ஜெயா சிங்கார வேலு

#எழுத்தாளர் அறிமுகப்படலம் #சீசன் இரண்டு ஹாய் பிரண்ட்ஸ், இன்றைய அறிமுக எழுத்தாளர் ஜெயா சிங்காரவேலு அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ: பெயர் : ஜெயா சிங்காரவேலு எழுத வந்த வருடம் : 2018 ஊர்: பிறந்தது மன்னார்குடி, இருப்பது கரூர். படிப்பு: M.sc.,M.phil., B.ed தளம்: சங்கமம், சிவரஞ்சனி அமேசான் பெயர் & லிங்: ஜெயா சிங்காரவேலு. தற்சமயத்து லிங்: https://www.amazon.in/dp/B08WRT8V1G/ref=cm_sw_r_cp_apa_glt_FC0GHC501TXBYG4GKNSB நீங்க எழுதியிருக்கும் படைப்புகளின் எண்ணிக்கை : 7, 4 சிறார் கதைகள். உங்களுடைய படைப்புகளின் பெயர் : கார்த்திக் கல்பனா, துணைவன், அபிமானி, என்னுயிர்த் தோழி, வாழ்தல் இனிது, மாத்தி யோசி, சிட்டுக்குருவி, குட்டிக் கண்ணனும், புஜ்ஜியும், காதல் ரோஜாவே, மண்ணில் வந்த நிலவே, காதலின் தீபம் வரலாற்று சிறுகதை. … அருமையான பெயர்கள் ***** நீங்கள் ஒரு எழுத்தாளராக உங்களை உணரும் தருணம் எது : யாராவது பாராட்டும் போது. எழுத்துலகை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் : படிப்பதும், எழுதுவதும் மிகவும் பிடிக்கும். எழுத்து தான் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து காக்கிறது. யாருடைய தூண்டுதலின் பெயரில் அல்லது எப்படி நாவல் எழுதும் ஆவல் உருவானது: முதலில் 100 வார்த்தைக் கதைகள் மாம்ஸ்ப்ரெசோ செயலியில் எழுதினேன். அதற்குக் கிடைத்த ஊக்குவிப்பு சிறுகதை எழுத தூண்டியது. நாவலும் எழுதிப் பார்க்கலாம் என நண்பர்கள் ஊக்கம் கொடுத்தனர். உங்கள் எழுத்து அனுபவத்தை பற்றி சொல்ல முடியுமா : மனசுக்குத் தோணுவதை ப்ளாக்காக எழுதினேன். அதன்பிறகு உண்மைக்கதைகள் எழுதினேன். பிறகு எழுத்துக்கான தரவுகள் சேகரித்து எழுதத் தொடங்கினேன். நிஜ சம்பவ அடிப்படையில் கதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும் : எந்தவொரு சம்பவத்தையும் உள்வாங்கும் திறன் அவசியம். ஒரு சிற்பி போல எதை விடுத்து, எதை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு அவசியம் வேண்டும். உங்களுடைய கல்லூரி அனுபவத்தை கதையாக வடிவமைத்திருக்கிறீர்களா : இல்லை. உங்கள் படைப்புகளை வாசிக்கும் வீட்டினர், உறவினர்களின் பதில்கள் : இன்னும் சிறப்பாக எழுதணும் என்று சொல்வார்கள். பேச்சு மொழியில் வசனம் எழுதணும் என்று நண்பர்கள் கூறுவார்கள். உங்கள் வீட்டினரின் பெயர் மற்றும் குணாதிசயங்களை படைப்பில் பயன்படுத்தியது உண்டுமா : உண்டு. ஒவ்வொரு கதையிலும் எங்கோ நானும் இருப்பேன். கவிதை என்பது நம்முடைய மனதில் தோன்றும் கிறுக்கலா அல்லது கதையின் மீதான மயக்கமா : கவிதை என்பது எண்ணங்களின் குட்டிக் குழந்தை. நீங்கள் நாவல் எழுத வந்ததற்கு உங்கள் வீட்டில் கிடைத்த ஆதரவு பற்றி சொல்லமுடியுமா: ஏதோ எழுது என்பதாகத்தான் ஆதரவு இருக்கிறது. நம்மை அவர்கள் தொந்தரவு செய்வதில்லை. உங்கள் படைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கும் பெயர்கள் கதையோட்டத்தை பொருத்து இருக்குமா அல்லது விருப்ப பெயரை வைப்பதா : பொதுவாக தமிழ் பெயர்கள் வைப்பேன். சிறுகதை, நாவல் இரண்டில் உங்களுக்கு பிடித்த வகை? எது உடனடியாக வாசகர்களை சென்றடையும் என்று நினைக்கிறீர்கள் : சிறுகதை தான் உடனே போய்ச் சேரும். எனக்கும் சிறுகதை, நாவல் இரண்டுமே பிடிக்கும். உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த மிகச்சிறந்த வெகுமதியாக நீங்கள் நினைப்பது என்ன: விமர்சனங்கள் தான். கரூர் சொந்த ஊரென்று சொல்லியிருக்கீங்க. உங்களுடைய ஊரைப் பற்றி கதையில் எழுதிய அனுபவம் இருக்கிறதா : எழுதியிருக்கிறேன். காதல் ரோஜாவே கதையில் கரூர் வரலாற்று செய்திகள், உணவு, மக்களின் தொழில் அனைத்தும் கூறியிருப்பேன். உங்கள் ஊரின் சிறப்பம்சம் என்ன : டெக்டைல்ஸ், பஸ் பாடி, கொசுவலை, கரூர் கரம். ஆட்டிசம் பற்றி முதலில் எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க, அதைப் பற்றி சொல்லமுடியுமா : ஆட்டிசம் என்பது நோயல்ல. அதுவொரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதிலும், சமூகத்தில் கலந்து பழகும் திறனிலும் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி விஷயங்களை திரும்ப திரும்ப செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். அதற்கு மருந்து கிடையாது. பயிற்சிகள் மட்டுமே உண்டு. நீங்கள் ஒரு நாவல் எழுத தேர்ந்தெடுப்பது என்ன: கதைக்கரு. அதன்பிறகு அதை ஒட்டிய தரவுகள். கதைக்கரு என்பது எழுதுபவரின் கற்பனையில் மிளிர்ந்தால் நன்றாக இருக்குமா அல்லது நிஜ சம்பவ அடிப்படையில் எழுதுவது அழகாக இருக்குமா : கதையில் கற்பனையும் அழகு, உண்மையும் அழகு தான். முகநூலில் கிடைத்த நட்புகள் : நிறையப் பேர் இருக்கிறார்கள். நாங்கள் பெண்களாக சேர்ந்து பூஞ்சிட்டு என்ற ஆன்லைன் சிறார் இதழ் ஒன்று ஒரு வருடமாக வெளியிட்டு வருகிறோம். அவர்கள் அனைவரும் நண்பர்களை விடவும் மேல். உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் : பாலகுமாரன், இந்திரா சௌந்தரராஜன், கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெயகாந்தன், ரமணிசந்திரன், அனுராதா ரமணன், லக்ஷ்மி,இப்போது எழுதும் உஷாந்தி, அகிலாண்ட பாரதி, பூர்ணிமா, புவனா அம்மா…. இன்னும் பலர். நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : எல்லா நூல்களும் இப்போது படிக்கிறேன். போன வருடம் மட்டும் 86 புத்தகங்கள் படித்து வாசிப்பை நேசிப்போம் குழுவில் விமர்சனம் பதிந்து இருக்கிறேன். உங்களை கவர்ந்த எழுத்தாளரின் பெயர்: பாலகுமாரன். ஆன்லைன் கதை எழுதுவதால் நீங்கள் உணருவது என்ன : ஆன்லைனில் 2 கதைகள் மட்டுமே எழுதினேன். உடனடி விமர்சனம் தான். இன்ஸ்டன்ட் காபி போல கிடைப்பது ஒரு வகையில் மகிழ்ச்சி. உங்கள் படைப்புகளை வாசிக்க விரும்புவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது : வாசித்துப் பாருங்கள். என்னோட கதையில் வில்லனோ, ஆன்டி ஹீரோவோ கிடையாது. நேர்மறை எண்ணங்களை உடைய மாந்தர்கள் உலவும் களமாகத்தான் இருக்கும். பீல் குட் கதையாக இருக்கும். தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா : வரலாற்று சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. காதல் ரோஜாவே சங்கமம் தளத்தில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. மாம்ஸ்ப்ரெஸ்சோவில் எண்ணற்ற பரிசுகள் பெற்றியிருக்கிறேன். பிரதிலிபியிலும் என் கதை வெற்றி பெற்றிருக்கிறது. வாசகர் கேள்வி பதில்கள் : 1.உங்கள் ஆசிரியர் பணி உங்கள் எழுத்துலகில் எவ்வாறு பரிணமித்தது? சமூகத்துக்குச் சரியானதை சொல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வு தந்திருக்கிறது சகோதரி. மேலும் என்னுடைய கதையில் சிறப்புக் குழந்தைகளைப் பற்றியும் சொல்லி வருகிறேன். 2.லைட் ரீடிங் கதை... ஆழ்ந்து அனுபவித்து படிக்க வைக்கும் கதை. எதை எழுத உங்களுக்கு விருப்பம்? இரண்டுமே விருப்பம் உண்டு பூர்ணிமா. இன்னும் நிறைய ஜானர்களில் எழுத வேண்டும் என்ற ஆசையும் உண்டு. 3.உண்மை சம்பவம் அடிப்படையை பற்றி எழுதியது உண்டா..எந்த நாவல்? கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன். இன்னும் ஒரு எபியில் அந்தக் கதை முடிந்து விடும். 'மண்ணில் வந்த நிலவே', சிவரஞ்சனி தளத்தில். 4.எழுத்துலகில் யாரை தங்களின் ஆசானாக எண்ணுகிறீர்கள்? நிஜமா சொல்லணும் என்றால் அப்படி யாரும் இல்லை. பிடித்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப்போல் எழுதணும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. எனக்கு என்ன வருதோ, பிடிக்குமோ அப்படியே எழுத வேண்டும் என நினைக்கிறேன். 5.ஒரு வாசகர் மனநிலையில் இருந்து புத்தகங்கள் புதினங்கள் வாசித்ததற்கும் இப்போது எழுத்தாளராக இருந்து மற்றவர்களின் புதினங்கள் வாசிப்பதற்கும் என்ன மாதிரியான வித்தியாசங்கள், கண்ணோட்டங்களை காண்கிறீர்கள்? எழுதுவது கஷ்டம் என்பது மட்டும் புரிகிறது. அதற்கான மெனக்கெடல்கள் அதிகம் என்பதை உணர முடிகிறது. ஒருவரின் முதல் நாவலுக்கும், அடுத்தடுத்த நாவலுக்கும் இருக்கும் எழுத்தின் முதிர்ச்சியை அறிய முடிகிறது. சிலரை பார்த்து இப்படி எழுதக் கூடாது என்றும் நினைத்து இருக்கிறேன். 6.உங்க நேர மேலாண்மையைக் கண்டு பல தடவை வியந்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டே எழுதுவது என்பது அத்தனை எளிதல்ல... மனதில் தோன்றும் கதையை எல்லாம் எழுதிவிடுவீர்களா... அல்லது அவ்வப்போது கதை ஏதேனும் எழுதப்படாமல் விடுபட்டு போகுமா...? அட போங்க சகோதரி. இதோ இப்பவே தொட்டி ஆட்டிக்கொண்டே டைப் பண்ணுகிறேன்😃. நமக்குன்னு ஒரு நேரம் ஒதுக்கினால் நாமும் சந்தோஷமாக இருக்கலாம். குடும்பத்தினரும் சந்தோசமாக இருக்க விடலாம்😂. மனதில் தோன்றும் கதையை டைரியில் குறித்து வைத்துக் கொள்வேன். நேரம் கிடைக்கும் போது எழுதி விடுவேன். கதை எழுதவில்லை என்றால் கூட கவிதை என்ற பெயரில் அப்போதைய மனநிலையை சொல்லி விடுவேன். 7.முதன்முதலாக யாரோட விமர்சனம் (உங்க கதைக்கான) உங்களை மெய்சிலிர்க்க வைத்தது? ஏன்? எப்பவும் புவனா அம்மா என்னுடைய கதைக்கு பாசிட்டிவ் விமர்சனம் தருவார்கள். குறைகள் இருந்தாலும் தனியே சொல்ல சொல்லி நானும் கேட்டு இருக்கேன். வரலாற்று சிறுகதைக்கு நிறைய விமர்சனம் வந்தது. அது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. 8.உங்களுக்கு எந்த ஜானர் படிக்க/ எழுத விருப்பம்? எனக்கு வரலாற்று நாவல்கள், குடும்ப கதைகள், மர்மக் கதைகள் பிடிக்கும். குடும்ப கதைகளும், சிறார் கதைகளும் எழுத விருப்பம் இருக்கிறது அம்மா. சிறார் தொடர் ஒன்னு நம்ம பூஞ்சிட்டுவில் எழுதணும். நேரம் கிடைக்கும்போது எழுதிடுவேன். 9.படிக்க நேரம் கிடைக்கிறதா? எழுதுவதை விட நிறையப் படிக்கிறேன். இந்த வருடம் மட்டும் வாசிப்பை நேசிப்போம் குழுவில் 85 புத்தகம் படித்து விமர்சனம் எழுதியிருக்கிறேன். 10.உங்கள் எதார்த்த எழுத்துக்களின் ரகசியம் என்ன? எனக்கு அதுதான் வருகிறது. 11.இதைப் பற்றி கண்டிப்பாக எழுதவேண்டும் என்று மனதில் ஏதாவது கதைக்கரு வைத்திருக்கிறீர்களா? இருக்கிறது. சிறப்புக் குழந்தைகளின் வாழ்வியலை இன்னும் சிறப்பா எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். 12.ஒரு வாசகியாய் ஒரு குறிப்பிட்ட ஜானரில் கதை படிப்பதற்கும் ஒரு எழுத்தாளராய் அந்த ஜானரில் கதை எழுதுவதற்கும் என்ன மாதிரியான உணர்வுகள் உங்களுக்கு வருகிறது? நான் எல்லாவிதமான எழுத்துக்களையும் படிக்கிறேன். பொதுவா குடும்ப கதைகளை எழுதுகிறேன். வாசகியாய் ரொமான்ஸ் படிக்கும்போது சுலபமா இருக்கிறது. ஆனால் ரொமான்ஸ் எழுதுவது ரொம்ப கஷ்டம் என்று உணர்ந்திருக்கிறேன். நாம எழுதுறது யாரையும் முகம் சுளிக்க வைக்கக் கூடாதுன்னு இருக்கிற தெளிவும் ஒரு காரணம் என நினைக்கிறேன். 13.நீங்கள் கதை எழுதும் போது நீங்கள் முடிவு செய்த மாதிரியே கதையின் போக்கு உள்ளதா? நீங்கள் நினைத்தது போலவே எழுதுகிறீர்களா? அல்லது எழுத எழுத கதையின் போக்கு மாறுவது போல உணர்கிறீர்களா? நான் நினைக்கும்படி தான் கதை எழுதுகிறேன். சில கதை மாந்தர்கள் வேணும்னால் நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கும். 14.உங்கள் முதல் புத்தகம் உங்கள் கையில் கிடைத்த போது எப்படி உணர்ந்தீர்கள்? இப்போது தான் முதல் புத்தகம் வந்திருக்கிறது. எத்தனையோ புத்தகங்கள் பார்த்து படிக்கும் போது ஏற்படாத ஒரு உணர்வு வந்தது. என் பேரையும், புத்தகத்தையும் தடவிப் பார்த்தேன். கைகளில் அப்படியே ஒட்டிக்கொண்டது போல் உணர்வு வந்தது. 15.உங்களின் தூண்டுகோல் எந்த கதை? மாம்ஸ்ப்ரெஸ்சோ தளத்தில் 100 வார்த்தைக் கதைகள் தான் எழுதத் தூண்டியது.

Comments