ஊட்டி வரை உளறு


#ஜோதி ரிவ்யூ

எழுத்தாளர் : பாலகணேஷ் - நந்துசுந்து

படைப்பு : ஊட்டி வரை உளறு

வெளியீடு : புஸ்தகா

வெந்தய தேவன் :

பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெறும் ஒருசில கதாபாத்திரங்களும், காட்சிகளும் அப்படியே நம் கண்முன் பயணிக்க, நாமும் அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் வாய் விட்டு சிரித்துக் கொண்டே அவர்களுடன் பயணிக்கிறோம்.

மேலும், பல் டாக்டர் கல்யாணின் குடும்பம், அவரிடம் சிகிச்சை பெற வந்து காதலியாக மாறுகின்ற தீபாவின் குடும்பம், படப்பிடிப்பு குழுவினர், வில்லன்ஸ், முக்கியமாக நம்ம ஆழ்வார்க்கடியன் நம்பி, அனைவரும் வந்து கதையோட்டத்துக்கு உயிரையும் கொடுத்து, நகர்வுக்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர். பல இடங்களில் வாய் விட்டு சிரித்து விடலாம். சில இடங்களை துப்பறியும் நோக்குடன் கண்டறிய முயலாம், சிரிப்பிற்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தருகின்ற அளவிற்கு நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறார்கள்.

இனி கதைப் பற்றி...

பல் மருத்துவமனையில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருக்கும் நாயகன் கல்யாண் .. தன் முன்னே அமர்ந்திருக்கும், பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முயன்று, அவளது வரிசை தவறாத பல் வரிசையில் லயித்து காதலில் விழுகிறார். காதல் விசயத்தை தாயார் மூலம் வீட்டிற்குத் தெரியப்படுத்தி அவளை திருமணம் செய்து கொள்ள பெண் பார்க்கவும் சென்று விடுகிறார். அவன் விரும்பியது போல அத்திருமணம் நடைபெறுகிறதா? பெண் வீட்டார் சம்மதிக்கிறார்களா?
அவனை மருத்துவமனையில் வைத்து மிரட்டி கட்டிப் போட்டு செல்பவனால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் எதற்காக? என்னென்ன...

பாதித்த விரிகாலனிடம் ஓலையை பெற்று இஞ்சி மாநகரை விட்டு புறப்பட்டு சுண்டல் சோளருக்கும், மீந்தவைக்கும் ஓலை கொண்டு செல்லும் வெந்தய தேவன் பள்ளத்திற்குள் குதித்து, பல் மருத்துவமனை கட்டுவதற்காக பூஜை செய்யும் இடத்திற்கு குப்பாயி மூலமாக வந்து விடுகிறார். அவரது ஓலைகள் உரியவரிடத்தில் ஒப்படைக்கப்படுகிறதா? மன்னராட்சி காலத்தில் வாழ்ந்தவன், சாதாரணமாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இருக்கும் பகுதிக்கு வந்த பின் நடப்பதென்ன? மீந்தவையை கண்டுபிடிக்கிறானா? என்று பல கேள்விகளையும் எழுப்பி, சுவராஸ்யமான கதை நகர்வையும் கொடுத்திருக்காங்க.

 கவலைப்பாட்டி, வெந்தயதேவன் பேசும் இடங்கள், சினிமா படம் எடுக்க வந்து வெந்தயதேவனால் அடிவாங்குகிற காட்சிகள், மாலினி, பாஸ்கர், குப்பாயினுடைய ஓட்டம், போலீஸ் என்று பல இடங்கள் கதைகளத்திற்கு மேலும் வேகத்தையும், நகைச்சுவைகளையும் அள்ளித் தருகிறது.

நாவல் வாசிக்க பிரமாதமாக இருக்கிறது. எழுத்து நடையும், அதில் வந்த உரை நடை, சேரி பாஷை, பேச்சு வழக்கு அத்தனையும் வெகு சிறப்பு. வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் புத்தகத்தை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

மேலும் நிறைய எழுதவும் விருதுகள் பல வாங்கவும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சார்💐💐💐💐








Comments