யாழினி


முகநூல் பதிவு







#வாசிப்புஅறைகூவல்

புத்தகத்தின் பெயர் : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

ஆசிரியர் : பாரதிப்பிரியன்

புத்தகத்தின் விலை : 280

வெளியீடு : கௌரவா பதிப்பகம்

அத்தியாய அளவு : 27 அத்தியாயம் 288 பக்கம்

யாழினி :

பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், உறையூரை தாண்டி விரட்டப்பட்ட களப்பிரர்கள் படை, வஞ்சியை தாக்கி தன்வசப்படுத்திக் கொண்டதும் அல்லாமல், அரசர், அரசி, அவரது வாரிசுகளை கொன்றுவிடுகின்றனர். எஞ்சியிருக்கும் வாரிசால் நடக்கும் போராட்டமே யாழினி!

சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரர்களின் அரசன் செங்கனான் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, தன்னுடைய சுயநலத்திற்கு வித்திடுகிறான் சேர படைத் தலைவன் விஜயன். பாண்டிய மன்னன் மாறவர்மனிடம் யாழினியை திருமணம் செய்தால் வாரிசற்ற அவருக்கு குழந்தை பாக்கியமும், சேரத்தையும், பாண்டியத்தையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யலாம் என்று கூறிவிட்டு, சேரத்து வாரிசை கொல்வதற்கும் களப்பிரர்களை ஏவுகிறான்.

கமலக் கவியடிகள் சாளுக்கிய மன்னன் புலிக்கேசி மூலமாக சேரத்து புத்த விஹாரை கைப்பற்றி சுயநலமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்.

ஒற்றையாக தனித்து விடப்பட்ட பனைப்பூ சூடிய பெண் சிம்மம், தன் நாட்டை இந்த கதிக்கு ஆக்கிய பல்லவ படை வீரன், விஜயனை எப்படி பழி வாங்குகிறாள்? பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மன்னரிடம் இருந்து சேரத்தை காப்பது யார்? சேரத்து அரியணையில் அமரப் போவது பாண்டியனா? விஜயனா? களப்பிரர்களா? பெண் சிம்மமா? என்று பல விதமான கேள்விகளுடன் நாவல் படு அட்டகாசமாக இருக்கிறது .

விஜயன், பாண்டியன், சாளுக்கியன், களப்பிரர் அரசன், சுந்தரவள்ளி, கமலக் கவியடிகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசும் இடத்தில் படு கில்லாடி என்றே எண்ண வைக்கின்றன. மாணிக்க வணிகனை கொன்று, அந்நிய நாட்டு வணிகர்களை சிறை செய்து, களப்பிரர் அரசரை ஏமாற்றி, சுந்தரவள்ளியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, பாண்டியனை ஏமாற்றி என நன்றாக நடித்திருக்கிறான்.

குமணன், விஜயன், செங்கனான் மூவரும் சேரத்து நிர்வாகப் பொறுப்புக்கு ஆசைப்படுவதும், புத்தி கெட்டு நடந்து வாங்கி கொள்வதும் வாசிக்க நன்றாக இருந்தது.

கந்தமாறனின் பார்வையும், வியூக திட்டங்களும், ஒற்றனை கண்டறிந்து பதிலடி கொடுக்கும் இடமும், பிடித்து வைக்கப்பட்டிருந்த களப்பிரார்களிடமிருந்து உண்மையை கண்டறியும் விதமும், புறா விடு தூதும் அருமை👌👌👌

பார்த்திபன் என்னைக் கொஞ்சம் குழப்பி விட்டு விட்டான். அரச குமாரியின் மீது மிகுந்த பற்றுதலுடன் காணப்பட்டு, அவளது கோரிக்கையை சிரமேற்று செய்து கொடுக்க செல்பவன், திடீரென்று மாறிவிட்டது போல தோன்றியது.

களப்பிரர்களின் தலைவன் கதாபாத்திரம் வெறி பிடித்த மிருகம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு, போதையும், பெண்களும் அவனை மயக்கி வைத்திருக்கின்றன.

சிம்மவேணி கதாபாத்திரம் ஆளுமை நிறைந்தது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வருகிற இடங்கள் அத்தனையும் பிரமாதம். அதிலும் உகுநீர்கல் அருவிக்கரையில் நடந்த மோதலும், இறுதி காட்சியில் பாண்டிய மன்னனையே எதிர்த்து நின்று வாளால் சுழற்கும் போதும் சபாஷ் போட வைக்கிறாள்.

சாளுக்கிய மன்னன் புலிக்கேசி அருமையான பாத்திரம் என்றால், பாண்டியன் மண்ணாசை, பெண்ணாசையுடன் குமணன், விஜயன் வாயிலாக மட்டுமே நடந்ததை அறிந்து சென்று துரத்தியடிக்கப்படும் பாத்திரம்.

விறுவிறுப்பான கதையோட்டம், அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம், அருமையான எழுத்து நடையுடன் சுவராஸ்யமான பக்கங்களும் நம்மை ஒரு வித ஈடுபாட்டுடன் வாசிக்க செய்கின்றன.

மேலும் பலவிதமான படைப்புகளை அட்டகாசமாக வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐💐


Comments