#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு 150
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் மிலா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :
பெயர்: மிலா
சொந்த ஊர்: இலங்கை இந்து சமுத்தரத்தின் முத்து என்றால் நான் பிறந்து வளர்ந்த ஊர் இரத்தின கற்களின் நகரம் இரத்தினபுரி.
படிப்பு: A /L {Advanced Level}
பணி: குடும்பத்தலைவி
தளம்: mallikaamanivannan.com
அமேசான் பெயர் & லிங்: அமேசோனில் இதுவரை என் கதைகளை பதிவிடவில்லை.
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங்: தொலைந்து போனது என் இதயமடி. இனிமேல்தான் தளத்தில் பதிவிடனும்.
முடிவுற்ற நாவல்களின் லிங்: https://www.mallikamanivannan.com/community/categories/mila.778/
*****
உங்களது முதல் படைப்பின் பெயர்: என்னை மறந்தவளே
*****
மொத்தம் எத்தனை படைப்பு எழுதியிருக்கீங்க:
18 நாவல்கள் ஒரு சிறுகதை தொகுப்பு
*****
உங்களுடைய படைப்புகளின் பெயர்கள்:
என்னை மறந்தவளே!
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்
என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி
உயிரே உன் உயிரென நானிருப்பேன்
உன் கண்ணில் என் விம்பம்
மெல்லிய காதல் பூக்கும்
தேவதையிடம் வரம் கேட்டேன்
உறவால் உயிரானவள்{ன்}
செவ்வானில் ஒரு முழு நிலவு
என் உயிரிலும் மேலான பானு
நானறியேன் உன்னை
வாசனின் வாசுகி
இதயத்தில் காதல் பூத்தது உன்னால்
அழைத்தது யாரோ?
உறவும் பிரிவும் உன்னாலே
காதலா? சாபமா?
சாரு and லஹிரு
முள்ளோடு நீ ரோஜா
கணணிக் காதல் {சிறுகதை}
...
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
*****
உங்களது படைப்புகள் இதுவரையில் புத்தமாக மாறி இருக்கிறதா, இருந்தால் பதிப்பகத்தின் பெயர் தொலைப்பேசி எண்:
ஆம்.
உன் கண்ணில் என் விம்பம்
முத்து நிலையம்
B - 4 முதல் மாடி அஸ்வத் பிளாட்
பு. எண்: 59, முத்து தெரு,
இராயப்பேட்டை, சென்னை
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
எங்க வீட்டில் நான்கு பிள்ளைகளில் மூன்று பெண்கள். நான்தான் மூத்தவள். பெண் பிள்ளைகள் எட்டாம் வகுப்புவரை படித்தால் போதும் என்ற என் தந்தையின் எண்ணத்தை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்ச்சையில் சித்தி பெற்று உடைத்து விட்டதால் A /L வரை படிக்க வைத்தார்கள்.
பாடசாலை செல்லும் பொழுது கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதியுள்ளேன். அதெல்லாம் O/L வரைதான்.
...
அருமை
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
திருமணத்துக்கு பிறகு தமிழ் சினிமா பார்த்தாலும் தமிழ்மொழியை எழுத வேண்டிய தேவை ஏற்படவேயில்லை. அதற்கு இன்னொரு காரணம் என் கணவருக்கு தமிழ் தெரியாது. அவரோடு சிங்களமொழியில்தான் உரையாடல் கூட இருக்கும்.
பதினைந்து வருடங்கள் கழித்து தமிழ் எழுத வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது என்னால் எழுத முடியவில்லை.
என்ன செய்வது? என்ற கேள்விக்கு புத்தகங்களை வாசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் எங்கள் ஊரில் தமிழ் கதை புத்தகங்கள் கிடைக்காது.
என் பையன் ஒன்லைனில் கொமிக் படிப்பதை பார்த்து நானும் ஒன்லைன் வாசகியாகிட்டேன். அதை என் உயிர் தோழி புஷ்ராவிடம் {O/L } பகிந்துகொண்ட பொழுது "ஏன் நீ எழுதக் கூடாது? நான் படிக்கிறேன். நீ எழுது" என்று ஊக்குவித்தாள்.
அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இந்தப் பயணம்....
.....
நல்லது, உங்களது கடின உழைப்பிற்கான பலன் கட்டாயம் கிடைக்கும். வாழ்த்துகள்
*****
உங்களுடைய நிஜப்பெயர் மிலா வா? இல்லை என்றால் உங்களது நிஜப் பெயர் என்ன :
மிலா என்பது எனது பெயரின் ஒரு பகுதிதான். என் உயிர் தோழிகளில் ஒருத்தியான புஷ்ரா என்னை அழைப்பது இவ்வாறுதான். என் முழுப்பெயர் பாத்திமா பஸ்மிலா {Fathima Fazmila Hareed}
******
இலங்கையில் பிறந்திருக்கும் நீங்கள் தமிழ் மொழியின் மீது இத்தனை பற்றுடன் இருப்பது வியப்பாக இருக்கிறது. உங்கள் இடத்தில் பேசப்படும் வேறு பாஷைகள் என்னென்ன சொல்ல முடியுமா: சிங்களம்
******
உங்கள் இடத்தில் தமிழ் நாவல்கள் வாசிக்க முடியவில்லை. ஆன்லைனில் அந்த வாய்ப்பு கிடைக்கவும் பற்றிக் கொண்டுள்ளீர்கள் தற்சமயம் வாசிப்பு, எழுத்து என்று வேறொரு பரிணாமத்திற்குள் சென்றிருப்பீர்கள் வாழ்த்துகள். எழுத வருவதற்கு முன்பு இருந்ததை விட, வந்த பிறகு எந்த அளவிற்கு உங்களிடம் மாற்றம் உள்ளது என்று சொல்லுங்க பார்க்கலாம்:
நிறைய விடயங்களை கதைக்காக நெட்டில் தேடி இருக்கிறேன். பல பேரிடம் கேட்டிருக்கிறேன். அதனால் கிடைத்த, அறிவும் அனுபவமும் சொல்லிலடங்காதவை.
******
வாசிக்கும் போது உள்ள ரசனை உங்களது எழுத்துகளில் பிரதிபலிக்கிறதா:
தற்பொழுது அதிகமாக வாசிப்பதில் ஈடுபட நேரம் பத்தவில்லை. கண்டிப்பாக பிரதிபலிக்கும்.
*****
நீங்க எழுத வந்த நோக்கம்: interest [இதன் விளக்கம் கீழே கொடுத்துள்ளேன்]
*****
எழுத்து துறையில் உங்களால் சாதிக்க முடியும்னு நினைக்கறீங்களா: வாசகர்களின் ஆதரவு இருந்தால் நிச்சயமாக சாதிக்கலாம்.
*****
நீங்கள் நாவல் எழுத வந்த பிறகு கற்றுக்கொண்டவை என்னயென்ன:
ஆழம் அறியாமல் காலை விடாதே என்று சொல்வார்கள். நாவல் எழுதுவது எப்படி? என்று தெரியாமல் தான் எழுதவே ஆரம்பித்தேன். ஒரு நாவலுக்கு எத்தனை அத்தியாயங்கள் இருக்க வேண்டும். ஒரு அத்தியாயத்துக்கு எவ்வளவு வார்த்தைகள் இருக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. எழுத ஆரம்பித்த பின் எழுதுவது எப்படி என்று மட்டுமல்லாது மறந்த தமிழையும் கற்றுக்கொள்கிறேன். இதை தவிர கதைக்காக என் சின்ன சின்ன தேடல் கூட என் பொது அறிவுக்கு தீனி.
...
நிஜம் தான்
*****
உங்கள் நாவலை வாசித்த தோழிகள் மற்றும் வீட்டினரின் கருத்து மற்றும் ஊக்குவிப்பு பற்றி கூற முடியுமா:
வீட்டில் கூறிய பொழுது கணவனையும், கணவனின் ஒரு சகோதரியையும் தவிர வேறு யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. வீட்டில் யாரும் வாசிப்பதற்கு ஆர்வம் காட்டுபவர்களுமல்ல. கணவருக்கு, அவர் வீட்டாருக்கும் தமிழ் மொழியும் தெரியாது. அதனால் என் கதைகளை வாசிக்கவும் முடியாது. ஆனால் என்ன கதை எழுதுறீங்க? என்று கேட்டுக் கொள்வார்.
வாசகர்களை பொறுத்தவரையில் கதை எழுத ஆரம்பித்ததிலிருந்து என் கதையை வாசிக்கும் வாசகர்கள் நிறைய பேர் இன்றும் என்னோடு இருக்கிறார்கள். எழுத்து பிழைகள் வரும் என்று கூறியே ஆரம்பித்து விட்டேன். இன்றும் அன்பாக தட்டிக் கொடுத்து ஊக்குவித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
கோவில் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து வைத்தது பானுமதி அம்மாவும், writer-ப்ரியா பிரகாஷ் அவர்களும் தான். துரஷிட்ட வசமாக அவர்கள் இருவருமே இப்பொழுது என்னோடு இல்லை.
*****
தமிழ் மொழியின் மீது தீராத ஆவல் அதனால் எழுத வந்து விட்டேன், எழுத்தின் மீது தீராத தாகம் எழுத வந்து விட்டேன், நேரப்போக்கிற்காக எழுத வந்துவிட்டேன், பிறர் கதையை வாசித்ததும் எனக்கும் எழுத ஆவல் வந்து விட்டது அதனால் நானும் வந்து விட்டேன் என்பது பற்றி நீங்க என்ன சொல்ல வர்றீங்க:
காரணம் எதுவாக இருந்தாலும் எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை, தூண்டுதல் இருப்பதினாலாதான் எழுதுகிறார்கள். அதுதான் interest / விருப்பம்/ ஆசை/ ஆவல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அது இல்லையென்றால் நாம் எந்த வேலையையும் மனமுவந்து பார்க்க முடியாது.
Interest குறைந்தாலே வேறு வேலையில் நாட்டம் ஏற்பட்டு கதை எழுதுவதை விட்டு விடுபவர்களுக்கு உண்டு. எந்த சூழ்நிலையிலும் கதை எழுதுவதை விடாமல் இருப்பது அவர்களுக்கு இருக்கும் Interest மட்டுமே காரணம்
...
உண்மை தான்
*****
உங்கள் கதைகளில் இதுவரை நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா:
ஆம். பொதுவாக எல்லா கதைகளிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் நான் என் வாழ்க்கையில் சந்தித்த நபராக இருப்பார். வாசனின் வாசுகியில் வாசனின் கதாபாத்திரம் என் கணவனுடையது. அது அவருக்கே தெரியாது.
*****
உங்கள் தொடர்கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்கும்.
சரியான முறையில் கதைமாந்தர்கள் அறிமுகமாவார்கள். முதல் அத்தியாயத்தில் அல்லது மூன்றாவது அத்தியாத்துக்குள் நாயகன் நாயகி சந்தித்து விடுவார்கள்.
*****
நீங்கள் எழுதிய படைப்புகளில் எது வாசகர்களை பெரிதும் கவர்ந்ததாக நினைக்கிறீங்க:
வாசனின் வாசுகி
உன் கண்ணில் என் விம்பம்
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்
உறவும் பிரிவும் உன்னாலே
என்னை மறந்தவளே
******
ஒவ்வொரு படைப்பிற்கும் வித்தியாசத்தை காட்டி சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி பட்ட கதையோட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்:
எல்லா genreலையும் கதை எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் காதல், குடும்பம் கண்டிப்பாக இருக்கும். சில வித்தியாசங்களை வாசகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கதையில் நியாயம் செய்ய வேண்டும், கதையோட்டமும் இருக்க வேண்டும். உதா:- முள்ளோடு நீ ரோஜா
*****
ஒரு சாதாரண வாசகன் வாசிக்கும் நாவலில் எதிர்பார்ப்பது என்ன:
நானும் ஒரு வாசகித்தான். ஒவ்வொருத்தரின் எதிர்பார்ப்பும் ஆரம்பத்தில் வித்தியாசப்பட்டாலும் ஹாப்பி எண்டிங் தான் அனைவருமே விருப்புவார்கள் என்று நினைக்கிறன்.
...
ஆமாம், நானும் கூட
*****
உங்களது படைப்புகள் வாசிப்பவரின் தேவைகளை இதுவரையில் பூர்த்தி செய்திருப்பதாக நினைக்கிறீர்களா:
வாசகர்களின் கருத்துக்களை பார்க்கையில் ஆம் என்றுதான் தோன்றுகிறது.
*****
ரமணி மேம் கதைகளில் உங்களை கவர்ந்தது எது? எதனால் அவரது படைப்பு மட்டும் தனித்துவமாக மிளிர்கிறது :
A /L படிக்கும் பொழுது நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் வாசித்திருப்பேன். எல்லாருக்கும் ஒரு உயிர் தோழிதான் இருப்பார்கள் A /L வேற ஒரு ஊரில், வேற பாடசாலையில் படித்ததால் எனக்கு இரண்டு பேர் இருக்கின்றார்கள். என் கதையை படிக்கும் மற்றவள் Azha {A /L} தமிழ் மறந்து விட்டேன். இங்கு வாசிக்க புத்தகம் கூட இல்லையென்றதும் கொரியரில் ரமணி மேம் கதை புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தாள். என் வாழ்க்கையில் நான் வாசித்த புத்தகங்கள் அவ்வளவுதான்.
நான் வாசித்த முதல் கதையாசிரியர் அவர்கள் என்பதனால் அந்த கதைகள் என்னை கவர்ந்திருக்கும். அவரது கதைகள் காதல் குடும்பம் சார்ந்தவை அதனால் தான் மிளிர்கிறது என்று நினைக்கிறேன்.
******
உங்கள் கதைகளுக்கு தேர்ந்தெடுக்கும் பெயர் எப்படி தேர்வு செய்றீங்க:
கதைக் கருவை வைத்துதான். கதைக்க கருவுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
*****
ஒரு கதை எழுதும் முன்பு எத்தனை அத்தியாயம், இத்தனை வார்த்தைகளில் முடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது உண்டா:
முன்பு அவ்வாறெல்லாம் சிந்தித்ததில்லை. இப்பொழுது ஒரு அத்தியாயத்துக்கு 1800 அல்லது 2000 வார்த்தைகள் 24 அல்லது 25 அத்தியாயங்கள் இருந்தால் நல்லது என்று முடிவு செய்வேன்.
*****
கவிதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்:
இலக்கிய அறிவு வேண்டுமா? ரசனை இருந்தால் போதுமா? ஈடுபாடும் வேண்டுமா? தெரியவில்லை.
ஒரு புகைப் படத்தைப் பார்த்தால் என்ன தோணுதோ அதை எழுதுகிறேன். என்னையும் கவிதை எழுதத் தூண்டிய முகநூலில் புகைப்படங்களை பதிவு செய்யும் மஞ்சு சகோதரிக்கு நன்றிகள்.
*****
சிறுகதை, தொடர்கதை இரண்டில் உங்களை கவர்ந்தது எது? இரண்டில் எது வாசிப்பவர் உள்ளத்தை உடனடியாக சென்று தாக்குவதாக நினைக்கிறீர்கள் :
சில நேரம் கதையின் பெயரை மறந்தாலும் காட்சியை வைத்து அல்லது, கதாநாயக, கதாநாயகி அல்லது கதாசிரியரின் பெயரையாவது சொல்லி அந்த கதையை தேடுபவர்களை முகநூலில் காண்கிறேன். ஆதலால் தொடர்கதைதான் பலபேரின் மனதை கவர்ந்திழுத்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறன். ஆனாலும் ஒரு விஷயத்தை நச்சென்று சொல்ல சிறுகதை சிறந்தது.
...
நிஜம் தான்
*****
' என் உயிரின் மேலான பானு ' என்ற கதையை கனவுப் பட்டறை போட்டியின் போது வாசித்த நியாபகம். அதன் எழுத்தாளர் நீங்க தான்னு தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்த கதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
தந்தை விவாகரத்து செய்த பின் தனது சகோதரரனின் உதவியோடு வாழும் நாயகியின் குடும்பம். படிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகி. பாடசாலை சென்று வரும் வழியில் நாயகன் காதலை சொல்ல நினைக்க, அதனால் ஏகப்பட்ட பிரச்சினை.
பாடசாலை முடிந்த உடன் அவளை திருமணம் செய்து அனுப்ப நினைக்கும் அவளுடைய சகோதரன்.
தன்னுடைய கணவனின் சம்பாத்தியத்தை உறுஞ்சுகிறார்கள் என்ற சிறு கோபத்தில் நாயகியை இரண்டு குழந்தையுள்ள ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க நினைக்கும் அத்தை.
அதை அறிந்து வீட்டுக்கு வரும் நாயகன் செய்யும் பிரச்சினையால் நாயகிக்கு வரும் வெறுப்பும், அவர்களின் திருமணமும், {முஸ்லீம்களின் திருமண சடங்குகளும், இன்னும் சில விடயங்களும்} நாயகி நாயகனின் காதலை புரிந்து கொண்டாளா? நாயகன் புரிய வைத்தானா? அவள் ஆசைப்படி படிக்க முடிந்ததா? காதலோடு சொன்ன கதை.
*****
ஒரு ஆசிரியரின் எழுத்து வாசகன் மனதை விட்டு நீங்காமல் இருக்க அவர் என்ன மாதிரி படைப்புகளை தேர்வு செய்ய வேண்டும்:
காதலோடு கூடிய குடும்பக் கதைகள்
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:
ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். {ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம்} அதில் ஆர்வம் செலுத்தி பொழுதுபோக்காக்கிக் கொள்ளுங்கள். {நேரமின்மை என்று காரணம் கூறாதீர்கள்} மனதிருப்தியும், ஆனந்தமும் கிட்டும்.
******
உங்களது படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது:
உங்களுடைய எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். என்ஜோய் யுவர் ரீடிங். கீப் சப்போர்டிங் மீ.
*****
உங்களை கவர்ந்த ஆன்லைன் எழுத்தாளர்:
இவர்தான் என்று குறிப்பிட்டுக் கூற தனியாக யாருமில்லை.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
புத்தகங்கள் கிடைப்பது அரிது. இனிமேல் தான் தேடித் படிக்க வேண்டும்.
*****
வாசகர் கேள்வி பதில் :
veenaa
மிலா ஒரிஜினல் பேரா❓
பெயரோடு ஒரு பகுதி.
******
நிறைய பேர் புனைப்பேபோட வர்றாங்க. நாமளும் புனைப்பேரோட எழுத்துக்கடல்ல குதிக்கணும்னு ப்ளான் பண்ணியிருந்தீங்களா❓
இல்லை. எந்த திட்டமும் இல்லாமல் வந்தேன்.
******
கதை எழுதறேன்னு சொன்னதும் யாரெல்லாம் ஆதரிச்சாங்க ❓❓
கணவனும், அவருடைய ஒரு சகோதரியும் மாத்திரம்.
*****
ஒவ்வொருத்தர்க்கும் ஒண்ணொன்னு பிடிக்கும்.
சின்ன வயசிலேயே எழுதாளராகணும்னு நினைச்சீங்களா?
நிச்சயமாக இல்லை.
*****
Nanthinee Nanthu
Hi sis... ippo varaikum ettene story eluthi irukinge? naa innum unge story padichathu ille.. inimel taan neenge share panna Un kannil en vinbam padikanum:
18
*****
Ennekku unggelea theriyaathu dear ma... Ithu varaikkum eththue story elluthurikkingga.... happy Ending love storys irunthaa... link kodunggea dear :
18 எல்லாமே happy Ending love storys தான்.
****
மிக்க நன்றி சகோதரி 🙏🙏
உங்களது கேள்வி பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும் விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
அருமையான தெளிவான பதில்.....
ReplyDeleteகாதலுடன் கூடிய
குடும்ப கதை தான்
தங்களின் சிறப்பு....
படித்து முடித்தவுடன் வரும்
நிறைவு தான் உங்களின் முத்திரை....
நம்பி படிக்கலாம் என்ற உணர்வு தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு... அனைத்தும் அடக்கம் உங்களின் எழுத்தில்....கதையில்.....
எனக்கு உங்கள் கதைகள் மிகவும் பிடிக்கும்....
காதலா சாபமா வில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறேன்...
வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து பணி தொடர.....
Un payanam thodara vaalththukkal nanbi
Delete