கதைக்கரு


முகநூல் லிங் 

:https://www.facebook.com/groups/328947615137377/permalink/682315106467291/

 ஹாய் பிரண்ட்ஸ்,


எழுத்தாளர் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் இரண்டாவது வரப்போவது "கதைக்கரு"  நாம் எழுதும் கதைகளுக்கான கருவை எங்கனம் தேர்வு செய்ய வேண்டும். ஒரு கதைக்கரு எத்தனை அத்தியாயங்கள், வார்த்தைகளுக்குள் முடிவு பெறும் விதமாக எழுதுவது வாசிப்பவர்கு சலிப்பின்மையை கொடுக்கும். ஒரு கதையை வாசிக்கும் போது சுவராஸ்யத்தையும், சலிப்பையும் கொடுக்காமல் இருக்க, எழுத்தாளன் எப்படிப்பட்ட கதையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு கதை எழுத அதிகப்பட்சம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு இருக்க வேண்டும்? கதைக்கரு பொருந்தாமை, கற்பனை, வர்ணனை அதிகம் கலந்து வாசிப்பில் லயிப்பின்மை, ஒரு பக்கத்தைக் கூட புரட்ட முடியாமல் போவது எதனால்?  ஒரு நாவல் வாசிப்பில் ரசிப்பில்லை என்றால் அதற்கு பிறகு அந்த எழுத்தாளரின் எழுத்துகளை வாசிக்கும் வாசகனின் மனநிலை என்னவாக இருக்கும். அந்த எழுத்தாளன் செய்ய வேண்டியது என்ன?

ஒரே மாதிரியான கதைகளை வித்தியாசமாக, ரசனையுடன் கொடுப்பது எப்படி ? தொடர் வாசிப்பில் இருக்கும் போது வரக்கூடிய வார்த்தை பிழைகள், மற்றும் கோர்வுகள், வாசிப்புகளை தடை செய்வதாக தெரிந்தால் எழுத்தாளன் அடுத்து செய்ய வேண்டியது என்ன? பிழைகள், (ன, ண) வித்தியாசம் இல்லாமல் எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்று ஏதேனும் உண்டுமா?


நட்புக்களே,

மேற்கூறிய கேள்விகளுக்கான பதிலை கமெண்டில் பதிவு செய்யுங்கள். உங்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்களையும் தயங்காமல் முன்வையுங்கள். உங்களுடைய கருத்துக்கள், கேள்விக்கான பதில்கள்  ஞாயிற்றுகிழமை அன்று வரக்கூடிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் மறுபார்வைக்கு சமர்பிக்கப்படும்.

எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், புரூப் ரீடர்களின் பதில்கள் அவசியம் தேவை. வாசித்து விட்டு கடந்து செல்லாமல் முகநூல் மற்றும் பிளாக்கில் உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவு செய்யுங்கள்.

நன்றி

🙏🙏🙏


இனி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்துகளைப் பார்க்கலாம்.

காஞ்சனா ஜெயதிலகர் மேம் :


பாடப்பாட ராகம் என்பது போல எழுத எழுத என்று சொல்வதை விடவும் வாசிக்க வாசிக்க எழுத்து.

ரசித்து ஒன்றி வாசிப்பவர்களுக்கும் உடனே எழுத வந்து விடும் என்று சொல்லிவிட முடியாது.ஒருவேளை எழுதும் ஆர்வம் வரலாம்...எழுதும் சந்தர்ப்பங்களும் வரலாம்...ஏதோ ஒன்றில் எழுதவும் ஆரம்பிக்கலாம்.அதன் பின் எழுத எழுதத்தான். 

அதிகம் வாசிக்கும் போது எழுத்துப் பிழைகள் வராது. நிறுத்தற் குறிகளை எங்கு இட வேண்டும்( single colon double colon) என்பது தெளிவாகும். வாசிக்க வாசிக்க வசப்பட்டு விடும் எழுத்து 

எது நம்மை குழப்புகிறது, எது தெளிவாக இருக்கிறது, எது ரசிப்புக்கு உரியதாக இருக்கிறது எல்லாமே தெளிவாகும்.

வாசிக்கும் போது வாசகராக எது பிடிக்கிறதோ, எது நம்மை வசப்படுத்துகிறதோ, பிரமிக்க வைக்கிறதோ, அதை நாம் எழுத்தின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்...அது தானாக வரும்.

ஒரு தடவை Mr இந்திரா சௌந்தர்ராஜன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அவருக்கு உடனே போன் செய்து நான் பாராட்டினேன்.

அவர் சொன்னது:

கதை தனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொள்ளும்.

ஒரு நல்ல knot...முடிச்சு...மையக்கரு உங்களுக்குக் கிடைத்து விட்டதென்றால் கதை தானாகவே பூவைப் போல் மலர்ந்து விடும்( நீங்கள் ரசித்து வாசிக்கும் வாசகராக இருந்தால்). அப்படி மலரும் கதை தனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொள்ளும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அழகாக உருப்பெறும்.எழுதும் போது தானாகவே அது உங்களுக்கு வரும். ஆனால் உட்கார்ந்து பல மணி நேரம் வாசிக்கவும் எழுதவும் செய்ய வேண்டும். உழைப்பு இல்லாமல் உயர்வோ நேர்த்தியோ இல்லை.


*****

R. சுமதி மேம் :

1. கதைக்கரு என்பது உட்கார்ந்து யோசித்து வருவதல்ல. அது இயல்பாகவே காணும் நிகழ்விலிருந்து எழுத்தாளனை தொற்றிக் கொள்ளும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட கரு, அதற்கான சம்பவ நிகழ்வுகளை பின்னிக் கொள்ள வேண்டும்.

3. எந்தக் கருவை எடுத்துக் கொண்டாலும் அதை வாசிப்பவர்களுக்கு போரடிக்காமல், அலுப்புத் தட்டாமல் ஒரு எழுத்தாளன் கதை நிகழ்வு, கலகலப்பான உரை நடை , அழகான வர்ணனை, ஆச்சர்யப்படக் கூடிய சில விஷயங்கள் என கதையை நகர்த்த வேண்டும்.

4. கருவைக் கொண்டு கதையை மனதில் ஒவ்வொரு வரியாக முதலில் எழுத வேண்டும். மனதில் எழுதப்பட்ட கதையை காகிதத்தில் முழுவடிவம் பெறும். மனதிலேயே முடிவடிவமும், தாயாராகி விட்ட ஒரு கதை, காகிதத்தில் தன்னை உருவம் பெற வைக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு, வெகு குறைவாகவே இருக்கும்.

5. வாசருக்கு படிக்க சலிப்பை தரும் கதை ஒரு எழுத்தாளனுக்கு வெற்றியை தராமல் போவது மட்டும் அல்ல, அவனை எழுத்தாளனாகவே அடையாளம் காட்ட மறுத்து விடும்.

6. எழுத்துப் பிழைகள் வராமலிருப்பது மிக மிக அவசியம். நல்ல இலக்கியங்களை நிறைய வாசிக்க வேண்டும். அதற்காக கொல்காப்பியம் பயில வேண்டும் என்று அவசியம் இல்லை. நிறைய படிக்க படிக்க இலக்கணப் பிழைகள் தானாகவே குறையும்.

*****

அன்னபூரணி தண்டபாணி சகோதரி :

* நான் 90% போட்டிகளுக்குதான் எழுதியிருக்கிறேன். அதனால் போட்டியில் விதிமுறைகள் எதாவது இருந்தால் அதற்கேற்ப கதையின் கருவை முடிவு செய்வேன். போட்டி விதிகளின்படி வார்த்தைகளின் எண்ணிக்கையை அமைத்து விடுவேன். 

* சில சமயம் சில செய்திகளோ சில நிகழ்வோ என்னை பாதித்திருந்தால் அதையும் கதையின் கருவாக வைத்து எழுதியிருக்கிறேன். இப்படி எழுதும்போது வார்த்தைகளின் எண்ணிக்கையை பார்த்ததில்லை. சொல்ல வந்த கருத்தை தெளிவாகச் சொல்வதைப் பற்றி மட்டுமே என் சிந்தனை இருக்கும். 

* எந்த மாதிரி கதையாக இருந்தாலும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பு குறையாமலும் கொடுக்க முயல்வேன். முன்பெல்லாம் தூய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது கதை படிக்கும் வாசகர்களுக்கு சுவாரசியத்தைக் குறைக்கச் செய்யும் என்று புரிந்து கொண்டேன். அதனால் இப்போதெல்லாம் தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தத் தயங்குவதில்லை. 

* கதை எழுத கால அவகாசம்: மிக முக்கியமான கேள்வி! 

போட்டிகளுக்கு எழுதும்போது கூட, கடைசி நிமிடம் வரை எழுதும் ஆள் நான். என்னுடைய நிலை அப்படி! 

போட்டிக்கு அல்லாத கதைகள் எழுதும்போது நான் ரொம்பவே தாமதமாகத்தான் எபிசோட்களை பதிவிடுகிறேன். இதை எப்படியாவது மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். எப்படியும் சீக்கிரம் எழுதக் கற்றுக் கொண்டுவிடுவேன் என்று நம்புகிறேன். 

* வாசகரை நம் கதையில் லயிக்கச் செய்ய முதல் எபியிலேயே எதிர்பார்ப்பை விதைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு எபிக்கும் முடிவில் ஒரு திருப்பம் சஸ்பென்ஸ் என்று வைத்தால் வாசகரை கதையில் லயிக்கச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் நிறைய எபிசோட்களுக்கு கதையை இழுக்காமல் சீக்கிரமே கதையை முடித்து விடுவதும் வாசகர்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒன்று என்று நினைக்கிறேன். 

* ஒரே மாதிரியான கதைகள் கொடுக்க வேண்டிய நிலை வந்தால் கதையில் நிகழ்வுகளை கட்டாயம் ஒரே மாதிரி அமைக்கக் கூடாது. வேறு நிகழ்விடம், வேறு நிகழ்வுகள், அதில் ஒரு எதிர்பார்ப்பு திருப்பம் என்று வைத்தால்தான் கதை படிக்கும் வாசகருக்கு போரடிக்காமல் இருக்கும் என்று நம்புகிறேன். 

* எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது நம் கதைக்கு பெரிய பலம் கூட்டும் காரணி. நான் இலக்கியம் வளர்க்க வரவில்லை என்று கூறிக் கொண்டாலும் நம் கதைகள் புத்தகமாக வருகிறது; அது நமக்குப் பின்னும் இவ்வுலகத்தில் இருக்கப் போகிறது; இருந்து நம் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறது. அப்படியிருக்கையில் நம்முடைய படைப்பில் எழுத்துப் பிழைகள் இல்லாதிருத்தல் மிக மிக முக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. 

*****

டெய்சி மாறன் சகோதரி :


நாம் எழுதும் கதைக்கான கரு நடந்த நிகழ்வுகள், பத்திரிக்கைகளில் படித்த உண்மை சம்பவங்கள், கேள்விப்பட்ட விஷயங்கள் இதனை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யலாம்.

ஒரு கதைக்கு பத்து முதல் இருபது அத்தியாயங்கள் வரை எழுதலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது 500 முதல் 1000 வார்த்தைகள் வரை எழுதலாம்.

வாசிப்பவர்களுக்கு சலிப்பு கொடுக்காமல் இருக்க, ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யத்தை கொடுக்க வேண்டும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு வார்த்தை பின்னல்கள் நகர வேண்டும்.

ஒரு கதை எழுத அதிகபட்சம் இருபது நாட்கள் போதும். மிஞ்சிப்போனால் ஒரு மாதத்தில் முடித்து விடலாம்.

அருஞ்சுவையோடு உண்ணுதல் போல கதைக்கரு, கற்பனை, வர்ணனை, எல்லாமே அளவோடு லயத்தோடு எளிய நடையில் இருக்க வேண்டும்.

 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.' என்று எழுத்தாளின் ஒரு படைப்பை வைத்து ஒதுக்கவோ தூக்கி நிலை நிறுத்தவோ முடியாது. எழுத்தாளன் என்பவன் படைப்பாற்றல் மிக்கவன். தோண்டத் தோண்ட நீர் சுரக்கும் கிணற்றைக் போல புதிய புதிய படைப்புகளை உருவாக்கும் திறனும் வல்லமையும் கொண்டவன்.

ஒரே மாதிரியான கதைகளை வித்தியாசமாகவும் ரசனையுடனும் கொடுக்க வேண்டுமென்றால் சம்பவங்களை குவித்து வைக்காமல் மெல்லிய இழை போல சுவாரசியத்தை மெருகேற்றி வார்த்தைகளை நெய்தல் அவசியம்.

பிழைகள் இல்லாமல் எழுதுவது சிறந்தது. ஆனால் பிழைகளை கண்டுபிடிக்கும் எண்ணத்தோடு படிக்கக்கூடாது. யானைக்கும் அடி சறுக்கும் எப்படிப்பட்ட எழுத்தாளுமை உள்ளவர்களாக இருந்தாலும் எழுதும்போது ஒரு சில பிழைகள் வரத்தான் செய்யும். 'ன' 'ண' கூகுளில் டைப் செய்து பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்.

                   நன்றி

                  என்றும் அன்புடன்   

                        டெய்சி மாறன்


அஜூத்யா காந்தன் சகோதரி :

1. கதைக்கரு :

இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம்..

நாளிதழ்களில், நமக்கு தெரிந்த வட்டாரங்களில், சந்தித்த மனிதர்கள் சொல்லும் சில சுவாரசியமான சம்பவங்களில் இருந்து கூட நமக்கு கதைக்கரு கிடைக்கும்..

ஆனால் எத்தனை பேர் இதை எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்தே இருக்கிறது..

கதைகள் பல வகைப்படும்..

அதில் பெரும்பாலும் fbyil உள்ள பெண் எழுத்தாளர்கள் 90% காதல் கதைகளையும், ஒருசிலர் குடும்பம் பிளஸ் காதல் கலந்தும் எழுதுகிறார்கள்..

ஆதலால் இதைப் பற்றி மட்டுமே சொல்கிறேன்..

காதல் கதை எழுதும் பொழுது பெரிதாக கதைக் கருவுக்கு மெனக்கெட வேண்டியதில்லை..

தன் மனதில் தோன்றும் கற்பனை கதாநாயகன், கதாநாயகி இவர்களை வேறுவேறு விதமான சூழ்நிலைகளில் இருத்தி தங்கள் கற்பனை குதிரையை தாரளமாக பறக்க விடலாம்.. 

குடும்பம் சேர்ந்த காதல் கதைகள் பொறுத்தமட்டில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது உறவுகளுக்கு இடையில் நிகழும் போராட்டங்கள், மனச்சிக்கல்கள், உறவு முறைகள் இதைப் பற்றி எழுதும் பொழுது காதலும் கலந்து எழுதுவது இன்னொரு முறை..

ஒரு சில எழுத்தாளர்கள் தாங்கள் சொல்ல வந்த விஷயங்களை நகைச்சுவையோடு காதல் கலந்து சொல்லி விடுவார்கள்..

பொதுவாக இந்தக் கதைகளைப் படிக்கும்போது கதைக்கரு அல்லது கருத்து என்று பெரிதாக எதுவும் இல்லை..

கதைக்கரு அல்லது மையக்கருத்து என்பதை மிகச் சிறப்பாக கையாளுபவர்கள் இலக்கிய சிந்தனை மிகுந்த, காதல், குடும்பம் என்பதை மட்டும் கொள்ளாது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதுபவர்கள்.. 

அல்லது அந்த பிரச்சனைகளை தங்கள் பார்வையில் கதைக் கருவாகக் கொண்டு, வெகுஜன மத்தியில் கொண்டு செல்பவர்கள்..

அப்படியும் சில எழுத்தாளர்கள் நான் அறிந்து இந்த வட்டத்தில் இருக்கிறார்கள்.. 

கதைக்கரு என்பதைப் பற்றி நான் ஓரளவு நினைக்கிறது உண்டு.. ஆனால் நான் அதில் பூரணமாக நிறைவுபெற்று இருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன்..


2. அடுத்து கதை எத்தனை அத்தியாயங்கள் கொடுத்தால் சலிப்பில்லாமல் இருக்கும்..?

பெரும்பாலும் என்னுடைய கதைகள் 23, 24 அத்தியாயங்கள், ஒரு அத்தியாயம் இரண்டாயிரம் வார்த்தைகள்.. 

அப்படித்தான் முடிவு பண்ணி எழுத ஆரம்பிப்பேன்.. 

ஆனால் ஒரு சில கதைகள் தங்களைத் தாமே முடிவு பண்ணிக் கொள்ளும்.. 

அந்த மாதிரி எழுதும்போது கதை பெரிதாவதும் உண்டு.. அப்படியெனில் இரண்டு பாகமாக எழுதி விடுவேன்..


3. கதை போரடிக்காமல் சுவராசியமாக எழுதுவது எப்படி..?

இதற்கு ஒரே வரியில் பதில் சொல்லி விடலாம்..

இதில்தான் எழுத்தாளரின் சாமர்த்தியம் திறமை எல்லாம் அடங்கி இருக்கிறது.. இதை வைத்து தான் மக்கள் அவரை தனக்குப் பிடித்த எழுத்தாளராக மாற்றிக்கொள்கிறார்கள்.. இது சொல்லி வராது.. தன்னைத் தானே அவர் செதுக்கிக் கொள்ள வேண்டும்.. அதற்கு மெனக்கெட வேண்டும்..


4. ஒரு கதையை எழுத எவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்..?

அது அந்த எழுத்தாளரின் மனநிலையைப் பொறுத்து இருக்கிறது.. என்னை பொறுத்த அளவில் கட்டாயத்துக்காக நான் எழுதவே மாட்டேன்.. 

ஒரு கதை எழுத ஆரம்பிக்கும்போது தினம் ஒரு அத்தியாயம் எழுத வேண்டும் என்றுதான் நினைப்பேன்.. ஆனால் அது முடியாது..

நேரம் என்று இல்லை.. கதைகளில் வரும் திருப்பங்கள் சுவராசியமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சிந்திக்கும் திறன் வேண்டும்.. அது எல்லா நேரமும் ஒன்று போல் இருக்காது. அந்த நேரம் சாத்தியப்படும் வரை அடுத்த கட்டத்திற்கு கதையை நகர்த்தவே மாட்டேன்.. அதனால் தான் வருடத்திற்கு குறிப்பிட்ட கதைகள் மட்டும் தான் எழுதுவேன்..


5. வாசகர்களுக்கு கதையோட்டத்தில் லயிப்பின்மை, ஒரு பக்கத்தை கூட புரட்ட முடியாமல் போவது..?

இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு விஷயம்தான்..

நிறைய படிக்க வேண்டும்.. பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்கள் இருக்க வேண்டும்.. நிறைய சிந்திக்க வேண்டும்..

கொஞ்சமாக எழுத வேண்டும்…


6. ஒரே மாதிரியான கதைகளை வித்தியாசமான ரசனையுடன் கொடுப்பது எப்படி..? 

இங்கே எல்லாரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள்.. 

ஒரே மாதிரியான கதைகள் எழுதுவதில் எனக்கு பெரிதளவு உடன்பாடு இல்லை.. மக்களின் விருப்பம் இருக்கலாம்.. ஆனாலும் எழுத்தாளராக நம்முடைய சிந்தனை பக்குவப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்..

என்னுடைய அத்தனை கதைகளும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கும்.. எல்லோருக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இருக்காது.. 

அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.. same plot , same trend, same words.. 

இது வாசிப்பவரை ஆரம்பித்தவுடன் முடிவில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.. அப்படி வாசித்து வாசித்து எழுத்தாளர்கள் ஆனவர்கள்தான் அதிகம்..

எழுத்துப்பிழைகள், வாசிப்பு கோர்வைகள் இதைப்பற்றி 'எழுத்து' இந்த அரட்டை அரங்கத்தில் நிறைய பேர் பேசிவிட்டார்கள் அதுவே போதுமானது என்று நினைக்கிறேன்..

நன்றி.. இது என்னுடைய கருத்துக்கள் மட்டுமே..

******

 பிரியா ஜெகன்நாதன் சகோதரி:

ஒரு எழுத்தாளன் கதைக்கருவிற்காக கொஞ்சம் மெனக்கெட்டு தான் ஆகவேண்டும் , எழுத்துநடை அழகாக இருந்து, சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து எத்தனை அழகாக கதையை நகர்த்தினாலும், கதைக் கருவில் வித்தியாசம் காட்ட வில்லை என்றால்

நாளடைவில் அந்தக் கதையும் பத்தோடு பதினொன்று ஆகி விடும்.

கதைக்கரு வித்தியாசமாக இருந்தால் மட்டும் போதாது அதில் அடுத்தடுத்த நிகழவிருக்கும் நிகழ்வுகள் எல்லாம்

வித்தியாசமாகவும் சுறுசுறுப்பாகவும் தொய்வின்றி இருக்க வேண்டும் ....

அப்பொழுதுதான் அந்தக் கதைக்கு வாசகர்களிடமிருந்து அதிக வரவேற்பு கிட்டும்.

பொதுவாக காட்சி நகர்வுகளை அனுமானிக்க முடியாதபடி அமைப்பதுதான் சிறந்த கதை சொல்லும் பாங்கு என நான் எண்ணுகிறேன் ...

அதேபோல் கதை மாந்தர்கள் குறிப்பாக

நாயகன் நாயகியின் குணாதிசயங்களை ஒரு எழுத்தாளர் சிறப்பாக வடிவமைக்க வேண்டும் ...

அதில் எந்த ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது .... 

அதைப்போல் என்னைப் பொறுத்தவரையில் சிறந்த தரமான கருத்துக்களை கூற வேண்டும் என்கின்ற நிலையில், வார்த்தை குறைப்புகள் எல்லாம் கதையின் தரத்தை குறைத்துவிடும் ...

ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லினால் போதுமானது ...

******

ரேணுகா முத்துக்குமார் சகோதரி :

கதைக்கரு எப்படி வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்கலாம். எப்போதோ கேள்விப்பட்ட ஒன்றையோ, செய்தி தாள் அல்லது தொலைக்காட்சியில் வந்த ஒன்றோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் அந்த கருவை சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதை தேர்வு செய்து எழுத வேண்டும்.


கதை எழுதும் அவகாசம் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வேறுபடும். தொடர் கதையாக எழுதும் போது முடிந்த அளவு இடைவெளி விடாமல் வாரத்திற்கு இரண்டு பதிவுகளையாவது கொடுத்தால் படிப்பவர்களுக்கு கதையுடன் பயணிக்க வசதியாக இருக்கும்.

அதிகப்படியான வர்ணனைகள் தொய்வையே ஏற்படுத்தும். தேவையான இடங்களில் மட்டும் வர்ணனை இருந்தால் தொய்வு ஏற்படாது.


ஒரு கதைக்கான அத்தியாயங்கள் எத்தனை என்பது எழுத்தாளரின் விருப்பம். சுவாரஷ்யமாக இருந்தால் எத்தனை அத்தியாயங்கள் இருந்தாலும் படிக்கும் போது சலிப்பு இருக்காது.


பிழைகள் அதிகமாக வந்தால் எழுத்தாளர் நேரமெடுத்து பதிவு போடுவதற்கு முன்னரே பல முறை படித்து திருத்தம் செய்து கொள்ளலாம். எழுத்தாளர் வாசிக்கும் பழக்கத்தை விடாமல் இருந்தாலே எழுதும் போது என்ன பிழைகள் செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

*****

விமர்ச்சகர்கள் :

சித்ரா சரஸ்வதி சகோதரி :

எந்தக் கதைக் கருவை வேண்டுமானாலும் எழுத்தாளர் தேர்வு செய்யலாம். அவரால் அதை நேர்த்தியாக சுவாரசியம் குறையாமல், பொருள் குற்றம் (லாஜிக்கல் எரர்) இல்லாமல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தைரியமாக எழுதலாம். 

அதிகபட்சமாக 5 அத்தியாயங்களுக்குள் அந்தக் கதையை சுவாரசியமாகவும், கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதையின் தன்மையை வாசகர்கள் புரிந்துக் கொள்ள தக்கவாறு எழுத வேண்டும்.

3. ஒரு எழுத்தாளரின் கதைக் கருவை இன்னொரு எழுத்தாளர் அவரின் கைவண்ணத்தில் கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சுவாரசியம் குறையாமல் தரவேண்டும்.

4. உரையாடல்கள் நீண்டு இருந்தாலும், இருவரின் சண்டையை பல அத்தியாயங்கள் தொடர்ந்தால் சலிப்பு ஏற்படும். 

5. யதார்த்தத்தை விட்டு அதிகம் விலகாமல் கதையின் நிகழ்வுகள் இருந்தால் நல்லது.

6.தலைப்பு கொஞ்சம் ஈர்க்கும்படியும், கதைக்கு தொடர்புள்ளபடியும் இருந்தால் நன்றாக இருக்கும். 

7. குறைந்தது வாரம் இரு முறையாவது பதிவுகள் தரவேண்டும். அதிகபட்சமாக மூன்று மாதத்திற்குள் கதையை நிறைவு செய்யலாம். 

8. ஒரு கதையில் தவறு ஏற்பட்டால், அடுத்த கதையை சுவாரசியமாக , விரைவான பதிவுகள் மூலம் வாசகர்களை ஈர்க்கலாம்.

9. எழுத்தாளர் பிழைகள், சந்திப் பிழைகள் இல்லாமல் கதையை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். பிழைகள் இருந்தால் வாசிக்க சோர்வு வரும். கதையில் பிழை இருந்தாலும் வாசிக்க தயக்கம் வரும்.

10. எழுத்தாளர் அவர் முதலில் வாசித்து இவர் கதைக்கு ரசிகராக வேண்டும். அப்பொழுது அவரால் சுவாரசியமாக தரமுடியும்.

11. வாசிப்பில் ரசிப்பு இல்லை என்றால் கதையை தவிர்த்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க புதியதாக எழுத வரும் எழுத்தாளர்கள் கதையை நிறைவு செய்து முதலில் தாங்கள் வாசித்து பார்த்து, திருத்தங்கள் இருந்தால் திருத்தி வாசகர்களுக்கு தொடராக தரலாம்.

*****

கெளசல்யா முத்துவேல் சகோதரி :

என்னை பொறுத்த வரைக்கும் கதையின் அத்தியாயங்கள் பிரச்சினையே இல்லை!!.. அத்தியாயங்கள் அதிகமோ குறைவோ கதையோட உணர்வுப்பூர்வமா ஒன்றிட்டோம்னா கவலையே கிடையாது!!!.. ஒரு விஷயத்தை புரியும் மாதிரி நறுக்குன்னு, நச்சுன்னு சொல்லனும்!!.. எல்லா விஷயத்தையும் அப்படி சொல்லிட முடியாதுதான் ஆனால் தெளிவா, கொஞ்சம் சுருக்கமா சொல்ல முயற்சி பன்னா நல்லா இருக்கும்!!!.. எந்த விஷயத்தையும் ரொம்ப வளவளன்னு சொன்னா படிக்க தோனாது!!!.. உரையாடல் கதைக்கு ரொம்ப முக்கியம்!!.. எல்லாத்தையும் யாரோ ஒருத்தர் சொல்ற மாதிரியே இருக்குறத விட உரையாடல்கள் இருந்தா படிக்க நல்லா இருக்கு!!.. கதையின் தொடர்ச்சியை விட தெளிவு ரொம்ப முக்கியம்!!!.. காட்சிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, உரையாடல்கள் தடைப்பட்டா படிக்க தோனாது!!.. தேவையில்லாத வார்த்தைகளோ, விஷயமோ திரும்ப திரும்ப வந்தா படிக்க சலிப்பு எற்படும்!!!.. புதிய சொல்லாடல்கள், எழுத்து நடை இதெல்லாம் வாசகரின் ஆர்வத்தை தூண்டி படிக்க வைக்கும்!!!.. கதைல லாஜிக் இருக்குறதும் ரொம்ப முக்கியம்!!!.. தேவையில்லாத வக்கிரங்கள், காதல் காட்சிகள்ன்னு தேவையில்லாத ஆபாசங்கள் இல்லாத கதைகள் எப்போதுமே தனி அழகு!!!.. கலகலப்பான நட்பு, அன்பான குடும்பம், உணர்வுப்பூர்வமான காதல் இப்படியான கதைகள் எனக்கு கூடுதல் இஷ்டம்.

அதே மாதிரி தைரியமான பெண்களா இருக்குறாங்க ன்னு ரொம்ப மிகைப்படுத்தாமல், தன்னம்பிக்கையான சாதாரன பெண்கள் மாதிரியான கதாப்பாத்திர படைப்பு படிக்க அருமையா இருக்கும்!!!

*****

மிக்க நன்றி நட்புகளே🙏🙏

நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஹாய் பிரண்ட்ஸ்,

நான் ஒரு வாசகி, விமர்சகர், எழுத்தாளர் எனும் முறையில் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.

**நாம் அன்றாடம் பார்க்கும் சம்பவங்கள், தொலைக்காட்சி, மனதில் தோன்றும் சில விசயங்களை கதையாக வடித்தால் நன்றாக வருமா என்று யோசித்து முதல் நமக்குள்ளே ஓட செய்தல் வேண்டும். அப்படி ஓடுகின்ற படமானது கதையாக எழுதினால் சிறப்பாக இருக்குமா, பலரின் பார்வையில் படும் போது கேள்விகுறி ஆகாமல் வெற்றியடையுமா என்பதை முடிவு செய்து, ஒரு டைரியில் எழுதி வைத்தல் நல்லது.

மூன்று மணி நேரம் ஆனாலும் அந்த கதைப்பற்றி மனதில் தோன்றுவதை முழுவதுமாக எழுதிவிட்டு, கதாபாத்திரத்தின் பெயர், காதல் மற்ற காட்சிகள் தேர்ந்தெடுப்பது சிறப்பு. அதற்கு பிறகு ஒவ்வொரு அத்தியாயம் எழுதும் போதும் காட்சிகள், வார்த்தைகள் அருவி போல கொட்டும்.

**அது போல, ஒரு எழுத்தாளரின் எழுத்தில் ரசிப்புத்தன்மை, விறுவிறுப்பு, சுவராஸ்யம், அடுத்து என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்படியான கதைகளை மட்டும் எழுத வேண்டும். அது தொடர் வாசிப்பிற்கு மேலும் ஆர்வத்தை கொடுக்கும். எழுத்தாளர் முதலில் எழுதிவிட்டு, தன்னை ஒரு வாசகனாக நினைத்து வாசித்து பார்த்து, சரியில்லாத காட்சிகளை திருத்துதல் சிறப்பு.

** கதைக்கு தேவையான இடங்களுக்கு மட்டும் வர்ணனைகளை ரசனையுடன் புகுத்தலாம். ஆனால் பக்கத்தை நிரப்புவதற்காக வர்ணனைகளை புகுத்த கூடாது. அது போல கதையின் இடையில் வரும் சினிமா பாடல் வரிகள், கவிதைகள் அனைத்தும் 4 வரிகளில் கொடுத்து நிறைவு செய்யலாம் அல்லது கவிதை மட்டும் கொடுத்து சினிமா வரிகளை தடை செய்யலாம். இதுவும் வாசிப்பிற்கு லயிப்பின்மையை கொடுக்கிறது.

** அத்தியாயங்களை அதிக அளவில் நீட்டிப்பதில் எப்போதுமே எனக்கு விருப்பமின்மை. சொல்ல வந்ததை தெளிவாக அதே நேரம் இழுக்காமல் சொல்லலாம். அது போல நாம் எழுதும் கதை புத்தகமாக வரும் பட்சத்தில் கட்டாயம் கண்ணியம் முக்கியம். 280, 350, 400 என விற்பனை செய்யப்படும் புத்தகம் வாங்குபவருக்கு மனச்சங்கடத்தை கொடுத்து விடக்கூடாது.

அதுபோல ஆன்டி ஹீரோ எனும் பெயரில் வக்கிரங்களை புகுத்தி எழுதி விற்பனை செய்யப்படும் புத்தகம், அதை வாங்கி வாசிப்பவரின் மனநிலையை சற்று கருத்தில் கொள்ள வேண்டும்.

** ஒரே மாதிரியான கதைக்கருவில் பல மாற்றங்களை புகுத்தி, காட்சிகளில் ரசனைகளை கலத்தி, தன்னுடைய எழுத்து நடையால் வாசகர்களை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெறுவது எழுத்தாளனின் புத்திசாலித்தனம்.

** ஆண்களை முரட்டு மனிதர்களாக, சைக்கோவாக, ஆன்டி ஹீரோவாக காண்பித்து வாசகர் ரீதியில் வெற்றி பெறுவதை நிறுத்தி, அவர்களையும் நல்ல முறையில் காண்பிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

** பிழைகள், வார்த்தை கோர்வுகள் வராமல் இருக்க, ஒரு அத்தியாயத்தை நான்கு ஐந்து முறைகள் சரிபார்த்த பின், தளத்தில் பதித்து வாசித்து பார்க்க வேண்டும். அதன் பிறகு பிழைகள் நம்மை மீறி வராது.

** வாசிப்பு மிகவும் சிறந்தது. நிறைய வாசித்தால் புதிய வார்த்தைகள், வித்யாசமான காட்சிகள், நிகழ்வுகள், எழுத்து நடை நமக்கு கிடைக்கும். அப்படி இல்லாமல் வேறு நபரின் கதைகளை வாசித்தால்  அவரது எழுத்துக்கள், கதையோட்டம் நமக்குள் வந்து விடும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

நன்றிகள் நட்புக்களே

*****






Comments

  1. நல்ல தலைப்பு ஜோதி ஆனந்த ஜோதி

    நான் எழுத்தாளினி இல்லை . இந்தக் கதைக்கரு என்கிற விஷயம் தான் எனக்கு சத்துப் பற்றாக்குறை (deficient)😂😜

    அதனால் கதை எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய மிகச்சில டிப்ஸ்களை மட்டுமே சொல்கிறேன் . இதை எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் பலருக்கும் , பல வருடங்களாக சொல்லி வருகிறேன் .

    இது ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு உதவலாம் .

    இதை நான் ஒரு வாசகியாக மட்டுமே தெரிவிக்கிறேன் .

    1 . கதை தலைப்பை முடிந்தவரை சிறியதாகவும் , கதையை ஒருவரியில் சொல்லி விடுவது போலவும் இருந்தால் , மனதில் நன்றாகப் பதியும் .


    2. உங்களுக்கு comedy, serious இரண்டு வகைகளையும் சிறப்பாகக் கொடுக்க முடியுமென்றால் , மாற்றி மாற்றி ...ஒரு சீரியஸ் , ஒரு காமெடி என்று கதைகளைக் கொடுக்கலாம் . அல்லது நாலைந்து சீரியஸ்ஸுக்கு நடுவில் ஒரு காமெடி என்று வகைப்படுத்திக் கொள்ளலாம் . தொடர்ந்து ஒரே மாதிரி கொடுத்தால் உங்களுக்கும் ஸ்ட்ரெஸ் ஆகலாம் .

    3. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் முடிப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள் . இதற்காக 'அவள் இதைச் செய்வாளா?' 'எப்படி இது நடக்கிறது என்று பார்ப்போம் ' இது போன்ற கேள்விகளுடன் முடிக்க வேண்டியது அவசியமில்லை . இயல்பாக ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்க முனையலாம் .

    4.முடிந்தவரை கதையை , பாதி அல்லது முக்காலாவது முடித்துவிட்டே ஆன்லைனிலும் தொடங்குவது நல்லது . அப்போதுதான் நீங்கள் வாக்களித்துள்ளபடி குறிப்பிட்ட நாட்களில் உங்கள் எபிசோடை தவறாமல் கொடுக்க முடியும் . உங்கள் மீதும் வாசகர்களுக்கு நம்பிக்கை வரும் .

    5. கதை நடுவே நீங்கள் நீங்களாகப் பேசுதல் கூடாது (உங்கள் mind voice போன்றவை ). கதை மாந்தர்கள் மட்டுமே பேச வேண்டும் . இல்லாவிட்டால் கதை படிக்கும் வாசகர்களுக்கு ஃப்ளோ விட்டுப் போய்விடும் .



    மீண்டும் சொல்கிறேன் . இதை நான் ஒரு வாசகியாக மட்டுமே சொல்கிறேன் .

    ReplyDelete
  2. நல்ல டாபிக் ஜோதி.👍
    1. நாவலுக்கான நீளம் என்பது 40,000 முதல் 50,000 வார்த்தைகள். திரு. இந்திரா சௌந்தர்ராஜன், மல்லிகா போன்றோரின் கருத்தும் கூட. இது நாவல் போடுவதற்கு ஏதுவான நீளம் என்பதும் ஒரு காரணம் போலும்.
    எனக்கு இந்த அளவில் தான் கதை சொல்ல வருகிறது. அதுவும் இந்த நீளத்தை வழிமொழிய ஒரு காரணம்.😁

    2. வர்ணனையே இல்லாமல் இருந்தால் ஒன்ற முடியாது. கதை நிகழ்வுக்கு தேவைபடும் இடத்தில் கொடுக்க வேண்டும். வர்ணிக்க வார்த்தை பிரயோகம் அவசியம். அது கைவரப்பெற்றவர்கள் வர்ணனை கண்டிப்பாக வாசகரை உள்ளிழுக்கும். அந்த வார்த்தை ஜாலம் வரப்பெறாதவர்கள் சுருக்கமாக முடித்துக் கொள்ளலாம்.
    3. கண்டிப்பாக பாதி கதையாவது எழுதாமல் போஸ்ட் செய்ய வரமாட்டேன். அடுத்த எபி தர வேண்டும் என்ற பிரஷர் இருந்தால் எழுத்தில் focus இருக்காது என்று எனக்கு ஒரு பயம். ஒவ்வொரு எபி மீண்டும் மீண்டும் படித்து திருப்தியாக இருந்தால்தான் பதிவு. அதே போல சொன்ன கிழமைகளில் தவறாமல் பதிவு இருக்க வேண்டும். வாசகியாய் நான் விரும்பும் ஒரு விஷயம். அதை எழுத்தாளராகவும் கடைபிடிக்க விழைகிறேன்.

    4. கதை எழுத எடுத்துக் கொள்ளும் நேரம் என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப அமைவது. பெரும்பாலும் இதையே முழு நேர வேலையாய் செய்பவர் குறைவு. ஆசைக்காக எழுதும் என்னைப் போல் பலர் கிடைக்கும் கொஞ்ச நேரத்தை இதில் செலவிடுகிறோம்.
    5. கதைக்கரு - எழுத்தாளரின் சுதந்திரம். ஆனால் முடிந்தவரை நேர்மறையான எழுத்தும் கருத்தும் வர விருப்பப்படுகிறேன். நாளிதழ் செய்திகளே போதும் வாழ்க்கையின் அநியாயத்தை காட்ட. அதிலிருந்து மீண்டு வரும் எழுத்துக்கள் தான் தற்போதைய தேவை.

    இவை என் கருத்துகள் மட்டுமே. அவரவர் பார்வை அவரவர்க்கு. சரி, தவறு என்று வரையறையும் அவரவர் அளவில்.🙂

    ReplyDelete
    Replies
    1. நான் ராகவி. மல்லிகா மணிவண்ணன் தளத்தில் எழுதுகிறேன்.😀

      Delete
  3. You are doing wonderful job dear. I am learning lot. Keep on rocking.its really helpful

    ReplyDelete

Post a Comment