வரலாற்று நாவல்கள்

 ஹாய் பிரண்ட்ஸ்,

அரட்டை அரங்கம்

25- 02- 2022

முகநூல் லிங்:


இந்த வார அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் "வரலாற்று நாவல்" தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.


வரலாற்று நாவல் எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்?? எழுதும் போது கையாள வேண்டிய விதிமுறைகள்? வரலாற்று நாவல் எழுதிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வரலாற்று நாவல் வாசிக்கும் போது என்ன விதமான உணர்வுகளை தோற்றுவிக்கிறது? மற்ற நாவல்களில் இருந்து வேறுபட்டு காணப்படுவதன் காரணம் என்ன? உங்களுக்கு பிடித்த வரலாற்று நாவல்கள் அதன் எழுத்தாளர்கள் பெயர்?


நட்புக்கள்,


இது சம்பந்தமாக தெரிந்தவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம். பலருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.


நன்றி


******


27 - 2 - 2022


ஹாய் பிரண்ட்ஸ் மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதில்கள் இதோ வாசித்துப் பாருங்கள்:


பெத்தனசுதா அருஞ்சுனைக் குமார் :


வரலாற்று கதை எழுதனும்னா மொத நாம கொஞ்சம் எக்ஸ்ட்ராவா படிக்க ஆரம்பிக்கணும். நார்மலா எழுதுற கதை அப்படியே நாம எழுதிட்டு போயிடுவோம். ஆனா இந்த மாதிரி வரலாறு எழுதும் போது அதோட உண்மைத் தன்மை பற்றி நாம நிறைய விசயம் தெரிஞ்சுக்கணும். நிறைய தேடணும். அப்போத்தான் நாம அதை வச்சு எழுத முடியும். எந்த இடத்துலயும் மொழிநடையை மாத்திடக் கூடாது. அப்போத்தான் அது அந்த காலத்துல நடக்குற ஓர் உணர்வைத் தரும். நான் எழுதுன ஆசை ஆசையாய் இருக்கிறதே வரலாற்று நிகழ்வை மையமா வச்சு எழுதுனதுதான்.


அனந்த பத்மநாபன் ஆசான் அவர்களோட வாழ்க்கையை தான் நான் எழுதியிருக்கேன். அதுக்காக நிறைய கூகுள்ல தேடி, யூடியூப் வீடியோஸ் பார்த்து இப்படித்தான் அந்த நாவலை எழுத முடிஞ்சது. ஆனா எழுதும் போது அப்படியே அவர் வாழ்ந்த இடத்துல நாமளே நிக்குற பீல் இருக்கும்....


1698 வருசம்.....

ஆவணி திங்கள் 23.....


அன்று அந்த அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருந்தது. பள்ளிமேடை அரண்மனை வாரிசு வந்து விட்டது அல்லவா....


மாவீரனையே மகனாய் பெற்றதில் தச்சன்விளையே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது...


காலையில் பத்ர காளியம்மன் கோவிலுக்கு சென்றவர் அவளை வணங்கி விட்டு தன் வாளை எடுத்துக்கொண்டு நேராக களரித் திடலுக்கு சென்றார். அங்கிருந்த சட்டர்களிடம்(மாணாக்கர்கள்) தன் வாளை தந்தவர் அதை குருதாரையில் வைக்குமாறு பணித்தார்.


அதன்பின் எப்பொழுதும்போல் பயிற்சி ஆரம்பமானது. நாட்கள் தன் மைந்தனை கொஞ்சுவதிலும் பெரும்பாலும் பயிற்சியில் கழிவதுமாக அழகாக சென்றது...


இப்பொழுது எல்லாம் பள்ளிமேடைக்குள் நுழைந்தாலே அனந்தா என்று அழைத்தபடிதான் வருவார் ஆசான்.


மைந்தனை கொஞ்சுவதிலே மனம் மலரந்திருந்தவர் தன் அருகே இருந்த லட்சுமி தேவியின் முகம் சுணங்கி இருப்பதை கண்டு


"என்ன தேவி என்னவாயிற்று.. எதற்காக என்னை இப்படி பார்க்கிறாய்" என்றார்


"இல்லை இப்பொழுதெல்லாம் தாங்கள் அனந்தன் புராணமாகவே பாடுகிறீர்களே தேவி புராணத்தை விடுத்து...."


"ஹ்ஹாஹா"


"சிரிக்காதீர்கள்"


"என்ன தேவி மைந்தன் மீதே பொறாமையா"


"அதற்கும் காரணம் தாங்கள் தான்"


"அப்படியா தேவி....ஆனால் நீதான் ஒன்றை மறந்துவிட்டாய் தேவி"


"என்ன"


"தேவியின் புராணம் விடாது பாடியதால் தான் அனந்தன் பெருமாளின் அருள் எமக்கு கிட்டியது..."


தேவியோ சிரித்தபடி "தாங்கள் வர்மக்கலைக்கு மட்டுமா ஆசான்....பேசியே மடக்குவதிலும் தான் பெரிய ஆள்....தங்களை மிஞ்ச இங்கு ஒருவரும் இல்லை" என்று சொன்னது தான் தாமதம் அவளின் தொடையை அனந்தனின் கால்கள் இடித்தது...


"அடடா என் மைந்தனுக்கு கோபம் வந்து விட்டதா...அன்னையை அடித்து விடலாம் என் செல்வ மைந்தா....நீதான் என்னை விட பெரிய வீரனாய்....மாவீரனாய் வருவாய்....இந்த களரிக் கலம்பங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி யாராலும் அசைக்க முடியாத தலைமை ஆசானாய் முதன்மை தளவாயாகவும் விளங்குவாய்...."


"கூடவே இதையும் சேர்த்து கொள்ளுங்கள்"


"எதை"


"பேச்சிலேயே எதிரில் இருப்பவர்களை மடக்கி விடுவது..."


"அதில் என்ன தவறு தேவி....இந்த அவனியிலே ஆபத்தான ஆயுதம் எது தெரியுமா..."


"ம்ம் தெரியுமே தங்கள் கையில் இருக்கும் இந்த கந்த கோடாரி தான்..."


"என்னை சொல்லிவிட்டு நீ மட்டும் என்னவாம்..பேச்சிலேயே மடக்குகிறாயே...உனக்கு என் பெருமை பாடாவிட்டால் உறக்கம் பிடிக்காது அல்லவா... ஆனால் உண்மை அதுவல்ல தேவி...நமது நாக்கு தான் கொடிய ஆயுதம்"


"என்ன..."


"ஆம் கந்த கோடாரி இல்லாமல் படைவாள் இல்லாமல் நாக்கினாலே ஓர் உயிரை வலிக்க வலிக்க கொல்ல முடியும் அப்படிப்பட்ட அந்த கொடிய ஆயுதத்தை முறையாக பயன்படுத்தும் வித்தை தெரிந்து விட்டாலே போதும் அவன் தான் உண்மையிலேயே சிறந்தவன்... அப்படி பார்த்தால் என் மகன் மிகவும் சிறந்தவனாகத்தான் வருவான். சரி தேவி நான் கோட்டத்திற்கு செல்கிறேன்...மைந்தனை பார்த்துக் கொள் வரட்டுமா" என்றவர் களரித் திடலை நோக்கிச் சென்றார்....


எழுத்தாளர் புவனா சந்திர சேகரன் :


சரித்திரக் கதைகள் எழுதுவதற்கு நிறைய உழைப்பு தேவை. பொறுமையாகப் படித்து ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். ஆழ்ந்த வாசிப்பு வேண்டும்.


வரலாற்றில் உண்மையான நிகழ்ச்சிகளைத் தேடி எடுத்து அவற்றுடன் நமது கற்பனையைக் கலந்து எழுதலாம்.


ராஜா, ராணிக் கதை வேறு; சரித்திரக் கதை வேறு. நிறையப் பேருக்கு இந்த வித்தியாசம் புரிவதில்லை. ராஜா, ராணிக் கதை கற்பனையான கதாபாத்திரங்களை வைத்துப் புனையப்படும் கற்பனைக் கதை. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை.


ஆனால் சரித்திரப் புதினம் எழுதுவதற்கு முதலில் ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். எந்தக் காலகட்டத்தில் எழுத விரும்புகிறோமோ, அந்தக் காலகட்டத்தில் அரசாட்சி செய்த அரசர்கள் பற்றிய உண்மைத் தகவல்களைத் திரட்ட வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், தமிழ் இலக்கியத்திலும் இருந்து நிறைய ஆதாரங்களைத் தேடி எடுத்துப் படித்துப் பார்த்து அதைப் பின்னணியாக வைத்துக் கொண்டு நமது கற்பனையையும் அதில் கலக்கலாம்.


எடுத்துக்காட்டாக கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதையில் வரும் அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வந்தியத்தேவன், சுந்தர சோழர் அனைவரும் உண்மையாக வாழ்ந்தவர்கள். ஆனால் நந்தினி கதாபாத்திரம் கற்பனையாகப் புனையப்பட்டது. அந்தக் கற்பனையை வைத்துக் கதையை எவ்வளவு அழகாகக் கொண்டு போனார் ஆசிரியர்? அதில் தான் திறமையைக் காண்பிக்க வேண்டும்.


சரித்திரக் கதை எழுத நல்ல தமிழ் நடை வேண்டும். பிழையில்லாமல் தூய தமிழில் அன்றைய காலகட்டத்தில் பேசிய பேச்சு வழக்காக இருக்க வேண்டும். அழகான வர்ணனைகள் வேண்டும். தமிழ் இலக்கிய அறிவும், ஆழ்ந்த வாசிப்பும் அவசியம் வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் மேற்கோள்கள் காட்டலாம்.


எனக்குப் பிடித்த சரித்திரக் கதை ஆசிரியர்கள் கல்கி, சாண்டில்யன், கோவில். மணிசேகரன், விக்கிரமன், பாலகுமாரன், காலச் சக்கரம் நரசிம்மா.

இப்போது சமீபத்தில் எழுதுபவர்களில் வெற்றிவேல் அருமையாக எழுதுகிறார். வென் வேல் சென்னி மூன்று பாகங்களையும் படித்திருக்கிறேன். வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாமல் படியுங்கள். நிறையக் கற்றுக் கொள்ளலாம். எனது நண்பர் ஜெயகுமார் சுந்தரம் மூன்று சரித்திர நாவல்கள் எழுதியிருக்கிறார். மூன்றுமே அருமை.


நானும் எழுத முயற்சி செய்தேன். இதுவரை ஒரு சிறுகதை மற்றும் ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறேன்.


அடுத்த வருடம் எழுதுவதில் இருந்து ஒரு வருடம் ஓய்வு எடுத்துக் கொண்டு சரித்திர நாவல் எழுதும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.


எனது கதைகளின் லிங்க்.



புத்தரின் புனிதப் பல்- சிறுகதை


https://pratilipi.page.link/qmwXra7c2dAEQd3FA


ஆம்பலின் பகல் நிலவு - குறுநாவல்


Aambalin Pagal Nilavu (Tamil Edition) https://www.amazon.in/dp/B095WVCF2Y/ref=cm_sw_r_apan_glc_K25SF74KP5M0K4BSP4D9




எழுத்தாளர் மீனாட்சி முருகப்பன் :


வணக்கம்.... வரலாற்று நாவல் என்பது என்ன? வரலாறு என்றாலே அது ராஜா ராணி காலத்துக் கதை. அரசுரிமை பற்றிய கதை என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை வரலாறு என்பது நாம் கடந்து வந்த பாதையாகவே நான் பார்க்கிறேன். சமகாலம் அல்லாத முந்தய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை சான்றாகக் கொண்டு புனைவது வரலாறாகும். இப்படிப்பட்ட புனைவு எழுத வேண்டுமென்றால் அதற்கான தரவுகள் சேகரித்திட வேண்டும். எவ்வளவு தூரம் உண்மையான தரவுகளைக் கொண்டு, அதன் அடிப்படையில் எழுதுகிறோமோ, அவ்வளவுக்கு அந்த புனைவு முக்கியத்துவம் பெற்றிடும். சேர சோழ பாண்டியர்கள் போன்ற பேரரசுகளின் கதைகளை எழுதும்போது கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அலசி ஆராய்ந்து விட்டு எழுதுதல் நல்லது. ஏனெனில் அவர்களை பற்றிய குறிப்புகள் அதில் நிறைய இருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு, மொழியை கையாளுதல் போன்றவற்றில் கொஞ்சம் புலமை வேண்டும். அதையெல்லாம் நம் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வரலாற்று நாவல்களில் எனக்குப் பிடித்தவை போர் காட்சியை எழுத்து மூலம் விரிவுபடுத்துதல். அப்படி அந்த காட்சியை எழுத்தின் மூலம் வாசகரை நாம் கற்பனை செய்ய வைத்து விட்டால் வெற்றிதான். அந்தவகையில் சாண்டில்யன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவருடைய வரலாற்று நாவல்களில் வரும் போர் வர்ணனைகள், காட்சிகளை கண் முன்னே கொண்டு வரும். எனக்குப் பிடித்த வரலாற்று நாவல்கள் - பொன்னியின் செல்வன் அலையோசை ராஜபேரிகை ராஜமுத்திரை யவன ராணி கடல் புறா, வேங்கையின் மைந்தன், காவிரி மைந்தன், உடையார், நந்திபுரத்து நாயகி.. இப்படி இன்னும் நீண்டு கொண்டே செல்லும்‌. வரலாற்று நாவல்கள் வாசிக்கும் பொழுது என் இனத்தின் பெருமை என்னுள் பிரதிபலிக்கும்‌. அதே உணர்வை என் எழுத்தின் மூலம் கொண்டு வர வேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது. ஒரு காட்சியை எழுதும் பொழுது, கதையின் களத்தில் அமர்ந்திருப்பது போன்று கற்பனை செய்து எழுதுவேன். அதே உணர்வு வாசகருக்கு தோன்ற வேண்டுமென்றால், களத்தினை நம் கண் முன்னே காட்சிபடுத்துதல் மிக முக்கியமான ஒன்று. வரலாற்று நாவல்கள் மற்ற நாவல்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் முக்கிய காரணம், அதன் உண்மைத் தன்மையும் தரவுகளும் மற்றும் காட்சிப்படுத்தல் தான். ஏனெனில் சமகாலத்தில் நம் கண்டிராத விடயங்களை கற்பனை செய்து எழுதுவது கடினம். அதே போல் கிடைத்திருக்கும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில், சம்பவங்களை சரமாக தொடுத்து, அதில் கற்பனையையும் கலப்பது எளிதான காரியம் அல்ல. அதனால் வரலாற்று நாவல்களுக்கு சற்றே மரியாதை அதிகம்தான். அதை எழுதும் ஆரிரியர்களுக்கும் அதிகம்தான். அங்கோர்வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்ய வர்மனைப் பற்றிய வரலாற்று புனைவொன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். நன்றி!!!


எழுத்தாளர் ராசிதா (Raasi Muthalif ) :


வணக்கம் நண்பர்களே!


சகோதரி ஆனந்த ஜோதி முன்னெடுத்து நடத்தும் 'வரலாற்று நாவல்' என்ற தலைப்பில் அரட்டை அரங்கத்திற்கான என்னோட கருத்து.


நான் ராசிதா…


உங்களில் சிலருக்கு என்னுடைய எழுத்துக்கள் பரிக்ஷயம் இருக்கலாம். தெரியாதவர்களுக்காக என்னைப் பற்றிய சிறு அறிமுகம். நான் ஒரு வரலாற்று காதலி.


இதுவரை நான் சில குடும்ப நாவல்களும், சில சிறுகதைகளும், சில கவிதைகளும் எழுதியிருந்தாலும் என்னுடைய பெரும்விருப்பம் வரலாற்று நாவல் எழுதுவதில் தான் குவிந்துள்ளது. அதற்குக் காரணம் வரலாற்றின் மீதுள்ள அதீத காதல்.


இங்கு ஒரு வரலாற்று நாவல் புனைய எவையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டுமென்று பட்டியலிட வேண்டும். இவ்வாறு தான் இருக்கவேண்டும் என்று கூற நான் 'ஆளுமை' இல்லை. இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணம் கொள்ளும் வரலாற்று வாசகியாகக் கூறுகிறேன். உங்களில் ஒருவராக கூறுகிறேன்!


ஓர் எழுத்தாளருக்கு மிக அவசியம் அவருக்குள் இருக்கும் வாசகர். வாசிக்கும் தன்மை மேம்படும்போது தான் எழுத்துக்கள் பிரகாசமடையும்.


நான் ஒரு வாசகியாக எதை எதிர்பார்ப்பேனோ அதையே நான் எனது வரலாற்று கதைகளின் பிரதான அம்சங்களாக நிர்ணயித்துகொள்வேன்.


வரலாற்று நாவல் எழுத,


தெளிவான ஐயத்திற்கு இடமற்ற வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

வரலாற்று நாவல்கள் எழுதுவதென்பது பெரும் உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடப்பதை போன்று சுவாரஸ்யமானது. அபாயகரமானதும் கூட! மிகுந்த எச்சரிக்கையுடன் அக்கயிற்றைக் கடக்கவேண்டும். நான் ஏன் இவ்வாறு குறிப்பிடுகின்றேன் என்றால், வரலாற்று நாவல்கள் வாழ்ந்து சாதித்து மறைந்த வரலாற்று பாத்திரங்களோடு தொடர்புடையது. ஆகையால் அப்பாத்திரங்களை நாம் தன்னிச்சையாகச் செத்துக்கிட இயலாது.

வரலாற்றை மக்கள் முன் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்த வரலாற்றோடு கற்பனை கலப்பது அவசியம். பாலோடு சுவைக்கு ஏற்ப, மிளகு , மஞ்சள், ஏலக்காய், பனங்கற்கண்டு கலப்பது போல்! இதில் எந்தவொன்றும் அளவை மிஞ்சி, பாலின் சுவையை மழுங்கடித்திட கூடாது. அது போல் தான் அதீத கற்பனை வரலாற்றின் கருவை அதன் ஆதிக்கத்தைச் சிதைத்துவிடும் அபாயமுண்டு! ஆகவே சரியான அளவில் கற்பனையென்பது சேர்க்கப்படவேண்டும்.

எடுத்துக்கொள்ளப்பட்ட வரலாற்றிக்கான காலம், அக்காலம் தொடர்புடைய சமுகுவியல், புவியியல், வாழ்வியல் என அனைத்தையும் ஆராய்ந்து உறுதிபட கொடுப்பது பிரதானம்.


இவைதவிர, ஏன் வரலாற்று நாவல்கள் அனைத்திலும் தனித்துத் தெரிகிறதென்ற விடைக்கு வினா வேண்டுமா ?


எப்போதும் நமது மூளை மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னவிருக்கிறதென்று ஆராயவே சுவாரஸ்யம் கொள்ளும். மண்ணுக்கடியில் கிடைக்கும் புதையலின் மீதுள்ள ஆர்வம். அர்த்தராத்திரியில் உலா வருவதாகச் சொல்லப்படும் மோஹினி கட்டுக்கதைகளின் மீதுள்ள ஈர்ப்பு. அதாவது சுருக்கமாகக் கூறவேண்டுமேயானால், நமது புறக்கண்களால் காண இயலாத, அகக்கண்கள் உணர கூடிய கதைகளுக்கு உண்டான மகுத்துவம் அது!


மேலும், நம் மொழி, நம் முன்னோர்கள், நம் மண் என்ற நெருக்கம். இவைதான் வரலாற்று நாவல்கள் மீது மக்களுக்கு உண்டான பிரமிப்புக்கும் சுவாரஸ்யத்திற்கும் காரணம்.


வரலாற்று நாவல்களில், உரைநடைகளை எவ்வாறு எழுதவேண்டும் ? அதை எவ்வாறு வாசகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் ? இதிலும் ஒரு நேர்த்தியுண்டு!


தலை வாழையிலையில் முதலில் உப்பிட்டு, இறுதியில் பாயசத்தோடு பரிமாறுவதைப் போன்று, உரைநடைகளை எழுதவும் ஒரு நெறிமுறை உண்டு.


பொதுவாகப் பிறரோடு உரையாடுவதை " " இரட்டைமேற்கோள்குறியிட்டு எழுதவேண்டும். ஒருவேளை, கதாபாத்திரம் தனது மனதோடு உரையாடிக்கொள்வதை அதாவது எண்ணவோட்டங்களாக உள்ளதை ' ' ஒற்றை மேற்கோள் குறியின் மூலம் வாசகர்களுக்குப் பிரித்துக் காட்ட வேண்டும்.

அதேபோல் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் காட்சி நகரும் பொழுது, தொடங்கப்படும் முதல் எழுத்தின் Font அளவு, அளவில் சற்றே பெரியதாகக் கொடுத்து, வாசகர்களுக்குக் காட்சி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததைக் குறிக்க வேண்டும்.


இதுவரை , நான் எழுதும்போது என்னுடைய எதிர்பார்ப்புகளையும் நான் எழுதியபோது கிடைத்த எனது அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.


இனி...கீழ் வருவது, இதுவரை புத்தகமாக வெளிவந்த என்னுடைய வரலாற்றுப் புதினங்கள்.


சோழனின் சபதம் (கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு. சோழ மன்னன் ஆதித்ய சோழன்)


சந்திரவாள் (காலம் கி. பி 1251 . முதலாம் சடையவர்ம பாண்டியன் மற்றும் அவனுடைய சகோதரன் முதலாம் வீரபாண்டியன்)


வாளரி வேந்தன் (காலம் கி. பி 450 பல்லவ மன்னன் சிம்மவர்மன்)


எழுத்தாலும் வாசிப்பாலும் இணைவோம்

இப்படிக்கு ராசிதா


*****

எழுத்தாளர் ஜெயக்குமார் சுந்தரம் :








பதில் கூறிய அனைத்து நட்புகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏







Comments

  1. ஜெயக்குமார் சுந்தரம்

    வரலாற்று நாவல் எழுதுவதற்கு, வரலாற்று நாவல்கள் நிறைய படித்திருக்க வேண்டும். வரலாற்று நாவல்களின் சொல்லாடல்கள், உரையாடல்கள், மொழிநடை அனைத்தும் மற்றுள்ள நாவல்களில் இருந்து மாறுபட்டிருக்கும்.

    ராஜா ராணி கதைகளையும் வரலாற்று நாவல்கள் என்று நினைப்போரும் உண்டு. வரலாற்று நாவல்களைப் புனைவதற்கு முன், அது நிகழ்ந்த காலம், வரலாற்றுச் சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்திருந்த மக்களின் நிலை, பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வரலாற்றுக் கதாபாத்திரங்களின் பெயர் விவரங்கள் போன்றவை அறிந்திருக்க வேண்டும். அதற்கு, அது தொடர்பான புத்தகங்களைப் படித்து அனைத்து விவரங்களையும் குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும். முழுக்க முழுக்க வரலாற்று கதாபாத்திரங்கள்தான் கதைக்குள் இருக்க வேண்டும் என்பதில்லை. கதையை நகர்த்துவதற்காக கற்பனை கதாப்பாத்திரங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

    கதையை எழுதும் பொழுது, வாசகர்களின் கண்முன்னே நடப்பது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கதையைக் காட்சிப்படுத்துதல் அவசியம். வாசகர்களை எழுத்தாளரின் திறமையினால், கதையோடு பயணிக்க செய்தல் வேண்டும்.

    சாண்டில்யன் அவர்கள் எழுதியுள்ள வரலாற்று நாவல்களில் பலவற்றைப் பலமுறைப் படித்துள்ளேன். அதுபோலவே கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற கதைகளையும், கண்ணதாசன் அவர்கள் எழுதிய சேரமான் காதலி ஜெகசிற்பியன் அவர்கள் எழுதிய திருசிற்றம்பலம், நந்திவர்மன் காதலி போன்ற பல வரலாற்று நாவல்களைப் படித்துள்ளேன். அதன் உந்துதலில் நானும் இரு வரலாற்று நாவல்களையும் ஒரு குறுநாவலையும் புனைந்துள்ளேன்.

    முதல் பல்லவன் யார் என்பதைக் குறித்துப் பல வரலாற்று கட்டுரைகள், ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள், கல்வெட்டுகள், கூகுள் தேடல்கள் மூலமாக விவரங்களைச் சேகரித்தப் பின்னரே கதையை எழுத துவங்கினேன்.

    வீரகூர்ச்சவர்மன் (முதல்பல்லவன்)

    தமிழகத்தில் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் பேரரசு ஆண்டு வந்துள்ளது என்பதை அறிவோம். பல்லவர்களைக் குறித்த பல்வேறு செப்பேடுகளும் கல்வெட்டுகளும் குடக்கோயில்களும் கிடைத்துள்ளன.

    பல வரலாற்று ஆய்வாளர்களும் ஆசிரியர்களும், தென்னாட்டின் முதல் பேரரசான சாதவாகன பேரரசின், சிற்றரசாக விளங்கிய சூட்டு நாகர் நாட்டு மன்னனின் மகளைத் திருமணம் செய்த பஹ்லவனே, பல்லவ பேரரசைத் தோற்றுவித்தவர் என்று குறிப்பிடுகின்றனர்.

    ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மாயிதவோலு பட்டயமும் பெல்லாரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஹிரஹடஹள்ளி பட்டயமும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிப்புரிந்த சிவஸ்கந்தவர்மனின் தந்தையே முதல் பல்லவன் என்பதை உறுதிப்படுத்தவதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    வேலூர் பாளையம், வாயலூர் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பட்டியலின்படி வீரகூர்ச்சவர்மன் என்பவனே முதல்பல்லவன் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கிடைத்துள்ளத் தரவுகளைக் கொண்டு, வீரகூர்ச்சவர்மன் என்ற வரலாற்றுப் புதினத்தைக் காதல் சுவையோடு எளிய தமிழில் புனைந்துள்ளேன்.

    இந்த புதினத்தை வானதி பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. அச்சில் ஏற்றப்பட்டு வெளிவந்துள்ள எனது முதல் வரலாற்றுப் புதினம் வீரகூர்ச்சவர்மன்.

    ReplyDelete
  2. வணக்கம்....

    வரலாற்று நாவல் என்பது என்ன? வரலாறு என்றாலே அது ராஜா ராணி காலத்துக் கதை. அரசுரிமை பற்றிய கதை என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை வரலாறு என்பது நாம் கடந்து வந்த பாதையாகவே நான் பார்க்கிறேன். சமகாலம் அல்லாத முந்தய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை சான்றாகக் கொண்டு புனைவது வரலாறாகும்.

    இப்படிப்பட்ட புனைவு எழுத வேண்டுமென்றால் அதற்கான தரவுகள் சேகரித்திட வேண்டும். எவ்வளவு தூரம் உண்மையான தரவுகளைக் கொண்டு, அதன் அடிப்படையில் எழுதுகிறோமோ, அவ்வளவுக்கு அந்த புனைவு முக்கியத்துவம் பெற்றிடும்.
    சேர சோழ பாண்டியர்கள் போன்ற பேரரசுகளின் கதைகளை எழுதும்போது கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அலசி ஆராய்ந்து விட்டு எழுதுதல் நல்லது. ஏனெனில் அவர்களை பற்றிய குறிப்புகள் அதில் நிறைய இருக்கிறது.

    கலாச்சாரம், பண்பாடு, மொழியை கையாளுதல் போன்றவற்றில் கொஞ்சம் புலமை வேண்டும். அதையெல்லாம் நம் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வரலாற்று நாவல்களில் எனக்குப் பிடித்தவை போர் காட்சியை எழுத்து மூலம் விரிவுபடுத்துதல். அப்படி அந்த காட்சியை எழுத்தின் மூலம் வாசகரை நாம் கற்பனை செய்ய வைத்து விட்டால் வெற்றிதான். அந்தவகையில் சாண்டில்யன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவருடைய வரலாற்று நாவல்களில் வரும் போர் வர்ணனைகள், காட்சிகளை கண் முன்னே கொண்டு வரும்.

    எனக்குப் பிடித்த வரலாற்று நாவல்கள் - பொன்னியின் செல்வன் அலையோசை ராஜபேரிகை ராஜமுத்திரை யவன ராணி கடல் புறா, வேங்கையின் மைந்தன், காவிரி மைந்தன், உடையார், நந்திபுரத்து நாயகி.. இப்படி இன்னும் நீண்டு கொண்டே செல்லும்‌.

    வரலாற்று நாவல்கள் வாசிக்கும் பொழுது என் இனத்தின் பெருமை என்னுள் பிரதிபலிக்கும்‌. அதே உணர்வை என் எழுத்தின் மூலம் கொண்டு வர வேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது. ஒரு காட்சியை எழுதும் பொழுது, கதையின் களத்தில் அமர்ந்திருப்பது போன்று கற்பனை செய்து எழுதுவேன். அதே உணர்வு வாசகருக்கு தோன்ற வேண்டுமென்றால், களத்தினை நம் கண் முன்னே காட்சிபடுத்துதல் மிக முக்கியமான ஒன்று.

    வரலாற்று நாவல்கள் மற்ற நாவல்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் முக்கிய காரணம், அதன் உண்மைத் தன்மையும் தரவுகளும் மற்றும் காட்சிப்படுத்தல் தான். ஏனெனில் சமகாலத்தில் நம் கண்டிராத விடயங்களை கற்பனை செய்து எழுதுவது கடினம். அதே போல் கிடைத்திருக்கும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில், சம்பவங்களை சரமாக தொடுத்து, அதில் கற்பனையையும் கலப்பது எளிதான காரியம் அல்ல. அதனால் வரலாற்று நாவல்களுக்கு சற்றே மரியாதை அதிகம்தான். அதை எழுதும் ஆரிரியர்களுக்கும் அதிகம்தான்.

    அங்கோர்வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்ய வர்மனைப் பற்றிய வரலாற்று புனைவொன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    நன்றி!!!

    ReplyDelete

Post a Comment