கண்டதைத் தானே சொல்கிறேன் (சிறுகதைகள் தொகுப்பு)


#ஜோதிரிவ்யூ

#வாசிப்புஅறைகூவல்

புத்தகத்தின் பெயர் : கண்டதைத் தானே சொல்கிறேன்
                                            (சிறுகதைகள் தொகுப்பு)

ஆசிரியர் : பாரதிப்பிரியன்

புத்தகத்தின் விலை : 140

வெளியீடு : விதைகள் பதிப்பகம்

விதைகள் பதிப்பகம் சார்பில் புதியதாக வெளிவந்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பில் மொத்தம் ஆறு விதமான சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சமூகத்தில் நடக்கும் அவலங்கள், இன்றைய ஆட்சியாளர்களால் பொதுமக்கள் படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் அட்டகாசமாக தெரியப்படுத்தி உள்ளார் நம் எழுத்தாளர்.

மேலும் புத்தகம் தற்சமயம் விற்பனையில் உள்ளதால் கதைப் பற்றிய முழுவிபரங்களை கூறாமல், அதில் என்னைக் கவர்ந்த இடங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.பீப்பீக்காரனின் பத்து நிமிடங்கள் 
(சாமானியனுடன் சில நிமிடங்கள்)

ஒரு ஏழ்மையில் வாடும் பீப்பீக்காரனின் வாழ்க்கை மற்றும் அவரது மனநிலையை மிகத் துல்லியாக எடுத்துக் கூறியிருக்கிறார் ஆசிரியர். 'தனக்கு இருப்பது கொஞ்சமாக இருந்தாலும் பிறருக்கும் உதவி வாழ வேண்டும்' எனும் கருத்து பீப்பீக்காரனின்  நடவடிக்கையில் அழகாக தெரிகிறது. அதுபோல், பிச்சை எடுத்து பிழைக்காமல், ஒவ்வொரு வீட்டு முன்பும் சாலையிலும் வாசித்து செல்கின்ற போது, அவனுக்கு ஐந்து காசு கொடுக்க வேண்டும் என தோன்றாமல், அதன் இசையையும் ரசிக்க தோன்றாமல் நிற்கும் சாமானிய மனிதர்கள் மதுவுக்கும், தியேட்டருக்கும் கொடுக்கும் காசில் ஒரு சிறிய அளவை இம்மாதிரிப்பட்ட மனிதர்களுக்கு வழங்குவதில் தவறில்லை.

கொடை வள்ளல் கர்ணனுக்கு ஈடாக ஒப்பிட முடியா விட்டாலும் பத்து ரூபாயாவது தானம் கொடுப்பதில் தவறேதும் இல்லயா? பிறருக்கு உதவி செய்தால் நமக்கு தாமாகவே கிடைக்கும் என்பதை இது போல் உள்ளவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்? சிறுகதையும் அதில் உள்ள கருத்தும் ரொம்ப நல்லா இருக்கு.

அதிலும் நாய்கள் முதலில் குறைத்து தன் எதிர்ப்பை காட்டி விட்டு பின்னர் படை வீரர்களாக செயல்பட்ட விதம் வெகுவாக மனதை கவர்ந்தது.

2. முறுக்கு வாங்கலியோ
(ஏக்கப் பார்வை)

வியாபாரத்தில் கூட வசதியான கடைகளுக்கு செல்வதும், கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வாங்கி விட்டு செல்வதும், பிரயாணத்தின் போது தரமான சாதனமாக இருந்தாலும் வாங்காமல், ஏழைகளை கண்டால் ஒதுக்கி வைக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இச்சிறுகதையும் அப்படி தான்! சிப்ஸ் விற்க வந்த பெண்மணிக்கு அதை எப்படி சொல்லி விற்பனை செய்வது என்று கூட தெரியவில்லை. அதை பிறரை பார்த்து தான் கூறுகிறார். யாராவது வாங்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பார்க்கிறார்.

இம்மாதிரிப்பட்ட நபர்களிடம் நாம் வாங்கினால், அவர்களின் வியாபாரமும் தளைத்து ஓங்கும். அவர் வீட்டில் உள்ளவர்களும் ஒரு நேரமாவது நிம்மதியாக உண்பார்கள் என்பதை இச்சிறுகதை வாயிலாக அருமையாக சொல்லப்பட்டு உள்ளது.

சமூகத்தில் எல்லா விதமான மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம்  உயர்வு தாழ்வு கருதி பழகி விலகாமல், விலக்கி வைக்காமல் நம்மால் இயன்ற உதவியை செய்யலாமே?

3. நானும் இவான்னாவும்
(குறும்புக்காரியின் கதை)

சிறு குழந்தைகளை வெளியூர் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் போது கையாள வேண்டிய முறைகள் மற்றும் அவர்களது பழக்க வழக்கம் பற்றி ரொம்ப நன்றாக சொல்லப்பட்டு உள்ளது.

வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகள், வெளியிடத்திற்கு கொண்டு செல்லும் போது, இதுவரை பார்க்காத இடங்கள், மனிதர்களை பார்த்ததும் வியப்பாக காண்பார்கள். அவர்களுக்கு சலிப்பு தட்டும் வரை பார்த்து விட்டு தூங்கி சரிவார்கள். இல்லை தூக்கம் வந்ததும் தோளில் சாய்வார்கள். இதில் சூடு, குளிர், அரிப்பு... பலவிதமான  காரணங்களால் அவதியுறுவார்கள். அதை பெற்றோர், அழைத்து செல்பவர் பேணி பாதுகாத்தல் அவசியம்.

இச்சிறு கதையில் கூறப்பட்ட கருத்துகள் அனைத்தும் அழகாக இருந்தன.

4. தொடாதே! அபாயம்
(இருளில் பிறந்த வானம்)

இச்சிறுகதையில் கொடுக்கப்பட்டு உள்ள கருத்துகள் யாவும் அட்டகாசமாக இருக்கின்றன.

மின்சாரம் தொலைந்து காணப்படும் பகுதியில் உள்ள மக்களின் கஷ்டங்களை அப்படியே கண்முண் கொண்டு வந்துள்ளார் நம் எழுத்தாளர். அந்த மின்சார ஊழியர்களின் பேச்சு நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.

இச்சிறுகதையில் கொடுக்கப்பட்ட சமூக கருத்துகள் யாவும் சபாஷ் போட வைத்தன. அதிலும், அரசியல் வாதிகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும் இடம் வெகு பொருத்தமாக கையாண்டிருக்கிறார்கள். உண்மைதான், நான்கு பேராவது வாய் திறந்து கேட்டால் தான் புத்தி வரும். ஆனால் வருமா என்பது அப்போதும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

5. எழுத்தாளரே! நியாயமா?
(ஒரு தெரு நாயின் வாக்குமூலம்)

இச்சிறுகதையில் வந்த நாய் பாத்திரம் மனதை கனக்க செய்து விட்டது. உயர்ந்த ஜாதி நாயுடன் சாதாரண தெரு நாய் சேர்ந்து விட்டதால் அடித்து துரத்துவதும், விற்பதும், தாயை மனிதாபிமானமற்ற முறையில் அடித்து விரட்டி அதன் குட்டிகளை கவர்வதும் வெட்க கேடான செயல்.

தாய் நாயின் பாசம் மனதை அள்ளியது என்றால், வாயில்லா ஜீவனாகிய அதை அந்த கதிக்கு ஆளாக்கிய மனித ஜென்மத்தை நினைக்கும் போது வெருப்பு தான் மிஞ்சியது. தெருநாயின் வாக்குமூலம் இங்கு மட்டுமல்ல பல இடங்களில் நடக்கும் சம்பவம்தான்!!

6. கருப்பு வெள்ளை
(மனிதன் தீட்டும் செயற்கை வண்ணம்)

ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும் அதை ஏற்க மனப்பக்குவம் வேண்டும். இல்லாவிட்டால் இனவெறி தாக்குதல், கருப்பு, வெள்ளை நிற பாகுபாடு ஏற்படுவதும், அடிதடி, கொடுமை, கொலைகள் செய்வது நடக்கத்தான் செய்கிறது. இக் கதையில் வந்த சுதா சித்தார்த்தின் திறமை பிரமாதமான முறையில் சொல்லப்பட்டு உள்ளது.

சிறுகதை வாசிக்கும் போது வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியது. வேற்றின பெண் தங்களை விட அதிகமாக பெயர் பெற்று விளங்கி விடக் கூடாது என்பதற்காக கையாண்ட விதம் விசித்திரத் தக்க முறையில் உள்ளது. லியாண்டா நிஜமாகவே அருமையான தேர்வு. ரொம்ப  நல்ல காரியம் செய்தாங்க. 

ஆரம்பத்தில் இசைப் பயிற்சி பற்றி கூறப்பட்டு பின்னர், கதையின் களமே
 மாறி விட்டது. ஒரு சஸ்பென்ஸ் ஸ்டோரி வாசித்த பீலிங் ஏற்பட்டது. முடிவு நிறைவு!

ஆறு சிறுகதையும் அறுசுவைகளை உள்ளடக்கி உள்ளது. ஒவ்வொன்றிலும் காணப்பட்ட கருத்துகள், சமூகத்தின் மீதான தவறுகளை அப்படியே கண்முன் சுட்டிக்காட்டுகிறது.

சிறுகதைகள் ஒவ்வொன்றும் வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கிறது. மேலும் நிறைய எழுத மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ 💐💐

Comments