மனமெல்லாம் மார்கழிப் பனியே...


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : வாணி அர்விந்த்

படைப்பு : மனமெல்லாம் மார்கழிப் பனியே...

வெளியீடு : ராணி முத்து

நிஷா :

நாயகியின் அண்ணி அவளது அண்ணாகிய தன் கணவரிடம் நாத்தனாரை மாமியார் நடத்துவது குறித்து மன வருத்தத்துடன் தெரிவிக்க, அவனோ அம்மா பேசுவது போலவே தானும் பேசுகிறான். 

அவளோ புரியாமல் கேட்க, அத்துடன் அவளைப் பற்றிய முன்கதை வருகிறது.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் ஃபோனில் பேசி பழகும் நாயகி, அவனையே திருமணமும் செய்து விட்டு கணவன் வீட்டிற்குச் செல்கிறாள். காலையில் பத்து மணி வரை பிறந்தகத்தில் உறங்குவது முதல் பெட் காஃபி, அதிகாரம், பிறர் மனம் வருத்தப்படுமோ என்று பார்க்காமல் சதா வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்துவது என நடந்து கொள்கிறாள். 'எனக்கு இங்கு சுதந்திரம் இல்லை, நான் கடைசி வரை அடிமையாகவா இருக்கணும்? என்ன என்ன குழந்தை பெறுவதற்கான மெஷின்னு நினைச்சிங்களா?' என்று கேட்டு வீம்புடன் பிரிந்து சென்று விடுகிறாள். அவளது கோபமும், திமிரும் அவளுக்கு விவாகாரத்தையும் பெற்றுக் கொடுக்கிறது.

அனைத்தையும் கேட்ட அண்ணியார் எடுக்கும் முடிவென்ன? அதற்கு அவள் உடன்படுகிறாளா? பிரிந்த கணவருடன் இணைகிறாளா இல்லை மறுமணத்திற்கு சம்மதிக்கிறாளா? அவளது திமிரும் அடாவடியும் அடங்குகிறதா இல்லை அடக்கப் படுகிறதா? போன்ற கேள்விகள், நாவலை வாசிக்கும் நம் அனைவரின் மனதிலும் எழுகிறது.

எனக்கு பிளாஸ்பேக்கில் வந்த கதாநாயகி பாத்திரத்தை பிடிக்கவே இல்லை. அவளது திமிரும் அடாவடியும், எதிர்த்து பேசிய விதமும் வெறுப்பாக இருந்தது. என்ன தான் வசதியான வீட்டில் பிறந்தாலும், வேலை செய்யாமல் சோம்பேறியாக வளர்ந்தாலும்,   கணவன், மாமியாரிடம் நடந்து கொண்ட முறை கொஞ்சம் கூட சரியில்லை.

கணவன் பாத்திரம் பாவமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவளிடம் தாழ்ந்து போகின்ற நேரமும், அவளுக்காக தாயாரிடம் பேசுகின்ற இடமும், 'என்னுடைய ஆசைகளை எல்லாம் விட்டு உன் விருப்பம் போலத்தான் நடக்கணுமா?' என்று கேட்ட விதமும் அவனது மனநிலையை அப்பட்டமாக உணர்த்தியது.

அவனது தாயாரின் வருத்தம் கலந்த முகமும், மகனுக்கான பொறுத்துப் போகின்ற இடமும் நல்லா இருந்தது.

ஆனால் அவள் உச்சரித்த 'நான் எப்படிப்பட்ட வீட்டில் பிறந்தேன்னு தெரியுமில்லயா? என் தகுதி என்ன? கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கேன்ல!' என்ற வரிகள் அடிக்கடி வந்து கடுப்பை கிளப்பியது.

பெற்றோரின் வீட்டிற்கு கணவருடன் சென்றவள் அவர்கள் முன்பே குறை கூறிய விதமும், தனிக்குடித்தன ஆசையும், அவனது தாயாரிடம் வெளியே போகும் நேரமெல்லாம் சொல்லிட்டு போவது பிடிக்கல, கொடுமை படுத்துறாங்க. நிம்மதியா உறங்க முடியலை. ஹீட்டர் போட ஆளில்லை என்ற இடம் அவள் மீது மேலும் கோபத்தையே கிளறியது.

'குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு போய்விடும். உடல் பருமனாகி விடும். இரண்டு வருடத்துக்கு அதைப் பற்றி பேசக்கூடாது' என்று கூறுமிடம் இப்போது உள்ள சிலரின் ஆசையும், பேச்சுக்களும் தான். ஆனால், தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், கணவனின் மனதையும் பார்க்க வேண்டும் என்று எண்ணாமல் போனது அவளது வீம்பும், பிடிவாதமும் அன்றி வேறில்லை.

பாதிக்கும் பிறகு கதையோட்டம் வாசிக்க நன்றாக இருந்தது. 

அண்ணன் அண்ணி பாத்திரம் அருமை. அப்பா, அம்மாவின் அளவு கடந்த செல்லமும், பாசமும் அவளை எங்கே கொண்டு நிறுத்தி விட்டது என்பதை சுட்டிக்காட்டிய இடம்👌👌👌

மிதுனா, ஆதர்ஷ், கல்பனா என அனைவரும் வெகுவாக மனதைக் கவர்ந்தார்கள். 

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐💐


Comments

  1. வாணி அர்விந்த்:

    மிக்க நன்றி டா.. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. ஆழமான விமர்சனம் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.. 🙏🙏🙏💝💝💝

    ReplyDelete

Post a Comment