என விழியில் உனது பிம்பம்


எனது விழியில் உனது பிம்பம்!

ஆனந்த ஜோதி

ன்று அக்டோபர் 21-ம் தேதி. இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு (War Memorial Hall) போவதற்காக கௌதமின் பெற்றோர் தயாராகிக் கொண்டிருந்தனர். இரவெல்லாம் உறக்கத்தை தொலைத்து, அழுதுகொண்டே இருந்த உத்ரா, கனத்த இமைகளை பிரிக்க முடியாமல் அவதியுற்றாள்.

ஒருவழியாக எழுந்து தயாராகி ஜீவனற்ற உடலுடன், கைகால்கள் தள்ளாட மெதுவாக நடந்து வந்தாள். அவளது மகன் சுபாஷ் புன்னகையுடன் தாத்தா பாட்டியின் அருகில் நின்று கொண்டிருந்தான். தாயாரை பார்த்ததும் ஓடி வந்து அணைத்தான். அனைவரும் கிளம்பி காரில் ஏறினார்கள்.

கௌதம் புகைப்படத்திற்கு முன்பு சென்று நின்றார்கள். மகன் அப்பாவின் முகத்தில் கை வைத்து சிரித்துக்கொண்டே "அப்பா வா!" என்று அழைத்தான். அதைப் பார்த்த மூவரும் நெஞ்சம் விம்ம கண்ணீர் வடித்தனர். மனம் தன்னவனை நினைத்து ஓயாமல் அழுதது. 'கௌதம்! என்னோடு வந்திருங்க கௌதம். என்னாலே உங்களைப் பார்க்காம இருக்க முடியல...' என அழைப்பு விடுத்தது. நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன்பாக அவனை சந்தித்த தினத்தை நோக்கி பயணித்தது.

அப்போது உத்ரா பீ.எஸ்.சி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். விடுமுறை தினத்தன்று தோழிகளுடன் சேர்ந்துகொண்டு கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு வந்திருந்த கெளதமின் விழிகள் அடக்கமான அழகுடன் காணப்பட்ட அவளிலேயே நிலைத்தது. தன்னை ஒருவன் வெகுநேரம் ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை தாமதமாக உணர்ந்தவள் முறைத்தாள். அவனது அழைப்பையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டாள். ஆனால், அவளிடம் பேச ஆசைகொண்டு பின்னாலேயே தொடர்ந்து சென்றான் கெளதம். அவளது விலாசத்தை தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டாவது நாளே அவளைப் பெண் பார்க்கவும் வந்து நின்றான். அனைவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள் உத்ரா. மாப்பிள்ளை கெளதமை பார்த்ததும் திடுக்கிட்டு விழித்தாள்.

வீட்டில் அனைவருக்கும் மாப்பிள்ளையை பிடித்திருந்தது. திருமண விசயமாக பேச்சு தொடர்ந்தது. அவளது அப்பா தணிக்காசலம் உடனடியாக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார். காரணமறியாத அனைவரும் திகைப்புடனும், அதிர்ச்சியாகவும் பார்த்தனர். அவரோ தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 

கௌதம் "என்ன விசயமா இருந்தாலும் சொல்லுங்க. தெரிஞ்சுக்கிட்டே போறோம்" என்று விடாப்பிடியாக கேட்டான். அவரும் வாய் திறந்தார். 'இந்த காலத்தில் போய் இப்படி யோசிக்கிறாரே?' என்று நினைத்தாலும், யாராலும் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.

அவன் எழுந்து நின்றான். "அப்போ, ஆர்மியில் பணிபுரிவதால் மட்டுமே உங்க மகளை எனக்கு கட்டிக்கொடுக்க மறுக்கிறீங்களா?"

ஆமோதிப்பாக தலையசைத்தார் தணிக்காசலம். 

"அந்த வேலையில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் எவ்வளவு மதிப்பு, மரியாதை இருக்கு. எவ்வளவு கடினப்பட்டு வேலை பார்க்கிறாங்க. என்னவெல்லாம் சிரமத்தை அனுபவிக்கிறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? ஏதோ வேலை வெட்டி எதுவுமில்லாம ஊர்சுத்திட்டு இருக்கிறவன் கிட்ட பேசுற மாதிரியில்ல சொல்லிட்டு இருக்கறீங்க? நீங்க வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லியிருந்தா நான் ஏத்திருப்பேன். ஆனால், என்னோட வேலையை அவமதிக்கும் விதமா பேசியதை மட்டும் ஏத்துக்க முடியாது!" என்று கோபமாக கூறினான். 

"மிலிட்டரி வேலை எவ்வளவு கஷ்டமானதுன்னு எனக்கும் தெரியும். என்பொண்ணு கல்யாணத்துக்கும் பிறகு, காலம்பூரா கண்ணீர் வடிச்சுட்டு இருக்கிறதை பார்த்துட்டுருக்க என்னால முடியாது. அதனால தான் சொல்றேன். இந்த கல்யாணம் வேண்டாம்"

அவனது விழிகள் கோபத்துடன் சுட்டெரித்தன. "கஷ்டமில்லாத வேலைன்னு எதுவுமே கிடையாது. 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' அப்படியே இறந்தாலும் ஆர்மி ஆபிசரா என்கடமையை நிறைவேற்றிட்டதா நினைச்சு, நிம்மதியா இறந்து போவேன்" அவரைப் பார்த்து அழுத்தமாக கூறினான் கௌதம். அத்துடன் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். 

அப்படியே ஒருவாரம் கடந்தது. சில சாமான்கள் வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த நேரம், அவனைப் பார்த்தாள் உத்ரா. அன்றைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்கும் விதமாக அவனை நோக்கி நடந்தாள்.

அவனது முகம் இறுக்கமாக காணப்பட்டது. "எங்க அப்பா பேசியதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்றாள். அவளை நிமிர்ந்து பாராமல் விலகிச் சென்றான் கௌதம். அவள் மனம் காரணமறியாமல் கலங்கியது; அவனது பாராமுகம் வலித்தது!

அங்கிருந்து நேராக வீட்டிற்கு வந்தாள். கௌதமின் சினந்த முகம் அடிக்கடி நினைவிற்கு வந்து நிம்மதியை பறித்தது. ஒருமுடிவிற்கு வந்து தாயாரைக் காணச் சென்றாள். அவனையே மணந்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினாள். அப்பாவின் செவிக்கு விசயம் சென்றது. அவர் மறுத்தார். அவள் உறுதியாக நின்றாள். "அப்பா, அவங்க எல்லோரும் எல்லையில் கஷ்டப்பட்டு தன்னுயிரையும் பணையம் வச்சு, காவல் காத்து எதிரிகளை துவம்சம் செய்வதால்தானே, நாமெல்லோரும் இங்கு பாதுகாப்புடன் இருக்கிறோம். இல்லைன்னா, இந்நேரம் நம்மநாடே எதிரிகளின் கூடாரமா மாறிப்போயிருக்கும். தனிமனித உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, முந்தைய ஆங்கிலேய ஆட்சிகாலம் போல் மீண்டும் கொடுமையானதாக மாறிவிடும். 'அன்னத்தை அவமதித்தால் இறைவன் படியளக்க மாட்டான்' எனும் நீங்க, அந்நிய நாட்டை சார்ந்தவர்களை உள்ளே வரவிடாமல் பாதுகாக்கும் காவலரை மட்டும் ஏத்துக்க மறுக்கிறீங்களே?" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

அவரது விழிகள் பனித்தன. ஏற்கனவே உடன்பிறந்தவளை ஆர்மியில் வேலை பார்ப்பவருக்கு கட்டிக்கொடுத்து, போரில் கணவனை இழந்து அவள் தனியாக கஷ்டப்படுவது தெரிந்ததால் மட்டுமே, மகளுக்கும் அப்படியொரு நிலைமை வந்து விடக்கூடாதென்று அவர் மறுப்பு தெரிவித்தார். அதுதெரிந்த பிறகும் மகள் இப்படி கேட்கவும், பதிலளிக்க முடியாமல் தடுமாறினார். இறைவனை மனதில் நினைத்துக்கொண்டே திருமண ஏற்பாட்டையும் ஆரம்பித்தார்.

திருமணம் முடிந்தது. இரவு நேரம் மனையாளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தினான் கெளதம். "உத்ரா, உன்னைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால தான் வீடு தேடி வந்து கல்யாணத்துக்கு பேசினேன். என் அப்பா ஒரு நேர்மை தவறாத ஆர்மி அதிகாரி! பணியின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் காலில் காயம் ஏற்பட்டதால், வேலையிலிருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். என்னையும் அவரைப் போலவே ஒரு கடமை தவறா காவலனாக தான் வளர்த்து விட்டிருக்கிறார். இந்த வேலையில் சேர்ந்ததற்காக என் தாய் எப்போதுமே வருந்தியதில்லை. நீயும் அவரைப் போலொரு தைரியசாலியா, துணிச்சல்காரியா மாறணும். நம்ம குழந்தையையும் என் போலொரு நேர்மை தவறாத ஆர்மி அதிகாரியாக வளர்த்து விடணும்" என்று கேட்டுக் கொண்டான்.

விழிகள் பனித்தன. பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்தாள். "உத்ரா! எதிர்பார்பில்லாம வாழப் பழகிக்கோ. எத்தனையோ சுதந்திர போராட்ட தியாகிகள், தங்கள் வாழ்க்கையைப் பத்தி கவலைப்படாம பல இன்னல்களுக்கு ஆளாகித்தான், நமக்கு விடுதலையே பெற்றுக் கொடுத்தாங்க. அப்படி போராடி மீட்டுத் தந்த சுதந்திரத்தை மறுபடியும் அந்நியர்கள் பிடியில் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக இரவு பகலா கஷ்டப்பட்டு, உண்ணாமல், உறங்காமல், தன்னுடைய சுக துக்கங்களையும் பாராமல், தாய் நாட்டுக்காக பாடுபட்டு வருபவர்கள் தான் என் போன்ற கடமை தவறா காவலர்கள்! அப்படிப்பட்டவனுடைய மனைவி நீ... எதுக்கும் அஞ்சாதவளாகவும், சுயநலத்திற்கு அடிமை ஆகாதவளாகவும் கடைசி வரை இருக்கணும். நான் உன்னை விட்டுப் பிரிஞ்சிருந்தாலும் என் நினைவுகள் உன்னை சுற்றியே தான் எப்போதும் இருக்கும்" என்றான். அவளும் தலையசைத்தாள்.

ஒருமாதம் அவளுடனே தங்கியிருந்தான். அவளது விருப்பம் போல் நடந்துகொண்டான். வேலைக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. அனைவரிடமும் பிரியா விடை பெற்றான்.

கௌதம் சென்ற திசையை பார்த்து நின்றவள், அறைக்குள் நுழைந்து கதறி அழுதாள். தன்னுயிரே தன்னைவிட்டுச் சென்றதை போல் துடித்தாள். எவ்வளவு முயன்றும் சிலநாட்களாக அவளால் இயல்பிற்கு வரமுடியவில்லை. அத்துடன் வாந்தி, தலைசுற்றல் ஒருசேர, கணவனின் வாரிசு வயிற்றுக்குள் உதயமானது தெரிந்தது. அவளால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. உடனடியாக கணவனிடம் தெரிவித்து அவன் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை, சந்தோசத்தை நேரில் பார்க்க ஆசைப்பட்டாள். அதன் பிறகே அவன் தன்னுடன் இல்லையே... என்று நினைத்துக் கண் கலங்கினாள். ஒவ்வொரு பெண்களும் கணவருடன் மகிழ்ச்சியாக உலாவுவதை, உரையாடுவதை பார்க்கையில் தன்னையும் அறியாமல் விழிகளில் நீர் சொட்டும். 

மகவு வயிற்றில் இருப்பதற்கு சான்றாக மேடிட்ட வயிறும், குழந்தையின் துடிப்பும் அவளுக்குள் சிலிர்ப்பை தோற்றுவிக்கும். உடனே கணவனிடம் காண்பித்து மடிசாய்க்க ஆசையாக இருக்கும். தனிமையின் கொடுமை பல சமயங்களில் வேதனையை கொடுக்க, அவனுடனே சென்று வசிக்க உள்ளம் பேராவல் கொள்ளும். ஆனால் காடு, மேடென்று பாராமல் இரவு பகலாக வேலை பார்ப்பவனிடம் சென்று, 'உன்னோடு என்னையும் அழைத்துச் செல்' என்று எங்கனம் கேட்க முடியும்? என நினைத்து விம்முவாள்.

அத்தை, மாமாவுடன் விழாக்களுக்கு, கோவிலுக்குப் போகும் நேரங்களில் கணவனின் பிரிவு அவளை வெகுவாக வருத்தும். ஆர்மி அதிகாரியின் மனைவி என்பதால் கிடைக்கப் பெறுகின்ற மரியாதைகள் அனைத்தும், அவன் மீதான நேசத்தை மேலும் அதிகரிக்கும். கைப்பேசியில் அவனது குரலைக் கேட்டாலே தன்னை அடக்கி கொள்ள சிரமமாக இருக்கும். கணவனின் திருமுகத்தை நேரில் பார்க்க உள்ளம் துடிதுடியாக துடிக்கும். அவனது வருகையை எதிர்நோக்கி ஒவ்வொரு நாளும் காத்திருக்க தொடங்கினாள் உத்ரா.

இந்நிலையில் திடீர் திடீரென்று வெடிக்கின்ற கண்ணிவெடிகள், பிரச்சனைகள், மரணம் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது நிம்மதி என்பதே மருந்திற்கும் இல்லாமல் காணப்படும். அப்போதெல்லாம் அவளது அப்பாவின் விழிகள், 'நான் அப்போதே சொன்னேன் கேட்டியா?' என்பது போல் தொட்டுச் செல்லும். வீட்டில் சும்மாவே இருந்தால் மனம் அதிலேயே கிடந்து உழலும் என்று, இடையில் நின்ற கல்லூரி படிப்பைத் தொடர முற்பட்டாள்.

அந்த நேரத்தில் காஷ்மீரில் குண்டு வெடிப்பு சம்பவம் விடாமல் தொடர்ந்தது. கைப்பேசியில் சிக்னல் தொலைந்து போனது. 'அவன் எங்கிருக்கிறான்? சாப்பிட்டானா; இல்லையா? உறங்குகிறானா? உயிரோடாவது இருக்கிறானா?' போன்ற தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எத்தனையோ முறை அழைத்தும் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைக்காட்சி செய்திகள் நிமிடத்திற்கு நிமிடம் இதயத்துடிப்பை எகிறச்செய்தன. கணவனை நினைத்து ஏக்கத்தால் உடல் மெலிந்தாள். கண்ணீர் கரைபடிந்த நயனங்களுடன் அவனது குரலைக் கேட்பதற்காக தவமிருந்தாள். உண்ண மனமற்று தன் கணவனின் புகைப்படத்தையே பார்த்திருந்தாள்.

"என் கௌதம் எனக்கு வேணும். அவரை நல்லவிதமா என்கிட்டேயே ஒப்படைச்சிரு!" இறைவனிடம் மனமுருக வேண்டுதல் விடுத்தாள் உத்ரா!

காஷ்மீர் பகுதிகளில் குளிர் ஒருபக்கம் வாட்டி வதைத்தது. எங்கு பார்த்தாலும் வெடிகுண்டுகளின் ஓசையும், புகைப்படலமும் அப்பிரதேசத்தையே நிரந்தரமாக ஆட்கொண்டது. எந்தநேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத அளவிற்கு அசாதாரணமான சூழல்நிலவியது. எங்கு பார்த்தாலும் ரத்தக்களரியாக சிதறியஉடல்கள் அனைத்தும் கண்முன்படமாக ஒலிபரப்பப்பட்டது. குண்டு வெடிப்பில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்தவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவள் வீட்டிற்கு வந்த பெட்டியை பார்த்ததும் அதிர்ச்சியில் விழுந்தவள், மறுபடியும் கண் விழிக்கும் போது, மாலை அணிந்த சட்டத்திற்குள் அடைக்கப்பட்ட கணவனின் புகைப்படத்தை மட்டுமே பார்க்க நேர்ந்தது.

ஓடிச்சென்று மாலைகளை அகற்றினாள். அவன் புகைப்படத்தை அணைத்துக்கொண்டு 'ஓ'வென வாய் விட்டு அழுதாள்.

"இறந்தது நீங்களா இருக்க கூடாது. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது... ஆகவும் கூடாது! நீங்க எங்கேயாவது ஒரு இடத்தில் பத்திரமா இருக்கணும். உங்களைப் பிரிஞ்சு என்னால வாழ முடியாது கௌதம்! எனக்கும் நம்ம குழந்தைக்கும் நீங்க வேணும்..." தழுதழுத்த குரலில் கண்ணீர் வழிய கூறினாள் உத்ரா. மகளை அப்படி ஒரு கோலத்தில் காணமுடியாத தகப்பனின் நெஞ்சம், அடுத்த கணம் துடிப்பை நிறுத்தியது.

அதிர்ச்சியில் உறைந்த தாயாரும், மகளும் தலையில் அடித்துக்கொண்டு கதறினார்கள்.

மாதங்கள் பல கடந்தாலும் 'என்றேனும் ஒருநாள் தன்னுடைய கணவன் தங்களைக் காண வருவான்' எனும் எண்ணத்தை ஆழமாக மனதில் பதிய வைத்தாள். எப்போதும் அவன் தன்னுடனே இருக்கும் விதமாக கணவனின் முழு பிம்பத்தையும் தன் இரு விழிகளிலும் நிரப்பிக் கொண்டாள்.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை நோக்கி குழந்தைகளுக்கான இராணுவ சீருடையில் "அம்மா..." என்று அழைத்துக்கொண்டே ஜூனியர் கௌதம் ஓடிவந்தான். அவனை அப்படி காணும் போது கணவனின் பேச்சு நியாபகத்திற்கு வந்தது.

"உத்ரா!! எனக்கு என்ன ஆனாலும் கவலைப்படாமல், மகனை நல்ல விதமா வளர்த்து படிக்க வைத்து, அவனையும் என்போல் ஒரு கண்ணியமான ஆர்மி அதிகாரி ஆக்கி விடு! சுயநலத்துக்கு அடிமை ஆகாமல் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக நடந்து கொள். உன்போல் ஒவ்வொரு பெண்மணியும் துணிந்து செயல்பட்டால், நம் பாரத நாட்டை எந்த ஒரு அந்நிய சக்தியாலும் எதுவுமே செய்ய முடியாது! நான் இறந்தாலும், இருந்தாலும் உன்னோடுதான் இருப்பேன்" என்ற வரிகள் தற்சமயம் நினைவிற்கு வந்து, கணவனின் மீதான ஏக்கத்தையும், தவிப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. 

கணவனின் மறு உருவமாக காட்சியளித்த மகனை இராணுவ சீருடையில் பார்த்தவள் விழிகளில் இருந்து, அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த மனபாரமெல்லாம் கரைந்து கண்ணீராக வழிந்தது... மகனை அணைத்துக்கொண்டு முத்தத்தால் குளிப்பாட்டினாள் உத்ரா!



                                 ஜெய்ஹிந்த்! வாழ்க பாரதம்!!

Comments