மௌனத்தால் என்னைக் கொல்லாதே!
காலை ஏழு மணியளவில் எக்மோர் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவியர் சிலர், தங்களுடன் பயின்று வந்த மாணவி ஆர்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவளுடன் சென்னைக்கு வந்திருந்தனர். ஆர்த்தி மதுரையில் உள்ள காமராஜர் பல்கழைக்கழகத்தில் பீ.பீ.ஏ படிப்பை முடித்து, வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்ள தயாராக வந்திருக்கிறாள்.
நேற்று தான் கல்லூரி படிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தன. அத்துடன் தோழிகளையும் அழைத்து கிளம்பி வந்து விட்டாள். அவளிரு விழிகள் நொடிக்கு ஒரு தரம், யாரையோ எதிர்பார்த்து அலைமோதின.
அப்போது, தன்னுடைய ஆடி காரிலிருந்து இறங்கி வேக நடையுடன், ஆறரை அடி உயரத்தில், சிவந்த நிற தேகத்தை பெற்று, சினிமா பட நாயகன் பாணியில் இருந்த வாலிபன் ஒருவன், அவர்களை நோக்கி விரைந்து வந்தான். அவனைப் பார்த்ததும் முகம் கொள்ளா புன்னகையுடன் "அண்ணா" என்று அழைத்துக் கொண்டே ஓடிச்சென்று அவன் தோளில் சாய்ந்தாள் ஆர்த்தி.
தங்கையை ஆதூரமாக அணைத்தான். அன்பாக முத்தமிட்டான் சந்தீப்.
"ஏய் கல்யாணப் பொண்ணு! எப்படி இருக்க? கல்யாணம் என்றதும் இப்படி குண்டு வச்சுட்டியே? பாவம் மாப்பிள்ளை பையன்!" என்று கேலி செய்தான். அண்ணனின் வயிற்றில் வலிக்காமல் குத்தினாள். அவனது பாசமிகு தங்கை ஆர்த்தி.
"ஆர்த்தி, இப்போது தானே வந்தீங்க? ஆமாம். உன் ஃபிரண்ட்ஸ் மொத்தமாக இவ்வளவு பேர் தான் வந்திருக்கிறார்களா?" தங்கையிடம் கேட்டாலும், அவனது பார்வை கூட்டத்தில் காணாமல் போயிருந்த ஒருவரை தேடி அலைந்தது.
அண்ணனின் தேடலுக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, குறும்பாக கண் சிமிட்டினாள். சற்றுத் தொலைவில் நின்று, தனியாக வேடிக்கைப் பார்த்திருந்த சஞ்சனாவை நோக்கி கை காட்டினாள்.
"நான் அவங்களை அழைச்சுட்டு வந்துடறேன். நீங்க எல்லாரும் வெளியே நிற்கும் நம்ம காருக்குப் போங்க" தங்கையிடம் தகவல் போல் தெரிவித்து, சாவியை எடுத்து நீட்டினான்.
சென்னைக்கு இதுவரையில் வந்திராத சஞ்சனா, அங்கு காணப் பெற்ற ரெயில்வே டிராக், படிக்கட்டுகள், பிளாட்ஃபார்மில் அமைக்கப் பெற்றிருந்த கடைகள், ஆங்காங்கே அமர்ந்திருந்த நபர்கள், மின்சார தூக்கி, படிக்கட்டுகள், உயரமான டவர் என்று அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது தன்னருகில் கேட்ட " எக்ஸ்கியூஸ்மி" என்ற குரலில் மெதுவாக திரும்பி பார்த்தாள். பார்த்தவள், யாரென்று அறியா ஆடவனின் விழிகளில் தெரிந்த ஆர்வத்தில், தன்னையும் அறியாமல் கட்டுண்டு நின்றாள்.
அவளது பார்வை தன்னிடம் நிலைத்திருப்பதைக் கண்டு, அவன் புன்னகைத்தான். "மிஸ் சஞ்சனா?"
அவள் 'ஆமாம்' என்று தலையசைத்தாள். "நான் ஆர்த்தியோட அண்ணன் சந்தீப்!" முறையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
தன்னுடைய சீனியர் ஆர்த்தியின் அண்ணன் என்று தெரிந்ததும், அவனிடம் மரியாதை தோன்றியது. 'சடாரெ'ன்று பார்வையை மீட்டுக் கொண்டாள்.
"நீங்க எல்லாரும் இன்னைக்கு வருவது தெரிஞ்சதால் அழைச்சிட்டுப் போக வந்திருக்கேன். அவங்க எல்லாரும் காருக்கு போயிருப்பாங்க. நாமும் போகலாமே?" புன்னகையுடன் வினவினான். அதன் பிறகே உடன் வந்தவர்களை மறந்து, இத்தனை நேரம் தனியாக நின்று விட்டது அவளுக்கு உறைத்தது. தரையில் இருந்த பிரீஃப்கேஸை எடுக்க முயன்றாள். அதற்கு முன், அவனுடைய கரத்தில் அது சென்றிருந்தது.
"ப்ளீஸ்… நான் எடுத்துட்டு வரேன்" என்று கை நீட்டினாள்.
அவளது முகம் பார்த்து அவன் முறுவலித்தான். 'இப்போ என்ன சொல்லிட்டேன்னு, இவர் இப்படி சிரிக்கிறார்?' அவள் நினைத்தது அவனுக்கும் தெரிந்து விட்டது போலும். விரிந்த புன்னகையுடன் அதற்கான காரணத்தையும், மறையாமல் தெரியப் படுத்தினான்.
"இல்லை, நீங்க ஊமைன்னு நினைச்சேன். பரவாயில்லை, பேசத் தெரிகிறதே?" என்றான். குறும்பு புன்னகையை உதிர்த்தான். அவன் சிரிக்கையில் வலது கன்னத்தின் மத்தியில் ஒரு குழி விழுந்தது. அது பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.
அவனது ரசனைப் பார்வையும், புருவம் உயர்த்தி 'என்ன?' என்று கேட்ட லாவகமும் அவளை தன்னிலை அடையச் செய்தது. 'ச்சே… எப்போதும் அவர்கிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பதே, வேலையா போச்சு!' என்று தன்னையே குறைபட்டுக் கொண்டாள். அவனும் புரிந்தாற் போல் அமைதியாக நடந்து வந்தான்.
சற்று நேரத்தில் அனைவரும் காரில் ஏறினர். அண்ணன் அருகில் ஆர்த்தி மற்றும் வனஜா அமர்ந்து கொள்ள, மீத நபர்கள் பின்புறம் காணப்பட்ட இரண்டு அடுக்கு இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். கண்ணாடியில் அவள் பிம்பம் தெரியும் விதமாக வைத்தான். அவளைப் பார்த்துக் கொண்டே காரை இயக்கினான்.
சாலையில் கார் சீறி பாய்ந்தாலும், தனக்குப் பின்னே அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருப்பவள் மீதுதான், அவனது முழு கவனமும் இருந்தது. திடீரென பேச்சினூடே திரும்பினாள் சஞ்சனா. அப்போது, இருவரின் விழிகளும் மின்னலென மோதி விலகியது.
சந்தீப்பின் பார்வையும், குறுஞ்சிரிப்பும் அவளது மனதில் லேசாக சலனத்தை தோற்றுவித்தது. உடனே, 'நான் இங்கு வந்திருப்பது, சீனியரின் திருமணத்திற்கு மட்டும்தான்' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். அவன் புறம் அலைபாய இருந்த மனதை, கடிவாளமிட்டு அடக்கி வைத்தாள்.
காரிகையவளின் கயல் விழிகளைக் காண காளையவன் தவமிருக்க;
கயல்விழியாளோ
இறுதி வரையில் பாராமுகம் காட்டி அமர்ந்து கொண்டாள்!!
ஏமாற்றத்துடன் வீட்டின் முன் பகுதியில் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் சந்தீப். அவர்கள் பக்க கதவை திறந்து விட்டான். தங்கையின் ஃபிரீப்கேஷ், மற்றும் பேக் அனைத்தையும் எடுத்து வெளியில் வைத்தான். வீட்டுப் பணியாளை அழைத்து, அனைத்தையும் உள்ளே கொண்டு வைக்க உத்தரவிட்டான்.
ஆர்த்தியின் வீட்டைப் பார்த்து மலைப்புடன் நின்றிருந்தாள் சஞ்சனா. "சீனியர், உங்க வீடு பெரிய மாளிகை போலிருக்கு! சினிமா படத்துல வர்ற மாதிரியே..." என்று புருவங்களை விரித்தாள்.
"ஆமாம். உள்ளே போய் பார். இதைவிட பெருசா, அழகா இருக்கும்!" புன்னகையுடன் பதிலுரைத்தாள் ஆர்த்தி.
"ஹாங்! அதுதான், இப்போ ஃபர்ஸ்ட் வேலையே!" அவளும் அழகாக முறுவலித்தாள்.
ஆர்த்தியின் அம்மா, மகளை அணைத்து நலம் விசாரித்தார். மற்ற தோழிகள் அனைவரையும் வரவேற்று அமர வைத்தார். சஞ்சனாவின் பேச்சில் கவரப்பட்டு அருகில் சென்றார். அவளது பெயர், ஊர், படிப்பு என்று கேட்டு, அனைத்தையும் தெரிந்து கொண்டார். அப்போது வந்த சந்தீப், அவர்களைப் பார்த்து புன்சிரிப்புடன் நின்றான். அவனைப் பார்த்தும் பாராதது போல், அவள் விலகிச் சென்று விட்டாள்.
அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. பின்னர், வீட்டை சுற்றி பார்த்தனர். ஆளுயர புகைப்படத்தில் இருந்த நபரைப் பார்க்கையில் அது ஆர்த்தியின் தாத்தா என்று சொல்லாமலேயே தெரிந்தது. அதற்கு அருகில் அவர்களது குடும்ப புகைப்படம் வீற்றிருந்தது. அதில் இருந்த சந்தீப் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டு நிற்கையில், அவனது நிஜ உருவம் தன்னை நோக்கி வருவது தெரிந்தது. அவனைப் பார்த்ததும் வேகமாக விலகினாள் சஞ்சனா.
கீழிருந்து ஆரம்பித்து மாடியறை முழுவதையும் பார்வையிட்டனர். பின்னர், வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றனர். தங்களுடைய உடைமைகளை அங்கு வைத்தனர். குளியலை முடித்துவிட்டு, சற்று நேரம் ஓய்வு எடுத்தனர்.
மதிய உணவை முடித்த பிறகு, இங்குள்ள முக்கியமான இடங்கள், சுற்றுலாத்தலங்களைப் பற்றி விசாரித்த தோழியர் படைகள், அங்கு கிளம்ப ஆயத்தமாகினர். சஞ்சனா மறுப்பாக தலையசைத்தாள்.
"ஏய் சஞ்சுக்குட்டி! வாடா போயிட்டு வரலாம். நீ எங்களோடு வந்தால் ரொம்ப ஜாலியா இருக்கும். இதெல்லாம் சும்மா சும்மா பார்க்க முடியாதுடா" அவளுக்கு ஆசை காட்டி அழைத்துச் செல்ல முயன்றாள், சீனியர் மாணவி கலா.
அவள் "வேண்டாம் சீனியர். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க" என்று ஒரேடியாக மறுத்து விட்டாள்.
"சஞ்சும்மா, உனக்கு என்னடா வேணும். சொல்லு, வர்றப்போ வாங்கிட்டு வர்றோம்" என்றாள் வனஜா
"நீங்க போய் நல்லா சுத்தி பார்த்துட்டு வாங்க. அப்புறம் ஏதாவது கோவில் பார்த்தா, என்னோட சீனியர் கல்யாணம் நல்ல முறையில் நடக்கணும்னு, அர்ச்சனை பண்ணிட்டு வாங்க" என நூறு ரூபாய் நோட்டை எடுத்து, வனஜாவின் கையில் திணித்தாள்.
"பார்த்து, பத்திரமாக போயிட்டு வாங்க. நான் சீனியரோடு இருக்கேன்"
சஞ்சனாவின் வெள்ளந்தியான பேச்சும், அக்கறையும் அனைவருக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தலையசைத்து அகன்றனர்.
அவளையே பார்த்திருந்தாள் ஆர்த்தி. 'என்னே ஒரு அற்புதமான பெண்ணிவள்! அண்ணன் கொடுத்து வச்சவன்' என்று நினைத்தாள். "வா!" என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
வீட்டிற்குள் சென்றும் சும்மா இருக்க தோன்றாமல், ஹாலில் இருந்த சாதனங்களை சரியான இடத்தில் வைத்தாள். சாப்பாட்டு அறையில் நாற்காலிகளை மாற்றியமைத்து, முன்பை விட அழகாக்கினாள். சமையல் அறைக்குச் சென்றாள். ஆங்காங்கே சிதறி கிடந்த சாமான்களை எல்லாம், அதற்குறிய டப்பாவில் எடுத்து வைத்தாள். கப்போர்டை இழுத்து மூடினாள். ஜூஸ் கலந்து, பழம், நொறுக்கு தீனி என அனைவருக்கும் இன்முகத்துடன் வழங்கினாள். சஞ்சனாவின் முகம் வாடா புன்னகை, தானாக இழுத்து போட்டு செய்த வேலைகள், பணியாட்களிடம் மரியாதையாக நடந்து கொண்ட பாங்கு, அனைத்தும் ஆர்த்தியின் வீட்டாரை வெகுவாக கவர்ந்தது.
"அண்ணா! சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கீங்க. ஒரே நாளில் இத்தனை மாற்றம். அப்போ இங்கேயே இருந்தால், வீடே அடையாளம் தெரியாமல் மாறிடும் போலிருக்கே?" என்று சிரித்தாள் ஆர்த்தி.
தங்கையின் பேச்சைக் கேட்டு தலை அசைத்தான் சந்தீப். அவனுக்கும் அவளிடம் பேச அத்தனை ஆசைகள்! ஆனால் பெண்ணவளோ பாராமுகத்துடன் அலைகிறாள். எப்போதேனும் அவளிடம் தன் மனதை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையுமா? தெரியாமல் நின்றான் பிரபல ஐ.டி. நிறுவனத்தின் எம்.டி சந்தீப்!
எத்தனையோ பணியாட்களை விரல் நுனியில் ஆட்டி படைப்பவன், இன்று தன் மனம் கவர்ந்த பெண்ணின் ஒற்றைப் பார்வைக்காக தவமிருக்கிறான்!
சஞ்சனாவை அழைத்தார் அவனது அப்பத்தா. அவர் அருகில் அமரச் செய்தார். அவளது வீடு, படிப்பு, உறவினர்கள் பற்றி விசாரித்தார். அவளும் புன்னகையுடன் எல்லாவற்றையும் அவரிடம் பகிர்ந்து கொண்டாள்.
சஞ்சனாவின் அப்பா அவளது சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை தாய்மாமன் எடுத்துக் கொண்டார். ஆனாலும், தம்பிக்கு பாரமாக இருக்க கூடாது என, கணவனுடன் வசித்த வீட்டிற்கே மகளுடன் சென்றுவிட்டார் அவளது அம்மா. பன்னிரெண்டாம் வகுப்பில் கிடைத்த நல்ல மதிப்பெண், அவளது மேற்படிப்பிற்கு உதவியது. அதே ஊரில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தாலும், தற்சமயம் ஹாஸ்டலில் தங்கி பயின்று வருகிறாள். அங்கு சீனியர் மாணவியர் நெருங்கிய நட்பு கிடைத்ததால், தாயாரும் நிம்மதியாக இருப்பதாக கூறினாள். இன்னும் ஒரு வருட படிப்பு முடிந்ததும், வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்து, தாயாரை கண் கலங்காமல் வைத்து, கடைசி வரையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினாள்.
சஞ்சனாவின் பேச்சைக்கேட்ட பாட்டிக்கு, அவளது தாயார் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது. 'தன்னைத் தவிர அனைவரிடமும் நட்பு பாராட்டுகிறாளே' என்று குறைபட்டான் சந்தீப்!
மறுநாள் அதிகாலையில் விழிகளைத் திறந்தாள் சஞ்சனா. குளியல் அறைக்குள் நுழைந்து ஃபிரஷ்ஷாகி வெளியே வந்தாள். கூந்தலை வாரிக்கொண்டே ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். அங்கு, சந்தீப் கையில்லா பனியன் அணிந்து, டிராக் சூட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிந்தது. 'இவ்வளவு காலை நேரத்தில் செய்கிறானே' என்று நினைத்தாள். மெதுவாக கதவை திறந்து, வெளியே வந்து பார்த்தாள். அவனைக் காணவில்லை.
'இப்போது தானே பார்த்தேன். அதுக்குள் காணுமே? ஒருவேளை நாம் பார்த்தது கனவா? இல்லை நனவா?' என்ற யோசனையுடன் நடந்தாள். அப்போது வேகமாக ஓடி வந்த சந்தீப், சஞ்சனாவின் மீது மோதினான். அவள் பின்னோக்கி கீழே விழப் போனாள். அவளைத் தாங்கிய அவன், புல்தரையில் சென்று விழுந்தான்.
சந்தீப்பின் கனத்த உடல் பாரம் தாளாமல், அவளுக்கு மூச்சு முட்டியது.
பெண்ணவளின் அருகாமையில், சித்தம் தடுமாறிப் போனது அவனுக்கு... செவியருகில் கேட்ட "சஞ்சிம்மா!" என்ற அழைப்பு, அவளது உயிர் வரையில் ஊடுருவிச் சென்று கலந்தது. ஆடவனின் அருகாமையும், தொடுகையும் அவளை நிலைகுலையச் செய்தன. அவனிடமிருந்து உடனடியாக விலக தோன்ற வில்லை. விலகவும் முடியவில்லை. அந்த அதிகாலை வேளையில், அவனது அணைப்பிற்குள் அடங்கியிருந்தாள் சஞ்சனா.
அதே நாள் காலையில் மெதுவாக எழுந்து வந்த தோழியர் படைகள், மறுபடியும் சென்னைப் பகுதிகளை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டனர். அவள் மட்டும் வீட்டில் இருந்தாள். 'கடையில் சில சாமான்கள் வாங்கணும்' என்று கட்டாயப்படுத்தி தன்னுடன் வரச்செய்தாள் ஆர்த்தி.
இளமஞ்சள் நிற சட்டையும், பிரவுன் நிற பேண்டும் அணிந்து, ஷூ கால்கள் சப்தமிட, மாடியில் தன்னுடைய அறையில் இருந்து அவன் நடந்து வந்த அழகு, அவளது இதய துடிப்பை எகிறச் செய்தது. தாயாரிடம் பேசிவிட்டு உணவை முடித்து எழுந்து சென்றான்.
இருவரையும் பார்த்து புன்னகைத்தான். அதன் வீரியம் தாளா பெண்ணிவள், தன்னை அடக்க வெகு பிரயத்னப்பட்டாள்.
சஞ்சனாவின் மனதைப் படித்தவன் போல் அமைதியாக காரை இயக்கினான். பெண்ணவளின் மௌனமும், பாராமுகமும் காளையவனை வெகுவாக வருத்தியது.
சற்று நேரத்தில் சரவணா ஸ்டோர் முன்பு நிறுத்தினான். தங்கை இறங்கி அவளது வருங்கால கணவரை நோக்கிப் போனாள். வாவென்று அழைக்காமல் எப்படி போவது என்று இவள் தயங்கினாள். அதைக் கவனியாமல், நேராக பார்க்கிங் பகுதியில் நுழைந்து, காரை நிறுத்தினான் சந்தீப்.
வெளியேறி லாக் செய்து கண்ணாடியை உயர்த்தி விட்டான். சஞ்சனாவின் அருகில் சென்று அமர்ந்தான். அவள் அவசரமாக வெளியேற முயன்றாள். கைப்பற்றி மீண்டும் அமர செய்தான்.
"சஞ்சனா! ஆர்த்தி அவளோட வருங்கால கணவர் கூப்பிட்டதால் போயிருக்கா! எனக்கு பயந்து நீ அங்கு போய், அவங்களுக்குத் தொந்தரவா இருக்க வேண்டாம்" என்றான். அவனது பேச்சு அவளுக்கு 'சுருக்'கென்று தைத்தது.
"சஞ்சும்மா, ஏன்டா இப்படி அமைதியாகவே இருக்க? என்மீது கோபமா?"
அவளது நா அசைய மறுத்தது.
"சஞ்சு! காலையில் ஓடி வந்தப்போ, இருளில் தெரியாம மோதிட்டேன்டா. அப்புறம், உன்னைத் தீண்டிய என் விரல்கள் அதை விட்டு விலக மறுத்தன. யாருமற்ற தனிமையும், இருள் சூழ் நேரமும், உன் மீதான எனது எல்லையில்லா காதலும், என்னை விலக விடாமல் செய்து விட்டன. அதுக்காக, நீ என்னை மோசமானவன்னே முடிவு பண்ணிட்டியா? இரண்டு வருஷமாக உயிர் காதல் கொண்டிருக்கும் யாராவது, ஒற்றை நிமிடத்தில் தோன்றும் வெறும் உடல் பசிக்கு அடிமை ஆவார்களா சஞ்சனா?" சந்தீப் பதிலில் சடாரென்று விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.
"ஆமாம் சஞ்சும்மா, காலேஜ்ல நடக்கிற எல்லா விஷயத்தையும் என்கிட்ட பகிர்ந்து கொள்வது போல், உன்னைப் பற்றிய விபரங்களையும் ஆர்த்தி சொன்னாள். அப்புறம் அடிக்கடி பேசவும், உன்னைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. ஒருமுறை அனுப்பிய புகைப்படத்தில், நீ தாவணி அணிந்து மிகவும் அழகாக தெரிந்தாய். அத்தோற்றம் அழியா ஓவியமாய் என் மனதில்...
அதன் பிறகு, தங்கையோடு பேசுகையில், உன்னைப் பற்றி விசாரிக்காமல் இருந்ததில்லை. நீ படிச்சிட்டு இருப்பதால் உன்னோட படிப்பு முடிஞ்சதும், நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனால், உன்னை நேரில் பார்க்கும் ஆவல் உந்த, ஆர்த்தியிடம் கண்டிப்பாக அழைச்சுட்டு வர சொல்லியிருந்தேன். உன்னைப் பார்த்ததும் என் மனம் எத்தனை மகிழ்ச்சி அடைந்தது தெரியுமா? ஆனால், உன்னோட மெளனம் என்னை ரொம்பவே காயப்படுத்துது! உன்னோடு தனிமையில் பேசும் நாளுக்காக, ஒவ்வொரு நிமிஷமும் துடிச்சிக்கிட்டு இருக்கேன்." என்று தன்னுடைய மனதில் இருப்பதை அவளுக்கு, மறைக்காமல் வெளிப்படுத்தினான்.
சந்தீப் பேச்சைக் கேட்ட சஞ்சனா அதிர்ச்சி விலகாமல் அமர்ந்திருந்தாள். 'என்ன சொல்றார் இவர்? இரண்டு வருடமாக என்னை விரும்புகிறாரா? அப்படி என்கிட்ட என்ன இருக்குன்னு இவ்வளவு காதல்?' என்று நினைத்தாள். வாய் திறந்து கேட்க முடியாமல் தடுமாறினாள்.
"சஞ்சனா, இன்னும் ஒருவருஷத்தில் உன்னோட படிப்பு முடிஞ்சிடும். அப்புறம் நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம். ஒருவேளை உனக்கு என்மீது நம்பிக்கை இல்லா விட்டால், இப்போதே உன்னைக் கல்யாணம் செய்து, என்னோடு டெல்லிக்கு அழைச்சுட்டுப் போறேன். அங்கு வந்து நீ, உன்னோட படிப்பை தாரளமாக தொடரலாம்" என்று மென்னகை புரிந்தான்.
சந்தீப் பேச்சை அவளால் நம்பவே முடியவில்லை. 'இப்படி ஒரு குபேர வாழ்க்கை தனக்கா? தான் அதற்குத் தகுதியானவள் தானா? கணவர் இறந்த பிறகும் என் மீதான பாசத்தால் கஷ்டப்பட்டு, வளர்த்து ஆளாக்கிய பெற்ற தாயை விட்டு, என்னால் எப்படி இவருடன் டெல்லிக்குப் போக முடியும்? இவர்கள் குடும்பம் இருக்கும் வசதி என்ன? தன்னுடைய வீடு இருக்கும் நிலை என்ன?' தன்னுடைய ஏழ்மையான நிலையை நினைத்து, முதன் முறையாக மனம் வருந்தினாள் சஞ்சனா.
அவளது விழிநீரும், முகத்தில் தெரிந்த கலக்கமும் அவனை சங்கடப்படுத்தியது.
"சஞ்சனா, உன் வீட்டு சூழ்நிலை எனக்கும் தெரியும். பயப்படாதே! உன்னை மணந்து சென்ற பிறகு, உன் தாயார் தனிமையில் துயருறுவார் என்கிற கவலையே உனக்கு வேண்டாம். நம்மோடு அவரையும் அழைத்துச் சென்றிடலாம்" என்று விழிநீரை துடைத்தான்.
நம்ப இயலாமல் சந்தீப் முகத்தையே பார்த்தாள் சஞ்சனா.
"நிஜம்தான். ஒரேடியாக எல்லாவற்றையும் சொல்லிட்டதால், உனக்கு குழப்பமா இருக்கும். கொஞ்சம் நிதானமாக யோசிச்சு முடிவெடு. அப்போது எல்லாம் தெளிவாக புரியும். உன் மனதில் என்ன இருந்தாலும் மறைக்காமல் சொல்லிடு. ஆனால், இப்படி மௌனமாக இருந்து என்னைக் கொல்லாதே!" ஏக்கமான குரலில் கூறினான்.
இதற்கு மேல் மறைத்து வைக்க, என்னிடம் எதுவும் இல்லை என்பதை போல், அவன் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். இனி முடிவெடுக்க வேண்டியது அவள் தான்!!
அப்போது ஆர்த்தி அவனைப் பார்த்துக் கை காட்டுவது தெரிந்தது. "வா, ஆர்த்தி கூப்பிடுறா போகலாம். முகத்தை துடைச்சிக்கோ!" தன்னுடைய கைக்குட்டையை எடுத்து, அவளது விழிநீரை ஒற்றி எடுத்தான். கதவைத் திறந்து வெளியே அழைத்துச் சென்றான்.
இருவரும் அவர்களை நோக்கி நடந்தார்கள். ஆர்த்தியின் முகத்தில் தெரிந்த புன்னகை, மகிழ்ச்சி அவர்களையும் தொற்றிக் கொண்டது.
சஞ்சனாவை மாதவனுக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்தாள் ஆர்த்தி. உடனே அவன் சந்தீப்பை கேலி செய்தான். வாழ்த்துக்களையும் தெரிவித்தான். பின்னர், நால்வரும் இணைந்து உள்ளே சென்றனர்.
அவர்களுக்குப் பிடித்த விதமான உடைகளை தேர்வு செய்தனர். சந்தீப் தன்னவளுக்குப் பொருத்தமான நிறத்தில், பட்டுப்புடவைகள் மற்றும் விலை உயர்ந்த புடவைகளை எடுத்தான். அவளது மறுப்புகளை செவி சாய்க்க மறுத்தான்.
பின்னர், நகைக்கடைக்கு சென்றனர். அங்கும், தனக்குப் பிடித்த விதமான அணிகலன்களை வாங்கி குவித்தான். தன்மீதான அவனது காதலைக் கண்டு திக்கு முக்காடி போனாள் சஞ்சனா. ஆர்த்தி அனைத்தையும் பார்த்துப் புன்னகையுடன் நின்றிருந்தாள். அப்படியே அலங்கார நிலையத்திற்கும் போனார்கள்.
ஆர்த்திக்கு அலங்காரம் செய்வது போல், சஞ்சனாவிற்கும் நடந்தது. அவளால் எதையும் தடுக்க முடியவில்லை. வேண்டாம் என்றாலும் சந்தீப் விட மாட்டான் என்பது தெரிந்தது. தன் மீதான அவனது ஆழமான காதலும் புரிந்தது. அலங்கார நிலையத்தில் இருந்து வெளியே வந்த சஞ்சனாவை பார்த்தான். அவள் அழகில், ஒரு கணம் மெய் மறந்து போய் நின்றான். அவன் பார்வை வீச்சைத் தாள முடியாமல், நாணி முகம் சிவந்தாள் சஞ்சனா.
மறுநாள் திருமண மண்டபத்திற்கு அனைவரும் சென்றனர். வெண்பட்டு நிறப் புடவை பிங் நிற ரவிக்கையில், தேவதையாக ஜொலித்தாள் சஞ்சனா. அதே நிற பட்டு வேட்டி சட்டையில் பெண்ணின் அண்ணனாக, அவளுக்குத் துணைவனாக கம்பீரமாக நின்றிருந்தான் சந்தீப்.
அவனது புன்னகை தவழ்ந்த முகமும், வேட்டி சட்டையில் தெரிந்த கம்பீரமும், அவளை மொத்தமாக அவன் புறம் சாய்த்தது. தன்னை மீறி அவனை ரசித்தாள்.
அன்றைய நாள் திருமணம் முடிந்தது. மறுநாள் அனைவரும் சொந்த ஊருக்கு போவதற்காக கிளம்பினர்.
இன்னும் பத்து நிமிடத்தில் ரெயில் வேகமெடுத்து கிளம்பும் எனும் நிலையில், அவள் உள்ளம் பதறி துடித்தது. விழிகள் இரண்டும் அவனைக் காணாமல், ஒருவித தவிப்புடன் அலை மோதியது. மரத்தின் பின்புறம் நின்று அவளையே பார்த்திருந்த சந்தீப், மெதுவாக வெளியே வந்தான்.
அவனைப் பார்த்த அவளது விழிகள், உடைப்பெடுத்த குளம் போல் கொட்டியது. அங்கிருந்த யாரையும் கவனத்தில் கொள்ளாமல், ஓடிச்சென்று அவன் மார்பில் சாய்ந்தாள். வெடித்து அழுதாள். விழிநீரை அவன் மீது வடிய விட்டாள்.
தன்னுயிரினும் மேலானவளை தழுவிய அவனது கரங்கள், விட மறுத்து மேலும் இறுக்கியது. நெற்றியில் அவன் இட்ட முத்த சந்தங்கள், பெண்ணவளை பரவசமடையச் செய்தது. பதிலுக்கு தானும் கொடுத்து, அவன் மீதான காதலை உணரச் செய்தாள்.
அவளது முகத்தை நிமிர்த்தினான்; விழிநீரை துடைத்தான்.
"சொல்லு, மதுரையா? டெல்லியா? எங்கே போகலாம்…"
"மதுரைக்குப் போய் அம்மாவைப் பார்த்து கல்யாணத்தை முடிச்சிட்டு, அப்படியே டெல்லிக்கு"
"அப்போ படிப்பு?"
"அதுவும் டெல்லியில்" என்று சிணுங்கிய குரலில் கூறினாள். விழிகளை இறுக மூடி, அவன் நெஞ்சமதில் தஞ்சமடைந்தாள்.
அவளது உடைமைகளை கீழே எடுத்து வைத்த மற்ற அனைவரும், பிரியா விடை பெற்று அவர்களது ஊரை நோக்கி பயணத்தை துவங்கினர். அவளும் தனக்கென்று ஓர் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க, தன்மனம் கவர்ந்தவனுடன் புறப்பட ஆயத்தமானாள்.
*** சுபம்***
Comments
Post a Comment