம் கற்றுக்கொண்டது அதிக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். எளிமையான நடையிலேயே எழுதுவார்கள். அப்பா சிறுகதைகள் தான் எழுதியிருக்கிறார்கள் அவை பெரும்பாலும் பொதுவெளியில் நடக்கும் சம்பவங்கள் பற்றியே இருக்கும்.
*****
நீங்கள் எழுத வந்த பிறகு உணர்ந்ததென்ன :
❤️ எழுத்துலகில் நான் நிற்பது மிக சிறிய புள்ளி. இந்த பரந்து விரிந்த உலகில் நான் பயணிக்க வெகு தூரம் இருக்கிறது. ஆனால் அதற்கு என் உழைப்பு மிக மிக குறைவு.
….
நாட்கள் நிறைய இருக்கின்றன சகோதரி, வெற்றிக்கனியை எட்டும் நாள் மிக விரைவில் வரும். சோர்ந்து விடாமல் தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள்.
*****
உங்கள் படைப்புகளை வாசித்த பெற்றவரின் மனநிலை:
❤️ என் கதைகள் சுவராசியமாக, நல்ல மனநிலையை கொடுக்ககூடிய கதைகள் என்றே பெரும்பாலும் கூறியிருக்கிறார்கள்.
*****
படிப்பதும், படித்து கொடுப்பதும் மிகவும் பிடித்த வேலை என்று சொல்லி இருக்கீங்க. குட் படிப்பதாலும், கொடுப்பதாலும் ஏதாவது கிடைப்பதாக நினைக்கிறீர்களா :
❤️ஆம், படிப்பதால் விஷயங்களை புதிய கோணத்தில் அணுகும் வழக்கமும்,
சிந்திக்கும் திறனும், படித்து கொடுப்பதால் அறிவுக்கான தேடலும், மனநிறைவும் கிடைக்கிறது.
…
நிஜம் தான்
*****
வேலூர் உங்களுடைய பிறந்தகம். உங்கள் பிறந்தகத்தைப் பற்றி நாவலில் எழுதியிருக்கீங்களா :
❤️இல்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை.
*****
வேலூருக்கும், சென்னைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டிலும் வெகுவாக உங்களை கவர்ந்ததாக எதை நினைக்கிறீங்க:
❤️ சென்னையில் நாம் வாழுமிடம் ஒரு புள்ளி. ஆனால் வேலூரே ஒரு புள்ளி தான். சென்னையில் சுற்றுலா தளங்களும், உணவு விடுதிகளும் என்னை கவர்ந்தவை என்றால் வேலூரில் சி.எம்.சி மருத்துவமனையும், தரமான கல்வி நிறுவனங்களும் எனக்கு பிடித்தவை. என்ன தான் சென்னையில் நவீன மருத்துவமனைகள் இருந்தாலும் என் நம்பிக்கைக்குரியது சி.எம்.சி மருத்துவமனை தான். எங்க ஊரு உணவு வகைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜீரக சம்பா பிரியாணி,இனிப்பு வகைகள் இங்கு பிரசித்தம்.
…
'சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா'ன்னு சும்மா பாடவில்லை நம்ம இளைய ராஜா சார்🙂🙂🙂
*****
உங்க அப்பா நீங்க எழுத வந்த பிறகு கொடுத்த ஆலோசனை என்று ஏதாவது உண்டுமா :
❤️எதையும் சுருக்கமாக அதே சமயம் சுவாரஸ்யமாகவும் எழுத வேண்டும் என்பார்கள்.
*****
கல்லூரி காலங்களில் கவிதை எழுதிய அனுபவம் இருப்பதாக சொல்லியிருக்கீங்க. கவிதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்:
❤️கவிதை எழுத எதையும் ரசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
*****
நீங்கள் எழுதிய கவிதைகளில் ஏதாவது ஒன்று பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா :
❤️பூ- நீ சூடும் வரை அது மணப்பதில்லை
கனி- நீ சுவைக்கும் வரை அது இனிப்பதில்லை
கனவு- நீ வரும் வரை அது ரசிப்பதில்லை
மழை- நீ நனையும் வரை அது குளிர்வதில்லை
நான்- நீ காதலிக்கும் வரை அது நானில்லை
கல்லூரி காலத்தில் நான் எழுதிய கவிதை இது. என் அடுத்தடுத்த கதைகளில் இடைபெறலாம்.( அதுக்குள்ள விஷமிகள் திருடாமல் இருக்கணும்.)
…
வாவ், சூப்பர்!! சகோதரி அருமை
*****
சிறுகதை எழுதிய அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
நாவலை விட சிறுகதை எழுதுவது தான் எனக்கு சற்று சிரமம். அதற்கு தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வேன்.
*****
சிறுகதை எழுத என்ன தெரிய வேண்டும் :
❤️கதைக்களமும், வார்த்தைகளும் சுருக்கமாகவும் அதே நேரம் ஆழமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும்.
*****
நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள வித்தியாசம் என்ன :
❤️ஒரு பக்க கதையில் ஓராயிரம் உணர்வுகளை உள்ளடக்க தெரிந்திருக்க வேண்டும்.
*****
இரண்டும் எழுதும் முறை, வார்த்தைகள் எத்தனையில் முடிவு பெறும்:
❤️நாவலில் அதிக கதாபாத்திரங்களும், கிளை கதைகளும் இடம்பெறும். அதற்கு துவக்கமும் முடிவும் வேண்டும். சிறுகதையில் அப்படி எழுத தேவையில்லை ஒன்றோ இரண்டோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் போதும். அது ஒரு சம்பவத்தையோ, காட்சியோ கொண்டதாக இருக்கும். வார்த்தைகள் 10000 ல் இருந்து 30000 வரை இருக்கலாம்.( இது என் அனுமானம் மட்டும்)
*****
சஸ்பென்ஸ் கலந்த குடும்ப நாவல் மட்டும் எழுதி இருப்பதாக சொல்லும் நீங்க உங்க கதைக்கரு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
❤️எனக்கு குடும்ப கதைகள் ரொம்ப பிடிக்கும். குடும்ப உறவுகளின் உணர்வுகளோடு பிணைந்த கதைகளே நான் தேர்ந்தெடுக்கும் முறை.
*****
உங்கள் கதைகளில் எது வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்டதும், கருத்து பரிமாற்றங்களால் உங்களை மகிழ்ச்சியடைய செய்ததும் ஆகும் :
❤️அது கண்டிப்பாக காதல் அடைமழை காலம் கதை தான். நான் எதிர்பாராத வரவேற்பையும், பின்னூட்டங்களையும், வாசக நட்புகளையும், ஊக்கத்தையும் கொடுத்தது.
*****
உங்களுக்கு கிடைத்த வாசகர், பற்றிய கருத்து :
❤️ அச்சச்சோ..... இது சற்று கடினமாக கேள்வி தான். எனக்கு கிடைத்த அனைத்து வாசகர்களும் பொக்கிஷம் தான். நான் வருட கணக்கில் கதையை இழுத்தாலும் என்னை உற்சாகபடுத்தும் வாசகர்கள் என்னுடைய வரம். எனினும் சித்ரா சரஸ்வதி தோழியும், மீனா வெங்கட் தோழியும் என்னை அதிகம் ஊக்கபடுத்துவதோடு ஒவ்வொரு எபிக்கும் சிறு விமர்சனமாவது தருவார்கள். ப்ளீஸ்.... மற்றவர்கள் மன்னிச்சூ....
...
தவறாக நினைக்காதீர்கள் வாசக நட்புகளே, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் யாராவது ஒரு சில வாசகர்கள், மிகச் சிறந்த ஊக்கம் அளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களது எழுத்துலகில் அதற்கு பிறகு எத்தனை வாசக நட்புகள் வந்தாலும் மறக்க முடியாது. அதனால் தான் கேட்டதும், அவங்க சொன்னதும்...
****
முகநூலில் கிடைத்த நட்பில் மறக்க முடியாதது என்று இருக்கிறதா :
❤️என் வாசகர்கள் தான் எனக்கு முகநூலில் கிடைத்த நட்புகள். ஊக்கம் கொடுக்கும் அவர்கள் யாரையுமே மறக்க முடியாது.
*****
இப்போது online - பல எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை அட்டகாசமாகவும், கேள்விக்குறியதாகவும் எழுப்புகின்றனர். அது பற்றிய உங்கள் கருத்து என்ன :
❤️இளம் எழுத்தாளர்களுக்கு இணையதளம் ஒரு வரப்பிரசாதம். வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பெண்களை கூட வெளிக்கொணர்ந்து பிரகாசிக்க வைக்க வல்லது. அதனை பலர் திறமையாக பயன்படுத்தி கொள்கிறார்கள். சிலர் விளையாட்டாக பயன்படுத்தும் போது தான் அந்த படைப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து எழுதினால் நலம்.
…
நிச்சயமாக. விளையாடுவதற்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கும் துறை இது அல்ல. உள்ளார்ந்த மனதோடு, அப்படியே படைப்புடன் ஒன்றி விட்டால் பிரமாதமாக எழுத்தாளனின் கை வண்ணத்தில் அவரது ஒவ்வொரு படைப்புகளும் மிளிரும்.
*****
விமர்சனம் எப்படி இருக்கணும் என்று நினைக்கிறீங்க :
❤️விமர்சனம் எழுத்தாளரை ஊக்குவிக்க கூடியதாக இருக்க வேண்டும். அதே நேரம் குறைகளை நாகரிகமாக எடுத்துரைக்க வேண்டும். அது எழுத்தாளரை மெருக்கேற்ற உதவும். அநேக எழுத்தாளர்கள் நாகரிகமான எதிர்மறை விமர்சனங்களை எதிர்பார்ப்பார்கள்.
*****
தற்சமயத்து எழுத்தாளரில் யாருடைய படைப்பு உங்களை கவர்ந்ததாக நினைக்கிறீங்க :
❤️நிதனி பிரபு
❤️காதாம்பரி குமார்
❤️ஷிவானி செல்வம்
*****
நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள்:
❤️படிக்க எது கிடைத்தாலும் வாசிக்க பிடிக்கும். பிள்ளைகளின் பாட புத்தகத்தை கூட விட மாட்டேன்.
*****
உங்கள் படைப்புகளை வாசிக்க விரும்புவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது :
❤️என்னுடைய கதைகள் காதல் கதைகள் தான் என்றாலும் ரொமான்ஸ் சற்று குறைவாக தான் இருக்கும். ப்ளீஸ்.... அட்ஜஸ்ட் கரோ....
என்னுடைய கதையின் நிறைகளை, குறைகளை கொஞ்சம் சொல்லுங்க. அப்போது தான் நான் அடுத்த கட்டம் செல்ல முடியும்.
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
❤️காதல் அடைமழை காலம் கதை நிச்சயம் முடித்துவிடுவேன். அப்படி முடித்தால் மட்டுமே அடுத்த கதை துவங்குவேன். எதிர்பாராத குடும்ப நிகழ்வில் நிலைகுலைந்து போன நான் ஒருவாறு சமாளித்து எழ, வீட்டு பொறுப்புகள் மொத்தமும் என் வசம் வந்து மீண்டும் முடக்கிவிட்டது. ஆனாலும் அனைத்தையும் சமாளித்து மீண்டு வருவேன். இன்ஷா அல்லாஹ். ( இறைவன் நாடினால்)......
*****
உங்கள் கதைகளில் நீங்கள் ரசித்த காட்சிகளைப் பற்றி எங்களுடன் பரிமாறி கொள்ள முடியுமா :
❤️கானல் நீராய் என் காதல்
காட்சி :1
அழகி கதாபாத்திரத்தை அறிமுகபடுத்தும் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல அழகியின் பகுதி மொத்தமுமே நான் மிகவும் ரசித்து எழுதிய காட்சிகள்.
காட்சி : 2
சுப்ரஜா, சூர்யா, தரணி , செல்வம் தோப்பில் சந்தித்து கொள்ளும் காட்சி நான் மிகவும் ரசித்தது.
❤️சாக்லேட் பாய்
காட்சி 1
நாயகன் ஹர்ஷாவும் நாயகி தர்ஷினியின் காதலை தெரிந்து கொள்ளும் காட்சி மிகவும் பிடிக்கும்.
❤️காதல் அடைமழை காலம்
காட்சி : 1
ரிஸ்வியும் மெஹரும் அவர்களை அறியாமல் ஒரே அறையில் படுத்துறங்கும் காட்சி.
காட்சி : 2
மெஹர் ரிதாவின் காதலனை கண்டுக்கொள்ளும் காட்சி.
என் கதைகளை படித்த நட்புகளே இதே மாதிரி உங்களுக்கும் என் கதையில் பிடித்த காட்சிகளை சொல்லுங்க.....
*****
வாசகர் கேள்வி பதில்கள்:
கேள்வி : 1
ஷிவானி செல்வம் : உங்களுக்கு எப்படி கதை எழுத வேண்டும் என்று தோன்றியது அக்கா? நீங்கள் கதை எழுதும் போது சிரமமாக நினைப்பது எது?
❤️கதை எழுத வேண்டும் என்று தனியாக சிந்தித்ததில்லை.அது இயல்பாகவே எனக்குள் தோன்றியது. சிறுவயதில் என் தந்தை சொன்ன கதைகளால் தோன்றியிருக்கலாம். இல்லை புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்பட்ட மொழி ஆர்வத்தினால் தோன்றியிருக்கலாம்.
சிறுவயதிலேயே நல்ல கதை சொல்வேன், படிப்பேன் பின் எழுதுவது இயல்பாகிவிட்டது. இந்த அலைபேசியில் எழுதும் போது தான் எழுதுவது சிரமமாக இருக்கிறது. கண்கள் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறது. நான் எபி போட தாமதமாக இதுவும் ஒரு காரணம்.
*****
கேள்வி : 2
சித்ரா சரஸ்வதி : எழுத்தாளர் என்பது கடவுள் கொடுத்த மிக பெரிய வரம். நீங்கள் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை? காதல் அடைமழை காலம் எப்போது முடிவடையும்?
❤️ உண்மை தான் சிஸ். எழுத்து இறைவன் எனக்கு கொடுத்த மிக பெரிய வரம். குடும்ப நிகழ்வுகளாலும், பொறுப்புகளாலும் என்னால் அதிகம் எழுத முடியவில்லை. காதல் அடைமழை காலம் எப்போது முடியும் என்ற கேள்விக்கு கதையோடு வருவது மட்டும் தான் பதிலாக முடியும்.
*****
கேள்வி : 3
காதல் அடைமழை காலம் எப்போது வரும்? இது ஒருவரின் கேள்வியல்ல. 10க்கும் மேற்பட்ட வாசகர்களின் கேள்வி:
❤️ வேலை பளு மற்றும் குடும்ப நிகழ்வு காரணமாக இப்போது தொடர முடியவில்லை. சீக்கிரம் முடிக்க முயற்சிக்கிறேன்.
எழுத்தாளர் அறிமுக படலத்தில் வாய்ப்பளித்த ஆனந்த ஜோதி சகிக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் இந்த முயற்சி என் போன்ற ஆட்களுக்கு நல்ல ஊக்கம். ஓரளவு சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால் அதுவும் வாசகர்களாகிய உங்களது பின்னூட்டத்தில் தான் உறுதிபெறும்.
விரைவில் கதையோடு,
உங்கள் பர்வீன்.மை
****
மிக்க நன்றி சகோதரி,
உங்களுடைய கேள்வி பதில்கள் மிகவும் அருமையாக இருந்தன.
மேலும், பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
Comments
Post a Comment