#எழுத்தாளர்அரட்டைஅரங்கம்
16 - 02 - 2021இது நம்ம ஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அரட்டை அரங்கத்தில் தலைப்பு " இலக்கிய நாவல்கள் மற்றும் புனைவுகள்"
இலக்கிய நாவல்கள் என்றால் என்ன? இரண்டிற்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் நினைப்பது? இலக்கிய நாவல்கள் எழுதிய, எழுகின்ற எழுத்தாளர்களின் பெயர்கள். இலக்கிய நாவல்கள் வாசித்த அனுபவம் இருக்கிறதா? இருந்தால் அது எப்படி இருக்கும் என உங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள். இலக்கிய நாவல்கள் எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும். இன்றைய எழுத்துக்களில் இலக்கிய நாவல்களின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது?
புனைவு என்றால் என்ன? அதை எழுதிய மற்றும் வாசித்த அனுபவங்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். வாசகர் நெஞ்சில் அழியா வண்ணம் இடம்பெற எத்தகைய படைப்புகளை எழுத்தாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்?
இரண்டில் எது வாசிப்பவர் மனதில் ஆழமாக பதிகிறது?
இன்றைய கேள்விக்கான பதில்கள் வரும் ஞாயிறு காலை மறு பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும்.
நன்றி நட்புக்களே
🙏🙏🙏
ஹாய் பிரண்ட்ஸ், அன்றைய கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாசித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் :
20 - 2 - 2021
இலக்கிய நாவல்கள் என்பது இயல்பான எழுத்தோட்டத்தில் ஒரு இடம், மக்கள், அவரது தொழில், வாழ்க்கை முறைகள் என சமகால மனிதர்களைப் பற்றி பிரதிபலிக்கும் படியானது. இதில் அவரது பேச்சு, உணவு முறை, வீடு, பழக்க வழக்கம், வேலைகள், உறவினர்கள், வாழ்வியல் முறைகள் .... இப்படி நகர்ந்து போவது. அதனூடு புனைவும் சிறிதளவு கலந்து காணப்படலாம்.
எழுத்தாளர்கள் : புதுமைப்பித்தன், சோ. தர்மன், புதுமைபித்தன், கி. ராஜ நாராயணன், ஜானகிராமன், ஜெயகாந்தன், வேல. ராம மூர்த்தி...
புனைவு : கற்பனையாக எழுதப்படும் படைப்பு. ஒரு நிஜ சம்பவம், அல்லது கற்பனையாக ஒரு நிகழ்வை அதன் போக்கில் ஓட விட்டு, இலக்கணத்துடன் கலந்து எழுதுவது.
எழுத்தாளர்கள் : ரமணி மேம், காஞ்சனா மேம், மணிமாலா மேம், சுமதி மேம் முதல்... தற்சமயத்து எழுத்தாளர்கள் வரையில் அடங்கும்.
இரண்டில் எது வாசகர் நெஞ்சில் அழியாவண்ணம் இருக்கிறது என்றால் இலக்கிய நாவல்கள் தான் அதிகப்படியாக...
புனைவுகள் பல பல புதுவிதமான வாசிப்பில் மறந்து விட வாய்ப்பிருக்கிறது.
புனைவுகள் கலந்து நாம் எழுதப்படுகின்ற படைப்புகள் குடும்ப நாவல், காதல் கதை என்று பெயர் பெறுவது போல, வரலாற்று நாவல், ஆன்மீக நாவல், பேன்டஸி நாவல், அறிவியல் நாவல், துப்பறியும் நாவல், சமூக நாவல், அரசியல், தழுவல், மொழிபெயர்ப்பு.... என்று வகைப்படுத்தப் படுகின்றன. இவற்றிக்கான விளக்கங்களை தெரிந்து கொள்ள
இதில் வரும் புதினங்கள் பகுதியை வாசியுங்கள். புனைவில் இலக்கணம் அடக்கம். இலக்கியத்தில் நாவல்கள் அடக்கம்.
நன்றி
எழுத்தாளர் டேய்சி மாறன் :
இலக்கிய நாவல்: இலக்கிய நாவல் என்பது உரைநடையில் அமைந்த நீள்கதை. இது வாழ்க்கையையும், நிகழ்வுகளையும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுவதே. வட்டார வழக்கு எழுதாமல் அதற்கு நேர்மாறாக தமிழ் இலக்கிய நடையில் வார்த்தைகள் இருக்க வேண்டும். புனைவு: உண்மை அல்லாத கற்பனை கதைகளைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவை. புனைகதைகள் முழுவதும் கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. புனைகதைகளில் உண்மையான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெறுவதுண்டு. எல்லாப் புனைகதைகளும் கலைத்துவம் கொண்டவையாக இருப்பதில்லை எனினும், புனைகதை என்பது ஒரு கலை வடிவமாக அல்லது பொழுதுபோக்கு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.
எழுத்தாளர் ஜெயக்குமார் :
அன்பு சகோதரிக்கு
வணக்கம்.
நாவல்கள் இலக்கியத்திற்குள் அடங்கும். அப்படியிருக்க இலக்கிய நாவல் என்பதை, சங்க கால மொழி நடையில் எழுதும் நாவல்கள் என்ற எண்ணத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதோ!
இலக்கியம் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் என்பார், இலக்கியம், மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது; மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார்
இலக்கியம் என்பது வாழ்வியலை அறத்தை நற்பண்புகளை காட்டும் நூல் அவற்றில் தவறினால் என்னென்ன நேரும் என்பதையும் நம் வாழ்வின் பல சூழ்நிலைகளை வழிகாட்டும் விதமாகவும் அமைய வேண்டும்
இலக்கியம் என்பது மனித வாழ்வின் இலக்கினை இயம்புதல் என்ற பொருளோடு உள்ள சொல் நாம் செல்ல வேண்டிய இலக்கு என்ன அதற்கான வழிவகைகள் என்ன என்பவைகளை எடுத்தியம்பும்.
நாவல் என்பது வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாக உரைநடையில் தோன்றியது. கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு.
சங்க கால மொழி நடையில் எழுதப்படுகின்ற வரலாற்று நாவல்களுக்கும் சமூக நாவல்களுக்கும் சில ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. வரலாற்று நாவல்களில் கதையும், கதை மாந்தர்களும் வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப் பட்டிருக்கும். வரலாற்று நாவல்களில் வரலாற்று உண்மைகளைப் புள்ளிகளாக ஆங்காங்கே அமைத்து அவற்றைச் சுற்றித் தம் புனைவுகளை இழைகளாக இணைத்து நாவலாக்குகின்றனர்.
வரலாற்றுச் சூழல்கள் இந்நாவல்களில் மையமாக இருக்கும். நிகழ்வுகளும், பாத்திரங்களும் நாவல்களை நடத்திச் செல்வனவாக இருக்கும். உண்மைப் பெயர்களில் கற்பனை நிகழ்வுகளும், வரலாற்று நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு நாவல்கள் எழுதப்பட்டிருக்கும்.
பழங்கால மக்களின் வாழ்வு முறை, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழில் வரலாற்று நாவல்களை எழுதியதில் முன்னோடியாகத் திகழ்பவர் கல்கி. அவரைத் தொடர்ந்து அகிலன், நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் போன்றோர் வரலாற்று நாவல்களை எழுதிப் புகழ் பெற்றனர். சாண்டில்யன் தமிழில் மிகுதியான வரலாற்று நாவல்களை எழுதினார்.
நானும், வீரகூர்ச்சவர்மன் (முதல் பல்லவன்), மஹாசத்ரபதி ருத்ரதாமன் (காதலும் வீரமும்) என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளேன். அவை இரண்டும் வானதி பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
புனைகதை அல்லது புனைவு என்பது, உண்மை அல்லாத கதைகளைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவை. எனினும், புனைகதைகள் முழுமையாகவே கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. புனைகதைகளில் உண்மையான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெறுவதுண்டு. எல்லாப் புனைகதைகளும் கலைத்துவம் கொண்டவையாக இருப்பதில்லை எனினும், புனைகதை என்பது ஒரு கலை வடிவமாக அல்லது பொழுதுபோக்கு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.
புனைகதைகள் கற்பனையானவை எனினும் உண்மையாக நடக்கக்கூடியவை. அவற்றில் இடம்பெறும் நிகழ்வுகள், இடங்கள், மனிதர்கள் போன்றவை உண்மையானவையாகவே இருக்கவும் கூடும். உண்மைசார்ந்த புனைகதைகள், அதனை வாசிப்பவர்கள் தாம் உண்மையான நிகழ்வுகளையே வாசிப்பதான உணர்வைப் பெற வைப்பன.
நானும் ஒருசில புனைவு கதைகளை எழுதியுள்ளேன். அவைகள் அமசோன் கிண்டிலில் பதிவேற்றப்பட்டுள்ளன. சின்னத்தான், என்றும் என் நெஞ்சில், விரிசல், மனங்களின் மணங்கள், சொத்துக்குச் சொந்தக்காரன் போன்ற கதைகளை எழுதியுள்ளேன்
- ஜெயக்குமார் சுந்தரம்
நந்தினி சுகுமாரன் :
நவீன இலக்கியம் அச்சு ஊடகத்தில் வெளிவந்தமையால் உரைநடை மையப்போக்காக உருவாகியது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற வடிவங்கள் உருவாயின. இந்த ஒவ்வொன்றிலும் முன்னோடிகள் தமிழில் உள்ளன. நாவலுக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, ராஜம் அய்யர் ஆகியோர் முன்னோடிகள். சிறுகதைக்கு வ.வெ.சு.அய்யர் முன்னோடி. இவர்களனைவரும் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள்.
இவர்களின் காலத்தைக் கொண்டு பார்த்தால் 1880 முதல் 1925 வரையிலான காலகட்டம் நவீன இலக்கியத்தின் தொடக்க காலகட்டம். அதன்பின் 1950 வரையிலான காலகட்டம் வளர்ச்சிக் காலகட்டம். இன்றுவரையிலான இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக நவீனக் காலகட்டம் என்கிறோம்.
சமகால இலக்கியம் [contemporary literature] என்பது நவீன இலக்கியத்திலுள்ள நிகழும் தலைமுறை காலம். பொதுவாக ஒருவர் தான் வாழும் காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை சமகால இலக்கியவாதிகள் என்றும் அவர்களின் எழுத்தை சமகால எழுத்து என்றும் சொல்லலாம்.அது அவருடைய தெரிவு. அதை அனைவருக்குமாகப் பகுக்க முடியாது.
இப்போ நாம எழுதுறதெல்லாம் நவீன இலக்கியம்
சித்ரா சரஸ்வதி (விமர்சகர்):
இலக்கியம் பற்றி அதிகம் தெரியாத முடிந்தளவு படிப்பவள் மட்டுமே எனது தகுதி.
இலக்கியக் கதைகள் என்பதற்கான வரைமுறை தெரியாது. இதில் சொல்வது எனது சொந்தக் கருத்து மட்டுமே. யதார்த்த வாழ்க்கையில் நடைபெறும் யதார்த்தமான நிகழ்வுகள் மட்டுமே அதிக மேல்பூச்சு இல்லாமல் புனைவு இல்லாமல் கதையை சொல்வதை இலக்கியக் கதை என்று சொல்கிறார்கள். ஆனால் சிவப்பதிகாரத்தில் புனைவு இல்லையா? நடந்தவற்றை மட்டுமே இளங்கோவடிகள் எழுதியிருக்கிறாரா என்பது கேள்விக் குறி.
ல. சா. ரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், இராஜாஜி கூட எழுதியிருக்கிறார். யதார்த்தமான கதை இல்லை சம்பவங்கள் . அகிலனின் சித்திரப்பாவை சோகம்தான். ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் இன்னும் சில கதைகள் படித்திருக்கிறேன். இலக்கியக் கதைகள் என்ற வரையறைக்குள் வரும் சோகக் கதைகளைவிட நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும் கதைகளையே நான் விரும்புகிறேன். பழைய எழுத்துக்களை இலக்கியம் என்றோ புதிய எழுத்துக்களை புனைவு என்றோ வரையறுக்கப்பட்டால் இன்றைய நவீன எழுத்துக்கள் நாட்பட இலக்கியம் ஆகுமா என்று இருந்தால் இப்பொழுது உள்ள தற்கால எழுத்தாளர்களின் பொறுப்பு அதிகம் ஆகிறது.
நான் படித்த எழுத்துக்களின் படைப்பாளிகள் பெயரைத் தெரிவிக்கிறேன். ஆனால் எழுத்துக்களை இலக்கியம், இலக்கியம் அல்லாதவைஎன பிரிக்கவில்லை.
லா.ச.ரா, தீபம் பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், மணியன், சாவி, அறிஞர் அண்ணா, கலைஞர், சாவி,கல்கி, சாண்டில்யன், சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் என்கிற புஷ்பா தங்கதுரை, ரா.கி.ரங்கராஜன், கௌசிகன் என்கிற வாண்டுமாமா, ஜாவர் சீதாராமன், எஸ்.ஏ.பி, ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், லக்ஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி(எனக்கு மிகவும் பிடித்தவர்), இந்துமதி, கமலா சடகோபன், நித்யா, லட்சுமி ராஜரத்தினம், சவீதா, கிருஷ்ண மூர்த்தி (வேர்கள்), அனுராதா ரமணன், ரமணிச்சந்திரன், வங்காள எழுத்தாளர் சரத்சந்திரர், மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை, தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத், கோவி மணிசேகரன்
பதில்கள் கூறிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
Comments
Post a Comment