ஒவ்வொரு மாவட்டத்தின் பேச்சின் சிறப்புகள்....
#திருநெல்வேலி..
வயதில் பெரியவரைப்பார்த்தால்…
சார்வாள் வணக்கம்…என்ன நாலஞ்சுநாளா ஆளையே காணோம்…வெளியூர் போயிருந்தேளா?
"வாள்" - என்பது மரியாதைச்சொல் . மாணவ மாணவியர்கள் ஆசிரியரை 'சார்வாள்' கிளாஸூக்கு போயாச்சு…சீக்கிரம் ஓடியால…
சம வயதுடையவர்களை…
உமக்கென்னவே…. ரெண்டு கொழுந்தியா இருக்கிற வீட்டுல பொண்ணெடுத்திட்டீரு…கவலையே இல்ல(நக்கல்)
உனக்கேம்லெ…பொறாமை….நீயும் போயி எடேன்..யாரு வேணாண்ணது…
அண்ணன் மனைவியை - 'மதனி-அண்ணன பாடா படுத்திறியலாமில்ல..
யாரு சொன்னா…அவுங்கதான் ஊர சுத்திப்புட்டு ஏன் உயிர எடுக்கிராவ....(கணவரை 'அவரு' கிடையாது அது மரியாதை இல்லல….'அவுங்க'…தான் மரியாதை.)
இது #அப்பத்தா..
எய்யா ""ஊருக்கு போறியா பாத்து போயிட்டு வாயா
அண்ணாச்சி…எப்பிடியிருக்கிய..விசாரணை.
பயவுள்ள….சண்டாளப்பய……மூதேவி….ஆக்கங்கெட்ட கூவ…..செத்த அர்தலி…மயிராண்டி…..அங்கென்ன புடுங்கவா போன….சர்வசாதாரணமாக வாயில் வரும் செல்லமான (?) …வார்த்தைகள்….
என்ன #அத்தான் கோயில் கொடைக்கு ஆளையே காணோம்.
மாப்ள வேலையும் ஜோலியும் அதிகம்..
வர முடியல..
காலையில் பையன் சாப்பிடாம ஊர்சுற்றி 11 மணிக்கு வந்தால்…
அப்பா: …..ஏல..சாப்பிட்டியா….
அம்மா: ..இன்னும் காலத்தீவனமே (?) (காலை டிபன்) திங்கல…காலேல குச்சிய எடுத்துட்டு போனவன் இப்பதான் வர்ரான்..
ஏல ஆத்தா வெஞ்சனம் வைக்கல
பழைய சோத்துக்கு ஈராங்கம் வச்சு சாப்பிடு.
எல சாப்ட்டு ஏன்னத்த எல்லாம் கழுவி வச்சுட்டு போ..
நெல்லைக்காரர்கள் தமிழில் மட்டுமல்ல நொறுக்குத்தீனி சாப்பிடுவதிலும் தனித்தன்மையானவர்கள்…வடை அதிரசம். பக்கோடா மிக்சர் காராசேவு காராபூந்தி வெள்ளை ஜிலேபி..கருப்பட்டி மிட்டாய்…சீனி முட்டாய்..அல்வா…என ஏதாவது துணைப்பண்டம் இல்லாமல் நான்கு வேளை உணவும் (மாலை காபி) உள்ளே இறங்காது.
திருநெல்வேலி நகரில் சுமார் வீதிக்கு நான்கைந்து லாலா (இனிப்பு காரம்)கடைகள் வீதம் சாதாரணமாக பார்க்கமுடியும். தினமும் / 2 நாட்களுக்கு ஒருமுறை தயாராகி காலியாகிவிடும். ….மற்ற நகரங்களில் பத்து நாட்கள் வரை வைத்துவிற்பார்கள்.நகர் மட்டுமல்ல மாவட்டம் முழுவதுமே இந்த நொறுக்குத்தீனி "லாலாக்கடை" களை காணலாம்.
போகுமிடத்துக்கு வழி கேட்டால் கூட்டிக்கொண்டு விடாத குறை….
ஆட்டோவில் போகவா…என்னத்துக்கு….இந்தா புள்ளமார் தெருவைதாண்டுனா வந்துடும்…..அவன்வேற அம்பது ரூவா கேப்பான்…..
ஆண்குழந்தைகளை…இங்கே வாடே…..பெண்குழந்தைகளை ..ஏட்டி..இங்கே வாட்டி…எங்கம்மயில்ல…
சென்னையைச்சேர்ந்த பெண்கள் இங்கே கடைகளில் காபி/டீ க்கு இனிப்பு போதவில்லை எனில் 'சக்கரை' போடு ..ன்னா உள்ளூர்காரர்களுக்கு சிரிப்பு அள்ளும். நெல்லைத்தமிழில் இதற்கு 'ஆணுறுப்பு' என்றபொருளும் உண்டு.
இது போல நிறைய இருக்கு சார்வாள்..நான் திருநெல்வேலி பாருங்க..
#கோவை…
இதை பிரபலமாக்கியதில் திரைப்பட உலகிற்கு முக்கிய பங்கு உண்டு….மணிவண்ணன் ஆர். சுந்தர்ராஜன் கவுண்டமணி கோவை சரளா பாக்கியராஜ் சத்தியராஜ் விஜயகுமார் இப்படி பலர் கொங்கு தமிழ் பேசி மயக்கியவர்கள். வார்த்தைக்கு ஒரு …அண்ணா….
டீ சாப்டிங்ளாண்ணா….டிபன் சாப்டிங்ளாண்ணா..ஞாபகமிருக்கா..
ஏனுங்கோ..பஸ் ..உக்கடம் போவுங்களா?…
போவும்ணா..ஏறுங்கண்ணா…ஏன்னா சந்தேகம்…
அங்கே குழி தோண்டிபோட்டிருக்காங்களாம்…
குழி தோண்டுனாத்தான்ணா கோயம்புத்தூரு…உங்கள நான் இறக்கிவுடுறேன். …
நல்ல மரியாதையான மக்கள்…
குசும்பு (கிண்டல்)..ஜாஸ்தி….வடை ஏன்னா சிறுசாபோச்சி…..ஆங்…ஜனாதிபதி வெளியூர் போயிருக்காரு வந்தவுடன கேட்டு சொல்றேன்…சாப்டுட்டு போவியா..
அம்மணி…..ஒன்றவூட்டுக்கார் எங்க போனாரு…
கிரகம்புடிச்ச மனுசன காலேல இருந்து காணோம்…
கிராமப்புறத்திற்குள் சென்றால் கவுண்டர் வீட்டுவயதான பெண்கள் பேசும் வேகமான தமிழ்ப்பேச்சை வெளிமாவட்டத்துக்காரர்கள் புரிந்துகொள்ள சற்று நேரம் ஆகும். …
ஏழுமணிக்கு வரசொன்னா ஒம்பது மணிக்கு வாரியளாக்கும்..வேலைய யாரு பாக்குறது.. எத்தினிதடவ சொன்னாலும் புரியாதா….கூலிமட்டும் முழுசாவேணும்…இதை படுவேகமாக பேசுவர்..
இங்கும் உதவி கேட்ட அடுத்தவினாடியே நாலைந்துபேர் வருவார்கள்…
கோவை நகரவாசிகளிடம் கண்ட ஒன்று. அமெரிக்க பாலிசி….வாரம் முழுக்க பிசி…ஞாயிறுகளில் ஒரு கடையும் திறக்கமாட்டார்கள். வெறிச்சோடிவிடும். நன்கு செலவழிப்பார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக புதியகார்களை அதிகம் பயன்படுத்தும் ஊர்…கவர்ச்சியான வீடுகள்…கடைகள்…நேந்திரங்கய் சிப்ஸ் பிரபலம்……திருநெல்வேலிக்காரர்கள் வந்து ஸ்வீட் ஸ்டால் வைத்து ……….ளாக மாறியிருக்கும் ஊர்.
#சென்னை
NSK காலத்துலேயே ..பிரபலமான தமிழ்…
பச்தணிலே மூஞ்சே அலம்பினேனா..ஜல்ப் புடிச்சுருதுபா…பச்ச தண்ணில முகத்தை அலம்பியதால ஜலதோசம் பிடிச்சிருச்சாம்…ஜலதோசத்த சுருக்கி ஜல்ப்….அப்பிடின்னு …
டிக்கெட் எடுத்தாச்சா…முன்னாடி நவ்ரு…
இந்தாபா சோறுதானே துண்றே…அறிவு கீதா…மனுஷ்னா…நீ….
தெற்கே ஜீனி..என்ற வார்த்தைக்கு இங்கே அஸ்கா சக்கரை….ஒரிசாவிலுள்ள அஸ்கா எனும் ஊரிலிருந்து வந்ததால்…
கெரோசின் ஆயிலை(மண்ணெண்ணை) 'கிருஷ்ணாயில்' ஆக்கிய பெருமை இங்குள்ளவர்களைச்சேரும்…
லூஸ் மோகன் என்றவொரு நடிகர்….சென்னைத்தழிழை பிச்சு உதறுவார்….சட்டம் ஒரு இருட்டறை…கமலுக்கு சென்னைத்தமிழ் கற்றுக்கொடுத்த குரு…
வயது வித்தியாசம் பார்க்காமல் ' நீ' 'அவன்' சர்வ சாதாரணம்.
குடிசைவாழ் பெண்களுக்கிடையே சண்டை வரும்போது…..எழுதமுடியாத அளவு வார்த்தைகள்…..குழந்தைகள் காதை மூடனும்….
எந்த இடத்துக்கு வழி கேட்டாலும் பஸ் நம்பர் கேட்டாலும் 80%க்கு மேற்பட்டவர்கள் சொல்லும் ஒரே பதில் …'தெரியாதுபா'…அங்க போய் கேளு..(நிறைய பேருக்கு அவர்கள் செல்லும் வழியைத்தவிர வேறு வழிகள் எதுவும் தெரியாது). மீதிப் 10% என்ன சொல்லுறாங்கன்னு புரியாது…
அலுவலகங்களின் குவிப்பு …ஜனத்தொகையை அளவுக்கு மீறி வைத்துக்கொண்டதால்…ஜலத்துக்கு தாளம் போடும் ஊராகிவிட்டது…..ஆயினும் வந்தாரை வாழவைக்கிறது…தண்ணியில்லாமல்…
#மதுரை
தமிழ்சங்கம் இருந்தாலும் தற்போது சுற்றியிருக்கும் எட்டுத்திசையிலிருக்கும் ஊர்களுக்கு இது ஒரு வியாபார மையம். சுற்றியிருக்கும் எட்டு திசைகளிலிருந்தும் வரும் விவசாய பொருட்கள் இங்கே இறக்கி விற்பனை செய்யப்படுகிறது.
மூலப்பொருட்களும், மறுவிற்பனைக்கான பொருட்களும் போட்டி விலையில் கிடைப்பதால் 24 மணி நேரமும் குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் ….அதனால் தூங்காநகரம்…நடுஇரவிலும் விடிய விடிய குறிப்பிட்ட வழித்தடத்தில் நகரப்பேருந்துகள் ஓடும்.
விவரமானவர்களுக்கு எங்கெங்கு பொருட்கள் மலிவாக கிடைக்கும் என்பது தெரியும். ஒரே வீதியில் இவ்வளவு நகைக்கடைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே இருக்கிறதா…சந்தேகம்….
ஒவ்வோர் வகை பொருட்களுக்கும் ஒரு வீதி…இங்கு மட்டுமே காணமுடியும்…பழவகை…சிம்மக்கல்..யானைக்கல்./கட்டிடசாமான்கள்…மேலமாசி வீதி/2, 4 சக்கர வாகனங்களுக்குரியவை…வடக்குவெளிவீதி/…ஜவுளிக்கு தெற்குமாசி வீதி/…வெங்காயம்…கீழ மாரட் வீதி/பலசரக்கு ஜெனரல் பொருட்கள்..கீழமாசிவீதி/நகை..தெற்காவணிமூலவீதி/ பர்னிச்சர் மேற்காவணிமூலவீதி/கல்யாண பத்ரிக்கை பை இத்யாதி …கீழ ஆவணிமூல வீதி./ சாப்பாடு..அனைத்து இடங்களும்.
பேச்சு வழக்கை பொறுத்தவரை…எல்லோரும் ..அண்ணே…தான்…
பால் வந்தாச்சாண்ணே…
வண்டி எத்தனை மணிக்கண்ணே…
வத்தலக்குண்டு போவுமாண்ணே…
பெண்களை "அவ"…ன்னு சொன்னா அவ்வளவுதான் வந்தது வினை…..மரியாதையாக "அது" ன்னு சொன்னா போதும். …அப்படித்தான்..உங்க அக்கா…பொன்னுத்தாயி…அது எங்க போயிருக்கு.?
இந்தா பெருசு முன்னாடி போ.. .(வயதானவரை)…இதுதான் இங்கு மரியாதையான வார்த்தை..
மற்றபடி வாடா…போடா…தான்..
ஆனா "வெண்ண"ய். இந்த வார்த்தைய கெட்ட வார்த்தையா பயன்படுத்துற ஏரியா..இதுதான்…இராமநாதபுரம் சிவகங்கை மதுரை ..மதுரை மேற்குப்பகுதி ஊர்கள் …எப்படி ஆச்சுன்னு புரியல…
கல்யாண பத்திரிகை காதணிவிழாபத்திரிக்கைகளை ஆயிரக்கணக்கில் அடித்து விநியோகம் பண்ணுவதை பார்க்கலாம்…மொய் பணம் எத்தனை இலட்சம் வந்தது? என்று கேட்குமளவு…
Comments
Post a Comment