ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய தினம் அரட்டை அரங்கத்தின் முதல் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நாம் அனைவரும் எழுத்தாளர்கள் என்பதால் இன்றைய தினம் "எழுத்து" எனும் தலைப்பை உங்களுக்கு கொடுக்கிறேன்.
நீங்கள் உங்கள் படைப்புகளில் என்ன மாதிரிப்பட்ட எழுத்துக்களை கையாள்கிறீர்கள்? எந்த இடத்திற்கு என்ன மாதிரி எழுத்துக்கள் எழுத வேண்டும், எழுத கூடாது. இந்நாளில் உங்களைக் கவர்ந்த எழுத்துக்கள் யாவை? உங்களது எழுத்து வாசிப்பவர்களுக்கு எந்த மாதிரி உணர்வை தோற்றுவிக்கிறது? உங்களது எழுத்துக்களில் , "...." '...' ; !! ?? ...?? ! … (க், த், ப், ச் … சந்தி) இதெல்லாம் பயன்படுத்துபவரா நீங்கள் … எனில் எந்தெந்த இடங்களுக்கு மேற்கூறியவை பயன்படுத்தப் படுகிறது.
ஒரு படைப்பில் மேற்கூறியவற்றின் பயன்பாடுகள் என்ன? இதை எல்லாம் பயன்படுத்தாமல் சும்மா கதை எழுதிக் கொண்டிருப்பவரின் படைப்புகள் வாசிக்கப்படும் போது எப்படிப்பட்டதாக இருக்கும்?
அன்றைய நாள் எழுத்துக்கள் இன்றைக்கு பயன்படுத்தப்பட்டால் அது ரசனைக்கு ஏற்ற விதமாக இருக்குமா என்பதை பற்றிய உங்களது கருத்துகளை தெரிவியுங்கள்.
எழுத்தாளர்கள், புரூப் ரீடர்ஸ், வாசகர்ஸ் மூவருக்கும் இந்த தலைப்பு கொடுக்கப்படுகிறது. உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நட்புக்களே,
அனைவரது பதிலும் பிளாக் லிங்கில் பெயருடன் இணைக்கப்பட்டு, மறு பார்வைக்கு சமர்பிக்கப்படும்.
இது எல்லோருக்கும் தெரிய வேண்டிய விசயம் அதனால் முன் வைத்தது. தயக்கம் வேண்டாமே… கடந்து செல்ல முயற்சி செய்யாமல் உங்களது எழுத்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி நட்புக்களே
🙏🙏🙏
*****
முகநூல் லிங் :
https://m.facebook.com/groups/328947615137377/permalink/679286630103472/
புரூப் ரீடர் ஜெயந்தி வேணு கோபலன் சகோதரியின் பதில்கள் :
நல்லதொரு முயற்சி ஜோதி. ஆனந்த ஜோதி
எனக்குத் தெரிந்தவரை கூறுகிறேன் .
எனக்கு குறைவான நேரமே கிடைப்பதால் சிலவற்றை மட்டும் எனக்குத் தெரிந்தவரை விளக்குகிறேன் .
முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் கடைபிடித்தாலே எழுத்துப் பிழைகளை பெரும்பாலும் தவிர்த்து விடலாம் .
ஆரம்ப கால எழுத்தாளர்கள், ஒரு கதையை நீங்கள் எழுதும்போது ஆரம்பத்தில் எழுத்துப் பிழைகளை மனதில் கொள்ளாமல் , (ஃப்ளோ ) கதை போக்கிற்கு இடையூறு வந்துவிடாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதி விடுங்கள் .
பின்னர் ஒரு அத்தியாயம் முடிந்ததும் , அதில் நீங்கள் சரிபார்க்க விரும்புவனவற்றை, மாற்றம் செய்யவேண்டிய உரையாடல்கள் முதலியவற்றை செய்து விடுங்கள் .
வேறு மாற்றங்கள் செய்யத் தேவையில்லை என நீங்கள் முடிவுக்கு வந்த பிறகு , இப்போது மேற்கோள் குறிகள் , நிறுத்தற் குறிகள் (quotes – single, double; punctuations) ஆகியவற்றை ஆங்காங்கே சேர்க்க வேண்டும் .
கதை மாந்தர்கள் ஒருவருக்கொருவர் பேசுபனவற்றை double quote (“..”) ற்குள் சொல்ல வேண்டும் . இதில் உள்ள உரையாடல்களை மட்டும் பேச்சு வழக்கில் சொல்ல வேண்டும் . இதற்கு வெளியே உள்ளவற்றை செந்தமிழில் தான் சொல்ல வேண்டும் .
கதை மாந்தர் தங்களின் மனதுக்குள் எண்ணிக் கொள்பனவற்றை single quote (‘..’) ல் சொல்ல வேண்டும் . இதுவும் பேச்சு வழக்கில் இருத்தல் வேண்டும் .
பேச்சு வழக்கு எனும்போது , அது பொதுவாக நாம் பேசும் தமிழாகவே இருத்தல் நலம் . ஆனால் அதிலும் முடிந்தவரை தமிழ் மொழியைக் கொலை செய்யாமல் இருத்தல் நலம் . உதாரணமாக , “ அத்தை என்று விளிக்கும் போது அதை அப்படியே சொல்லவும் . இதை ‘அத்த’ எனாமல் இருக்கலாம் . அதே போல ‘ஏன் செய்ய மாட்டேங்குறே’ என்பதை ‘ஏன் செய்ய மாட்டுறே / மாட்றே’ இது போலெல்லாம் சொல்லுதல் தான் தமிழ் கொலை . ‘படிச்சு முடிச்சுட்டியா ‘ என்பதை ‘பட்ச்சு முட்ச்சு ‘ என்பது போலெல்லாம் நாம் பேசினாலும் அது போலவே எழுதக் கூடாது .
அதே சமயம் , வட்டார வழக்கில் , மற்றும் குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றிய கதை வசனங்கள் போன்றவை கதையில் இடம் பெற்றால் , கட்டாயம் அந்தப் பேச்சு வழக்கிலேயே தான் டயலாகுகள் இருத்தல் வேண்டும் . இவற்றிலும் , தற்சமயத்தில் இவர்கள் எவ்வாறு பேசுகின்றனர் என்றறிந்து எழுதுதல் நலம் . உதாரணத்திற்கு , பிராமண பாஷையில் , “ தோப்பனார் , தமையனார் “ போன்ற வார்த்தைகள் தற்காலத்தில் உபயோகத்தில் இல்லை . ஆனால் இந்த பாஷையில் கதையெழுதும், இந்தச் சமூகத்தைச் சாராத பலரும் , இப்போதும் இந்த வார்த்தைகளையே உபகோகப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன் .
ஏன், எதற்கு , எப்படி ,யார் என்று வரும் வாக்கியங்களில் கண்டிப்பாக கேள்விக்குறி(?) இருக்க வேண்டும் .
ஆச்சரியம் , பயம் இவைகளை குறிக்கும்போது ஆச்சரியக்குறி (!) போட வேண்டும் .
டயலாகுக்குள் யாருடைய பெயராவது குறிப்பிடப் படும்போது, அதற்குப் பக்கத்தில் ஒரு கமா போட வேண்டும் . “நிஷா , நீ இங்கே வரியா ?” இது போல .
பேச்சின் நடுவில் ஒரு pause விட வேண்டும் போது .. என்று இரண்டு புள்ளிகள் வைக்கலாம் .
தாங்க முடியாத அதிர்ச்சியான செய்தியைக் கேட்கும் போது இரண்டு கேள்விக்குறிகள் வரலாம் (??) . அதே போல அதிசயமான விஷயத்தை குறிக்கும் போது இரண்டு ஆச்சரியக் குறிகள் வரலாம் (!!). தொடர் வாக்கியத்தின் நடுவில் ?, ! போன்றவை வரக்கூடாது . வாக்கியத்தின் முடிவில் தான் வரவேண்டும் . அதே “அடடா !, ஐயோ !, அப்பப்பா !, டமால் !” இது போன்ற வார்த்தைகளுக்குப் பின்னர் ! போட்டுவிட்டு, வாக்கியத்தை தொடரலாம் . ‘வருவாளா? மாட்டாளா?’ என்று நினைத்தான் ...இப்படி வேண்டுமானால் single quote க்குள் போட்டுவிடலாம் .
*******
?, !, போன்ற எந்தக் குறிகளை குறிக்கும் முன்னரும் , பலரும் ..?, ..! இது போலவெல்லாம் போடுவதை கவனிக்கிறேன் . ஆனால் இவை தேவையில்லை . இரண்டு புள்ளிகள் அனாவசியம் . வெறுமே ?, ! இது போல போட்டாலே போதும் .
சிலர் கதையில் எக்கச்சக்கமாக புள்ளிகளை வைப்பதையும் கவனிக்க முடிகிறது . இப்படி உள்ள கதைகளைப் படிக்கும்போது எரிச்சல் உண்டாகும் . தேவையான இடங்களில் மட்டுமே நிறுத்தற் குறியீடுகளை இட வேண்டும் .
ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சி போன்றவற்றை தொடர்ந்து ஒரு பாராவில் சொல்லும்போது , ஒவ்வொரு வாக்கியம் முற்றுப் பெறும்போதும் ; என்ற குறியீட்டைக் குறிப்பிடலாம் .
ஒரு வாக்கியம் பெரியதாக இருக்கும்போது , தெளிவாகப் புரிவதற்காக ஆங்காங்கே கமா (,) இட வேண்டும் . தொடர்ச்சியான வாக்கியத்தைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும் .
உங்களுக்கு சந்திகளை (க், ச், த், ப் ) சரியான இடத்தில் உபயோகிக்கத் தெரியவில்லை என்றால், அவற்றை உபயோகிக்காமல் இருப்பதே நலம் . தவறான இடங்களில் போட்டுவிட்டால் அபத்தமாகிவிடும் .
ஒவ்வொரு டயலாகுகளையும் யார் அதைப் பேசுகிறார்கள் என்பது தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் . இரண்டு நபர்கள் மட்டும் (ஆண் , பெண் ) பேசிக் கொண்டிருந்தால் , அவள் , அவன் என்றும் குறிப்பிடலாம் . மூன்றாவது நபரும் இருந்தால் , ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி டயலாகைச் சொன்னாலே புரியும் .
முடிந்தவரை ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் சொல்வது தற்காலத்திற்கு உகந்தது . வேண்டுமானால் சிலவற்றை பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் சொல்லிவிடலாம் . அப்படியில்லாமல் அந்த ஆங்கில வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டால் , பின்னர் , அது தமிழ் கதையா அல்லது ஆங்கிலக் கதையா என்ற கடுப்பு தான் மிஞ்சும் .
ஐ , ஆ போன்ற எழுத்துக்கள் தனியாக வராது . அதிர்ச்சி என்பதைக் குறிக்க மட்டுமே “ஆ “ வரும் . மற்றபடி இப்போதெல்லாம் நிறைய பேர் எழுதுவது போல ‘அப்படி ஆ , அந்த தேதி ஐ , டீச்சர் ஐ , வித்தை ஐ ‘ இப்படியெல்லாம் எழுதுவது தவறு . இவற்றை ‘ அப்படியா , தேதியை , டீச்சரை , வித்தையை ‘ என்று எழுத வேண்டும் . அதே போல ‘சுரேஷ் ஐ, உஷா ஐ ‘ இது போல பெயர்களுக்குப் பின்னாலும் எழுதக் கூடாது . ‘ சுரேஷை , உஷாவை ‘ என்று குறிப்பிட வேண்டும் . எந்த எழுத்தில் முடிகிறதோ அதை அப்படியே நீட்ட வேண்டும் . அதே போல ‘6ம் தேதி’ என்றே எழுதவேண்டும் . ‘6 ஆம் தேதி’ தவறு . ‘சுரேஷ் ஆல்’ என்பது தவறு . ‘சுரேஷால் ‘ என்பதே சரி .
அடுத்து ‘ம்’ என்று ஒரு வார்த்தை முடியும் போது, அடுத்து ‘மை, முடன்’ என்று வராது . உதாரணத்திற்கு , ‘ மேடம் , மரம் , உரம் , வலம், வளம், சுரம் , காயம் , பலம் , பாலம் ...இன்னும் பல ‘ இவைகள் ‘ மேடமை , வளமை , வலமை...’ என்று வராமல் ‘ மேடத்தை , உரத்தை , மரத்தை , வளத்தை , வலத்தை, காயத்தை , பலத்தை , பாலத்தை ....’ இது போலத்தான் வரவேண்டும் . அதே போல ‘ மேடமுடன் , வளமுடன் , மரமுடன் , பலமுடன் ...’ இது போல வருவது தவறு . ‘ மேடத்துடன் , வளத்துடன் , மரத்துடன் , பலத்துடன் ....’ இது போலத்தான் எழுத வேண்டும் .
முடிந்தவரை ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வருவதை தவிர்க்கவும் . தமிழில் ஒரே அர்த்தம் கொண்ட பல வார்த்தைகள் உள்ளன . அனைத்தையும் உபயோகிக்கலாம் . ‘ என்றான் ‘ என்பதை ‘ சொன்னான் , உரைத்தான் , பகர்ந்தான் , கூறினான் ‘ இது பொலவெல்லாம் மாற்றி மாற்றி எழுதினால் சுவாரசியமாக இருக்கும் . நீங்கள் தொடர்ந்து ஒரே வார்த்தையை உபயோகித்தால் , அந்த வாக்கியத்தில் நீங்கள் எந்த வார்த்தையை சொல்லப் போகிறீர்கள் என்று படிப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்து ஒரு சலிப்பு ஏற்படலாம் .
சடங்கு , சம்பிரதாயங்களை ஓரளவாவது தெரிந்து கொண்டு கதையில் அவற்றை சொல்வது உத்தமம் .
*****
முத்தாய்ப்பாக , ஒரு அத்தியாயம் முடிந்தவுடன் அதை சரி செய்துவிட்டு , ஒரு முறை படித்துப் பார்க்கவும் . இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் , நீங்கள் எழுதியுள்ளதை அப்படியே வாய்விட்டுப் படிக்க வேண்டும் . தனியறையில் வேண்டுமானாலும் இதை படிக்கலாம் . அப்படிப் படிக்கும்போது தான் , உங்கள் நாக்கு எவ்வாறு புரளுகிறது என்று கவனித்து ..அதாவது எங்கே அழுத்தமாக உச்சரிக்கிறது , எங்கே மேலோட்டமாக உச்சரிக்கிறது என்றெல்லாம் கவனித்து எழுத்துப் பிழைகளை சரி செய்யலாம் . உதாரணமாக , ‘ அவள் சொன்னாள்...இது சரி ; இதையே அவல் சொன்னால்.. என்று சொல்லிவிட்டால் அர்த்தமே மாறிவிடும். ‘தோள்’ என்பதை பலரும் ‘தோல்’ என்றே எழுத்துகின்றனர் . இரண்டும் வெவ்வேறு அர்த்தத்தைக் கொடுக்கும் . இதைத் தவிர்க்கவே நாம் வாய்விட்டுப் படித்தால் , நமது நாக்கு எப்படிப் புரளுகிறது என்று கவனித்துப் பின்னர் அதை சரி செய்ய முடியும் .
இங்கே இன்னொன்றையும் கவனிக்கிறேன் . நிறைய பேர் ‘ஒன்று’ என்பது பேச்சு வழக்கில் வரும்போது அந்த வார்த்தையை ஒட்டியே வரவேண்டுமென்றும் அதனால் அது ‘ஒன்னு’ என்று வரவேண்டுமென்றும் குறிப்பிடுகின்றனர் . அதே போல ‘மூனு’ ‘ஒன்னை’ ‘மூனை ‘ என்றெல்லாம் சொல்கின்றனர் . ஆனால் எனக்குத் தெரிந்தவரை , நான் கிட்டதட்ட 50 வருடங்களாக தமிழ் ஜோக்ஸ் ,(இதில்தான் பேச்சு வழக்கு கண்டிப்பாக இருக்கும் ) , கதைகள் , துணுக்குகள் போன்றவைகளையெல்லாம் பல புத்தகங்களிலும் படித்து வருகிறேன் .அந்தக் கால வாரப் புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் இருக்கவே இருக்காது . அப்படி வளர்த்துக் கொண்டது தான் இந்தத் தமிழறிவு. அதிலெல்லாம் ‘ஒண்ணு, மூணு, ஒண்ணை, மூணை’ (இவற்றை உச்சரித்தும் பார்க்கவும் ..நாக்கு அழுத்தமாகவே புரளுகிறது ) என்றுதான் அப்போதைய எழுத்தாளர்கள் எழுதினார்கள் . அதனால் அதுதான் சரி என்பதே எனது அபிப்ராயம் .
இன்னொரு எளிதான குறிப்பு : ஒரு சிச்சுவேஷன் முடிந்து மற்றொரு சிச்சுவேஷனை எழுதும்போது , அடுத்து ஆரம்பிக்கும் பாராவின் முதல் எழுத்தை மட்டும் bold, பெரிய font size ஆக்கி விட்டால் , படிப்பவர்கள் மனது தானாக அடுத்த சிச்சுவேஷனுக்கு உங்களுடன் பயணப்படும் . இல்லாவிட்டால் குழம்பிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் .
ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை, ஓரளவுக்கு மட்டுமே இங்கே தெரிவித்திருக்கிறேன் . விருப்பமுள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம் . மாற்றுக் கருத்துடையவர்கள் கடந்து சென்று விடுங்கள் .
*****
'fa' என்ற உச்சரிப்புடன் வரும் எழுத்துக்களை எழுதும் போது, 'ஃப் ' என்று போட்டு எழுத வேண்டும் . லேப்டாப்பில் டைப் செய்தால் 'q' என்ற எழுத்தை அழுத்தினால் ஃ வரும் . மொபைலில் டைப் செய்தால் , 'f' என்பதை அழுத்தினால் ஃப் வரும் . உதாரணத்திற்கு , ஃபன்(fun) , ஃபோன், ஃபார்மசி , இஃப்தார் ,ஃபேன்சி, ஃபிகர் , ஃபிங்கர் , லிஃப்ட், ஃபிட், கம்ஃபர்ட் , ஃபடாஃபட்,வாட்டர் ஃபால்ஸ், ஃபயர், ஃபார்ம் .. போன்று வரவேண்டும் . அதே போன்று share - ஷேர், இப்படி வரும் . chair - சேர். Mrs , Mr, மற்றும் எந்த ஒரு short form வார்த்தைகளாக இருந்தாலும் பக்கத்தில் ஒரு புள்ளி வைக்க வேண்டியது அவசியம் . (B.E. , B.Sc. Mrs. , Mr. M.D. - பீ .ஈ. , பீ. எஸ்சி. , பீ.ஏ. (P .A .), எம் .டி. ) இதையே மிஸ்டர் , மிஸ்ட்ரெஸ் என்று எழுதினால் புள்ளி வைக்கத் தேவையில்லை .
******
ஆனந்த ஜோதி :
சிஸ்டர் ஆமடா / வந்தேன்டா, / ஏண்டி / என்னம்மா -> சிலர் இதில் வரக்கூட்டிய டா எழுத்தை ஆமா டா, என்ன டா, என்ன ம்மா, ஏன்டி என்கின்றனர். சிலர் (ன் - ண் ) வித்தியாசம் தெரியாம எழுதுறாங்க இது பற்றியும் கொஞ்சமா சொல்லிடுங்க:
.....
Jayanthy Venugopalan
ஆனந்த ஜோதி ok ma . ஆமாண்டா , ஏண்டி, ஏண்டா , வந்தேண்டா, ஆமாண்டி, வந்தேண்டி - இவைகளில் 'ன்' ல் முடிந்து அடுத்து 'டா அல்லது டி ' வரும்போது , சேர்த்து தான் எழுத வேண்டும் . அப்போது அந்த கடைசி 'ன்' 'ண்' ஆக மாறிவிடும் . 'டா , டி ' யை தனியாகப் போடக்கூடாது. கீழே உள்ள மற்றவற்றை சேர்த்தும் எழுதலாம் ..நான் குறிப்பிட்டுள்ள ஸ்பெல்லிங் படி ; இல்லாவிட்டால் தனியாகவும் எழுதலாம் . ஏங்க்கா (ஏன் அக்கா ) , ஏண்ணா(ஏன் அண்ணா ), ஆமாண்ணா, ஏண்ணி(ஏன் அண்ணி ), ஆமாண்ணி, சரிண்ணா, சரிக்கா , சரிண்ணி,கேளுண்ணா, கேளுக்கா ,வாண்ணா(வா அண்ணா )
வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஜோதி . ஆனந்த ஜோதி
"..." '...' ! ? மற்றும் க் த் ச்
ReplyDeleteசரியான இடத்தில் இல்லாது கதை இருப்பின் கதையின் சுவாரசியம் குறைந்து விடும்.
ஒரு வாசகியாக என்னோட கருத்திது.
ஒரு மெய் எழுத்துக்கு பக்கத்தில் இன்னொரு மெய் எழுத்து வருமா வராதா (காபி பேஸ்ட்)
ReplyDeleteஇரு மெய்யெழுத்துக்கள்.
----------------------------------------
நண்பர் திரு. கு.இளவரசன், அவர்கள்,இரண்டு மெய்யெழுத்துகள் தொடர்ந்து தமிழ்ச் சொல்லில் வரலாமா என வினவியுள்ளார்.
அதற்கான பதிவு.
- - - - - - - - - - - - - - -
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம் ற் ன் ஆகிய எழுத்துக்களை ஆங்கிலத்தில் stops எனப்ப்படும். (வல்லினம்=unvoiced stops), மெல்லினம்=voiced stops)
ய், ர், ல், வ், ள், ழ் ஆகிய எழுத்தக்களை glides (semi-vowels, இடையினம்) எனப்படும்.
தமிழில் இரு stops எழுத்துக்கள் கூடி வரா. ஒரு glide உம் stop உம் கூடி வரலாம்.
ய், ர், ழ் ஆகிய மெய்கள் எழுத்துகளுக்கு அடுத்து இன்னோர் மெய்யெழுத்து வரும்.
ய் - வாய்க்கால், சாய்த்தேன், சாய்ந்து, காய்ச்சல்
ர் - பார்த்தேன், சேர்க்கை, பார்ப்போம்,
ழ் - யாழ்ப்பாணம், வாழ்க்கை, வீழ்ச்சி.
கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்
யாருமிங்கே ஓரினம்
இதைப் பள்ளியில் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு தமிழிலக்கண விதியைச் சொல்லும்போது கூட "யாருமிங்கே ஓரினம்" என்று அந்தக் காலம் முதல் இன்று வரை சொல்லி வரும் இனம் தமிழினம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இந்த உலகத்துக்குச் சொன்னவர்கள் இல்லையா நாம்!
அருமை சிஸ்டர்.
Deleteமிக்க நன்றி
எனக்கு தெரியல.. மத்தவங்க சொல்வதை பார்த்து நான் கத்துக்கறேன்
ReplyDeleteநானும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுத முயற்சித்து வரும் எழுத்தாளர்.சந்திப்பிழை சரிபார்க்க சில சமயங்களில் நான் நாவி பிழைத்திருத்தி என்ற app ல் சந்தேகம் வரும் நேரத்தில் பயன்படுத்துவேன்.
ReplyDelete
ReplyDeleteஇலக்கணம் அறிமுகம் குறித்த சந்தேகங்களுக்கு எனது தோழி ஒருவர் இந்தப் புத்தகத்த அறிமுகம் செய்து வைத்தார்....முடிந்தால் நீங்களும் வாங்கி படித்து பயன்பெறுங்கள்கள நட்பூக்களே..
https://www.amazon.in/தமிழ்-இலக்கணம்-அறிமுகம்-தமிழோடு-வளர்வோம்-ebook/dp/B088RJCF1V/ref=mp_s_a_1_3?crid=2WX8BC3NCMBI1&keywords=தமிழ்+இலக்கணம்&qid=1641223101&sprefix=தமிழ்+இலக்கணம்%2Caps%2C575&sr=8-3
"....." - கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இரட்டை மேற்கோள் குறிக்குள் வர வேண்டும்.
ReplyDelete'....' - முக்கியமானவற்றையோ பிறமொழி சொற்களையோ கதாபாத்திரங்களின் எண்ணவோட்டத்தையோ குறிப்பிடும் போது ஒற்றை மேற்கோள் குறி பயன்படுத்த வேண்டும்.
! - ஆச்சரியம், பயம், அதீத மகிழ்ச்சியை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
? - வர்ணனைகள் கேள்வி வடிவில் அமையும் போது பயன்படுத்த வேண்டும்.
சந்தி, வலிமிகும் இடம், மிகா இடம், லகரம் ளகரம் ழகரம் ணகரம் னகரம் வேறுபாடெல்லாம் அவரவருக்கு இருக்கும் மொழியறிவு இலக்கண அறிவைப் பொறுத்தது. அதை வளர்த்துக் கொள்வது நலம். (இப்ப ப்ரூஃப் ரீடர்ஸ் இருக்குறதால யாரும் இதுக்காக மெனக்கிடறது இல்ல)
நான் எப்பொழுதும் உரையாடலுக்கு மட்டும் " " இதைப் பயன்படுத்துவேன்.
ReplyDeleteவேறு ஏதாவது தனித்துவமான பெயரை பற்றி குறிப்பிடும் நிலையில் ' ' இதைப் பயன்படுத்துவேன்.
மேற்கூறியவை இல்லாமல் எழுதப்படும் கதைகளில் உரைநடை எது உரையாடல் எது என்ற வித்தியாசம் இல்லாமல் வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும் ...
அதுபோல் காலத்திற்கு ஏற்றார்போல் உரைநடையை கூட மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து ...
"எங்கு சென்று உள்ளீர்கள் " என்பதற்கு பதிலாக " எங்க. போன " என்பது போன்ற தற்கால உரையாடல்கள் தான் கதையோடு வாசகர்களை ஒன்றச் செய்யும் என்பது என் கருத்து
நான் எப்பொழுதும் " " இம் மேற்கோள்களை உரையாடலுக்கு பயன்படுத்துவேன்.
ReplyDeleteஏதாவது தனித்துவமான வார்த்தைகளைப் பற்றி கூற வேண்டும் என்றால்
' ' ஒற்றை மேற்கோளை பயன்படுத்துவேன்.
அதேபோல் உரையாடலில்
தற்போது பயன்படுத்தப்படும்
வார்த்தை அமைப்புகள் இருந்தால் வாசகர்கள் கதையோடு ஒன்று அதற்கு பொருத்தமாக இருக்கும் ..